Election bannerElection banner
Published:Updated:

கொக்கி குமார் குழந்தையை யார்கிட்ட கொடுத்தார்? #14yearsofPudhupettai

Pudhupettai
Pudhupettai

திரைக்கு வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது `புதுப்பேட்டை'. செல்வராகவன், தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணர்த்திய படைப்பு.

`புதுப்பேட்டை' பற்றிப் பல்வேறு கோணங்களில் பல நூறு கட்டுரைகள் ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும், வெளிக்கொணரப்படாத ஆயிரமாயிரம் விஷயங்கள் இன்னும் அதில் பொதிந்து கிடக்கின்றன. இங்கே `புதுப்பேட்டை' இரு தந்தைகளின் கதை எனும் கோணத்தில் ஆராயப்பட்டுள்ளது. நம்ம ஏரியாதான் உள்ளே வரலாம்.

Pudhupettai
Pudhupettai

அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளை, குமார். அவனை அரசு அதிகாரியாகவோ, வங்கி அதிகாரியாகவோ உயர்த்த வேண்டுமெனக் கனவு கண்டிருந்தாள் அவன் அம்மா. பள்ளிக்குச் செல்லாமல் அவன் முரண்டு பிடிக்கும் நேரங்களில், `அப்படியே அப்பனை மாதிரி' என்று திட்டி தீர்த்தாள். அவன் தந்தையைப் போல, குமாரின் கைகளிலும் ரத்தக்கறை படிந்திடக்கூடாது என பயந்தாள். கணவன் அடித்து உதட்டில் வழிந்த ரத்தத்தைக் கூட, குமாருக்கு அவள் காட்ட விரும்பவில்லை. அதன் நாற்றம் கூட, அவன் நாசியைத் தீண்டாமல் பார்த்துக்கொண்டாள். ஆனால், ஒரு இரவில் எல்லாம் மாறியது. கழுத்து அறுக்கப்பட்டு, குருதி வெள்ளத்தில் கோரமாய்க் கிடந்த அவள் முகத்தின் வழியாகவே, உலகின் கோரமான முகத்தைப் பார்த்தான் குமார்.

குமாரின் அப்பா சேகருக்கு, குமார் மீது பெரிய கனவுகள் கிடையாது. அதேபோல் அன்றைய இரவு, நிச்சயமாக சேகருக்குக் குமாரை கொலை செய்யும் எண்ணமும் கிடையாது. என்ன இருந்தாலும் குமார் தன் வாரிசு என்கிற எண்ணம். ஆனால், உயிர் பயத்தில் குமார் தப்பி ஓடியதைப் பார்த்து, அவனைத் தனக்குத் தகுதியற்ற வாரிசாக நினைத்தான் சேகர். ஒன்றுக்கும் ஆகாத குமார், எங்கேயோ போகட்டும் என முடிவு செய்துவிட்டு, தன் இன்னொரு குடும்பத்திடம் சென்று புது வாழ்க்கையைத் தொடங்கினான். பல நாள்கள் கழித்து குமாரை, `கொக்கி' குமாராக சந்திக்கையில் அவன் இந்த உலகில் தப்பிப் பிழைத்துவிட்ட சந்தோஷமும், தனக்கு வாரிசாக அவன் பயன்படப்போகும் மகிழ்ச்சியும் சேகரின் முகத்தில் நிறைந்திருக்கும். வங்கி அதிகாரியாக, அரசு அதிகாரியாக அவள் கனவு கண்டிருந்தபோது, குமார் ரௌடியானதை கொண்டாட ஆயிரம் ரூபாய்க்கு ட்ரீட் வைத்திருப்பான் சேகர். இதுதான், குமாரின் அப்பா - அம்மா இருவருக்கும் இடையிலான வித்தியாசம்!

Pudhupettai
Pudhupettai

கிளப்பில் வைத்து குமாரை, அன்பு முதல் அடி அடிக்கும்போதே அதைத் தடுத்து நிறுத்த முன்னேறுவான் சேகர். ஏரியாவில் வசூல் செய்வது பற்றி நடக்கும் மீட்டிங்கில், ஒருவன் குடைச்சலைக் கொடுக்கும்போதும் சேகர்தான் முதல் ஆளாக முன்னேறிக் குரல் கொடுப்பான். இதற்குப் பின்னால் இருப்பதும் சுயநலம் அன்றி வேறில்லை. தன்னை மீறிய தகுதிகளுடன் வளர்ந்து நிற்கிற மகனிடம், ஒட்டுண்ணியாகவே மிச்ச வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்கிற சுயநலம். இதில் பெற்றெடுத்தவன் எனும் தகுதி, ஒட்டுண்ணியிலும் முதன்மையான ஒட்டுண்ணி எனும் தகுதியை எதிர்பார்க்க, குமாரிடமிருந்து அது கிடைக்காமல் போகும். `போறபோக்க பார்த்தா மரியாதை இருக்காது போல' எனப் புலம்பிக்கொண்டு, மூட்டை முடிச்சோடு கிளம்பும் சேகர், `உன் கூட இருக்கணும்னுதான் எல்லாம்' என்பதையும் ஒப்புக்கொண்டுதான் நகர்வான்.

கடைசியில், சேகரைக் குழியில் தள்ளி உயிரோடு புதைக்கும்போது `டேய், நானும் பெரிய ரௌடிதான்டா. அவனை அறுக்காம விடமாட்டேன்டா' என்பான். என்னதான், தன் வாரிசாகவே இருந்தாலும் அவனோடு தன்னை ஒப்பிட்டுப்பார்க்கும் ஈகோவின் வெளிப்பாடுதான் இது. அதேநேரம், தன் அப்பாவையே குமார் கொலை செய்வதற்கான காரணம் தன் அம்மாவின் இறப்பு மட்டுமே கிடையாது. அவனின் வாழ்க்கையே தடம் மாறிப்போனதற்கான காரணமும் அவன் அப்பாதான் என்பதும்தான். குமாருக்கு வாழ்க்கை மீதான மதிப்பீடுகள் உருவானது, அவன் அம்மாவின் வார்த்தைகளில் இருந்துதான். படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும், வாழ்க்கையில் செட்டில் ஆகணும் என்பதுதான் அவனுள் விதைக்கப்பட்டிருக்கும். அதை நிர்மூலமாக்கிய தந்தையின் மீது கோபம். கொலைவெறி!

Pudhupettai
Pudhupettai

குமாருக்கு முதல்முறையாக அருவாள் தூக்க வேண்டுமென்கிற எண்ணமே, அவன் அப்பா மீதான கோபத்தில்தான் வந்திருக்கும். ``மணிணா, ஒரு அருவா கொடுணா. எங்க அப்பனை ஒரே போடா போட்டுடறேன்" என்பான். ``என் அம்மா இருந்திருந்தா, நான் இங்கெல்லாம் வந்திருக்கவே தேவையில்லை" எனப் புலம்புவான். செல்வியிடம், ``என் அப்பன் சரியில்லாமதானே இப்படி ஆனேன். அப்போ என் புள்ளையை நான் எப்படி வளர்க்கணும். இந்த மாதிரி ஒரு இடம் இருக்குணே தெரியக்கூடாது" என்பான். தன் மகன் படித்து, பெரிய ஆளாக வளர்ந்து ஆங்கிலம் பேச வேண்டுமென்கிற ஆசை. ஆனால், குமாருக்குத் தன் வாரிசின் மீதிருக்கும் கனவுகளும் ஒருவித சுயநலம்தான் என்பதை செல்வராகவன் இந்த வசனத்தில் சொல்லியிருப்பார்.

``சம்பாதிக்குற காசுக்கெல்லாம் ஒரு அர்த்தம் வேணும்ல".

அவன் மகன் ஆங்கிலம் பேசவும், வெளிநாட்டில் படிக்க வேண்டுமெனவும் நினைப்பதுகூட, அவன் சொத்துக்களை பரமாரிப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்வது என்பதற்குத்தான்.

குப்பைத்தொட்டியில் தன் குழந்தையைக் கிடத்திவிட்டு, குமார் பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை. அவன் அடுத்து தன் மகனை எப்போது பார்ப்பான் எனத் தெரியாது. அதிலும், பார்ப்பானா என்பதே தெரியாது. அதனால், அக்குழந்தையிடம் குமார் தன் வாழ்க்கையில் கற்ற விஷயங்கள் அனைத்தையும் கடத்துகிறான். தனக்குள் விதைக்கப்பட்டதை, தன் மகனுக்கு விதைக்க முயல்கிறான். அந்தக் குழந்தைக்குப் புரிகிறதோ, இல்லையோ அதைச் சொல்லிவிடுவதில்தான் வாழ்ந்ததற்கான ஒரு ஆத்ம திருப்தி. ``யார் புள்ள நீ, எப்படியாது பிடிச்சு வந்துடுவ" எனச் சொல்வதெல்லாம் சுய சமாதானமே.

Pudhupettai
Pudhupettai

தன் வாழ்க்கையைப் போல, தன் மகன் வாழ்க்கையும் மாறிவிடக்கூடாது. அவன் நீண்ட நாள்கள் உயிர் பிழைத்து, கழுத்துக்கு மேல் கத்தியில்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற கனவுகளோடு தன் குழந்தையை ஒரு பெண்ணின் கைகளில் சேர்த்துவிட்டு இப்படியாகக் கேட்பான்.

``உன் வீட்ல எதுவும் பிரச்னை இல்லையே. புருஷன் குடிகாரனா இருந்து, குடிச்சுட்டு அந்து புள்ளைய எல்லாம் அடிச்சு, எதுக்கு வீண் சிரமம்.''

ஆமாம், குமார் தன் குழந்தையை ஒப்படைத்தது குமாரின் அம்மாவிடம்தான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு