Published:Updated:

ராம், பார்த்திபன் டு வெற்றி மாறன்... இவர்களில் விகடனின் `சிறந்த இயக்குநர்-2019' அவார்டு வின்னர் யார்? #VikatanAwards

இவர்களுள் யார் சிறந்த இயக்குநருக்கான விகடன் விருதை வெல்லப்போகிறார்? உங்களின் கணிப்பு என்ன? கீழிருக்கும் லிங்க்கில் பதிவு செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திரைக்குப் பின் நின்று காட்சிகளை இயக்குபவராக மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளின் பங்களிப்பையும் ஒருங்கிணைத்து, ஒரு முழுப் படத்தையும் திருப்திகரமான ஒரு கலைப் படைப்பாக மாற்றும் முக்கியப் பொறுப்பு, ஓர் இயக்குநருக்கு உண்டு. இந்த வருடத் தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்கள் பலர் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர் எனக் களம் கண்டு வெற்றி அடைந்துள்ளனர். இவர்களைத் தாண்டி, தேர்ந்த இயக்குநர்கள் எனப் பெயர் பெற்றுவிட்ட சிலரும் தங்களை மீண்டும் நிரூபித்துள்ளனர். 2019-ம் ஆண்டு சிறந்த இயக்குநர் விகடன் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் இதோ...

இதில் விகடன் விருதை வெல்லப்போவது யாராக இருக்கும்? உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்யுங்கள். விருது நிகழ்வுக்கான பாஸ் வெல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது!

ராம், பேரன்பு

'பேரன்பு' ராம்
'பேரன்பு' ராம்

அமுதவனும் பாப்பாவும் தினசரி நாம் சந்திக்கும் மனிதர்கள் இல்லை. ஆனால், அவர்களையும் உள்ளடக்கிய இந்த உலகமானது அவர்களின் தேவைகளைச் சரிவரப் புரிந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது இயக்குநர் ராம் காட்டிய 'பேரன்பு'. தொடர்ந்து யாரும் தொடாத கதைகளைத் திரையில் தயக்கமின்றி படரவிடும் ராம், இந்த முறை அதில் இன்னமும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். சிறப்புக்குழந்தைகளைப் பரிதாபத்துக்கு உரியவர்களாக மட்டுமே பார்த்துப் பழகிய பார்வையாளர்களுக்கு, பாலியல் உணர்வு என்னும் பிரச்னையின் வேறு பரிமாணங்களை முன்வைக்கும் துணிச்சல் இந்தப் பேரன்பில் நிறைந்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தியாகராஜன் குமாரராஜா, சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா
தியாகராஜன் குமாரராஜா

'ஆரண்ய காண்டம்' இயற்றிவிட்டு நீண்ட இடைவேளைவிட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இந்த வருடம் 'சூப்பர் டீலக்ஸ்' என்று மற்றுமொரு பரிசோதனை முயற்சியுடன் களம் கண்டிருக்கிறார். நான்கு கதைகள், நான்கு களங்கள் - இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு மையச்சரடாக பாலியல் சிக்கல். வித்தியாச விருந்தாளி வருகை, கணவனுக்காகக் காத்திருக்கும் மனைவி, விடலைப் பருவத்துச் சேட்டைகள், 'கடவுளின் குழந்தை' அற்புதம் எனக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத கதைகளை நம்மை 'ஆஹா' சொல்ல வைத்துக் கோத்திருந்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஒரு சவாலான கதை மற்றும் திரைக்கதை கொண்ட படத்தை எவ்வித குழப்பமுமின்றி அரங்கேற்றிக் காட்டிய இவர் இந்த வருடத்தின் அற்புதங்களில் ஒன்று!

இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7
ஒத்த செருப்பு சைஸ் 7

இயக்குநர் பார்த்திபனின் படங்கள் வழக்கமான ஒன்றாக இருந்தால்தான் நாம் ஆச்சர்யம் அடையவேண்டும். இயக்குநராக அப்படியொரு பிம்பத்தைக் கட்டமைத்துவிட்ட பார்த்திபன் 'ஒத்த செருப்பு' மூலம் தன்னுடைய கிராஃபை இன்னமும் கூட்டியிருக்கிறார். படம் முழுவதும் பார்த்திபன் என்ற நடிகன் மட்டுமே. அவரை இயக்குவதும் பார்த்திபன் மட்டுமே. இப்படியொரு பரீட்சார்த்த முயற்சி உலக சினிமாவுக்கே புதிதுதான். 'புதிய பாதை' போட்ட மனிதர் இன்னமும் அந்தப் பணியைத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7.

வெற்றி மாறன், அசுரன்

வெற்றி மாறன்
வெற்றி மாறன்

இந்த முறை இயக்குநர் வெற்றிமாறன் தன் ஆஸ்தான நடிகரான தனுஷுடன் எடுத்துக்கொண்ட கதைக்களம் வெக்கைப் பரப்பு மனிதர்களின் வாழ்க்கை. சாதிய தீ கனன்று எரியும் ஒரு பகுதியில் அதிகாரம் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் சொத்தைப் பறிக்க நினைக்கும் வடக்கூரான்களைக் கேள்வி கேட்கிறான் இந்த 'அசுரன்'. கேள்விகள் ஒவ்வொன்றிலும் ரத்தம் தெறிக்கிறது, அரசியல் வெடிக்கிறது. ஒரு கொலை, ஒரு பழிவாங்கல், தேடல் வேட்டை, கனமான பின்கதை... இவற்றினூடாக உரிமைக்காக உரத்த குரல் எழுப்பி உறவுகளை இழந்து அடங்கி இருக்கும் ஒருவன் அசுர வேட்டை நடத்தும் கதை. வழக்கமான கதையுடன் மிக முக்கியமான அரசியலைச் சேர்த்து அனைவரிடத்திலும் அதைக் கமர்ஷியலாகவும் கொண்டு சென்றது, வெற்றிமாறன் மேஜிக்!

லோகேஷ் கனகராஜ், கைதி

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்... முதல் படத்தில் மாநகரத்தை அளந்தவர் இந்த முறை போலீஸ், போதை மருந்து, ஆயுதக் கடத்தல், சிறைக் கைதி, அப்பா - மகள் உறவு, துணிச்சல் என்று பேக்கேஜாக ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத் தேர்வுகளில் கவனம் ஈர்க்கும் லோகேஷ் படத்தின் மேக்கிங்கிலும் மிரட்டியிருக்கிறார். முழுக்க முழுக்க இரவில் நடக்கும் வேட்டையில், சீறும் அந்தப் பழைய லாரி, துரத்திப் பிடித்துக் கொல்ல முயலும் வில்லன்கள் எனப் படம் முழுக்க பார்ப்பவர்களின் டெம்போவை எகிற வைத்திருந்தார். இந்த வருடத்தில் இது ஒரு முக்கியமான படம் என்று சொல்ல வைத்ததில் இருக்கிறது இந்த இளம் இயக்குநரின் வெற்றி!

சில்லுக் கருப்பட்டி, ஹலீதா ஷமீம்

சில்லுக் கருப்பட்டி, ஹலீதா ஷமீம்
சில்லுக் கருப்பட்டி, ஹலீதா ஷமீம்

நான்கு குறும்படங்கள் போல் விரியும் நான்கு கதைகள்... எல்லாவற்றிலும் மையப்பொருளாக அன்பு! காட்சி மொழியில் கவிதை வடிக்கும் திரைக்கதையைப் படைத்திருக்கும் ஹலீதா ஷமீம், அதற்கு பக்கபலமாகக் கதாபாத்திரங்களின் நடிப்பையும் பெற்று இந்த 'சில்லுக் கருப்பட்டி'யை தித்திக்க வைத்திருக்கிறார். மிட்டி, யசோதா, மது, அமுதினி என வரும் பெண் கதாபாத்திரங்களும், தனபால், நவனீதன், மாஞ்சா என அதற்கு ஈடாக வரும் ஆண் பாத்திரங்களும், படம் முடிந்த திரையிலும் நிழலாடுகிறார்கள். எல்லாக் கதைகளிலும் மறைந்திருந்தே நம்மைக் கேலிசெய்யும் அந்த மெல்லிய காதல் கலந்ததொரு ஃபேன்டஸி இழை கூடுதல் அழகு. ஒவ்வொரு காட்சியையும் நகர்த்திய விதம், அதைக் கட்டமைத்த விதம்... இயக்குநராக ஹலீதா ஷமீம் மிக முக்கியமானவர் என்பதை எடுத்துரைக்கிறது.

இவர்களுள் யார் சிறந்த இயக்குநருக்கான விகடன் விருதை வெல்லப்போகிறார்? உங்களின் கணிப்பு என்ன? கீழிருக்கும் லிங்க்கில் பதிவு செய்யுங்கள்.
Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

அனைத்து விருதுகளுக்கான பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து, அதில் விகடன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்று யோசித்து, உங்களின் கணிப்பைப் பதிவு செய்யுங்கள். கூடவே, `2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச் சொல்லுங்கள்!' என்ற இடத்தில் உங்களின் கலக்கல் `Slogan'-ஐயும் பதிவு செய்யுங்கள். ஜனவரி 11 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.

`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு