சினிமா
Published:Updated:

வீ வாண்ட் கனவுக் கன்னி!

Keerthy Suresh
பிரீமியம் ஸ்டோரி
News
Keerthy Suresh

ஏனோ தெரியவில்லை…. தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து, தமிழ்ச் சமூகம் எவ்வித அக்கறையுமின்றி, கமல்ஹாசன் எப்போது ட்வீட்டரில் புரியும்படி கவிதை எழுதுவார் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறது.

பொழுதுபோகாத நேரம் ஒன்றில் ஜென் நிலையில் யோசித்தபோதுதான் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டுபிடித்தேன். ஆம்….. நயன்தாராவிற்கு பிறகு, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கனவுக்கன்னி தமிழ் திரையுலகில் உருவாகவேயில்லை. 1940-களில் தவமணிதேவியில் துவங்கி…. டி.ஆர்.ராஜகுமாரி, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா….. என்று நீண்ட கனவுக்கன்னிகளின் வரலாறு சட்டென்று நயன்தாராவிற்கு பிறகு, அப்படியே பிரேக் அடித்து நிற்கிறது.

Nayanthara
Nayanthara

நயன்தாரா கி. பி. 2005 ஆம் ஆண்டு, ‘அய்யா’ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். சரத்குமார் படம் என்று சற்று விறைப்புடன் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை, “அத்திரி பத்திரி கத்தீரிக்கா…..” என்று பாடி ஆடி, நயன்தாரா மெல்ட்டாக்கினார். அதே ஆண்டிலேயே சந்திரமுகி, கஜினி….. என்று நயன்தாராவின் கிராஃப் ஏற ஆரம்பித்தது.

ஆனால் அதற்கும் ஓராண்டிற்கு முன்பே, நடிகை அசின், எம். குமரன் S/O மகாலட்சுமி மூலமாக தமிழில் தனது இன்னிங்ஸைத் துவக்கியிருந்தார். நயன்தாரா இரண்டாம் கதாநாயகியாக வந்த ‘கஜினி’ திரைப்படத்தில் பிரதான கதாநாயகி அஸின்தான். மலையாளப் பெண்ணான அஸின், ‘எம். குமரன் S/O மகாலட்சுமி’ படத்தில் மலையாளப் பெண்ணாகவே அழகாக வந்து, முல்லைப் பெரியாறு தொடர்பாக கொதிநிலையில் இருந்த தமிழக--கேரள உறவை சற்றே சீர் செய்தார். பின்னர் சிவகாசி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம்… என்று கனவுக்கன்னி அவதாரம் எடுத்துக்கொண்டிருந்தார். இருப்பினும் திடீரென்று அவர் பாலிவுட் பயணப்பட்டு அப்படியே திருமணம், குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார்.

அனுஷ்கா
அனுஷ்கா

2006-ல் வெளியான 'ரெண்டு’ படத்தில் நடிகை அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் அனுஷ்கா மாதவனிடம், “நான் இப்ப உங்க கன்னத்துல ஊதுறேன். நான் உங்க மனசுல இருந்தன்னா, உங்க கன்னத்துல குழி விழும்” என்று கூறி ஊதினார். அப்போது என்னைத் தவிர தியேட்டரிலிருந்த அத்தனை ஆண்களின் கன்னத்திலும் குழி விழுந்திருக்கக்கூடும். எனக்கும் குழி விழுந்திருக்கும். ஆனால் என் மனைவி அருகில் இருந்தார். திரையில் அழகான கதாநாயகிகள் தோன்றும்போதெல்லாம், என் மனைவி படத்தை விட்டுவிட்டு, என் முகத்தின் ரியாக்‌ஷனையே கவனித்துக்கொண்டிருப்பார். எனவே அப்போதெல்லாம் நான் தென்னை மரம், மின் கம்பம் ஆகியவற்றைப் பார்ப்பது போல் எவ்வித சலனமுமின்றி திரையைப் பார்த்துக்கொண்டிருப்பேன். ‘ரெண்டு’ படம் பார்த்தபோதும், என் மனைவி, “அனுஷ்கா சூப்பரா இல்ல?” என்று நைஸாக ஆழம் பார்த்தார். இதற்கு நான், “இந்த பாப்பா பேரு அனுஷ்காவா?இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாம் என்னாத்த நல்லாருக்கு….” என்று 75 வயது கிழவன் போல் அப்பாவியாக கூறிவிட்டேன்.அந்தப் படத்தில் கடைசியில் அனுஷ்காவை, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொன்றதற்காக, இயக்குனர் சுந்தர்.சியை இன்று வரையிலும் நான் மன்னிக்கவே இல்லை.

Asin
Asin

தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், வானம் என்று வேகமெடுத்த அனுஷ்கா தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தியதால், அந்த இடைவெளியில் நயன்தாரா இங்கு வலுவாக காலூன்றிவிட்டார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில், நடிகை தமன்னாவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும், நயன்தாராவின் இடத்தை தமன்னாவால் அடைய இயலவில்லை. நயன்தாரா தமிழில் அறிமுகமாகி 14 ஆண்டுகளாகி, ஏறத்தாழ எழுபது படங்கள்(பிறமொழிப் படங்களையும் சேர்த்து)நடித்த பிறகும், நயன்தாராவின் கிராஃப் இன்னும் இறங்கவில்லை. என்ன காரணம்? அதன் பிறகு கனவுக்கன்னி இடத்தை அடைவதற்கான தகுதியுடன் எந்த நடிகையும் வரவில்லையா? வந்தார்கள். சிறிது காலம் லைம்லைட்டில் இருந்துவிட்டு, பஸ்ஸில் தோன்றி மறையும் மின்னல் பெண்கள் போல் சட்டென்று மாயமாகிவிட்டார்கள்.

“அழகான பெண்கள் அதை நமக்கு நினைவூட்ட,ஒருஅசைவை வைத்திருக்கிறார்கள்” - வண்ணதாசன் வரிகள் இவை. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, கண்ணாடி முன் நிற்கும் முதல் காட்சியிலேயே இரண்டு புருவங்களையும் அழகாக உயர்த்தி வண்ணதாசன் கூறிய அந்த பிரத்யேக அசைவை வெளிப்படுத்தினார். பிறிதொரு காட்சியில், ஊதா நிற ரிப்பன் ஜடையைத் தூக்கி முன்னால் போட்டுவிட்டு, சிவாவைப் பார்த்து அதே மாதிரி புருவங்களை உயர்த்துவார். அப்போதே அடுத்த கனவுக்கன்னி அவர்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

Hansika Motwani
Hansika Motwani

காரணம், கனவுக்கன்னிகள் வெறும் அழகிலிருந்து மட்டும் உருவாவதில்லை., அற்புதமான முகபாவங்களை வெளிப்படுத்தும் நடிப்புக் கலையும் சேர்ந்தே ஒரு கனவுக்கன்னியை உருவாக்குகிறது. இப்படத்தில் ஸ்ரீதிவ்யா வெறும் புருவம் உயர்த்தலோடு நின்றுவிடவில்லை. சலிப்பு, குறும்பு என பதின்மவயது பெண்ணாக பல ரியாக்‌ஷன்கள் காட்டினார். ரசிகர்களும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “பார்க்காதே…. பார்க்காதே….” என்று கண்டிஷனாக அவர் பாடிய பிறகும், அவரிடமிருந்து ஒரு வினாடி கூட ரசிகர்களால் பார்வையை நகர்த்த முடியவில்லை.

'ஜீவா’ படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்’ பாடலில் பஸ்சில் நின்றுகொண்டிருக்கும் ஸ்ரீதிவ்யா, தனது கண்களாலேயே விஷ்ணுவிஷாலை தன் அருகில் வருமாறு அழகாக அழைக்க…. விஷ்ணுவோடு சேர்ந்து பஸ்சில் ஏறிய நான், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் அந்த பஸ்சிலிருந்து இறங்கவேயில்லை. இவ்வாறு தனித்தன்மையுடன் வளர்ந்துகொண்டிருந்த ஸ்ரீதிவ்யா இன்று என்னவானார்?

நடிகை சமந்தா 2010 ஆம் ஆண்டே தமிழில் பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகிவிட்டாலும், 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'நீதானே பொன் வசந்தம்' படத்தில், மூன்று வெவ்வேறு பருவங்களில் மிக அழகாக தோன்றினார். சமந்தாவும், அனுஷ்கா போல் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தியதால், அவராலும் தமிழில் நயன்தாராவின் இடத்தை அடைய முடியவில்லை.

Samantha
Samantha

‘சின்ன குஷ்பு” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட ஹன்ஸிகா மோத்வானி, 2011-ல் ‘மாப்பிள்ளை’ படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி”, ‘தீயா வேலை செய்யணும் குமாரு”, “மான் கராத்தே’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஹன்ஸிகா சிரிக்கும்போது, அவருடைய கன்னம் குழி விழலாமா என்று யோசித்து, பின்னர் ‘இந்தப் பசங்களுக்கு இது போதும்’ என்பது போல் பாதிக் குழியில் நிறுத்திக்கொள்ளும். அதோடு அவரது புளிப்பு மிட்டாய் புன்னகையும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வளரமுடியாமல் தேங்கிப்போய்விட்டார்.

2015-ல் மணிரத்னத்தின், 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்க்கச் சென்ற நான், நித்யாமேனனின், 'ஓ காதல் கண்மணி’யைப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். படத்தின் துவக்கத்தில், சர்ச் பிரார்த்தனையாளர்களின் வரிசையிலிருந்து, மேகத்திலிருந்து ஒரு தங்க நிலவு எட்டிப் பார்ப்பது போல் பார்த்த நித்யாமேனன் துல்கரிடம், “தாரா” என்று அவ்வளவு அழகாக தனது பெயரை உச்சரிப்பார். பின்னர் அவர் தன் கைவிரல்களாலேயே தனது மொபைல் எண்ணைச் சொன்னபோது, எழுத்துகளிலிருந்து மட்டுமல்ல… எண்களிலிருந்தும் கவிதை பிறக்கும் என்பதை அறிந்துகொண்டேன். நித்யா மேனனிடம் அவருடைய அழகையும் தாண்டி, முக்கியமான விஷயம்…. சட் சட்டென்று மாறும் அவருடைய முகபாவங்கள்.

Nithya Menen
Nithya Menen

துல்கருடன் பஸ்சில் ஏறி அமர்ந்தவுடன், சட்டென்று முடியை ஒதுக்கும் வேகம் என்ன? பக்கவாட்டில் பார்க்கும் பார்வை என்ன? சிரிக்கும்போதேல்லாம் நட்சத்திரங்களை விழுங்கிவிட்டு சிரிப்பது போல் முகத்தில் தோன்றும் வெளிச்சம் என்ன? “ஓ…. காதல் கண்மணி” படத்திற்கு பிறகு நித்யா மேனன் தமிழர்களின் கனவுக்கன்னியாவார் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

‘ரஜினி முருகன்’ படத்தில் தனது துறுதுறுப்பான நடிப்பு மற்றும் அழகின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ், கிடுகிடுவென்று வளர்ந்து ‘மகாநடி’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுவிட்டார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் பைரவா, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், சர்கார்….. என்று நயன்தாராவிற்கு டஃப் பைட் கொடுத்தார்.

‘சண்டைக் கோழி 2’ படத்தில் இடம் பெற்ற, ‘கம்பத்து பொண்ணு” பாடலில் கீர்த்தி சுரேஷை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். விஷால் எதிரே வரும்போது கண்ணடிப்பது, வண்டியை இடிக்கப்போவது போல ஏமாற்றுவது, அப்பாவிப் பெண்ணாய் நடித்து மஞ்சள் தண்ணீரை ஊற்றுவது என அந்தப் பாடலில் மட்டும் வாவ்... எத்தனை பாவனைகள்? அந்தப் பாடலை மட்டும் ஏதாவது ஆபரேஷன் செய்து, நிரந்தரமாக கண்களில் ஃபிக்ஸ் செய்துகொள்ளும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

Keerthy Suresh
Keerthy Suresh

இவ்வளவு அழகும், அற்புதமான முகபாவங்களும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை இந்நேரம் தமிழில் நம்பர் 1 இடத்தை அடைந்திருக்கவேண்டாமா? ஆனால் நடக்கவில்லை. சென்ற ஆண்டு வரை பரபரப்பாக பேசப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழில் ஒரு படத்தில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். இடையில் என்ன ஆனது?

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் நடிகைகள் அஞ்சலி, அமலா பால், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸன், ஆன்ட்ரியா என்று பலரும் முன்னணி நடிகைகளாக வலம் வந்தார்கள். வருகிறார்கள். இவர்கள் எல்லாம் அழகு, நடிப்புத் திறமை…. இருந்தும், பிரபலமான நடிகை என்ற நிலையை எட்டினாலும் கூட, ஏன் கனவுக்கன்னி என்ற இடத்தை அடையமுடியவில்லை?

அழகு, திறமை, தனித்துவம், நடிக்கும் படங்களின் வெற்றி தோல்வி என பல்வேறு விஷயங்கள், ஒரு நடிகையை தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக்குகிறது. இதையெல்லாம் தாண்டி, ஒருவர் பரவலாக, பெரும்பாலான மக்களால் ரசிக்கப்பட, வேறு ஏதோ ஒரு அபூர்வமான ஈர்ப்பு தேவைப்படுகிறது. ஆனால் கடவுள் அபூர்வ பிறவிகளை, எப்போதாவது ஒரு முறைதான் படைப்பார்.