Published:Updated:

டான்ஸிங் ரோஸ் முதல் ‘அட்டகத்தி’ தினகரன் வரை... பா.இரஞ்சித்தின் கேரக்டர்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன?

'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்
'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்

“வாடா கண்ணு...” என தோளுக்கு மேல் வளர்ந்த ஹீரோவுக்கு, அம்மா சாப்பாடு ஊட்டி விடும் காமெடி எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நிகழும். ‘’எரும...எரும... ஊரைப் பொறுக்கிட்டு எத்தனை மணிக்கு வருது பாரு’’ என்று கரித்துக் கொட்டும் அம்மாக்கள்தான் இயல்பானவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

It’s not enough to just make the characters interesting in a film; it is also essential to select the appropriate actors. Then half the success of the film is guaranteed.

இந்த மேற்கோளை எந்தவொரு மேற்கத்திய சினிமா மேதையும் சொல்லவில்லை. நானேதான் சொல்கிறேன். ஆம்... ஒரு திரைப்படத்தில் Casting என்பது மிக மிக முக்கியமானது. சில இயக்குநர்கள் திரைக்கதையை எழுதும் போதே குறிப்பிட்ட நடிகர் அவரின் மனதிற்குள் வந்து அமர்ந்து விடுவார். எனவே அதற்கேற்ப அந்த ஸ்கிரிப்ட்டை விவரித்துச் செல்வார்.

சிலரோ திறந்த மனதுடன் சுதந்திரமாக எழுதி விட்டு பிறகு அதற்கேற்ற நடிகர்களின் பட்டியலை பரிசிலீப்பார்கள். இந்தத் தேர்வு கச்சிதமாக அமைந்தால் குறிப்பிட்ட பாத்திரம் வலிமையாகவும் வெற்றியாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இது படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த நோக்கில் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களில் உள்ள பாத்திரத் தேர்வுகளை அலசவேண்டியது அவசியமாகிறது.

முதலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ‘டான்ஸிங் ரோஸ்’ பாத்திரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

டான்ஸிங் ரோஸ்!

இந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பிலுள்ள முக்கியமான வித்தியாசத்தை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. இதுவரையான திரைப்படங்களில் எந்தவொரு உதிரிப் பாத்திரமும் கடைசி வரை உதிரியாகவே பின்னணியில் ஓரமாக வந்து சென்று விடும். அதற்கான முக்கியத்துவம் பெரிதும் தரப்பட்டிருக்காது. ஆனால், இப்படியொரு சிறிய பாத்திரம் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து பார்வையாளர்களின் மனதில் ‘நச்’சென்று நீங்கா இடம் பிடிப்பது போல் திரைக்கதை எழுதுவது என்பது மிக மிக அரிதானது. ‘சார்பட்டா பரம்பரை’யில் டான்ஸிங் ரோஸ் பாத்திரம் எழுதப்பட்ட விதம் மிகவும் தனித்தன்மையானது மற்றும் பிரத்யேகமானது.

'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்
'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ்

உதாரணத்துக்கு எண்பதுகளில் வந்த திரைப்படங்களை கவனிக்கலாம். பண்ணையார் வில்லனாக இருந்தால் அவரின் கூடவே ஒரு காரியதரிசி இருப்பார். வில்லனுக்கு அவ்வப்போது வில்லங்கமான ஐடியாக்கள் தருவார். இந்தப் பாத்திரம் காமெடியனாக அமைந்தால் வில்லனையே மறைமுகமாக நிறைய கிண்டல் செய்யும். அதாவது வில்லன் மீதுள்ள கோபத்தில் பார்வையாளர்கள் திட்ட விரும்புவதையெல்லாம் இந்த நகைச்சுவைப் பாத்திரம் மறைமுகமாக சொல்லி கலாய்த்துக் கொண்டேயிருக்கும். இதனால் பார்வையாளர்கள் குதூகலம் அடைவார்கள்.

ஓர் உதிரிப் பாத்திரத்தை வடிவமைப்பதில் வழக்கமாக உள்ள முறை இது. ஆனால் இதில் மாறுதலான வழிமுறைகளும் உள்ளன.

ரஜினி நடித்து 1980–ல் வெளியான ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் சுருளிராஜனின் பாத்திரத்தை சற்று நினைவுகூரலாம். இந்தப் பாத்திரமும் பண்ணையாரின் கூடவே வருவது என்றாலும் திடீரென ஓரிடத்தில் சுருளிராஜனுக்கு, ஃப்ளாஷ்பேக் காட்சி ஒன்று விரியும். உண்மையில் இந்த ஒட்டுமொத்த திரைப்படமே சுருளிராஜன், பண்ணையாரை மறைமுகமாக பழிவாங்கும் படம்தான். அவரால் நேரடியாக மோத முடியாது என்பதால் உடல் வலிமையான ரஜினிகாந்த்தை வைத்து பழிவாங்குவார். ஆக ஒருவகையில் சுருளிதான் அந்தக் கதையின் ஹீரோ என்று கூட சொல்லி விடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வகையில், ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ பாத்திரம் தொடக்கத்தில் ‘வேம்புலி’யின் பின்னால் நிழலாக மட்டுமே வருகிறது. பார்ப்பதற்கு சற்று காமெடியாகக் கூட இருக்கிறது. எனவே இதை உதிரிப் பாத்திரங்களுள் ஒன்றாகவே நாம் கருதுகிறோம். ஆனால், கபிலனுக்கும் ரோஸுக்கும் இடையிலான தற்செயலான மோதல் தீர்மானிக்கப்பட்டவுடன்தான் ரோஸ் என்கிற பாத்திரத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரிய வருகிறது. “ரோஸ் எவ்ளோ பெரிய ஆட்டக்காரன்.. அவன் கூட மோதி ஜெயிடுச்சிடுவியா?” என்று போகிறவர், வருகிறவர் எல்லாம் கபிலனை எச்சரிக்கிறார்கள். வாத்தியார் ரங்கன் இது குறித்து கபிலனுக்கு உபதேசம் செய்யும் காட்சி ‘மீம்’ உலகத்தில் கூட இப்போது பிரபலமாகி விட்டது.

திடீரென விஸ்வரூபம் எடுப்பது மட்டுமல்லாமல் ‘ரோஸ்’ பாத்திரம் நியாயவுணர்வுடன் இயங்குவதையும் கவனிக்கலாம். ‘ரோஸ் நல்லது... தோல்வியை ஒப்புத்துக்கிச்சு... நீ புலி இல்ல, சளி’ என்று ‘டாடி’ பாத்திரம் வேம்புலியை நோக்கி எகத்தாளமாக பேசும் வசனத்தை உதாரணத்துக்கு சொல்லலாம். ‘’ரைட்ல காலி பண்ணி லெஃப்ட்ல பொக்குன்னு குத்திட்டாம்ப்பா. நீ எப்படியாவது கபிலனை ஜெயிச்சுரு” என்று ரோஸ் பாத்திரமும் தன் தோல்வியை ஒரு காட்சியில் ஆவேசத்துடன் ஒப்புக் கொள்கிறது. ஆட்டத்தில் குழப்பம் செய்து ஜெயிக்கலாம் என்கிற வில்லங்கமான யோசனை தரப்படும் போது ‘‘அப்படிச் செய்யாதே’’ என்று வேம்புலியை நல்வழிப்படுத்துவதும் ‘ரோஸ்’ பாத்திரம்தான்.

'சார்பட்டா' - பா.இரஞ்சித்
'சார்பட்டா' - பா.இரஞ்சித்

ஆக... ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எத்தனையோ சிறிய சிறிய பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் சரியாகத் தரப்பட்டிருந்தாலும் அனைத்தையும் மீறி ‘ரோஸ்’ பாத்திரம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்ததற்கு திரைக்கதை எழுதப்பட்டிருந்த விதம்தான் முக்கிய காரணம். இந்த வகையில் இரஞ்சித்தின் பாத்திரங்களில் மறக்கவே முடியாத பாத்திரம் ‘ரோஸ்’. ‘சார்பட்டா’வில் ஹீரோ ஆர்யாவை அநாயசமாக முந்திக் கொண்டது ‘ரோஸ்’. இந்தப் பாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

‘மெட்ராஸ்’ அன்பு!

நடிகர் கலையரசன் பா.இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுவதை சிலர் குறையாக சொல்கிறார்கள். ஓர் இயக்குநர் தான் செளகரியமாக கையாளக்கூடிய நடிகர்களை தொடர்ந்து உபயோகப்படுத்துவது இயல்புதான். சம்பந்தப்பட்ட நடிகர் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறாரா என்பதுதான் நமக்கு முக்கியம். இந்த நோக்கில் கலையரசன் தனது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மிக குறிப்பாக ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த ‘அன்பு’ பாத்திரம் என்பது ஏறத்தாழ நாயகனுக்கு நிகரானது. வேறு எந்த முன்னணி நடிகராக இருந்திருந்தாலும் இத்தனை முக்கியத்துவம் கொண்ட பாத்திரத்தை அனுமதித்திருக்க மாட்டார்கள். கார்த்தி திரைக்கதை நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் இது சாத்தியமாகி இருக்கலாம்.

ஓர் அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பை நோக்கி நகர்ந்து வரும் விசுவாசமான, ஆவேசமான இளைஞன் என்கிற சித்திரத்தை ‘அன்பு’வின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார் கலையரசன். சில காட்சிகளில் இவர் மட்டுமே முன்னணியில் நின்று பேசிக் கொண்டிருக்க, நாயகன் பின்னணியில் சாதாரணமாக நிற்பதைக் கவனிக்கலாம்.

ஆர்யா, கலையரசன்
ஆர்யா, கலையரசன்

‘’ஒரு சாதாரண சுவத்துக்கா இப்படி அடிச்சுக்கறாங்க?” என்று ஒருவர் அப்பாவித்தனமாக கேட்கும் போது ‘‘அது வெறும் சுவர் இல்லை. அதிகாரம்’’ என்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் காட்சியில் கலையரசனின் நடிப்பு அற்புதமாக இருக்கும். ‘சாதாரண…’ என்கிற வார்த்தைக்கு அவர் தந்திருக்கும் மாடுலேஷன் சிறப்பானது.

இதைப்போலவே வாத்தியாரின் மகனாக இருந்தாலும் தனக்கான இடம் தொடர்ந்து மறுக்கப்படுவதை எண்ணி மனம் புழுங்கும் ‘வெற்றிச்செல்வன்’ என்கிற பாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் கலையரசன். (சார்பட்டா பரம்பரை).

‘அட்டகத்தி’ தினகரன்!

‘அட்டகத்தி’ திரைப்படத்துக்கு தினேஷை விட்டால் அத்தனை இயல்பான நாயகன் யாராவது அமைந்திருப்பார்களா என்று யோசிக்கவே சிரமமாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ‘அசட்டுத்தனமான ஹீரோ’ என்கிற பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி விட்டார் தினேஷ்.

'அட்டகத்தி' தினேஷ்
'அட்டகத்தி' தினேஷ்

நம் இளம் வயது காதல் அனுபவங்கள் என்பது அந்தச் சமயத்தில் மிக உருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். ஆனால் காலம் கடந்தோ அல்லது அதிலிருந்து விலகி நின்றோ யோசித்தால் அதில் எத்தனை அவல நகைச்சுவைகள் உள்ளன என்பதை மிக மிக இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்ன திரைப்படம் ‘அட்டகத்தி’. அதுவரையில் தமிழ்த் திரை நாயகர்கள் என்பவர்கள் புஜபராக்கிரசாலிகளாகவும் காதல் மன்னர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்த அபத்தத்திலிருந்து விலகி, அவனும் நம்மைப் போல ஒரு ‘டம்மி’ பீஸூ’தான் என்கிற நிதர்சனத்தை சிரிக்கச் சிரிக்கச் சொன்னது ‘அட்டகத்தி’. இந்த சராசரி இளைஞனின் பாத்திரத்தை தினேஷ் மிகச் சிறப்பாக கையாண்டார். அவர் காதல் தோல்வி உருக்கத்தில் முதலில் முட்டை போண்டாவை மறுத்து விட்டு பிறகு அவசரமாக திரும்பிச் சென்று அதை விழுங்கும் காட்சி ஒன்றே போதும்.

அம்மாக்களும் அன்பும்!

பா.இரஞ்சித்தின் திரைப்படங்களில் வரும் ‘அம்மா’ பாத்திரங்களும் மிக சுவாரசியமானவை. நம்முடைய வீட்டை நினைவுப்படுத்தும் அம்மாக்களை இவரது படங்களில் காண முடியும். “வாடா கண்ணு... நீ வராம நான் என்னிக்குடா சாப்பிட்டிருக்கேன்” என்று தோளுக்கு மேல் வளர்ந்த ஹீரோவுக்கு, அம்மா சாப்பாடு ஊட்டி விடும் காமெடியெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நிகழும். ‘’எரும.. எரும.. ஊரைப் பொறுக்கிட்டு எத்தனை மணிக்கு வருது பாரு’’ என்று கரித்துக் கொட்டும் அம்மாக்கள்தான் இயல்பானவர்கள்.

இந்த வரிசையில் ‘அட்டகத்தி’ அம்மாதான் மிக மிக இயல்பானவர். ‘’டேய் கண்ணு.. மாடு கட்டை அவுத்துக்கிட்டு ஓடிடுடுச்சாம்.. போயி பிடிச்சுக் கட்டுப்பா” என்று முதலில் கெஞ்சி, பிறகு மகன் மறுத்தவுடன் ‘’ஒரு வேலைக்கு உதவுதா பாரு!” என்று சலித்துக் கொண்டே எழுந்து செல்லும் அம்மாக்களை பெரும்பாலான வீடுகளில் பார்க்கலாம். கூத்துப்பட்டறை மீனாட்சியின் இயல்பான தோற்றமும் நடிப்பும் இந்தப் பாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியது. இதைப் போலவே குடி போதையில் சவால் விட்டு காற்றில் சண்டையிடும் அப்பாக்களை (வேலு) பல குடும்பங்களில் பார்க்கலாம்.

'காலா' ஈஸ்வரி ராவ்
'காலா' ஈஸ்வரி ராவ்

‘மெட்ராஸ்’ படத்தில் வரும் அம்மா இன்னமும் சூப்பர். தன் மகனின் திருமணத்துக்காகப் பார்க்கப்படும் ஒவ்வொரு பெண்ணையும் ‘என்னடா... அவ கண்ணு இப்படி இருக்கு’ என்று நொட்டை, நொள்ளை காரணங்களைச் சொல்லி மகனை பயங்கரமாக வெறுப்பேற்றும் ரகளையான காட்சியே போதும். பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட காலம் காணாமல் போயிருந்த ரமா இந்தப் பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்தார்.

பா.இரஞ்சித்தின் காதல்!

அம்மாக்களைப் போலவே பா.இரஞ்சித்தின் திரைப்படங்களில் வரும் காதலி மற்றும் மனைவியின் பாத்திரங்களும் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தார்கள். “என்ன கட்டிக்கிறியா?” என்று கோபத்துடன் அன்பை வெளிப்படுத்தும் கலையரசி, (மெட்ராஸ்), தன் கணவரின் வளர்ச்சியில் பெருமிதப்படும், நீண்ட காலப் பிரிவில் தவிக்கும் மனைவியாக குமுதவல்லி (கபாலி) என்று விதம் விதமான பாத்திரங்கள்.

இதில் சுவாரசியம் மிகுந்தது ‘காலா’வில் வரும் செல்விதான். தன்னுடைய கணவர் முன்னாள் காதலை ஒளித்து வைத்துக் கொண்டு உள்ளுக்குள் மறுகுவதைப் பார்த்து பொசசிவ் உணர்வுடன் ‘‘தப்படிக்கற பெருமாள் என் பின்னாடியேதான் சுத்திட்டு திரிஞ்சான்... எனக்கும் டிக்கெட் போடு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர்றேன்’’ என்று வெடிக்கும் இடம் அட்டகாசமானது. போலவே ‘ஐ லவ் யூ’ என்று கணவன் சொன்னவுடன் தித்திப்புச் சுவையை உணர்ந்தது போல் காதை மூடிக் கொள்ளும் காட்சியும் அருமையானது. ஈஸ்வரி ராவ் இந்தப் பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்தார்.

தன்னுடைய உடைகள் களையப்பட்டு அவமானத்தை எதிர்கொள்ள நேரும் போது, பழமைவாதப் பெண்ணாக அதை எண்ணிக் கூனிக்குறுகி ஆடையை எடுக்க ஓடாமல், எதிராளியை தாக்க ஆயுதத்துடன் ஓடும் புரட்சிப் பெண்ணாக அசத்தியிருந்தார் அஞ்சலி பாட்டில் (‘காலா’ - சாருமதி).

'சார்பட்டா' சஞ்சனா
'சார்பட்டா' சஞ்சனா

ஒரு திரைப்படத்தில் ஏராளமான சிறிய பாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கான முக்கியத்துவத்தை தந்த சிறந்த உதாரணத் திரைப்படமாக ‘சார்பட்டா பரம்பரை’யை சொல்லலாம். இந்தக் கட்டுரையின் முதற்பத்தியில் சொன்னது போல் Casting என்கிற சமாச்சாரம் சிறப்பாக அமைந்து விட்டால் அந்தப் படத்தின் தரம் எத்தனை மேலே உயரும் என்பதற்கான உதாரணம் ‘சார்பட்டா’.

அவசியமான சில இடங்களில் மட்டும் ஆவேசப்பட்டு, பெரும்பாலான காட்சிகளில் நிதானம் தவறாத முதிர்ச்சியான வாத்தியாரான ரங்கன் (பசுபதி), ‘ஹே bugger... யூ ஆர் எ பாக்ஸர் மேன்” என்று கபிலனை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருக்கும் ‘டாடி’, (ஜான் விஜய்), தன்னுடைய ஆட்கள் மேடையில் ஜெயிக்கும் போது ரங்கனை நோக்கி நக்கலான சிரிப்பை வெளிப்படுத்தும் துரைக்கண்ணு வாத்தியார் (ஜி.எம்.சுந்தர்), முதலிரவில் நடனம் ஆடும் மாரியம்மா (துஷாரா விஜயன்), தன்னுடைய கணவனுக்காக பரிந்து பேசி மாமனாரிடம் வெடிக்கும் வெற்றிச் செல்வனின் மனைவி லஷ்மி (சஞ்சனா நடராஜன்), மாஞ்சா கண்ணன், அறிவிப்பாளர் டைகர் கார்டன் தங்கம், கான்ட்ராக்டர் சந்திரன், பீடி ராயப்பன் என்று எத்தனை விதம் விதமான பாத்திரங்கள்!

மறுபடியும் அதேதான். ஒரு திரைப்படத்தில் நடிகருக்கான பாத்திரத் தேர்வு எத்தனை முக்கியமான அம்சம் என்பதை பா.இரஞ்சித்தின் திரைப்படங்கள் விதம் விதமாக பாடம் எடுக்கின்றன. அதனால்தான் அவைகளை நம்மால் இன்னமும் பசுமையாக நினைவில் வைத்திருக்க முடிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு