Published:Updated:

ஜனவரியில் `மாஸ்டர்', `ஜகமே தந்திரம்', `டாக்டர்'... தியேட்டர்கள் திறப்பது எப்போது?!

மாஸ்டர் விஜய்
மாஸ்டர் விஜய்

'மாஸ்டர்', 'ஜகமே தந்திரம்' படங்களின் தயாரிப்பாளர்கள் தியேட்டர்களில் 75 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் அனுமதி கிடைத்தும், தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை. தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்கவேண்டும் என நேற்று தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்கள். ஆனால், தியேட்டர்கள் திறப்பு இப்போதைக்கு இல்லை என்கிற பதிலே முதல்வரிடம் இருந்து கிடைத்திருக்கிறது.
ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

"கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையவில்லை. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. இந்தச் சூழலில் பண்டிகை காலத்தில் தியேட்டர்கள் திறந்தால் அது சமாளிக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகளை உண்டாக்கலாம். கேரளாவில் பண்டிகை காலத்தில் மக்கள் ஒன்றுகூட அனுமதித்ததுதான் மீண்டும் கொரோனா பரவலை அங்கு அதிகமாக்கிவிட்டது. அதனால் இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க முடியாது" என்று தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இனி அனல் பறக்கும்... பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில் சுசித்ரா?!
தியேட்டர்களை இப்போது திறந்தாலும் இரவு 10 மணிக்குமேல் கடைகளைத் திறக்க அனுமதியில்லை என்பதுபோல தியேட்டர்களில் இரவு 9 மணி அல்லது 10 மணி காட்சிக்கும் அனுமதி கிடையாது. அதனால் மூன்று காட்சிகள், கேன்டீன் செயல்படக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் சில தியேட்டர் அதிபர்களுமே இப்போது தியேட்டர்கள் திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் | டாக்டர்
சிவகார்த்திகேயன் | டாக்டர்

தியேட்டர்களை இப்போது திறந்தாலும் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதியிருக்கிறது. 'மாஸ்டர்', 'ஜகமே தந்திரம்' படங்களின் தயாரிப்பாளர்கள் தியேட்டர்களில் 75 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நடிகர் விஜய் பொங்கலுக்கு 'மாஸ்டர்' படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் எனச்சொல்லி சில புரமோஷன் பிளான்களையும் திட்டமிடச்சொல்லியிருக்கிறார். அதேபோல் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படமும் ஜனவரி ரிலீஸூக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களுடன் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படமும் ஜனவரி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகிறது.

இப்படி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயனின் படங்கள் ஜனவரி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருப்பதால் டிசம்பர் இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு