Published:Updated:

`ஆடுகளம்' படத்தின் வில்லன் தனுஷ்தான்... ஏன் தெரியுமா?! - வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்! - பகுதி -3

ஆடுகளம்
ஆடுகளம் ( screenshot taken from sunNXT )

நாற்பது ஆண்டுகளாக, ஒரு தோல்வியைக்கூட கண்டிராது சேவற்கலையின் முடி சூடா மன்னனாக வலம் வரும் பேட்டைக்காரன், முதன்முறையாக தோற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை! ஆக, ஒரு நீண்ட கதையின் கடைசி அத்தியாயம்தான் படம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்!
வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்!

இருள் படர்ந்த ஒற்றைச் சந்து, அதன்மேல் `பொல்லாதவன்' எனும் பெயர் இளஞ்சிவப்பு வண்ணத்தில் தோன்றி மறைகிறது. படத்தின் பெயர் சொல்வதில் இதே பாணியைத்தான் எல்லாப் படங்களிலும் தொடர்கிறார் வெற்றிமாறன் என முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஏன் இதே பாணியைத் தொடர்கிறார்?

ஆடுகளம்
ஆடுகளம்
screenshot taken from sunNXT

`ஆடுகளம்', `வடசென்னை' மற்றும் `அசுரன்' ஆகிய மூன்று பெயர்களும் அக்கதை நிகழும் நிலத்தின் மீதுதான் தோன்றி மறைகின்றன. ஏனெனில், நிலம்தான் கதைமாந்தர்களை முடிவுசெய்கிறது ; கதைமாந்தர்கள்தான் கதையை முடிவு செய்கிறார்கள். நேர்த்தியான கதாபாத்திர வடிவமைப்பே, திரைக்கதையில் பாதி வென்றதற்குச் சமம் எனும்போது, நிலம்தான் ஒரு கதையின் மிக முக்கியமான கூறாக விளங்குகிறது. இதுதான் காரணம்.

திரைக்கதைக்கு பலம் கூட்டும் பாத்திர வடிவமைப்பைப் பற்றித்தான் இப்பகுதியில் அலசப்போகிறோம். பாத்திர வடிவமைப்புக்கு அவரது இரண்டாவது படைப்பான `ஆடுகளம்' மிகச் சரியானதாக இருக்கும். மானம், கௌரவம், பெருமை, மரியாதை போன்ற வார்த்தைகளில் நகரும் இக்கதைக்கு அந்நிலமும் அந்நிலத்தவரின் மனமுமே பெரும் பங்குவகிக்கின்றன. பெரும்பாலான கதைகளில் காணப்படும் முக்கியமான கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று நல்லவன், இன்னொன்று கெட்டவன். அதாவது ஹீரோ மற்றும் வில்லன். `ஆடுகளம்' படத்தில் நல்லவன் யார், கெட்டவன் யார்? கருப்பு நல்லவன், பேட்டைக்காரன் கெட்டவன் என்போம். ஆனால், அது சரிதானா?

Dhanush
Dhanush
screenshot taken from sunNXT

இப்போது விவரிக்கப்படும் கதாபாத்திரம் நல்லவனா இல்லை கெட்டவனா எனச் சொல்லுங்கள். தனக்கு குருவாக இருந்து அத்தனை வித்தையையும் சொல்லிக்கொடுத்தவரின் மானம் பந்தயத்தில் கிடக்கிறது. அதைக் கொஞ்சமும் நினையாமல், தன் சேவலை `வெற்றுச்சேவல்' என பழித்தவர்கள் முன் அதை `வெற்றிச் சேவல்' என மாற்றிக்காட்டும் ஆர்வத்தில் இறங்குகிறான் கருப்பு. பந்தயத்தில் தோற்றால் அவனுக்கு ஒரு சேவலோடு போயிற்று. ஆனால், குருவுக்கு 40 ஆண்டுகளாய் கட்டிக்காப்பாற்றிய பெருமை கரைந்துவிடும்..! இடையில், ``அவருக்குதான் வயசாயிடுச்சு, லூஸு மாதிரி பேசிட்டு இருக்காரு" என குருவுக்கு வசவு வேறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, பந்தயத்தில் எப்படியோ ஜெயித்து லட்சாதிபதியான அடுத்த நாள், ``எம்மோவ்... நம்ம லெவலுக்கு இங்கனலாம் நீ வர்லாமா" என ரேஷன் கடை வரிசையில் நிற்கும் தன் அம்மாவைப் பார்த்துக் கேட்கிறான். முந்தைய நாள் வரை, அதே ரேஷன் கடையில் வாங்கிய மண்ணெண்ணெய்தான் அக்குடும்பத்தின் ஆதாரம்! சரியான சுயநலமும் தலைக்கனமும் கொண்ட கதாபாத்திரமாக இருக்கிறதல்லவா. இவரைத்தான் `நல்லவன்' என்றோமா? வெற்றிமாறனின் கதைகளில் எவரும் மனிதருள் மாணிக்கம் கிடையாது, வெறும் மனிதர்கள். தேவைக்கேற்ப மனம் மாறும் சாதாரண சுயநல மனிதர்கள்.

Dhanush
Dhanush
screenshot taken from sunNXT

ஒருநாள் பேட்டைக்காரன் மற்றும் ரத்தினசாமி பார்ட்டிகளுக்கு இடையே சேவற்சண்டை நடக்கும்போது, காவல்துறை திடீரென சோதனைக்கு வந்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்றே கதை தொடங்கும். அந்த திடீர் ரெய்டுக்கு காரணம் காவல்துறை ஆய்வாளர் ரத்தினசாமிதான் என பேட்டைக்காரன் பெரியசாமி பார்ட்டியினர் குற்றம் சாட்டுவார்கள். ஆனால், ரத்தினசாமி அதை மறுப்பார். கடைசிவரை, இவர்தான் காரணம் என இயக்குநரும் யாரையும் குறிப்பிட்டிருக்கமாட்டார். உண்மையில், யார் காரணம்? கதாபாத்திர வடிவமைப்பை சரியாய் அலசி முடித்தால் ஒருவேளை பதில் கிட்டலாம்.

`ஆடுகளம்' கதையை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனதுக்குள் நிகழும் போராட்டங்களும் மாற்றங்களுமே நகர்த்திச் செல்கின்றன. விதியோ, தற்செயலோ அதில் பெரிதாய் பங்குவகிக்கவில்லை. திரைக்கதையில் `திடீர்' என்ற வார்த்தைக்கும் இடமில்லை. நாற்பது ஆண்டுகளாக, ஒரு தோல்வியைக் கூட கண்டிராது சேவற்கலையின் முடிசூடா மன்னனாக வலம் வரும் பேட்டைக்காரன், முதன்முறையாக தோற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை! ஆக, ஒரு நீண்ட கதையின் கடைசி அத்தியாயம்தான் படம். இறுதி அத்தியாயத்தில் திடீரென யாரும் வரப்போவதுமில்லை, எதுவும் நிகழப்போவதுமில்லை. முந்தைய அத்தியாயங்களில் நிகழ்ந்ததன் விளைவுகள் மட்டுமே விரியப்போகின்றன. அப்படியென்றால், கதைமாந்தர்களைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் நடந்தவை பற்றியும் சுருக்கியாவது சொல்ல வேண்டுமே, எப்படிச் சொல்வது? நறுக் சுறுக் வசனங்களில்தான்.

Dhanush in Aadukalam
Dhanush in Aadukalam
screenshot taken from sunNXT

பேசும் வசனங்களைக் கொண்டே, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை விளக்கிவிட முடியும். இக்கதையின் தொடக்கத்திலேயே கதைச்சொல்லியானவர், சேவற்கலைக்கும் அந்நிலத்துக்கும் இடையே உள்ள பண்பாட்டு ரீதியான பந்தயத்தை விவரித்துவிட்டு, ``சேவல்களின் சண்டை சேவல்களின் சண்டை மட்டுமல்ல, மனிதர்களின் சண்டை. இதிலும் குன்றா பகை, கொடுவஞ்சனை, செங்குருதி அனைத்தும் உண்டு" என்கிறார். இப்படி, சேவலின் வெற்றி, தோல்வியில்தான் சேவல் கட்டாரிகளின் மானம், கௌரவம் எல்லாம் அடங்கியிருக்கிறதென அவர்களின் பொதுவான குணாதிசயத்தை மனதுக்குள் விதைத்துவிடுகிறார்.

காவல்துறை ரெய்டு விவகாரம் நடந்தபிறகு, ரத்தினசாமி பந்தயத்துக்கு அழைக்கையில் பேட்டைக்காரன் மறுக்கிறார். ``இனிமே ஜெயிக்கமுடியாதுண்டு தெரிஞ்சு விலகுறீகளாக்கும்" என ரத்தினசாமி ஆட்கள் வம்பிழுக்கையில், ``ஆமான்னு சொன்னா சந்தோஷப்படுவீகளா. ஆமாய்யா உன்னோட தோத்துருவேன்னு பயந்துதான் விலகிக்கிறோம்'' என ரத்தினசாமியிடமிருந்து ஒதுங்கவே நினைக்கிறார் பேட்டைக்காரன். ``என்னன்ணே, அவிய்ங்க அப்படி சிரிக்குறாய்ங்க" என கருப்பு வேதனைப்படும்போது, ``நீங்க நினைக்குற மாதிரி என் கௌரவத்துக்காண்டி பார்த்தேன்னா, உங்க அம்புட்டு பேருக்கும் பிரச்னைடா" என்கிறார். இப்படி, தன் சிஷ்யர்களின் நலனுக்காக தன் கௌரவத்தையே விட்டுத்தர தயாராயிருக்கும் பேட்டைக்காரன்தான், தன் சிஷ்யனால் தன் கௌரவம் காணாமல் போனதெனும் கோபத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்.

`ஆடுகளம்' படத்தின் வில்லன் தனுஷ்தான்... ஏன் தெரியுமா?! - வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்! - பகுதி -3
screenshot taken from sunNXT

துரையுடனான சின்ன மனஸ்தாபத்தின்போது, கருப்பிடம் ``இனி நீ, நான், அயூப்பு. மூணு பேருதான்" என்கிறார் பேட்டைக்காரன். அவரே கருப்புடனான மனஸ்தாபத்தின்போது ``அவன் என்ன மதிக்கலடா. அகராதி புடிச்சவன்" என துரையிடம் கொதிக்கிறார். இப்படி, சமயத்திற்கு தகுந்தவாறு உறவுகளை ஒட்டிக்கொண்டும், வெட்டிக்கொண்டும் வாழும் பேட்டைக்காரனே, ``மனுஷனுக்கு ஒரு பிரச்னைன்னா அவன் வசதிக்கு தகுந்த மாதிரி மாறிக்கிறான்" என மற்றவர்களை நினைத்து நொந்துகொள்கிறார். சரி, ஏன் பேட்டைக்காரனின் மனம் முன்னும் பின்னும் ஊசலாடுகிறது? வாழ்க்கையின் மீதான நம்பிக்கையின்மை, பாதுகாப்பற்ற உணர்வு.

``சேவச்சண்டையில பேட்டைக்காரன்தான் `நம்பர் ஒன்'னுன்னு இருக்குற வரைக்கும்தான்டி நமக்கெல்லாம் வண்டி ஓடும். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ நீயி. இனிமே உன்னைய சந்தோஷமா வெச்சிக்குற முடியுமான்னு எனக்கு தெரியலடி" என தன் மனைவி மீனாவிடம் புலம்புவார் பேட்டைக்காரன். அதற்கு மீனா, ``நீங்க வேணா பாருங்க. அந்த துரையும் கருப்பும் சேர்ந்துகிட்டு உங்களைத் தாங்கு தாங்குனு தாங்கப்போறாய்ங்க. நீங்க அந்த கோவத்த மட்டும் கொஞ்சம் விட்டீங்கனா..." என வாயெடுக்கையில், ``என்னை பிச்சை எடுக்கச்சொல்றியா?'' என ஆத்திரமாவார். ``கருப்புதான் அடுத்த பேட்டைக்காரன்" என ஊரார் சொல்வதும், அவர் சொல்லையே அவன் பொய்யாக்கியதும், அவரிடம் மிச்சமிருக்கும் `நம்பர் ஒன்' எனும் கௌரவத்தையும் கருப்பு தட்டிப் பறித்துவிட்டதாக நினைக்கிறார் பேட்டைக்காரன். ``அந்தப்பய சேவகட்டுல இருக்குறவரைக்கும், நான் பழைய பேட்டைக்காரனா இருக்கமுடியாதுடி" என்பதே அவரது இறுதி முடிவாக இருக்கிறது. விளைவு, துரோகம்!

`ஆடுகளம்' படத்தின் வில்லன் தனுஷ்தான்... ஏன் தெரியுமா?! - வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்! - பகுதி -3
screenshot taken from sunNXT

ரத்தினசாமி பார்ட்டியாட்கள் பேட்டைக்காரனைக் கிண்டல் செய்கையில் தன் குருவுக்காக கோபப்படுவான் கருப்பு. ஆனால், பேட்டைக்காரனின் மானம், மரியாதையே பந்தயத்தில் கிடக்கும்போது, அவர் அறுத்துப்போடச் சொன்ன சேவலை அறுத்துப்போடாமல் ``அன்னைக்கு சேவ ஓடுனதுக்கு எப்படி சிரிச்சாய்ங்க பார்த்தீல. அவிய்ங்களுக்காண்டியாவது சேவலை களத்துல போட்டு ஜெயிச்சுக் காட்டணும்டா" என பேட்டைக்காரனுக்குத் தெரியாமல் சேவலைத் தயார் செய்வான். கருப்பு முதன்முறை சேவல் பறக்கவிடும்போதே, `தன்னை ஏன் பேட்டைக்காரன் பார்ட்டியென பதிந்தான்' என்பதுதான் முதல் பிரச்னையே. பந்தயத்துக்கான நோக்கமும் பணத் தேவையாகதான் இருக்கும். ஆனால், ஈராஸ், மூராஸ் பறக்கவிடும்போதும் அதே தவற்றை மீண்டும் செய்வான். கடைசியில், பேட்டைக்காரனிடம் ``இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சுருந்தா, நான் சேவல அன்னைக்கே அறுத்துப்போட்ருப்பேன்ணே" என அழுவான். சரி, கருப்பு இப்படி நடந்துகொள்வதற்கான காரணம்? வயதுக்கே உரிய ஆர்வக்கோளாறுத்தனமும் எதையாவது சாதித்துவிட வேண்டுமென்கிற வேகமும்.

ஈராஸ் விடுகையில்கூட ``பேட்டைக்காரன் பார்ட்டின்டு ஏன்டா பதிஞ்ச?" என கடுப்பாவான் துரை. ஆனால், அவனேதான் மூன்று லட்ச ரூபாய் வரை பந்தயத்தை இழுத்துவிட்டு, கருப்பினை மூராஸ் பறக்கவிட மூளையை மாற்றுவான். கருப்பு பேசுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது சவுண்ட் கூட்ட ரிமோட்டை தேடும் துரைதான், கருப்பின் அம்மா இறந்தநாளன்று கூட ``அக்ரீமென்ட் படி பந்தயம் விட்டே ஆகணும்" என மனசாட்சியின்றி பேசுவான். சரி, துரை ஏன் இப்படி மாறினான்? பாதுகாப்பற்ற உணர்வா, அகராதித்தனமா, ஆர்வக்கோளாறுத்தனமா..! எதுவும் இல்லை, அவனும் ஒரு மனிதன் அவ்வளவுதான். `நான்' எனும் உணர்வுகொண்ட சாதாரண மனிதன். பேட்டைக்காரன், கருப்பு, மாரி, ஊலை எல்லோரும் அப்படித்தான். மனிதனின் மனம் இப்படித்தான் மாறிக்கொண்டேயிருக்கும்! பார் வைப்பதைப் பெரிய கௌரவக் குறைச்சல் போன்று கருப்பு பேசுவதைக் கேட்க, பார் ஓனர் துரைக்கு எப்படி இருக்கும்?!

`ஆடுகளம்' படத்தின் வில்லன் தனுஷ்தான்... ஏன் தெரியுமா?! - வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்! - பகுதி -3
screenshot taken from sunNXT

சரி, யார் மாரி? `சுப்ரமணியபுரம்' படத்தில் டும்கானாக வருவாரே, அவர்தான் `ஆடுகளம்' படத்தின் மாரி. அந்த கதாபாத்திரம் வருவது மூன்றே மூன்று காட்சிகள்தான். மூன்று காட்சிகளிலும் மூன்று மனநிலைகளில் இருக்கும். அது ஏன் மனம் மாறியது என்பதற்கான நியாயத்தைக்கூட வெற்றிமாறன் விளக்கியிருப்பார். ``லூஸுத்தனமா பேசிட்டு இருக்காப்ல" என கருப்பு சொல்வதைக் கேட்டு, ஒரு வேலையாக பேட்டைக்காரனிடம் போட்டுக்கொடுப்பான் மாரி. பந்தயம் அடித்தபிறகு, ``என்னடா தம்பி வேணும் உனக்கு. அண்னன் கிட்டே கேளுடா?" என கருப்பு அவனிடம் கேட்கையில், தன் தவற்றை உணர்வான். பிறகு, பேட்டைக்காரன் அவர் சேவலை வெளியாட்களிடம் விற்கப்போகிறார் என்பதை, மாரிதான் கருப்பிடம் முதல் வேலையாக போன் அடித்துச்சொல்வான்.

மூன்றே மூன்று காட்சியில் முற்றிலும் நேர்மாறான மன மாற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நமக்கு விளக்கிவிடுகிறார் என்றால், அத்தனை காட்சிகளில் வரும் முன்னணி கதாபாத்திரங்களுக்கு சொல்லவே தேவையில்லை. மன மாற்றத்தை அவ்வளவு யதார்த்தமானதாக, தர்க்க ரீதியாக, நியாயமானதாகச் சொல்லும் திறனும் மனித மனம் பற்றிய ஆழமான புரிதலும்தான் வெற்றிமாறனை `வெற்றி'மாறனாக்குகிறது. `பொல்லாதவன்' ரவி, `ஆடுகளம்' பேட்டைக்காரன், `விசாரணை' தமிழக காவலர்கள், `வடசென்னை' செந்தில், குணா, வேலு மற்றும் பழனி, `அசுரன்' பாண்டியன் என அவரின் கதையில் வரும் அத்தனை வில்லன்களுமே துரோகிகள்! ஏன் அவர்கள் துரோகம் செய்யத் துணிகிறார்கள், அவர்களின் மன மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதற்குத் தெள்ளத்தெளிவான விளக்கம் தந்திருப்பார்.

`ஆடுகளம்' படத்தின் வில்லன் தனுஷ்தான்... ஏன் தெரியுமா?! - வெற்றிமாறனும் மாறாத வெற்றியும்! - பகுதி -3
screenshot taken from sunNXT
"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage

``இப்படித்தான் நானும் ரத்தினமும் துளசியண்ணன்கிட்ட இருந்து வெளியேறும்போது..." எனச் சொல்கையில் பேட்டைக்காரன், துளசியண்ணனாக மாறுகிறார். ``கருப்பை அடுத்த பேட்டைக்காரன் என சொல்வதில், பெருமை கொள்கிறேன்" எனும் வசனத்தில் கருப்பு, பேட்டைக்காரனாக மாறுகிறான். கருப்புக்கும் துரைக்கும் பகை மூழ்கையில் துரை, ரத்தினசாமியாக மாறுகிறான். ``எல்லாத்தையும் தலைமுழுகிட்டு ஒதுங்கிடலாம்னு இருக்கேன்" எனும்போது ரத்தினசாமி, துளசியண்ணனாக மாறுகிறார். இப்படி, எல்லா கதாபாத்திரங்களுமே மற்ற கதாபாத்திரங்களின் மனநிலைக்கு வந்துச்செல்கின்றன. நல்லவன், கெட்டவன் என்பதற்கான அளவுகோலில் அனைவரும் நெருங்கியே இருக்கிறார்கள்.

``ஜெயிச்ச பகுமானத்தோட அவர் போயிருவாரு. அவர்ட்ட தோத்த அசிங்கத்தோட வாழ்க்கை புல்லா வாழச்சொல்றீகளா" என புலம்புவார் ரத்தினசாமி. அதாவது, கடைசிவரை ரத்தினசாமி தன்னை ஜெயித்ததே இல்லை என்பதுதான் பேட்டைக்காரனுக்கு இருக்கும் மிகப்பெரும் கௌரவம். ஆக, ``வயசாகிப்போச்சு, இனி பந்தயம்லாம் சுத்தப்படாது, `நம்பர் ஒன்'ங்கிற பட்டத்தோட சேவபந்தயத்துல இருந்தே விலகிக்கிருவோம்" என நினைத்து, பேட்டைக்காரனே அன்று காவல்துறைக்கு தகவல் சொல்லி ரெய்டு வர வைத்திருக்கலாம் இல்லையா..!

Aadukalam
Aadukalam
screenshot taken from sunNXT
12 ஆண்டுகள், 5 படங்கள், எல்லாமே கிளாசிக்... ஏன் இருளிலிருந்து தொடங்குகிறார் வெற்றிமாறன்? #Screenplay

`கௌரவம்' எனும் வார்த்தை இக்கட்டுரையின் பல இடங்களில் வருவதைக்கொண்டு, `கௌரவம்'தான் மனிதர்களின் மூச்சு என்றா வெற்றிமாறன் கதை சொல்லியிருக்கிறார் என சந்தேகம் எழலாம். உண்மையில் `மானம்', `மரியாதை', `கௌரவம்', `வாக்கு' போன்ற பதங்களை எல்லாம் படத்துக்குள்ளேயே பகடிதான் செய்திருப்பார். 'எங்கப்பாவுக்கு நீ பார் வைக்க போறங்கிறது பிடிக்கலை, எனக்கும் ஒருமாதிரி சொல்லிக்க கூச்சமாத்தான் இருக்கு" என்பாள் ஐரின். ஆனால், அவளே ``நானே செஞ்சேன்" என பார்ட்டியில் கருப்பிடம் மதுவை நீட்டுவாள். ``மாத்தி மாத்தி பேசுறதுக்கலாம், அஞ்சுற ஆளா நாம" என பார் விஷயமாகத் தன் பங்காளியிடம் சொல்வான் துரை. ஆனால், பார் வேண்டாம் கேன்டீன் வைக்க விரும்புவதாக கருப்பு சொல்லும்போது அவ்வளவு ஆத்திரப்படுவான். இன்னொரு நாளில், ``பார் மேட்டர்ல என்னைய தலைகுனிய வெச்சதுக்கே உன் சங்கை திருகியிருக்கணும்" என்பான். இப்படி, மானம், மரியாதை, கௌரவம் இத்யாதிகள் எல்லாம் தன் தேவைக்காக தூக்குவதும் தளர்த்துவதுமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பார் வெற்றிமாறன்.

ஆடுகளம், வெற்றிமாறன்
ஆடுகளம், வெற்றிமாறன்
screenshot taken from sunNXT

இறுதியில், பேட்டைக்காரனை துரோகியாக காட்டிவிடக் கூடாது, அவரின் கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக செய்யாத கொலைப்பழியை ஏற்றுக்கொள்வான் கருப்பு. அப்போது நமக்கு கருப்பு மீது கோபம் வருகிறது இல்லையா, அதுதான் வெற்றிமாறன் சொல்லவரும் செய்தி.

- வெற்றி தொடரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு