Published:Updated:

பாண்டிராஜ், அருண்ராஜா, சுதா கொங்கரா...`விஜய் 65' படத்தின் இயக்குநர் யார்?

விஜய்
விஜய்

மகிழ்திருமேனி-யில் ஆரம்பித்த இந்தப் பட்டியல், தற்போது சுதா கொங்கரா வரை நீள்கிறது. அந்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

`மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாமல் இருக்க, விஜய் அடுத்து நடிக்கப்போகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியிருக்கிறது. `சர்கார்’ படத்திற்குப் பிறகு, மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 65-வது படத்தை கமிட் செய்திருக்கும் விஜய், தற்போது இயக்குநருக்கான தேடுதல் வேட்டையில் இருக்கிறார். மகிழ்திருமேனி-யில் ஆரம்பித்த இந்தப் பட்டியல், தற்போது சுதா கொங்கரா வரை நீடித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

`விஜய் 65’ படத்தின் இயக்குநராக முதலில் பேசப்பட்டவர் மகிழ்திருமேனி. `தடம்’ படத்திற்குப் பிறகு உதயநிதியிடம் கதை சொல்லி கமிட்டாகியிருந்த இவர், விஜய்யிடமும் கதை சொல்லியிருக்கிறார். விஜய்க்கு கதை பிடித்துப்போக, உதயநிதியின் பட வேலைகள் இருப்பதன் காரணமாக விஜய் படத்தில் கமிட்டாக முடியாமல் இருக்கிறார் மகிழ்திருமேனி. அடுத்த ஆப்ஷனாக `அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றிமாறனிடம் பேசியிருக்கிறார்கள். அவரும் `சூரி' படம், சூர்யா படம் என இரண்டு படங்களைக் கையில் வைத்திருப்பதால், முதலில் அந்தப் படங்களை முடிக்கவேண்டிய வேலையில் இருக்கிறார்.

விஜய்
விஜய்

அடுத்ததாக விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியவர், இயக்குநர் பாண்டிராஜ். `கடைக்குட்டி சிங்கம்’, `நம்ம வீட்டுப் பிள்ளை’ படங்களின்மூலம் கிராமத்து படங்களுக்கான ஜானரை மீண்டும் ஆரம்பித்துவைத்தவர், விஜய்யிடமும் ஒரு கிராமத்துக் கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதைக்கும் விஜய் ஓகே சொல்ல, தற்போது ஸ்கிரிப்ட்டை ஃபைனல் செய்துவருகிறார் பாண்டிராஜ். விஜய்யின் 64-வது படத்திற்காகக் கதை சொன்ன சில இயக்குநர்களில் அருண்ராஜாவும் இருந்தார் எனக் கூறப்பட்டது. அருண்ராஜா சொன்ன மீனவர்கள் சம்பந்தமான கதையும் விஜய்க்குப் பிடித்துப்போக, அருண்ராஜாவும் தற்போது அந்த ஸ்கிரிப்ட் வொர்க்கில்தான் இருக்கிறார். இப்படி இரு இயக்குநர்கள் கதையைச் சொல்லிவிட்டு ரெடியாக இருக்க, இன்னும் இந்தப் படம் தொடங்காததற்குக் காரணமே சன் பிக்சர்ஸ்தான் என்கிறார்கள்.

விஜய்யை வைத்து பிரமாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைக்கும் சன் பிக்சர்ஸ், அந்தக் கதைக்காகப் பல கோடிகளை செலவுசெய்யத் தயாராக இருக்கிறதாம். அப்படி ஒரு கதைக்காகத்தான் அவர்களும் காத்திருக்கிறார்களாம். பாண்டிராஜ் சொன்ன கதை விஜய்க்கும், தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தாலும், அந்தப் படம் கிராமத்துப் பின்னணியில் இருப்பதால் அதற்கான பட்ஜெட் மிகவும் குறைவுதான் என்கிறார்கள்.

விஜய் - அட்லி
விஜய் - அட்லி
மீண்டும் விஜய் - அட்லி காம்போ?! விஜய் 65 அப்டேட்ஸ்

அதனால், அட்லியிடம் கதை கேட்கலாம் எனத் தயாரிப்பு தரப்பு சொல்ல, அவர் தற்போது ஷாரூக் கான் பட வேலைகளில் இருப்பதாலும், `பிகில்' படத்துக்காக விஜய்யின் கால்ஷீட்டில் ஏகப்பட்ட நாள்களை வீணாக்கியதாலும், அட்லி மீது விஜய் ஆதங்கத்தில் இருப்பதால், அட்லி - விஜய் கூட்டணி கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதனால், அடுத்த ஆப்ஷனாக அருண்ராஜாவின் கதையைப் பற்றி பேசி வருகிறார்களாம். இதற்கிடையில், சுதா கொங்கராவின் பெயரும் லிஸ்ட்டில் வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் பேனா, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே இருக்கிறது. விஜய் ஓகே செய்து வைத்திருக்கும் பாண்டிராஜ், அருண்ராஜா கதையைத் தயாரிக்கப்போகிறார்களா அல்லது பிரமாண்டமாக படத்தைத் தயாரிக்க வேண்டும் என வேறு இயக்குநரைத் தேர்வுசெய்யப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு