சிலம்பரசனை 'மாநாடு'க்கு முன்... 'மாநாடு'க்கு பின் என கி.மு... கி.பி. போல வகைப்படுத்தி சொல்லலாம். 'மாநாடு' வெற்றிக்கு பின், உற்சாகமாகவே இருக்கிறார். இடையே கௌரவ டாக்டர் பட்டமும் கிடைத்திருப்பதில் இன்னும் உற்சாகமாகிவிட்டார். சிங்கிள் டிஜிட்டில் சம்பளம் வாங்கியவர், இப்போது சக்சஸ் கொடுத்திருப்பதால் ஒரேடியாக டபுள் டிஜிட்டில் சம்பளத்தை ஏற்றிவிட்டார். எனவே, அந்த எனர்ஜியும் எகிறியுள்ளதால், அடுத்தடுத்து படங்கள் கொடுக்க ரெடியாகிவிட்டார். கௌதம் மேனனின் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்து வந்த 'வெந்து தணிந்தது காடு' படம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இதற்கடுத்து 'பத்து தல', 'கொரோனா குமார்' என ஓடிக் கொண்டிருக்கிறார் சிம்பு.

இந்நிலையில் சமீபத்தில் 'ஓ மை கடவுளே' அஷ்வத் மாரிமுத்து சொன்ன கதை பிடித்து விட, உடனே ஓகே செய்திருக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஓ மை கடவுளே' அமோக வரவேற்பை அள்ளினாலும் அஷ்வத் அடுத்து, தமிழில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு பக்கம் போனார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அங்கே 'ஓ மை கடவுளே'வை இயக்க ரெடியானார். இந்தியிலும் ரீமேக் செய்ய முயன்றார். ஆனால், உடனடியாக தெலுங்கில்தான் க்ளிக் ஆனார். அங்கே விஷ்வக் சென் ஹீரோவாக நடித்து வருகிறார். பிவிபி சினிமாஸ் அந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இப்போது தெலுங்கு ரீமேக்கில் கவனம் செலுத்தி வரும் அவர், அந்தப் படத்தை முடித்துவிட்டு சிலம்பரசனை இயக்க உள்ளார்.
சிம்பு தரப்பில் விசாரித்தால், "ஹீரோ, இயக்குநர் மட்டுமே உறுதியாக உள்ளனர். ஹீரோயின் உள்பட மற்றவர்கள் யாரும் இன்னும் முடிவு செய்ய வில்லை. இருவரும் தங்கள் கைவசம் இருக்கும் படங்களை முடித்த பின், அதாவது வரும் மார்ச்சில் ஷூட்டிங் கிளம்புவார்கள்" என்கிறார்கள்.