Published:Updated:

ரஜினி `புரட்சி'யின் அதே ஸ்பாட்... என்ன சொல்லப்போகிறார் `மாஸ்டர்' விஜய்? #Master

விஜய்
விஜய்

விஜய்யின் புதுப்பட ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்குமோ அதே அளவுக்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் மேடைப் பேச்சிற்கும் ஏற்பட்டுள்ளது.

'அய்யோ.....விஜய்யா அவரு ரொம்ப கூச்ச சுபாவமான ஆளு... அமைதியானவருங்க' எனப் பலராலும் வரையறுக்கப்பட்ட விஜய் கூச்சங்களை உடைத்து தன்னுடைய மேடைப்பேச்சிற்கு இப்படியொரு எதிர்பார்ப்பை சாத்தியப்படுத்தியது எப்படி?

இந்த 2010-20 டிகேடின் ஆரம்ப காலத்தில் 2013-ல் `தலைவா' பட ரிலீஸ் பிரச்னையின்போது கையைக் கட்டியபடி ஒரு வீடியோவில் தோன்றி மிகவும் மனமுடைந்து அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்த விஜய்க்கும், 2019-ல் 'பிகில்' ஆடியோ வெளியீட்டு விழாவில் இடுப்பில் கைவைத்தபடி 'யார் யார எங்க வைக்கணுமோ அவங்கள அங்க வெச்சா எல்லாம் கரெக்டா நடக்கும்' என அனல் தெறித்த விஜய்க்கும் இடைப்பட்ட காலம்தான் மேடைப்பேச்சில் விஜய் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட காலம்.

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch

'தலைவா' படம் வரைக்குமே தன்னுடைய முந்தைய 55 படங்களின் ரிலீஸின் போதும் டிவி சேனல்களில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தார் விஜய். சேனல்களும் விஜய் கலந்துகொண்ட அந்த 2 மணி நேர நிகழ்ச்சிகளை வெட்டி ஒட்டி இரண்டு மூன்று வாரங்களுக்கு ஓட்டிவிடுவார்கள். ஆனால், 'தலைவா' படத்திற்குப் பிறகு எந்தப் படத்தின் டிவி புரொமோஷன்களுக்கும் விஜய் தலை காட்டியதே இல்லை. இதுவரை இருந்ததுக்கும் மேலாகத் தனக்கான ஒரு எக்ஸ்க்ளூசிவிட்டியை இங்கே இருந்துதான் உருவாக்கத் தொடங்கினார் விஜய். நேரடியாக விஜய் பேசாவிட்டாலும் அவரது படங்களுக்கு உண்டாகும் பிரச்னைகளும் அதற்கு அரசியல்வாதிகளின் எதிர்வினையும் என 24/7 நியுஸ் சேனல்கள் விஜய் படத்திற்கு புரொமோஷன் செய்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். இவையெல்லாம் விஜய்யின் மேடைப் பேச்சை ரசிகர்களைத் தாண்டி பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் கவனிக்கவைத்தது. அந்தக் கவனிப்புக்கு நியாயம் செய்யும் பொருட்டு விஜய்யின் மேடைப்பேச்சுகளும் உருமாறத்தொடங்கின.

இந்த உருமாற்றத்திற்கு அச்சாணி போட்டது திருநெல்வேலி மண். விஜய்யை நொந்து போகச் செய்த தலைவா பட விவகாரம் விஜய்க்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. மீண்டும் 'தலைவா' பட பிரச்னை போல 'கத்தி' படத்திற்கும் பல அரசியல் கத்திகள் பாய மீண்டும் விஜய் அப்செட். 'கத்தி' ஆடியோ விழாவில் 'நான் தியாகியும் இல்ல துரோகியும் இல்ல' என மிகச்சோர்வாக வேதனையை வெளிப்படுத்தினார் விஜய். பல போராட்டங்களுக்கும் இழுத்தடிப்புகளுக்கும் பிறகு கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடிக்க, இந்த முறை 'தலைவா'வுக்கு இருந்தது போல் சைலன்ட் மோடில் இல்லாமல் 'கத்தி' வெற்றி விழா எனக் களத்தில் இறங்கினார் விஜய். 2014, டிசம்பர் 14-ல் திருநெல்வேலியில் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற 'கத்தி' வெற்றிவிழாவில் விஜய், 'நம்மகிட்ட சாஃப்டா பேசுனா சாஃப்டா பேசணும், வேற மாதிரி பேசுனா வேற மாதிரி பேசணும்' என ரைமிங் டைமிங் குட்டிக்கதை என விஜய் இன்று மேடையில் நிகழ்த்தும் ஜாலங்களுக்கெல்லாம் டிரெய்லர் ஓட்டிக்காட்டியது திருநெல்வேலியில்தான். விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், விஜய்யின் திருநெல்வேலி கூட்டமும் நெய்வேலி செல்ஃபியும் யாருக்கான பதில் என்று.

ஒரே ஒரு பேட்டி... டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?

'என் நெஞ்சில் குடியிருக்கும்...' என ரசிகர்களுக்கு ஒரு சலாமோடு தொடங்கி, படத்தில் வேலை செய்தவர்கள் ஒவ்வொருத்தரையும் நகைச்சுவையோடு குறிப்பிட்டுப் பேசிவிட்டு ரசிகர்களுடன் ஒரு குட்டிக்கதையைக் கதைத்துவிட்டுக் கடைசியாக அன்றைய ட்ரெண்டிங் பிரச்னையோடு சேர்த்து ஒரு மறைமுக அரசியல் பன்ச் எனத் தனது பேச்சுக்கென்று ஒரு கமர்ஷியல் ஃபார்மட்டை உருவாக்கிக்கொண்டு 'புலி'யி தொடங்கி 'பிகில்' என அனைத்து விழாக்களிலும் மிரட்டியிருப்பார் விஜய்.

மேடைப்பேச்சைப் பொறுத்தவரை நமது கைகளை எந்த அளவுக்கு நமது கன்ட்ரோலில் வைத்திருக்கிறோமோ அதை வைத்தே கான்ஃபிடன்ஸாக இருக்கிறோமா இல்லையா என்பதை பார்வையாளர்கள் உணர்ந்துவிடுவார்கள் எனக் கூறப்படுவதுண்டு. விஜய்யைப் பொறுத்தவரைக்கும் இந்த விஷயத்திலும் சிக்சர்தான். முதலில் போடியத்தில் இருக்கும் மைக்கில் பேச ஆரம்பித்தவர் அடுத்ததாக கைகளில் மைக் பிடித்து பேசி தற்போது ஸ்டாண்டிங் மைக்கில் செண்டர் ஸ்டேஜில் நின்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு பேச்சின் இடையிடையே பல மேனரிசங்களையும் அள்ளிவிட்டு கெத்து காட்டிக்கொண்டிருக்கிறார்.

விஜய்
விஜய்

விஜய்யின் புதுப்பட ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்குமோ அதே அளவுக்குனான ஆர்வமும் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் மேடைப் பேச்சிற்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் அரசியல் பேசிவிட்டுச் சென்ற அதே லீலா பேலஸில் இன்று 'மாஸ்டர்' ஆடியோ லாஞ்சிற்காக மைக் பிடிக்கவிருக்கிறார் விஜய். வருமான வரித்துறை கெடுபிடி அதைச்சுற்றிய அரசியல் விவாதம் என நெருக்கடிக்குள்ளான விஜய் இந்த முறை குட்டி ஸ்டோரியோடு கொஞ்சம் அரசியல் ஸ்டோரியையும் அவிழ்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் மேடைப்பேச்சுக்கு ஒரு புறம் பலத்த வரவேற்பு இருந்தாலும் எதிர்த்தரப்பு ரசிகர்கள் 'கில்லி' படத்தில் விஜய் பரீட்சைக்குப் படிக்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக்கொண்டு இதேபோன்றுதான் விஜய் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே ஆடியோ லான்ச் பேச்சிற்கு மனப்பாடம் செய்து கொண்டிருப்பார் என மீம்ஸ் போட்டு வருகிறார்கள். உண்மையில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் மேடையில் சென்று யாராலுமே பேசிவிட முடியாது. உலகறிந்த பேச்சாளராக இருந்தாலும் அன்று மேடையில் பேசப்போகும் விஷயம் குறித்து முன் தயாரிப்பு செய்து கொண்டுதான் வருவார்கள். எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வருபவர்கள்கூட மேடை ஏறும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை மேடையில் என்ன பேசப்போகிறோம் என்பதை மனதில் ஓடவிட்டு பார்த்துவிட்டுத்தான் மேடை ஏறுவார்கள். அதனால் விஜய்யும் முன் தயாரிப்போடு மேடையேறுவதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

Vijay at Bigil Audio Launch
Vijay at Bigil Audio Launch
`` `மாஸ்டர்’ ஷூட்டிங் ஸ்பாட் மேட்ச்ல விஜய் சார் அடிச்ச ஸ்கோர்?!" - ஹுமை சந்த்

ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அதுதான் விஜய்யைச் சுற்றியிருக்கும் அரசியல் விவாதங்கள். திரையுலகில் விஜய்யின் முன்னோடியான நடிகர் உருவாக்கி வைத்துள்ள அதே அரசியல் க்ளீஷேக்களில் விஜய்யும் பயணப்படுகிறாரோ என்ற கேள்வியை விஜய்யின் மறைமுக அரசியல் பன்ச்கள் உண்டாக்குகின்றன. காலம் பதில் சொல்லும் எனக் காலத்தைக் கடத்தாமல் உரிய நேரத்தில் இதற்கும் விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

'எனக்கு என்ன நாற்பதா அம்பதா இப்ப விட்டா அடுத்த முறை பார்த்துக்கலாம்கிறதுக்கு, இப்பவே எனக்கு 71' என ரஜினிகாந்த் லீலா பேலஸில் புரட்சி செய்ததை விஜய்யும் பார்த்திருப்பார் என நம்புவோமாக.

மாஸ்டர் கம்மிங்!

அடுத்த கட்டுரைக்கு