Published:Updated:

சிம்புவாக இருப்பதன் கஷ்டம் சிம்புவுக்கு மட்டுமே தெரியும்..!

சிம்பு
சிம்பு

ஏன் சிம்புவைப் பற்றி மட்டும் அடுக்கடுக்கான புகார்கள் வருகின்றன என்பது குறித்து அவரது நிழல் மனிதர்கள் சிலரிடம் பேசினோம்.

`சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரவில்லை; அதனால் `மாநாடு' திரைப்படம் ட்ராப்’ என்கிற செய்தி வைரலாகப் பரவியது. உண்மையில் சிம்பு என்ன மனநிலையில் இருக்கிறார்? ஏன் அவரைப் பற்றி மட்டும் அடுக்கடுக்கான புகார்கள் வருகின்றன என்பது குறித்து அவரது நிழல் மனிதர்கள் சிலரிடம் பேசினோம்.

பால்மணம் மாறாத பாலகனாக இருந்தபோது, சிம்பு மீது பாய ஆரம்பித்த கேமரா வெளிச்சம் இன்றுவரை பாய்ந்துகொண்டே இருக்கிறது. `எங்க வீட்டு வேலன்' திரைப்படத்தில் மாஸ்டர் சிம்புவின் நடிப்பு தமிழகம் முழுக்க கலெக்‌ஷனை கோணி மூட்டையில் குவிக்க, கால்சட்டை பிராயத்திலேயே கவர்மென்ட்டுக்கு வருமானவரி கட்டியவர் சிம்பு. ‘எல்லாப் பசங்களைப் போல எனக்கும் பள்ளிக்கூடத்துல படிக்கணும்னு ஆசை. எங்கப்பாவுக்கோ நான் நடிக்கணும்னு ஆசை. பள்ளிக்கூட பாடத்தை மனப்பாடம் செய்யவேண்டிய வயசுல சினிமாவில உள்ள வசனத்தை மனப்பாடம் செய்து நடிச்சேன். இப்பவும் நான் ஸ்கூல் வாழ்க்கையை இழந்ததை நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு இருக்கேன்' என்று விகடன் பிரஸ் மீட்டில் ஓப்பனாகப் பேசினார், சிம்பு.

சிம்பு
சிம்பு

கமல் ஒருமுறை, 'நான் 'களத்தூர் கண்ணம்மா' விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு சினிமாவில் எத்தனைநாள் தள்ளுவது. ’அரங்கேற்றம்' படத்தில் நடிப்பதற்கு முன்பு 4 வருஷம் என்ன செய்வது என்றே தெரியாமல், புரியாமல் தவித்தேன்'’ என்று தனது பதின்பருவ அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். ஒருமுறை சென்னை ஐஐடியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் நடனமாட சிம்பு விரும்பியபோது, அங்குள்ளவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். சிம்புவும் மீசை முளைப்பதற்கு முன்பு பெற்ற அந்தக் காயத்தை மறக்கவில்லை. அந்தத் தருணத்தில் `உலகம் அறிந்த டி.ராஜேந்தர் மகனுக்கே இந்தநிலையா?' என்று தன்னைத்தானே நொந்துகொண்டார்.

``சிம்பு லேட்டா வருவார்தான்... ஆனா...!?'' - `வாலு’ விஜய் சந்தர்

பிற்காலத்தில் 'காதல் அழிவதில்லை' படத்தில் மூலம் ஹீரோவானார். இளம்நடிகராக வலம்வந்தவர், 'மன்மதன்', ‘வல்லவன்’ வாயிலாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். ‘’நடிப்பு என்று வந்துவிட்டால் சிம்பு மாதிரி திறமைசாலி இல்லை. அதுபோல தயாரிப்பாளர்களை தவிக்க வைப்பதில் சிம்புவைப்போல் யாருமே இல்லை’' என்றார், 'வல்லவன்' தயாரிப்பாளர் தேனப்பன்.

சிம்பு
சிம்பு

’’சிம்புவைப்பற்றி ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், சிம்புவை ஒருமுறை நேரில் பார்த்து பேசினதும், கண்ணைமூடிக்கொண்டு படத்தயாரிப்பில் இறங்கிவிட்டேன்'' என்று 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சொல்கிறார். ‘’ சிம்பு ஒரு சிறந்த நடிகர். ஷூட்டிங்கில் அவரிடம் வேலை வாங்குறது தனி திறமை வேணும். அதிகாலையில் ஷூட்டிங் வைத்தால் சிம்பு வரமாட்டார் என்று தெரியும். அப்படி தெரிந்தும் அதே நேரத்தில் படப்பிடிப்பை வைத்துவிட்டு சிம்பு வரவில்லை என்று வருத்தப்பட்டால் என்ன செய்வது?'' என்று `வந்தா ராஜாவாத்தான் வருவேன்' டைரக்டர் சுந்தர்.சி சொல்கிறார்.

``சிம்பு நினைச்சா மட்டும்தான் அது நடக்கும்..!'' - `கோகோ' ரெடின்

`உலகம் அறிந்த டி.ராஜேந்தர் மகனுக்கே இந்தநிலையா?'ன்னு சிம்பு நொந்து கொண்டதைப் படிச்சோம். ஏன்னா சின்ன வயதில் இருந்து டி.ராஜேந்தரின் உழைப்பே அவருடைய உயரத்துக்கு காரணம். அன்று தமிழ்ப் படவுலகில் கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - இசையமைப்பு - டைரக்ஷன் என்ற சகல பொறுப்புகளையும் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, எதிர் நீச்சல் போட்ட 'டி. ராஜேந்தர்' என்னும் இளைஞரின் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது தெரியுமா? சிம்புவே படிக்க வேண்டிய அந்தக் கட்டுரை இப்போ அப்பப்போ ஆப்ல ரிலீஸ் ஆகியிருக்கு!

TR
TR

இன்னொரு விஷயம். அவருடைய 'இரயில் பயணங்களில்', 'இராகம் தேடும் பல்லவி', 'நெஞ்சில் ஒரு ராகம்’ படங்களுக்குப் பின்னால் ஒரு ரியல் லவ் ஸ்டோரி இருக்கு. கேட்டா '“அவளோட நினைவுகள்தான் எனக்கு ஒரு கோயில். அவள் என்னைப் பொறுத்த வரைக்கும் எனக்கு வெளிச்சம் தந்த ஒரு விளக்கு. அந்த விளக்கோட விலாசம் தேவையில்லை. .” என்று வசன கவிதையிலேயே பதில் சொல்லுவார்!

டி.ஆரின் ஆரம்ப நாட்களும், காதல் வலியும்! 1982ல் இருந்து ஒரு கட்டுரை.. உங்களுக்காக -> http://bit.ly/TRSimbu

அப்பா சேர்த்து வைத்த சொத்து கோடிக்கணக்கில் இருக்கிறது. ஓ.கே சொன்னால் கோடிகளில் சம்பளத்தை கொட்டித்தர தயாரிப்பாளர்கள் காத்து இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் என்ன பயன்? கால்சட்டை வயதில் படிக்க முடியவில்லை; தங்கை, தம்பிக்கு கல்யாணம் முடிந்த நிலையில், தனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்பதால் மன உளைச்சலில் தவிக்கிறார். சினிமா மனிதர்களை பகலில் பார்ப்பதற்கு விருப்பமில்லாமல் தவிர்க்கிறார், இரவு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளச்சொல்லி டைரக்டர், தயாரிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறார்.

சிம்பு
சிம்பு

சிம்புவுக்கு இன்னொரு முகம் உண்டு; அது ஆன்மிகம். கடவுள் பற்றிப் பேசினால் மணிக்கணக்கில் மனம்விட்டு பேசுவார்; காசிக்கு போனார்; இப்போதும் மனம் வெறுத்துப் போனால் திடீரென திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்று விடுகிறார். ஒருமுறை ரஜினியைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் எழுதும்போது, ‘ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டுமே தெரியும்' என்று எழுதியிருந்தார்கள். அதுபோல விட்டேத்தியாக கிடைத்த வாழ்க்கையில் விடிவே கிடையாதா என்று தனக்குள் தவித்துக்கொண்டு தகிக்கிறார் சிம்பு. 'சிம்புவாக இருப்பதன் கஷ்டம் சிம்புவுக்கு மட்டுமே தெரியும்?' என்பதுதான் உண்மை.

அடுத்த கட்டுரைக்கு