Published:Updated:

தள்ளிப்போகும்`ஆதித்ய வர்மா' ரிலீஸ்... காரணம்,`பிகில்'?!

`ஆதித்ய வர்மா' ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது?

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

தமிழ் சினிமாவில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது `ஆதித்ய வர்மா'. விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படம், தெலுங்கில் வந்து சூப்பர் ஹிட் அடித்த `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீ-மேக். முக்கியமான படம் என சொல்லக் காரணம், இது தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டு முறை ஷூட் செய்யப்பட்டிருக்கும் படம் என்பதுதான். இயக்குநர் பாலா, முதலில் `வர்மா' என்கிற பெயரில் இந்தப் படத்தை துருவ் விக்ரமை வைத்து இயக்கினார். ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்தபோது, `திருப்திகரமாக இல்லை' என விக்ரம் தரப்பு சொல்ல, பாலா மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது என மறுக்க, படம் பிரச்னைக்குள்ளானது. அதன்பிறகு பாலா படத்திலிருந்து விலக, `அர்ஜுன் ரெட்டி' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கிரிசையாவை வைத்து மீண்டும் படத்தை ரீ-ஷூட் செய்தார் விக்ரம். இந்த `ஆதித்ய வர்மா'தான் நவம்பர் 8-ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி 8-ம் தேதி படம் ரிலீஸாகவில்லை. என்ன பிரச்னை என விசாரித்தோம்.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்
Vikatan

முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசினார். ``ரீமேக் படமாக இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு சீனையும் மகனுக்காக விக்ரம் கூடவே இருந்து செதுக்கியிருக்கிறார். அவர் படத்துக்குக் கூட இப்படி பப்ளிசிட்டி செய்ததில்லை. மகனின் அறிமுகம் தரமான வெற்றியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பாலா மேல் முழு நம்பிக்கை வைத்துதான் முதல் படத்தில் பெரிதாக அவர் இன்டர்ஃபியர் ஆகவில்லை. ஆனால், பாலா இயக்கிய `வர்மா'வின் மேல் விக்ரமுக்கு நம்பிக்கை இல்லாததால் படத்தை டிராப் செய்தார்.

விக்ரமின் இவ்வளவு மெனக்கெடல்களுக்கு, இந்தப் படம் நன்றாகவே ஓடும். ஆனால், படத்தை விற்க சிரமப்படுகிறார் விக்ரம். படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனலுக்கு விக்ரம் விற்றுவிட்டார். ஆனால், அந்தச் சேனலில் `ரியாலிட்டி ஷோவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வரணும், இரண்டு ஸ்பெஷல் ஷோ பண்ணணும்' என சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

படத்தில் சில இன்டிமேட் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் இருப்பதால், படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்துக்கு `A' சான்றிதழ்தான் தரமுடியும் எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வரவேண்டும் என்பதால் எப்படியாவது `U/A' வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் விக்ரம். இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம்'' என்றார் அந்தத் தயாரிப்பாளர்.

varma
varma

விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசினோம். `` `அர்ஜூன் ரெட்டி' படத்தை பாலா ரீமேக் செய்கிறார் என்று சொன்னபோது இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. போனமுறை படத்தைப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை உடனே வாங்கினார் `சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' சக்திவேல். ஆனால், இந்தமுறை அப்படி யாரும் வாங்கவில்லை.

ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா
Vikatan

தயாரிப்பு நிறுவனம் சொல்கிற விலைக்கு இந்தப் படத்தை வாங்கப் பலரும் மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே ரிலீஸ் செய்யலாம் என்கிற முடிவில் இருக்கிறார் விக்ரம். ஆனால், தியேட்டர்கள் கிடைக்கவில்லை. `பிகில்' படம் இன்னும் கொஞ்ச நாள் தியேட்டர்களில் ஓடினால்தான் லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், `கைதி'க்கும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அதனால் இன்னும் இரண்டு வாரம் இந்தப் படங்களை ஓட்டியே ஆகவேண்டும் என தியேட்டர்கள் தரப்பில் சொல்கிறார்கள். அதனால்தான் படத்தின் ரிலீஸ் நவம்பர் 21-ம் தேதிக்குத் தள்ளிப்போயிருக்கிறது" என்றார் அந்த விநியோகஸ்தர்.

சீக்கிரம் துருவை ஸ்கிரீன்ல காட்டுங்க சீயான்!