Published:Updated:

விஜய்க்கு மாஸ் ஹிட் பாடல்களை எழுதியது கபிலனா, விவேக்கா? - வரிகள் சொல்லும் உண்மை என்ன?!

Vijay
Vijay

'பிகில்' இசைவெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர் - வாலி, ரஜினி-வைரமுத்து வரிசையில் விஜய்-விவேக் என்கிற போட்டோகார்டு இடம்பிடித்திருந்தது. இதனால்தான், விஜய்க்கு மாஸ்ஹிட் பாடல்களை எழுதியது கபிலனா, விவேக்கா என்கிற விவாதம் சோஷியல் மீடியாக்களில் நடந்துகொண்டிருக்கிறது.

`அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது...', `மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர... நான் ரெக்கை கட்டி பறந்துவரும் ரெண்டு காலு குதிரை... பறையடிச்சா பாட்டு வரும் உறையடிச்சா ஆட்டம் வரும்... கட்டி வெல்லம் உன்னப் பார்த்தா கட்டெறும்பு கூட வருமே...' - விஜய்க்காக இப்படி பல மாஸ் ஹிட் பாடல்களை எழுதியவர், கபிலன்.

சோஷியல் மீடியாக்களில் எழுந்திருக்கும் விவேக் Vs கபிலன் யுத்தம்தான் இப்போது இந்தப் பாடல்களை மேற்கோள் காட்டுவதற்கான காரணம்.

'பிகில்' இசை வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர் - வாலி, ரஜினி-வைரமுத்து வரிசையில் விஜய்-விவேக் என்கிற மீம் இடம்பிடித்திருந்தது. விஜய்க்கு மாஸ் ஹிட் பாடல்களை எழுதியது கபிலனா, விவேக்கா என்கிற விவாதம் சோஷியல் மீடியாக்களில் நடந்துகொண்டிருக்கிறது.

Vijay - Vivek
Vijay - Vivek

புலமைப்பித்தன், வாலி இருவரும்தான் விஜய்யின் ஆரம்ப காலத்து படங்களுக்கு பாடல்கள் எழுதினார்கள். விஜய்யின் கிராஃபில் முக்கியமான படம், `பூவே உனக்காக'. அந்தப் படம் மாபெரும் ஹிட்டாக, பாடல்களும் முக்கியக் காரணம். `ஆனந்தம் ஆனந்தம் பாடும்', `சொல்லாமலே யார் பார்த்தது' உட்பட, அந்தப் படத்தின் மற்ற இரண்டு பாடல்களுக்கும் வரிகள் எழுதியவர், பழனி பாரதி. அந்தந்த காலகட்டத்தின் காதல்களை கட்டமைக்கவும் உணர்வதற்கும் உதவியாக இருப்பது, சினிமா பாடல்கள்தான். `மனதில் நின்ற காதலியே... மனைவியாக வரும்போது' என்ற வரிகள்தான் ஊரிலிருப்பவர்களின் அனைத்து செல்போன்களிலும் அப்போது ரிங்டோனாக ஒலித்தது.

அதற்குப் பிறகு, விஜய்யின் படத்தோடு சேர்த்து பாடல்களும் கவனம் பெற ஆரம்பித்தன. அதில் முக்கியமாக பழனி பாரதி, வைரமுத்து, வாலி, பா.விஜய், நா.முத்துகுமார் எனப் பலர் விஜய் நடித்த படப் பாடல்களுக்கு வரிகள் எழுதினார்கள். விஜய் கரியரில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்த படம், `காதலுக்கு மரியாதை'. அப்படத்தின் இயக்குநர், பாடல்களுக்கும் மரியாதை கொடுக்க நினைத்து, இசையை இளையராஜாவிடமும், வரிகள் எழுதும் பொறுப்பை வழக்கம்போல் பழனி பாரதியிடமும் கொடுத்தார். ஹரிஹரன், மலேசியா வாசுதேவன், யேசுதாஸ், சித்ரா போன்ற ஜாம்பவான்கள் அனைவரும் அப்படத்தில் பாடியிருந்தனர். ஒவ்வொரு பாடலும் இளைப்பாற்றித் தாலாட்டியது. இவையனைத்தும் 90-களில் நடந்தவை.

இருபத்தோராம் நூற்றாண்டு ஆரம்பித்தது. தொழில்நுட்பத்தோடு நடிகர்களும் வேறு பரிமாணத்தை அடைந்தார்கள். வழக்கமான பாணியிலிருந்து விலகி வர நினைத்த விஜய், சோஷியல் மெசேஜ் படங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். அதில் மிக முக்கியமான படம், `யூத்'. தன் வசனங்களின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸைக் கவர்ந்தார். வின்சென்ட் செல்வா இயக்கிய அப்படத்திற்கு, வாலியும் வைரமுத்துவும் வரிகள் எழுதினர். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த `ஆள்தோட்ட பூபதி நானடா' பாடல் அந்தக் காலத்து வைரல் ஹிட். இந்தப் பாட்டை நான் டெடிகேட் பண்ணுறேன், நான் டெடிகேட் பண்ணுறேன் எனப் போட்டிபோட்டுக்கொண்டு சன் மியூசிக்கிலும், எஃப்எம்களிலும் ஓயாமல் ஒலித்தது, ஆள் தோட்ட பூபதி. இந்தப் பாடலை எழுதியவர், கபிலன்.

