Published:Updated:

`சாராவின் கேள்வியை இங்கு எத்தனை பெண்களால் கேட்க முடியும்?' - Sara's முன்வைக்கும் உரையாடல்

sara’s Movie

`இப்போ ஏன் இந்தக் குழந்தை வேண்டாம் என்கிறாய்?’ எனக் கேட்கும் போது, `அப்போ என்னுடைய சந்தோஷம்? என் கனவு, என் லட்சியம்?’ என சாரா கேட்கும் கேள்வி மிக முக்கியமான ஒன்று. சாரா கேட்டதும், நம்முள் பெரும்பாலான பெண்கள் கேட்கத் தவறியதும் அக்கேள்வியைத்தான்.

`சாராவின் கேள்வியை இங்கு எத்தனை பெண்களால் கேட்க முடியும்?' - Sara's முன்வைக்கும் உரையாடல்

`இப்போ ஏன் இந்தக் குழந்தை வேண்டாம் என்கிறாய்?’ எனக் கேட்கும் போது, `அப்போ என்னுடைய சந்தோஷம்? என் கனவு, என் லட்சியம்?’ என சாரா கேட்கும் கேள்வி மிக முக்கியமான ஒன்று. சாரா கேட்டதும், நம்முள் பெரும்பாலான பெண்கள் கேட்கத் தவறியதும் அக்கேள்வியைத்தான்.

Published:Updated:
sara’s Movie

`என் பணி பிள்ளை பெற்றபடி இருப்பதே’ எனும்படி,`ஒரு பெண், பெண்ணாகப் பிறந்ததன் பலனே அவள் தாய்மை அடைவதுதான்' என்பதை எழுதப்படாத இலக்கணமாகக் கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது.

அதில், குழந்தைகளை அறவே வெறுக்கின்ற, குழந்தையே பெற்றுக் கொள்ள மாட்டோம் எனும் முடிவிலிருக்கும் சாரா மற்றும் ஜீவன் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விரும்பி மணக்கின்றனர். சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்வில் எதிர்பாரா நேரத்தில் சாரா கர்ப்பமாக, அவர்களுக்கிடையில் எழும் உணர்வு, உறவுச் சிக்கல்களைப் பேசும் படம்தான் அமேசான் பிரைம்மில் வெளியாகியிருக்கும் சாரா'ஸ்.

sara’s movie
sara’s movie

நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப் பருவக் காதல், பிரேக் அப் ஆகி கை கூடாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். 25 வயது யுவதியான சாராவுக்கோ, `நான் எப்பொழுதும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்‘ என அவள் சொல்லுவதுதான் பள்ளிக் காலம் தொட்டு காதல் கைகூடாமல் போவதற்கான காரணம். திரைப்பட இயக்குநராகும் கனவுகளில் ஜீவிப்பவளுக்கு சிறு பிராயத்தில் இருந்தே குழந்தை பெற்றுக்கொள்வது, குழந்தை வளர்ப்பு போன்றவை அலர்ஜி. ஒரு கட்டத்தில், தன்னைப்போலவே, `குழந்தையா? வேண்டாம்’ என்ற முடிவில் இருக்கும் ஜீவனின் மேல் காதல் பிறக்கிறது. குடும்பச் சூழல் சாதகமாக அமைந்தாலும், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் உடனடியாக திருமணம் நடந்தேறுகிறது. `ஒரு நாள் நான் சமைப்பேன், இன்னொரு நாள் நீ' என பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அவ்வப்போது ஆம்லெட்டை சுட்டுக் கொடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

`கல்யாணத்துக்கு அப்புறமும் நமக்குள்ள எதுவுமே மாறாது’ எனச் சொல்லும் ஜீவனின் வேலையில் அவன் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஏற்றங்களும் வருகின்றன. தயாரிப்பாளருக்கான தேடுதல் வேட்டையில் இருக்கும் சாராவிற்கோ, பெண் என்ற காரணத்தால் வாய்ப்புகள் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. மற்றொரு தயாரிப்பாளரோ, கதையில் சில பிரச்னைகள் இருக்கின்றன. தன்னுடன் தனது ரிசார்ட்டிற்கு வரும் பட்சத்தில் அதைச் சரி செய்யலாம் என்று நேரடியாகவே தூண்டில் போடுகிறார். அட்வான்ஸ் பணம் கொடுத்த வேறொரு தயாரிப்பாளரோ `மீ டூ’ புகாரில் கைது செய்யப்படுகிறார். மற்றுமொரு தயாரிப்பாளரோ,`உன் கதை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் நீ ஒரு பெண். உன்னால் பட வேலைகளைத் திறம்பட செய்ய முடியுமா?' என்பதுடன், `கதையை எங்களுக்குக் கொடு. வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்கிக் கொள்கிறேன்’ என்கிறார்.

இவ்வாறு, திறமை இருந்தும் தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் போது ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் சாராவுக்கு வாய்ப்பு தர முன்வருகிறார். எல்லாம் கைகூடி வரும் சமயத்தில் சாரா கர்ப்பமாக, அத்தனை நாள்கள் குழந்தை வேண்டாம் என நினைத்திருந்த ஜீவன் உள்பட அனைவரும் `பெற்றுக் கொள்ளலாமே’ என்று நினைக்க, குடும்பம் உற்சாகத்தில் திளைக்க, சாராவுக்கோ, `இது இல்லையே நான் செய்ய விரும்பியது’ என்று தோன்றுகிறது.

கிட்டிய சினிமா வாய்ப்பிற்காக குழந்தை வேண்டாமென சாரா முடிவெடுக்க, சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த உறவில் பிரச்னை வெடிக்கிறது. சாராவின் இயக்குநர் கனவு என்ன ஆனது, குழந்தை பெற்றுக் கொண்டார்களா, குழந்தையா சினிமாவா என்ற மனப் போராட்டத்தில் சாரா என்ன முடிவெடுத்தாள் என்பதை இரண்டு மணி நேரத் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜுட்.

sara’s movie
sara’s movie

குழந்தைப்பேறு என்பது தெய்வம் கொடுக்கும் வரம் எனத் தாய்மையை இந்திய சமூகம் துல்லியமாக ரொமான்ட்டிசைஸ் செய்திருப்பதை சத்தம் போடாமல் சாடியிருக்கும் திரைப்படம், குழந்தையொன்றை எப்போது பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை தீர்மானிக்கும் பிரதான உரிமை சம்பந்தப்பட்ட பெண்ணிற்குத்தான் உள்ளது என்பதையும் உரக்கப் பேசியிருக்கிறது. அதிலும் திரைக்கதை எழுதியிருப்பதும், படத்தை இயக்கியிருப்பதும் அக்ஷய் ஹரீஷ் மற்றும் ஜூட் ஆன்டனி ஜோசப் என்ற இரு ஆண்கள்.

`கல்யாணமாகி இத்தனை மாதங்கள் ஆகிவிட்டது, ஏதும் நல்ல செய்தி இல்லையா?’

`இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தள்ளிப் போடுவீர்கள்?’

`என்ன ஒண்ணுடன் நிறுத்திவிட்டீர்கள்? பொருளாதார வசதியை எல்லாம் ஒரு காரணமாகச் சொல்லாதீர்கள். விதை விதைத்தவனுக்குத் தண்ணீர் விடத் தெரியாதா?'

நம் சமூகத்தில் திருமணமானவர்கள், அதிலும் பெண்கள் எதிர்கொண்ட/எதிர்கொள்ளும் இதுபோன்ற கேள்விகள்தான் எத்தனை எத்தனை?

கல்லூரிக் காலத்தில் உடன் படித்தவள் தனலட்சுமி.

படிப்பில் சுட்டி. பல்கலைக்கழக அளவில் முதன்மையானவளாக வருவாள் என மொத்த டிபார்ட்மென்ட்டும் அவளை நம்பியது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டின் போது தனலட்சுமிக்கு உறவிலேயே ஒருவருடன் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமானாள். பிரசவ தேதியும் அவளது கடைசி செமஸ்டர் தேதியும் ஏறக்குறைய ஒன்றாக வர, கடைசி செமஸ்டர் எழுத முடியவில்லை. அன்று தொடங்கி இன்று வரையிலும் மீதமிருக்கும் 5 பேப்பர்களை தனலட்சுமி க்ளியர் செய்யவில்லை. ஏன் என்றதற்கு அவள் சொன்ன பதில்… `யூனிவர்சிட்டில முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படித்தேன். கடைசி செமஸ்டர் முழுவதும் எழுத முடியாமல் போனதால் அது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது. இதற்குப் பின் அதைப் படித்து அந்த அரியர்களைக் கிளியர் செய்து இனி நான் என்ன செய்யப் போகிறேன்?’

லதா!

சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவள். 2017-ல் கொரோனா காலத்திற்கு முன்பு அந்நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகத்திற்கு கம்பெனி செலவிலேயே சென்று அங்கேயே தங்கியிருந்து ஓராண்டு பணிபரியும் வாய்ப்பு கிடைத்தது அவளுக்கு. அங்கு சென்ற அடுத்த மாதம் தான் கருவுற்றிருப்பதை அறிந்ததும் மீண்டும் தாயகம் திரும்பினாள்.

சிந்து - தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்து வந்தவர். பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருந்த சமயத்தில்தான் கர்ப்பமாக இருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. டீமில் இருந்த உளவுத் துறையின் மூலமாக விஷயம் மேலிடத்தை எட்ட பதவி உயர்வு பட்டியலில் இருந்த சிந்துவின் பெயர் நீக்கப்பட்டது.

sara’s movie
sara’s movie

அடுத்த சில வருடங்களில் கார்ப்பரேட் வாழ்விலிருந்து சிந்துவும் லதாவும் காணாமல் போயினர். இன்றோ... தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கச்சிதமான குடும்பத் தலைவிகளாகிப் போனார்கள்.

̀அவர் அடுத்தடுத்த புரமோஷன்கள், ஆன்சைட் என கிளம்பினார். யாராவது ஒருத்தர் குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கணும்ல? அதான் நான் ஹாப்பி ஹோம் மேக்கர் ஆகிட்டேன்' எனச் சொல்லி சிரித்த சிந்துவின் கண்களில் நான் கண்டதன் பெயரை விரக்தியா, சோகமா எனப் பிரித்தறிய இயலவில்லை.

பேறு கால விடுமுறைக்குப் பின் ஒரு பெண் பணியில் தொடர்வது பல சதவிகிதமாக குறைவது முதல், குழந்தை என்றான பின் கணவன், குழந்தைகள், குடும்பம் இவற்றிற்கிடையில் தனது சுயத்தை, கனவுகளை இழந்த/ இழக்கின்ற பெண்கள் வரை குழந்தை என்ற ஒன்றினால் நம்மைச் சுற்றி நடக்கும் பலவற்றைப் பார்க்கிறோம். இவ்வளவு ஏன்? `ஆண் பெண் சமவுரிமை என்பது எங்களுக்கு பிரதானம்’ எனச் சொல்லும் பன்னாட்டு நிறுவனங்களில் கூட கர்ப்பம் தரித்திருப்பதையும், குழந்தைக்குத் தாயாக இருப்பதையும் காரணம் காட்டி புரமோஷன்கள் மறுக்கப்பட்ட கதைகள் இங்குண்டு. போலவே இது போன்ற பல நூறு தனலட்சுமிகளும், லதாக்களும், சிந்துக்களும் இன்றளவும் நம்மிடையே உலாவத்தான் செய்கிறார்கள் .

வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் கூட,`மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்?’ என்று பெண்களின் விருப்பு, வெறுப்புகளைக் கேட்கும் வழக்கம் பல குடும்பங்களில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இன்றளவும் பெரும்பான்மையான பெண்களுக்கு கிடைக்காத ஒன்று, `எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?’ என்பதை தீர்மானிக்கும் உரிமை. ஆணும் பெண்ணும் சமம் என்று ஏகமனதாக ஏற்றுக்கொண்ட பலராலும் இன்றுவரை ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயம், ஒரு பெண் தன் தொழில் வளர்ச்சிக்காக, தனது வேலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, தன் லட்சியங்களை நோக்கிய பயணத்திற்காக குழந்தை பெற்றுக் கொள்வதை ஒத்திப் போடுவதும், குழந்தை வேண்டாமென தீர்மானிப்பதும்.

`சொந்த வீடு, கார், நல்ல டீசன்ட்டான அக்கவுன்ட் பேலன்ஸ் என்றான பின்புதான் குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என ஓர் ஆண் சொல்லுவதை, `லைஃப்ல செட்டில் ஆன பின்தான் அப்பா ஆவேன்னு சொல்றான் பாரு. அவன்தான் பொறுப்பானவன்’ என்று சொல்லும் சமூகம், அதையே ஒரு பெண் சொல்லும் பொழுது, ஏதோ செய்யத்தகாததை செய்தவளைப் போலவே அவளைப் பார்க்கிறது.

sara’s movie
sara’s movie

திரைக்கதையில் சாராவின் நிலையும் அதுவே. திருமணம் என்று வரும்போது மறுக்கும் சாராவிடம், `இவர்களின் சந்தோஷத்திற்காக கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். மீதி எல்லாம் நம் இருவர் மாத்திரமே எடுக்கும் முடிவுதானே?' என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார் ஜீவன். அதே ஜீவன் கால ஓட்டத்தில் மனம் மாறி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது சாராவிடம், `உன் அம்மா, அப்பா, என் அம்மா, அக்கா, நான் என எல்லாருமே சந்தோஷமா இருக்கோம். இப்போ ஏன் இந்தக் குழந்தை வேண்டாம் என்கிறாய்?’ எனக் கேட்கும் போது, `அப்போ என்னுடைய சந்தோஷம்? என் கனவு, என் லட்சியம்?’ என சாரா கேட்கும் கேள்வி மிக முக்கியமான ஒன்று. சாரா கேட்டதும், நம்முள் பெரும்பாலான பெண்கள் கேட்கத் தவறியதும் அக்கேள்வியைத்தான்.

`உனக்குப் பிடித்த வேலையில எதிர்பார்த்த மாதிரியான புரமோஷன் கிடைத்து நீ செட்டில் ஆகிட்ட. ஆனால் நான்… இரண்டு வருஷம் போராடினாலும் இன்னமும் அதே இடத்தில்தான் இருக்கேன். இப்ப முன்னேறி போக ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. இதை விட்டால் நான் இருக்கும் இடத்திலேயேதான் இருப்பேன்' எங்கிறாள். `என்னை பறந்து போ என்று சொல்லிய நீ, எனக்கான பாதை தெளிவாகி நான் பறக்கத் தயாராக இருக்கும் பொழுது என் வயிற்றைச் சுற்றி ஒரு கல்லைக் கட்டுகிறாயே... அது நியாயமா?' என சாரா எழுப்பும் கேள்வி பல பெண்கள் எழுப்பாமல் விட்டது.

`உங்கள் ஆயுளில் பாதியை இருவரையும் வளர்க்கத்தானே செலவழித்தீர்கள்? ஆனால் அவர்களில் ஒருவர் கூட வயதான பின் உங்களுடன் வந்து தங்கவில்லையே. அது ஏன்? இப்படி வளர்த்ததால் உங்களுக்கு என்ன கிடைத்தது?' எனத் தன் மாமியாரிடம் சாரா கேட்கும் காட்சி, பொட்டில் அடித்து சமகால வாழ்வின் நிதர்சனத்தை தோலுரித்துக் காட்டும் காட்சி.

`பார்த்துப் பார்த்து வளர்த்தேன். ஆனா கடைசியில ரெண்டு பசங்களும் என்னை முதியோர் இல்லத்தில் விட்டுட்டு வெளிநாடுகள்ல செட்டில் ஆகிட்டாங்க’ என்றும், `என் பசங்களுக்காக என் கரியரை கூட விட்டேன். ஆனா அவங்களோ என்னை கடைசி காலத்தில கை விட்டுட்டாங்க’ என்றும் சொல்லும் எத்தனையோ முதியோர்களை இன்றைய சூழலில் அதிக அளவில் பார்க்கிறோம். இவையனைத்தையும் பார்க்கும் போதுதான் தாய்மை, பேரன்டிங் என்பதெல்லாம் நம் சமூகத்தில் மிக அதிக அளவில் ரொமான்டிசைஸ் செய்யப்பட்டு, புரிந்து கொள்ளவியலாத சில புனித பிம்பங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.

எதிர்பாராமல் கருவுற்ற பெண்கள் பலருக்கும், `இப்பொழுது இந்தக் குழந்தை வேண்டாம்’ எனத் தோன்றினாலும், அக்கருவை கலைப்பதற்கான மன தைரியமும், சூழலும், சப்போர்ட்டும் கைகூடி வருவதில்லை. இதைச் சொன்னவுடன், `ஒரு தம்பதிக்கு அவர்கள் எதிர்பாராத தருணத்தில் கரு உண்டானால் கலைக்கச் சொல்கிறீர்களா?’ என்றால் கட்டுரையின் அடிநாதம் அதுவல்ல. ஒரு பெண் தனது லட்சியத்தை நோக்கிப் போகும் பாதையில் குழந்தை ஒரு தடையாக இருக்கும் என்றோ, அல்லது தன்னால் இப்போது இக்குழந்தையை நல்ல படியாக வளர்க்க முடியாது என்றோ கருதும்பட்சத்தில் இப்பொழுது குழந்தை வேண்டாம் என அவள் சொல்வது கூட இங்கு மாபெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது என்பதைத்தான்.

sara’s movie
sara’s movie

ஆண், பெண் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினராலும் பேசப்படாமல் இருந்த விஷயம் ஒன்றை, வழக்கம்போல அவ்விடத்து சேட்டன்மார்கள் பேசியிருக்கிறார்கள். ஒரேயொரு திரைப்படத்தில் இதுகுறித்துப் பேசுவதால் காலங்காலமாக பழக்கத்தில் இருக்கும் எதையும் அது மாற்றி விடாதுதான். எனினும், தன் உடல் சம்பந்தமான, குழந்தை பெறுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை பிரதானமாக பெண்ணைச் சார்ந்ததே என்ற புரிந்துணர்வையும், அதைப் பரவலாக்க ஓர் உரையாடலுக்கான வெளியையும் அமைத்த முயற்சிக்காக சாராஸ்-ஐ மனதார பாராட்டலாம்

படத்தின் ஒரு காட்சியில் உறவினரராக வரும் பெண் கதாபாத்திரம் `இது பெஃமினிஸம்’ என்ற வசனமொன்றைச் சொல்லுவார். தன் உடல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் உரிமை தனக்கும் இருக்கிறது என ஒரு பெண் நினைப்பதே ஃபெமினிஸம் என்றால், சாராவும், சாரா போன்ற பெஃமினிஸ்ட்களும் வரவேற்கப்படப் வேண்டியவர்களே.