Published:Updated:

வடிவேலு ரீ என்ட்ரி… ‘கைப்புள்ள’யின் நகைச்சுவையை தமிழ் சமூகம் ஏன் கொண்டாடியது?

வடிவேலு

‘‘வீரம்னா என்னன்னு தெரியுமா... பயம் இல்லாத மாதிரி நடிக்கறது’’ – இது ‘குருதிப்புனல்’ படத்தில் கமல் பேசும் வசனம். இது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ, வடிவேலுவின் பாத்திர அமைப்புக்கு மிக கச்சிதமாகப் பொருந்தும்.

வடிவேலு ரீ என்ட்ரி… ‘கைப்புள்ள’யின் நகைச்சுவையை தமிழ் சமூகம் ஏன் கொண்டாடியது?

‘‘வீரம்னா என்னன்னு தெரியுமா... பயம் இல்லாத மாதிரி நடிக்கறது’’ – இது ‘குருதிப்புனல்’ படத்தில் கமல் பேசும் வசனம். இது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ, வடிவேலுவின் பாத்திர அமைப்புக்கு மிக கச்சிதமாகப் பொருந்தும்.

Published:Updated:
வடிவேலு

‘வந்துட்டான்யா வந்துட்டான்’, ‘வேணாம்… வலிக்குது அழுதுருவேன்’, ‘எதையும் பிளான் பண்ணிதான் பண்ணனும்’, ‘நானும் ரௌடிதான்யா’, ‘பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மென்ட் வீக்கு’, ‘பீ கேர்ஃபுல் என்னய சொன்னேன்'...

இவையெல்லாம் வடிவேலு சினிமாவில் பேசிய வசனங்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்? இல்லை. இவை மக்களின் மொழியும் கூட. அந்த அளவுக்கு இந்த வசனங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டன. இப்படி வடிவேலு பேசிய வசனங்களை மட்டும் வைத்து ஒரு தனியான அகராதியையே உருவாக்கி விடலாம்.

வசனம் மட்டுமல்ல, அவர் வெளிப்படுத்தும் பிரத்யேகமான ஒலிகள், உச்சரிப்புகள் கூட சிறப்பானது. 'அவ்வ்வ்வ்...', 'ஆஹான்', 'அஹ்ஹஹ்ஹ', 'ஆங்... ஆங்... ஆங்' என்று விதம் விதமான சத்தங்களாலும் நகைச்சுவையைக் கூட்டியவர் வடிவேலு.

வசனங்கள், உடல் அசைவுகள் போன்றவற்றை வைத்து நகைச்சுவை செய்வது வழக்கமானது. ஆனால் சிறிய ஒலியையே வித்தியாசமாக உச்சரித்தால் அதை நகைச்சுவையாக்கி விடலாம் என்பது உலகத்தில் வேறெந்த நகைச்சுவை நடிகரிடமும் நாம் பார்க்காத அதிசயம்.

நண்பரொருவர் நம்மை மெலிதாக இம்சை செய்தால் கூட, வடிவேலு மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு 'அவ்வ்வ்வ்' என்று ஜாலியாக அழுது காட்டுகிறோம். மேலதிகாரி உள்ளே நுழையும் போது ‘வந்துட்டான்யா.... வந்துட்டான்’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலறுகிறது. இந்த அளவுக்கு தமிழ் சமூகத்துடன் இறுக்கமாக பின்னிப் பிணைந்த நகைச்சுவை நடிகர் வேறு எவருமே இல்லை.

தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்த 'மாஸ் ஹீரோக்களை' ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களின் ஆடை, ஒப்பனை, அசைவு, பன்ச் வசனம் என்று ஒவ்வொன்றும் ரசிகர்களால் மீள்நினைவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு மங்கி விடும்; மறைந்து விடும்.

ஆனால் வடிவேலுவின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து ஒவ்வொரு வசனமும் உடல்மொழியும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. வடிவேலு நம்மைப் பாதித்தது போல் வேறு எந்தவொரு நடிகரும் பாதித்ததில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம்.

வடிவேலு - கோவை சரளா
வடிவேலு - கோவை சரளா

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் சில காட்சிகளில் கெச்சலான தோற்றத்துடன் ஓரமாக வந்து போன அந்த ஆசாமியை நிச்சயம் பல பேர் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த நபர்தான் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில்... ஏன் தமிழ் சமூகத்தில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறார் என்பதை எவருமே யூகித்திருக்க மாட்டார்கள்.

வடிவேலுவின் பயணத்தை ‘வின்னர்’-க்கு முன், ‘வின்னர்’-குப் பின் என்று இரண்டாகப் பிரித்து விடலாம். அந்த அளவுக்கு ‘கைப்புள்ள’ என்கிற பாத்திரம் மிக மிக முக்கியமானது. ‘இதுதான் நீங்க போக வேண்டிய பாதை’ என்று வடிவேலுவுக்கு துல்லியமாக அடையாளம் காட்டியது ‘கைப்புள்ள’தான்.

‘‘வீரம்னா என்னன்னு தெரியுமா... பயம் இல்லாத மாதிரி நடிக்கறது’’ – இது ‘குருதிப்புனல்’ படத்தில் கமல் பேசும் வசனம். இது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ, வடிவேலுவின் பாத்திர அமைப்புக்கு மிக கச்சிதமாகப் பொருந்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவேலு - அர்ஜுன்
வடிவேலு - அர்ஜுன்

‘வெளியே வீரமாக பாவ்லா செய்யும் ஆசாமி, ஆனால் உள்ளே தொடைநடுங்கி’ – இதுதான் வடிவேலு பல திரைப்படங்களில் பின்பற்றும் பாத்திரத்தின் எளிமையான சூத்திரம். இது ‘கைப்புள்ள’யின் வழியாக மிக வலிமையாக வெளிப்பட்டது.

இதற்கு முன்பும் கூட இம்மாதிரியான பாத்திரங்களில் வடிவேலு நடித்திருக்கிறார்தான். உதாரணத்துக்கு ‘பசும்பொன்’ என்கிற திரைப்படத்தில் முரட்டுத் தோற்றத்தில் இருக்கும் ஒருவரிடம் வாங்கிய கடனை வசூலிக்கச் செல்வார் வடிவேலு. தொடக்கத்தில் அந்த ஆசாமியை மிகவும் எக்காளத்துடன் கையாள்வார். ‘’வாங்கின கடனை கொடுக்க துப்பில்ல’’ என்று எகத்தாளமான வார்த்தைகளில் வடிவேலுவின் அராஜகம் நீளும். முரட்டு ஆளுக்கு கோபம் வந்து பதிலுக்கு அரிவாளை தூக்கியவுடன் ‘’இல்லண்ணே... நான் என்ன சொல்றேன்... நாம தாயா புள்ளயா பழகியிருக்கோம்” என்று அப்படியே பம்மி விடுவார். பார்க்கும் போதெல்லாம் வெடித்து சிரிக்க வைக்கும் காட்சி இது.

இந்த அடிப்படைதான் ‘கைப்புள்ள’யின் வழியாக மிக வலிமையாக உருவெடுத்தது. இத்தனைக்கும் ‘வின்னர்’ படத்துக்காக வடிவேலு நடிக்க அணுகப்பட்ட போது அவர் காலில் அடிபட்டு சரியாக நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார். இயக்குநர் மிகவும் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டாராம். ஆனால் ‘கைப்புள்ள’ விந்தி விந்தி நடந்தது கூட அந்த பிராண்டின் ஒரு தனித்த அடையாளமாகி விட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ‘கைப்புள்ள’தான் பிறகு ‘வீரபாகு’, புலிப்பாண்டி’, ‘பாடி சோடா’, ‘படித்துறை பாண்டி’, ‘ஸ்நேக் பாபு’, ‘வண்டு முருகன்’, ‘ஸ்டைல் பாண்டி’, ‘என்கவுன்ட்டர் ஏகாம்பரம்’, ‘நாய் சேகர்’ என்று பல்வேறு பரிமாணங்களாக வெளிப்பட்டார். ஆனால் ஒரே மாதிரியாக அல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியதுதான் வடிவேலுவின் பிரத்யேக திறமை.

வடிவேலு , கோவை சரளா, விந்தியா
வடிவேலு , கோவை சரளா, விந்தியா

‘வடிவேலு காமெடி’ என்கிற விஷயத்தின் தன்மையை சில விதங்களில் சுருக்கி விடலாம். உதாரணத்துக்கு சாலையில் செல்லும் யாராவது அந்நியர், அப்பாவியாக சென்று கொண்டிருக்கும் வடிவேலுவை இழுத்து சிக்கலில் மாட்டி விட்டு விடுவார் அல்லது வடிவேலுவே கூட யாரிடமாவது வம்பிழுத்து சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

சைக்கிளில் தன்னைக் கடந்து செல்லும் ஆசாமியை சரியாக கவனிக்காமல் ‘‘பார்த்துப் போய்யா..” என்று மெல்ல முனகி விட்டு அவர் சற்று தூரம் கடந்து சென்றவுடன் ‘’யாரு கிட்ட... ஜெயில் பறவைடா... பல ஊர் ஜெயிலைப் பார்த்தவங்க’’ என்று சவடால் விடுவார் வடிவேலு. அவன் அப்படியே சென்று விடுவான் என்பதுதான் இவருடைய கணக்காக இருக்கும். ஆனால் சைக்கிளில் சென்ற முரட்டு ஆசாமி கோபத்தோடு திரும்பி வரும் போது இவர் எடுப்பார் ஒரு ஒட்டம். போலீஸ் டிரைனிங்கில் கூட எவனும் அப்படி ஓடியிருக்க மாட்டான்.

ஆனால் இதுதான் ‘வடிவேலுவின் பாணி’ என்று சுருக்கி விடவும் முடியாது. ‘பிரெண்ட்ஸ்’ படத்தில் வந்த ‘கான்ட்ராக்டர் நேசமணி’ போல வேறு வித்தியாசமான டிராக்குகளும் உண்டு.

வடிவேலுவின் நகைச்சுவை வெளிப்பாட்டிற்கு ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள், கூட நடிப்பவர்கள், இயக்குநர்கள் என்று பல காரணங்கள் இருந்தாலும் வடிவேலுவைத்தான் அதற்கு முதன்மையான காரணியாக சொல்ல முடியும். ஒரு சாதாரண நிகழ்வைக் கூட நாம் வெடித்து சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையாக்கி விடும் அபாரமான திறன் வடிவேலுவிடம் இருக்கிறது.

வடிவேலு
வடிவேலு

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் இதுதான். கமலுக்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில் வடிவேலு பேச வரும் போது ‘தேவர்மகன்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரித்தார். சிவாஜி இறந்து விடும் காட்சியில் தான் ஓவர்ஆக்ட் செய்ததையும் அதை ‘டெட்பாடியாக’ நடித்த சிவாஜியே எழுந்து கண்டித்ததையும் விவரிக்க சபையே வெடித்து சிரித்தது. அப்படியொரு சுவாரசியமான மாடுலேஷனில் அந்தச் சம்பவத்தை விவரித்தார் வடிவேலு. ‘பாடி டக்குன்னு எழுந்துக்கிச்சு’ என்று அவர் சிவாஜிகணேசனைப் பற்றி சொல்லும் போது பார்வையாளர்களின் வரிசையில் இருந்த நடிகர் பிரபு கூட சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.

‘’உங்களின் நகைச்சுவைக் காட்சிகளை எப்படி உருவாக்குகிறீர்கள். நடிக்கிறீர்கள்?’’ என்று ஒரு நேர்காணலில் வடிவேலுவிடம் கேட்ட போது ‘’என்னைச் சுற்றியுள்ள சராசரி மனிதர்களை மிகவும் உன்னிப்பாக கவனிப்பேன். அதிலேயே எனக்கு பல காமெடிக்களுக்கான ஐடியாக்கள் வந்து விடும்’’ என்றார். உண்மைதான்.

அவருடைய நகைச்சுவைக் காட்சிகளின் சாரம் என்ன என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ‘யாரோ... எதற்காகவோ அற்ப விஷயத்திற்காக வம்பிழுக்கும் சமாச்சாரமாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்தச் சிறிய விஷயத்தை வடிவேலு தனது பிரத்யேக பாணியில் கையாளும் போது அது வெடிச்சிரிப்புக்கு காரணமாக அமைந்து விடும்.

வடிவேலு
வடிவேலு

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெறுவது அரிது. கவுண்டமணியே முயன்று மண்ணைக் கவ்விய ஏரியா அது. ஆனால் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யில் இரட்டை நாயகர்களாக வந்த வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு இயக்குநர் சிம்புதேவனின் திறமையான இயக்கமும் ஒரு முக்கிய காரணம். ‘எலி’ போன்ற சில முயற்சிகளில் வடிவேலு ஹீரோவாக வந்த போது மக்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை.

தன்னால் ஹீரோ ஆக முடியாவிட்டாலும், தமிழ் சினிமாவின் பல ஹீரோக்களின் திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு வடிவேலு ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் தோல்வியை அடைந்தவுடன் 'அவ்வளவுதான்... ரஜினியின் சகாப்தம் முடிந்து விட்டது' என்பது போல் பேச்சுகள் கிளம்பின.

எனவே தான் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை வெற்றிப்படமாக ஆக்குவது என்கிற உறுதியுடன் இருந்தார் ரஜினி. இதற்காக அவர் திட்டமிட்ட போது இயக்குநர் வாசுவிடம் சொன்ன விஷயம், ‘’முதல்ல வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கி வெச்சுக்கங்க”. இது ரஜினியே மேடையில் வெளிப்படையாக சொன்னது. ரஜினியின் யூகம் பிறகு உண்மையானது. ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வெற்றியில் வடிவேலுவின் காமெடிக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

‘‘ராஜாவின் பாடல்கள் இல்லையென்றால் பிரச்னைகளில் மூழ்கி எனக்கு பைத்தியம் கூட பிடித்திருக்கலாம். என் மன உளைச்சலில் இருந்து மீட்டு என்னைக் காப்பாற்றியது ராஜாவின் அற்புதமான இசைதான்’’ - இப்படி ஏராளமான ரசிகர்கள் சொல்வதுண்டு.

வடிவேலு
வடிவேலு

இதற்கு நிகராக வலுவேலுவின் நகைச்சுவையையும் சொல்லலாம். இன்று எந்தவொரு மனிதரும் மனஅழுத்ததுக்கு ஆளானால், சிறிது நேரம் வடிவேலுவின் ஏதாவது ஒரு நகைச்சுவையைப் பார்த்தால் போதும். வாய்விட்டுச் சிரித்து தன் பிரச்னைகளை மறந்து விடுவார். இந்த நோக்கில் தமிழ் சமூகத்தின் ‘நகைச்சுவை மருத்துவன்’ என்று கூட வடிவேலுவை நிச்சயம் சொல்லலாம்.

சில பிரச்னைகள் காரணமாக 2018-ம் ஆண்டு வடிவேலு தமிழ் சினிமாவில் நடிப்பதில் தடை ஏற்பட்டது. அவர் திரையில் தோன்ற முடியாமல் போய் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கடந்திருந்தாலும் கூட மக்கள் அவரை இன்னமும் தினந்தோறும் கொண்டாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர் இல்லையென்றால் மீம்ஸ் உலகம் மிக வறட்சியாக இருந்திருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் வடிவேலுவின் ஏதோ ஒரு தோற்றமும் அசைவும் வசனமும் கச்சிதமாகப் பொருந்திப் போவது ஆச்சரியமான விஷயம்.

வடிவேலுவின் மீதான தடை நீங்கி அவர் மறுபடியும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இதை விடவும் ரசிகர்களுக்கு வேறு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கப் போவதில்லை. அவருடைய மீள்வருகை சிறப்பாக அமையட்டும்.

அவர் நடிக்காமலிருந்த காலக்கட்டத்தில், அவருடைய காமெடிக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க நேரும் போதெல்லாம் ‘அடப்பாவி மனுஷா... இப்படி இன்னமும் பல காமெடிகளை நாங்கள் இழக்கிறோமே’ என்று தோன்றும். இனி அந்தக் கவலையில்லை.

வேறு எந்த நடிகராவது நடிப்பில் இத்தனை வருடங்கள் இடைவெளி விட்டிருந்தால் நிச்சயம் தொலைந்து போயிருக்கக்கூடும். ஆனால் மக்கள் மறக்காமல் வடிவேலுவை தினம் தினம் நினைவுகூர்வது மட்டுமல்ல, அவரது மறுவருகையையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இது மிக மிக அரிதான நிகழ்வு.

"எனக்காடா எண்டு கார்டு போடறீங்க. எனக்கே எண்டே கிடையாதுடா" என்று ஒரு திரைப்படத்தில் வசனம் பேசுவார் வடிவேலு. அது நிஜமாகட்டும் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம்.