முதல்முறையாக விஜய்க்கு கபிலன் எழுதிய பாடல் இது. இப்படி ஒரு வாய்ப்பு கபிலனுக்குக் கிடைத்த சம்பவமே சுவாரஸ்யமானது. இதைப்பற்றி இயக்குநர் மிஷ்கின் சொல்லியிருக்கிறார்.

Director Myskin
Director Myskin

``விஜய் நடித்த `யூத்' படத்தில் நான் கோ டைரக்டர். அப்பவே எனக்கு முன் கோபம் அதிகம். வாலி இந்தப் படத்துடைய பாடலுக்கு வரிகள் எழுதினார். அப்போதுதான் என் நண்பர் கபிலன், 'ஆள்தோட்ட பூபதி'னு ஒரு பாடல் எழுதியிருந்தார். இதை டீமில் சிலரிடம் சொன்னேன். வாலி பெரிய கவிஞர். ஆனால், என் நண்பனின் வரிகள் விஜய்க்கு பொருத்தமா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு. ரெகார்டிங் சமயத்தில் வாலியின் வரிகளை மறைத்துவிட்டு, என் நண்பருடைய வரிகளைக் கொடுத்துப் பாட வைத்தேன். இது தெரிந்த பிறகு, அனைவரும் திட்டித் தீர்த்தனர். ஆனால், இயக்குநர் வின்சென்ட்டுக்கு இந்தப் பாடல் பிடித்துப்போக, பாடல் படத்தில் இடம்பிடித்தது'' - இப்படித்தான் மிஷ்கினால் விஜய்க்கு பாட்டு எழுதினார், கபிலன். அந்தப் பாடல் ஹிட்டானதால், தொடர்ந்து விஜய்க்கு பாடல் எழுதும் வாய்ப்பு கபிலனுக்கு வந்தது.

Rajini - Kabilan
Rajini - Kabilan

விஜய்யின் மாஸ் கிராஃபில் மிக முக்கியமான படம், `கில்லி'. அதில் மிக மிக முக்கியமான பாடல், `அர்ஜுனரு வில்லு'. இந்தப் பாடலை கேட்கும்போதே, ஒருவித எனர்ஜி வந்துவிடும். பிரபல பாடகரான சுக்விந்தர் சிங், இப்பாடலைப் பாடியிருப்பார். படத்தில், விஜய்யின் அந்தக் குறிப்பிட்ட பகுதியின் மாஸை படத்தில் எகிறிவைக்கப் பயன்பட்டது, அந்தப் பாடல் வரிகள். அந்தப் பாடலையும் எழுதியவர், கபிலன்.

ராமனுக்குக் கிடைத்த அணில் போல விஜய்க்குக் கிடைத்தார் கபிலன். `மதுர' படத்தில், 'மச்சான் பேரு மதுர', `சச்சின்' படத்தில் `குண்டு மாங்காத் தோப்புக்குள்ள', `போக்கிரி' படத்தில் `ஆடுங்கடா என்னைச் சுத்தி' என ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம்போடவைத்தவர், கபிலன்.

அதன்பிறகு, 'குருவி', 'வில்லு', 'சுறா' எனத் தொடர்ந்து விஜய் படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். படங்களைப் பற்றி பாசிடிவ்வாக யாரும் பேசவில்லையென்றாலும் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டுதான் இருந்தனர். இந்நிலையில்தான் விஜய்க்கு கடைசியாக 'தெறி' படத்தில் பாடல்கள் எழுதினார் கபிலன். செல்லக்குட்டி, ராங்கு என இரண்டு பாடல்கள் எழுதியிருப்பார். அதன்பிறகு, விஜய்க்கு கபிலன் பாடல்கள் எழுதவில்லை.

இந்நிலையில்தான், 'மெர்சல்' படத்திலிருந்து விஜய்யுடனான விவேக்கின் பயணம் ஆரம்பித்தது.`ஆளப்போறான் தமிழன்' என்ற ஒற்றைப் பாடல், உலகம் முழுக்க ஒலித்தது. இது கொடுத்த மெகா மாஸ் ஓப்பனிங்கால் `பிகில்' வரைக்கும் விஜய்யுடன் தொடர்கிறார் விவேக்.

Vijay
Vijay

ரஜினியின் ஓப்பனிங் பாடல்களுக்கு இருந்த அதே கிரேஸ், விஜய்யின் இன்ட்ரோ பாடல்களுக்கும் இருக்கிறது. விஜய் பாடல்களின் கருத்தும் வரிகளும் ரஜினியின் இன்ட்ரோ பாடல்களை நினைவுபடுத்தியது. ரஜினியென்றால் வைரமுத்து நினைவுக்கு வருவது நிஜம்தான். ஆனால், விஜய்யின் இன்ட்ரோ பாடல்களுக்கு விவேக் நினைவுக்கு வருகிறாரா அல்லது கபிலன் நினைவுக்கு வருகிறாரா என்று நீங்கள்தான் கமென்ட்டில் சொல்ல வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு