Published:Updated:

`வக்கீல்’ அஜித்தும், `கோச்’ விஜய்யும்தான் `பெண்ணிய’ சினிமாவின் காட்ஃபாதர்களா?!

தமிழ் சினிமா
தமிழ் சினிமா

ஜோதிகா, நயன்தாரா என நடிகைகள் எல்லோரும் தனிக் கதைகளில் நடிக்கத் தொடங்கியவுடன், பெண்ணியத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துகொண்டது, தமிழ் திரைத்துறை. அதைத் தொடர்ந்து, மாஸ் ஹீரோக்கள் இப்போது பெண்ணியம் பேசும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதில்தான் சிக்கல் தொடங்கியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேற்கத்திய திரையுலகில், 'ஒய்ட் சேவியர் நரேட்டிவ்' (White Saviour - வெள்ளைக் காவலன்) என்ற ஒருவகைக் கதை சொல்லல் மற்றும் திரைக்கதை அமைப்பு முறை வழக்கத்தில் உள்ளது. இந்த முறைப்படி வெளியாகும் படத்தின் ஜானர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், இதன் மறைபொருளில் ஒரு தீவிர அரசியல் சூழ்ச்சி இருக்கும் என்பதுதான், இந்த வகைப் படங்களில் கவனிக்கப்படவேண்டிய நுட்பம்.

Avatar - White Saviour
Avatar - White Saviour

ஒரு பெரும் சிக்கலில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைக் காக்க, அதன் எதிர் சமூகத்திலிருந்து ஒரு தலைவன் அல்லது காவலன் உருவெடுத்துவருவான். இறுதியில், அவனே அந்தச் சமூகத்தின் பாதுகாவலனாவான். கறுப்பின மக்கள்மீது வெள்ளையர் சமூகம் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் ஆதிக்கம் செலுத்தியபோது, அந்த அடிமைத்தனத்திலிருந்து கறுப்பின மக்களைக் காப்பற்ற வரும் தலைவர்கள் எல்லோரும் வெள்ளையர்களாகத்தான் இருந்தார்கள் என ஹாலிவுட் வெகுநாள்களாகக் கதை சொல்லிக்கொண்டே வந்தது. அந்த வரிசையில் வந்த படங்கள்தாம், 'மேட்ரிக்ஸ்', 'அவதார்', 'லிங்கன்' மற்றும் பல. தமிழில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்'கூட கிட்டத்தட்ட ஒயிட் சேவியர் படம்தான்.

கறுப்பர்கள் - வெள்ளையர்களிடையே இருந்த பாகுபாட்டை வைத்து, தொடக்க காலத்தில் திரைப்படங்களில் நிலவிய ஒயிட் சேவியர் வகை, 'அவதார்', 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'ஹாரிபாட்டர்', 'ஆக்வாமேன்' போன்ற படங்களால் வெவ்வேறு பரிமாணங்களுக்கு மாறியது. இந்த வகைக் கதை சொல்லல், அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என நம்புகிறது உளவியல் துறை. ஒரு இனத்தைக் காக்க அல்லது ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் போராட, வேறு இனத்திலிருந்தோ, தேசத்திலிருந்தோதான் ஒரு தலைவன் வருவான் என்ற நம்பிக்கையை இந்த வகைப் படங்கள்தாம் உருவாக்கின என்கிறது, அந்தத் துறை.

Aayirathil Oruvan - White Saviour
Aayirathil Oruvan - White Saviour

சமீப காலங்களில், தமிழ்த் திரையுலகில் வெளியாகிக்கொண்டிருக்கும் பல பெண்ணியம் சார்ந்த படங்களும் இதன் நீட்சியாகத்தான் இருக்கின்றன. ஜோதிகா, நயன்தாரா என நடிகைகள் எல்லோரும் தனிக் கதைகளில் நடிக்கத் தொடங்கியவுடன், பெண்ணியத்தை சந்தைப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துகொண்டது தமிழ்த் திரைத்துறை. ஆனால், அதைத் தொடர்ந்து பெருமக்களின் கதாநாயகர்களான மாஸ் ஹீரோக்கள், இப்போது பெண்ணியம் பேசும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதில்தான் இந்தச் சிக்கல் தொடங்கியது.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகார்த்திகேயன், முதலில் 'கனா' படம் மூலமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நடித்தார். அதன் திரைக்கதைப்படி, ஒரு பெண் தரும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின்படி விளையாடிவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும். இந்த அணி, ஒரு பழுதடைந்த ஆட்டோமொபைல் வண்டிபோலத்தான் எனக் குறைகூறிவிட்டு, பயந்து தன் மானம் போய்விடக்கூடாதென பணியிலிருந்து ஓய்வுபெறுவார், அந்தப் பயிற்சியாளர். அதைத் தொடர்ந்து, இந்த அணிக்கு பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், அந்த அணிக்கு உலகக்கோப்பையை வென்று தரும்.

Kanaa
Kanaa

இதே திரைக்கதை வடிவத்தில் வெளியான படங்கள்தாம் பெண்கள் கபடி குறித்த 'கென்னடி கிளப்' மற்றும் கால்பந்து குறித்த 'பிகில்'. ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்களில் எளிதில் பெண்ணியம் பேசிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை என்றோ உருவாகிவிட்டது. உண்மையில், ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் எந்தக் கருத்தியலையும் பொருத்திவிடலாம். அரசியல், சாதிய எதிர்ப்பு, மத நல்லிணக்கம், சுதந்திரப் போராட்டம், அப்பா மகன் உறவு, அண்ணன் தம்பி உறவு எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுப்பற்று... என விளையாட்டை மையப்படுத்தி வந்த படங்கள் இதுவரை காட்சிப்படுத்தாத மனித உணர்வே கிடையாது. அந்த வரிசையில், பெண்ணியம், நிறவெறி, உருவகேலி போன்றவை புதிய இணைப்புகளாகிவிட்டன.

'அத்தனை பெண்களுக்கும் சமர்ப்பணம்' எனச் சொல்லப்பட்ட 'பிகில்' படம், எந்த வகையிலும் பெண்ணியம் பேசவில்லை என்றுதான் பலரும் சொல்கிறார்கள். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், திருமணத்துக்குப் பிறகு சமையலறையில் சிறைபடுத்தப்பட்ட பெண் என எல்லோரையும் காட்டிவிட்டு, அவர்களின் சிக்கல்களையெல்லாம் ஐந்து நிமிடம் உணர்ச்சி பொங்கப் பேசித் தீர்த்துவிடுவது எந்த விதத்தில் பெண்ணியமாகும்?! இதில், உருவத்தால் கேலி செய்யப்படும் பெண்ணை மீண்டும் உருவகேலி செய்தே ஊக்குவிப்பதெல்லாம், எப்படிப் பார்த்தாலும் அபத்தம்தான். இதையெல்லாம்விட, கடைசிவரை அந்தப் பயிற்சியாளர் மட்டுமே அணி பெறும் எல்லா வெற்றிக்குமான ஒரே காரணம் என்பதுபோல திரைக்கதை அமைத்தது பேரவலம்.

Bigil
Bigil

போட்டிக்கு முன்னால் பயிற்சியாளரைக் கைதுசெய்துவிட்டால் அணி தோற்றுவிடும் என்பதைவிட, ஒரு விளையாட்டு அணியை எப்படி மட்டம் தட்டிவிட முடியும். படத்தின் நாயகனை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, அணியைத் தாழ்த்துவது ஒருவகை ஆணாதிக்க மனப்பான்மைதான்.

இது இப்படியிருக்க, சில மாதங்களுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' மற்றொரு வகை. அந்தப் படம் பேசிய அரசியல், அதன் மையக் கருத்தியல் எல்லாம் சரியாகத்தான் இருந்தன. என்றாலும், அதில் ஒரு ஆணாதிக்கச் சாரம் இருந்ததையும் தவிர்க்க முடியவில்லை. 'நேர்கொண்ட பார்வை' மற்றும் அதன் மூலமான பாலிவுட்டின் 'பிங்க்' என இரண்டுமே அதே கதையை 1981-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'நியாயம் காவாலி' படத்தின் கதையின் சில அம்சங்களைக் கொண்டவைதாம். அதே படம், 1984-ம் ஆண்டு 'விதி' எனத் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.

Vidhi
Vidhi

அந்தப் படத்தின் கதைப்படி, ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ஏமாற்றும் ஆண், அவளை ஒரு உல்லாச விடுதிக்கு அழைத்துச்சென்று, அவளுடன் உடலுறவுகொண்டு, பின் கைவிடுகிறான். தன்னை ஏமாற்றியவனை எதிர்த்து வழக்கு தொடுக்கும் பெண்மீது, தன் பண பலத்துடன் எல்லா சாட்சிகளையும் திருப்பிவிடுகிறான் அந்த ஆண். அவளைக் காப்பாற்ற கடைசியில் அவனுடைய தந்தையால் அதேபோல் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் வழக்கறிஞரே வாதிட்டு, அவளுக்கு நீதி பெற்றுத்தருவார்.

இதைக் கொஞ்சம் மாற்றியமைத்து, அதே ஒரு பெண்ணின் இடத்தில் மூன்று பெண்களையும், ஒரு பெண் வழக்கறிஞருக்குப் பதிலாக ஆண் வழக்கறிஞரையும் வைத்து திரைக்கதை அமைத்திருந்தனர். கருத்தியல் கண்ணோட்டத்தில் நம்பி உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்து ஏமாற்றப்படும்போது, அதற்கு நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதை 'விதி'யும், உடலுறவுக்கு விருப்பமில்லாத பெண்ணை வற்புறுத்தும்போது எப்படி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை 'நேர்கொண்ட பார்வை'யும் பேசியிருக்கும். இந்த வேறுபாடுகளைக் கடந்து, நுட்பமாக கவனிக்கப்படவேண்டியது, ஒயிட் சேவியர் மனப்பான்மையைத்தான்.

அமிதாப், அஜித்... யாராகவும் இருக்கட்டும். பெண்களுக்கு எழும் சிக்கலிலிருந்து அவர்களைக் காக்க ஒரு ஆண் நாயகன், அதுவும் ஒரு மாஸ் ஹீரோ வரவேண்டும் என்ற மாயையை உருவாக்கியிருக்கிறது இந்தப் படம். படத்தின் வெளியீட்டுக்குப் பின், 'அஜித் மாதிரி ஒரு ஹீரோ பேசுறதுதான் இங்கே ரொம்ப முக்கியம்' என்ற ஒரு பொதுக்கருத்தையும் உருவாக்கியிருக்கிறது. அதுவே, 'பிகில்' வரும்போதும் தொடர்ந்தது.

Nerkonda Paarvai
Nerkonda Paarvai

மேலே குறிப்பிட்ட எல்லா படங்களிலும் திரைக்கதை வடிவம் ஒரேமாதிரிதான் இருக்கிறது. பெரும் சிக்கலில் இருக்கும் சில பெண்கள் (ஒரு விளையாட்டு அணி, பாலியல் அச்சுறுத்தல் எதிர்கொள்ளும் மூவர்). அவர்களைக் காப்பாற்ற அல்லது வழி நடத்தவரும் ஒரு ஆண் (பயிற்சியாளராக வரும் விஜய், சிவகார்த்திகேயன், வழக்கறிஞராக வரும் அஜித்). இப்போது அந்தப் பெண்கள் தங்களைப் பாதுகாக்க வரும் ஆணை முதலில் வெறுப்பார்கள். பிறகு, அவர்கள் நம்பிக்கையைப் பெறும் அளவுக்கு ஒரு நிகழ்வு திரைக்கதையில் நிகழும். கடைசியில், அவரை விட்டால் இந்த உலகத்தில் யாராலும் தங்களைக் காப்பாற்ற முடியாது என்ற ஒரு சூழலுக்குள் பெண்களைத் தள்ளிவிடும், படத்தின் திரைக்கதை. இறுதியில், அந்தப் பெண்களின் மொத்த வெற்றியும் அந்த ஆணையே சேரும் என்பதுபோல் திரைக்கதை நிறைவடையும்.

'நேர்கொண்ட பார்வை' vs 'பிங்க்'... ஆறு வித்தியாசங்கள்..!

தமிழ்நாடு கால்பந்து அணி கோப்பையை வென்றது, விஜய்க்கு மட்டுமே சொந்தமான வெற்றி என்றுதான் 'பிகில்' பெரும்பாலான பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. அதேபோல, 'நேர்கொண்ட பார்வை' படத்தின் கருத்தியல், எத்தனை ரசிகர்களால் உணரப்பட்டது என்பதும் சந்தேகமே. அஜித், அந்தப் படத்தில் பட்டியலிடும் பெண்கள் பாதுகாப்புக் கையேட்டின் விதிகளுக்குக் கைதட்டிய அதே கூட்டம்தான், ரங்கராஜ் பாண்டே-யின் பெண்களுக்கு எதிரான வசனங்களுக்கும் கைதட்டியது. அப்படியென்றால், அந்தப் படத்தை இவர்கள் எப்படி... எந்த அளவுக்கு உணர்ந்திருக்கின்றனர் என்பதும், 'நோ மீன்ஸ் நோ' வசனத்தின் ஆழம் எந்த அளவுக்கு அவர்களைச் சென்றடைந்தது என்பதும் குழப்பத்தையே தருகின்றன. இறுதியில், அந்த வழக்கில் வாதாடிய அஜித் வென்றது மட்டுமே அங்கே பேசுபொருளானது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

White Saviour - Male Saviour
White Saviour - Male Saviour

இந்தப் போக்கு தொடர்ந்தால், 'ஒயிட் சேவியர்' மனப்பான்மை, கறுப்பினத்தவர்கள் மத்தியில் உருவாக்கிய நம்பிக்கையைப் போன்றே இங்கும் ஒரு அடிப்படையற்ற நம்பிக்கை உருவாகிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. சசிகுமார், சிவகார்த்திகேயன், அஜித், விஜய் எனத் தொடரும் இந்தப் பட்டியல், மேலும் மேலும் பெண்களைக் காப்பாற்ற ஒரு ஆண்தான் வரவேண்டும் என்ற ஆணாதிக்க மனப்பாங்கே மீண்டும் மறைமுகமாக அச்சுறுத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு