Election bannerElection banner
Published:Updated:

அனிருத், யுவன் டு தர்புகா சிவா... இவர்களில் விகடனின் `சிறந்த இசையமைப்பாளர்-2019' அவார்டு வின்னர் யார்?

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

இதில் விகடன் விருதை வெல்லப்போவது யாராக இருக்கும்? உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்யுங்கள். விருது நிகழ்வுக்கான பாஸ் வெல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது!

உலக சினிமாக்களில் இசை என்பது பெரும்பாலும் பின்னணியில் மட்டுமே இருந்து, காட்சிகளை வருடுவதாய் அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் பாடல்களே வந்தாலும், அவை இந்திய சினிமாக்களில் காட்டப்படுவதுபோல, கதையை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு இடைச்செருகலாய் விரியும் காட்சிகளாக இருக்காது. ஆனால், இங்கே திரைப்பாடல்கள் ஒரு மிகப்பெரிய கலாசார நிகழ்வு. பாடல்கள் இல்லாமல் ஒரு படம் இப்போது வந்தாலுமே அது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே வகைப்படுத்தப்படும். திரையரங்கில் மாஸ் ஹீரோக்கள் ஓப்பனிங் சாங் என்ற ஒன்றுடன்தான் திரையில் அறிமுகமாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இது தவிர, சமீபகாலமாகப் படங்களின் தீம் மியூசிக்கிற்கும் தனி ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில், 2019-ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விகடன் விருதை வெல்லப்போவது யார்? பரிந்துரைப் பட்டியல் இதோ...

இதில் விகடன் விருதை வெல்லப்போவது யாராக இருக்கும்? உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்யுங்கள். விருது நிகழ்வுக்கான பாஸ் வெல்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது!

அனிருத் - பேட்ட

அனிருத்
அனிருத்

அக்மார்க் ரஜினி படம் ஒன்றுக்கு அனிருத்தின் மியூசிக். முதலில் வெளியான `மரண மாஸ்' சிங்கிள் டிராக்கிலேயே ஒரு மாஸ் திருவிழாவுக்கான டிரெய்லரைக் காட்டினார் அனிருத். `உல்லால்லா' என்ற பைலா பார்ட்டி பாடல், இளமையைத் திரும்பவைக்கும் காதல் பாடல், `பேட்ட பராக்' என்ற ஹீரோயிசப் பாடல் என கமர்ஷியல் பொங்கல் வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக `பேட்ட' தீம் மியூசிக் பலதரப்பட்ட ரசிகர்களின் ரிங்டோனாகி போனது.

இமான் - விஸ்வாசம்

இமான் - அஜித்
இமான் - அஜித்

அஜித் - சிவா கூட்டணியின் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக வந்த `விஸ்வாசம்' படத்துக்கு இமான் மியூசிக். பரபர பின்னணி இசையுடன் அஜித் ரசிகர்களை ஈர்க்கும்படி கலக்கல் விருந்து படைத்திருந்தாலும் `கண்ணான கண்ணே!' என அப்பா - மகள் பாசப்பாடலில் கண் கலங்கிட வைத்தார். விஸ்வாசம் தீம் மியூசிக் மற்றும் அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குத்தாட்டம் போட்ட `அடிச்சுத்தூக்கு' ஆகியவை இணைய வைரல்.

யுவன் சங்கர் ராஜா - பேரன்பு, சூப்பர் டீலக்ஸ்

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

இயக்குநர் ராமுக்காக `பேரன்பு' எனும் நெகிழ்ச்சியான இசை வெள்ளத்தில் நம்மை நீந்தவிட்டார் யுவன் சங்கர் ராஜா. `அன்பே அன்பின்’, `வான் தூறல்’ ஆகிய பாடல்களைக் கேட்கும்போது பனிக்காற்று நம்மை உரசிச் செல்வதை உணர முடியும். மலை, நகரம் எனப் பயணிக்கும் கதைக்கு ஏற்றவாறு இசை புகுத்தி, அமுதவனின் உணர்வுகளுக்கு மேலும் பலம் சேர்த்தது யுவனின் பின்னணி இசை. இப்படி அன்பு செலுத்திய யுவனின் இசை `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ரகளை செய்தது. ஆங்காங்கே இளையராஜாவின் இசைக்கோப்பு, மற்ற இடங்களில் தன்னுடைய மேஜிக் என யுவன் இந்த டார்க் காமெடிக்கு தன் இசையால் வண்ணம் சேர்த்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சர்வம் தாளமயம், பிகில்

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இசையைப் பற்றிய படத்துக்கு இசைப் புயலின் இசை. பீட்டர் பீட்டை ஏற்றும் லோக்கல் இசையாகட்டும், கர்னாடக சங்கீதம் நிரம்பிய மெலடியாகட்டும், சர்வமும் ரஹ்மான் மயம். இதே ரஹ்மான் பின்னர் விஜய்க்காக பிகிலில் வெறித்தனம் காட்டினார். வைரல் `சிங்கப்பெண்ணே' பெண்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் ஹார்ட்டின் போட வைத்தது. ஃபைனல் கோலில் `மாதரே' என ஒலிக்கும் ரஹ்மானின் குரலுக்குத் திரையரங்கில் `பிகில்' பறந்தது.

ஹிப்ஹாப் தமிழா - நட்பே துணை, கோமாளி

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

2K கிட்ஸ்களின் நட்பதிகாரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் இசைக்கு முக்கியமானதோர் இடமிருக்கும். இந்த வருடமும் இளைஞர்களைக் குறிவைத்து `நட்பே துணை', `கோமாளி' என்று 2 ஆல்பங்களைக் கொடுத்து லைக்ஸ் அள்ளியிருக்கிறார். `கோமாளி'யில் ஜாலியான கலர்ஃபுல் கலாட்டா இசையை 'ஒளியும் ஒளியும்' பாடலிலும், துள்ளல் இசையை 'பைசா நோட்டிலும்' புகுத்தி 90ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்திருக்கிறார்.

ஜிப்ரான் - கடாரம் கொண்டான்

ஜிப்ரான்
ஜிப்ரான்

இந்தத் தசாப்தத்தின் முக்கிய அறிமுகமாகக் கருதப்படும் ஜிப்ரான், வெரைட்டியான ஜானர்களில் இசையமைத்து அசத்தினார். காதல், கிளாசிக், த்ரில்லர் என்று போன அவரின் கிராஃப்புக்கு செம மைலேஜாக அமைந்தது `கடாரம் கொண்டான்' என்ற கேங்ஸ்டர் படம். படத்தின் பரபரப்பை இசைவழியே நமக்கும் தொற்றச் செய்தவர், அதற்கு நேர் எதிராக `தாரமே தாரமே' எனக் காதலைக் கசியவிட்டும் ஸ்கோர் செய்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் - அசுரன்

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

அசுர வேட்டை நடத்தும் படத்துக்குத் திரைக்குப் பின்னால் இருந்து அசுரத்தனமாக உழைத்தது ஜி.வி.பிரகாஷின் இசை! தொடர்ந்து ஹீரோவாக வலம் வந்தவர், வெற்றிமாறன் காம்போவுக்காக மீண்டும் இசையமைத்திருக்கிறார். யதார்த்தமான இசையில் தொடங்கி இடைவேளையில் புழுதி மணலைப் பறக்கவிடும் தெறிக்கும் இசையைக் கொடுத்து, ஹீரோயிசத்தின் உச்சியை எட்டிப்பிடித்திருக்கிறது அவரின் இசை. இடையில் காதலையும் இசைத்துத் தான் கதையின் கலைஞன் என்று அழுத்தமாக தன் முத்திரையை அசுரனில் பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

சாம் C.S., கைதி

சாம் C.S.
சாம் C.S.

நான்கு மணி நேரத்தில் நடக்கும் கதையை நிறுத்தி நிதானமாகச் சொல்ல நேரம் கிடையாது; பாடல்கள் கிடையாது; வேகமாகக் கடந்துவிடும் காட்சிகளை வீரியமிக்கதாக மாற்ற இங்கே இசையின் பங்கு அவசியம். இரவைக் கிழித்து பயணம் செய்யும் அந்த லாரியினூடே பக்கபலமாகப் பயணம் செய்கிறது சாமின் தடதடக்கும் பின்னணி இசை. டைட்டில்ஸில் ஒலிக்கும் ஆங்கிலப்பாடலிலிருந்து எகிறும் டெம்போ, அதன் பிறகு குறையவே இல்லை. டில்லியின் ஹீரோயிஸத்தைப் பல மடங்கு பெரிதாக்கியது சங்தேகமே இல்லாமல் படத்தின் பின்னணி இசைதான்.

தர்புகா சிவா - எனை நோக்கி பாயும் தோட்டா

தர்புகா சிவா
தர்புகா சிவா

தர்புகா சிவா முன்னரே சில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இந்தப் படம்தான் அவரின் அடையாளம் என்றால் மறுவார்த்தை எதுவும் பேசாமல் ஏற்றுக்கொள்ளலாம். படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் ஹிட்டாவது, அந்தப் பாடல்களே படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைப்பது எல்லாம் அனைத்துப் படங்களுக்கும் நிகழ்வது இல்லை. அதுவும் மூன்றாண்டுகள் தாண்டியும் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கிறதென்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் சித் ஶ்ரீராமின் உருகும் குரலில் ஒலித்த `மறுவார்த்தை'யும். மெல்லிய இசையில் நமக்கு வெண்சாமரம் வீசிய 'விசிறி'யும்தான்.

இவர்களுள் யார் சிறந்த இசையமைப்பாளாராக விகடன் விருதை வெல்லப்போகிறார்? உங்களின் கணிப்பு என்ன? கீழிருக்கும் லிங்க்கில் பதிவு செய்யுங்கள்.
Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

அனைத்து விருதுகளுக்கான பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து, அதில் விகடன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்று யோசித்து, உங்களின் கணிப்பைப் பதிவு செய்யுங்கள். கூடவே, `2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச் சொல்லுங்கள்!' என்ற இடத்தில் உங்களின் கலக்கல் `Slogan'-ஐயும் பதிவு செய்யுங்கள். ஜனவரி 11 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.

ராம், பார்த்திபன் டு வெற்றி மாறன்... இவர்களில் விகடனின் `சிறந்த இயக்குநர்-2019' அவார்டு வின்னர் யார்? #VikatanAwards
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு