Published:Updated:

மணிரத்னம் ஏன் புதுமையாகவே இருக்கிறார்... #HBDManiRatnam

Mani Ratnam
Mani Ratnam

தனக்குக் கிடைக்கும் புகழுக்கும், விமர்சனத்துக்கும் இடையே ஒரு பாதையமைத்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

ஒரு படைப்பாளியை மேன்மைபடுத்துபவை, அவருக்குக் கிடைக்கும் புகழ், அங்கீகாரம். அதே சமயத்தில், அவரைப் பக்குவப்படுத்துபவை, அவர் படைப்புகள் மீது வைக்கப்படும் திறனாய்வுகளும், விமர்சனங்களும்தான். சிலருக்குப் புகழ் மட்டுமே தொடக்கத்திலிருந்து கிடைக்க, பக்குவமும், முதிர்ச்சியும் பெறாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்துகொண்டு திடீரென இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

Mani Ratnam during shoot
Mani Ratnam during shoot

சிலரோ, வெறும் விமர்சனங்களை மட்டும் சந்தித்துக்கொண்டு கடைசிவரை புகழுக்காகவும், மேன்மைக்காகவும் போராடிக்கொண்டிருப்பார்கள். இந்த இருவகையிலும் இல்லாமல் மூன்றாவதாகப் புகழையும், விமர்சனத்தையும் சம அளவில் வாங்கிக் குவிப்பவர்கள் இருப்பார்கள். அவர்களால் கலைத் துறையில் நீண்ட காலம் நிலைத்து நிற்கவும் முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு படைப்பாளி, இயக்குநர் மணிரத்னம்.

`மணி சார்... மணி சார்' என அவர் மீது அதீதப் பற்றுடன் அவரைக் கொண்டாடும் ரசிகர்கள் ஒருபுறமிருக்க, `கலாசாரத்தைச் சீர்குலைக்கிறார்', `சமூகத்தை ஒரு குறிப்பிட்ட சாதிய வட்டத்துக்குள் அடைத்துப் பொதுமைப்படுத்துகிறார்', `செயற்கைத்தனமான பாத்திரப் படைப்புகளைச் செய்கிறார்' என அடுக்கடுக்காகப் பல விமர்சனங்கள் மறுபுறமிருக்கின்றன. ஆனால் அவரோ, இந்தப் புகழுக்கும், விமர்சனத்துக்கும் இடையே ஒரு பாதையமைத்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.

Anjali
Anjali

புகழ், விமர்சனம், ஆதரவு, எதிர்ப்பு, இவை எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு, மணிரத்னத்தின் படைப்புகளையெல்லாம் ஒரு பொதுக்கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தக் கலைஞனால் எப்படி இத்தனை காலத்துக்கு தன்னைத் தானே மீண்டும் மீண்டும் ஒரு வெற்றிப் படைப்பாளியாகவும், தவிர்க்கமுடியாத இயக்குநராகவும் நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, மணிரத்னம் படங்களில் மக்களைப் பெரிதாகக் கவர்வது அவருடைய பாத்திரங்களின் வடிவமும், அதை வைத்து அவர் திரையில் காட்டும் அவர்களின் வெவ்வேறு பரிமாணங்களும்தான். திரைக்கதை அமைப்பில் கேரக்டர் ஆர்க் (Character arc) என்ற சொல்லாடல் ஒன்றுண்டு. கதை தொடங்கும்போது ஒரு பாத்திரத்தைப் பற்றிய விவரங்களைக் காட்சிகளாலும், வசனங்களாலும் உணர்த்துவார்கள். உதாரணத்துக்கு, கதாநாயகன் எப்படிப்பட்டவன்?!

நல்லவனா, முரடனா, இயல்பானவனா, நகைச்சுவை ஆற்றல் உள்ளவனா, பெண்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறான், ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாள்கிறான் என எல்லாவற்றையும் விளக்கும்படி காட்சிகள் அமைந்திருக்கும். அவனுடைய இந்தத் தன்மைகள் படம் முடியும்போது எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன என்பதுதான் கேரக்டர் ஆர்க். இதில், பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வதுதான் மணிரத்னம் தன்னுடைய பெரும்பான்மையான படங்களில் வெளிப்படுத்தும் கலைத் திறன்.

`இருவர்' படத்தின் தொடக்கத்தில் மோகன்லாலுக்கும் (ஆனந்தன்) பிரகாஷ்ராஜுக்கும் (தமிழ்ச்செல்வன்) இடையே இருக்கும் அதே அளவு வேறுபாடுகள், படம் முடியும்போதும் இருக்கும். ஆனால், முற்றிலும் மாறியிருக்கும். தொடக்கத்தில் பணம், புகழைத் தேடும் ஆனந்தன் இறுதியில் பதவியையும், அதிகாரத்தையும் குறிக்கோளாக வைத்திருக்க, தமிழ்ச்செல்வனுக்கோ தமிழர் உரிமை, ஆட்சியமைத்தல் என்பது தொடக்கத்தில் லட்சியமாக இருக்கும்.

Iruvar
Iruvar

ஆனால், கதை நகர நகர தன்னிடமிருந்து அதிகாரத்தைப் பறித்த ஆனந்தனே, தமிழ்ச்செல்வனுக்கு ஒரே குறிக்கோளாகிவிடுவார். படத்தின் ஆரம்பத்தில் ஆனந்தனை மேடையேற்றி, அவருடைய புகழை அரசியலாக்குவதில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கு தமிழ்ச்செல்வன், பிற்பகுதியில் அதே புகழைக் கண்டு இன்னோரு மேடையில் அஞ்சுவதுபோன்ற காட்சிகள் இந்த கேரக்டர் ஆர்க்கை நன்றாக விளக்கும்.

`அலைபாயுதே' ஒரு சாதாரண காதல் கதையைச் சொன்ன படம்தான். ஆர். செல்வராஜும், மணி ரத்னமும் இணைந்து எழுதியது தான். ஆனால், அதில் கார்த்திக் (மாதவன்), ஷக்தி (ஷாலினி) இருவரின் கதாபாத்திர முரண்கள்தான் கதையை நகர்த்தும். முதலில் எந்தப் பொறுப்புமில்லாமல் ஷக்தியைக் காதலிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் கார்த்திக், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்ததும் வேலையே கதி என்றிருப்பான்.

Alaipayuthe
Alaipayuthe

ஷக்திக்கோ, அவன் அவள் மீது கொண்டிருக்கும் காதல் குறைந்துவிட்டதாகவும், வேறு பெண்ணைத் தேடுகிறான் என்றும் கவலை. கதை இறுதிக்கட்டத்தை அடையும்போது, கார்த்திக் தன் தொழிலில் வெற்றியடைகிறான். இந்த நேரத்தில் நிகழும் சாலை விபத்து கார்த்திக்கையும், ஷக்தியையும் தற்காலிகமாகப் பிரித்து, மீண்டும் இணைக்கிறது. இதில், தூண்டுகோலாக இருப்பது அரவிந்த்சாமி - குஷ்பு தம்பதி. அவர்களின் விட்டுக்கொடுத்துச் செல்லும் தன்மையைக் கண்டு காதல் என்றால் என்ன என்பதை உணர்கிறான், கார்த்திக்.

இதே அடித்தளத்தில்தான் அதற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான `ஓ காதல் கண்மணி' படத்தின் இறுதிக் காட்சியையும் வடிவமைத்திருப்பார், மணிரத்னம். பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் தம்பதியைப் பார்த்து காதல் என்றால் என்னவென்பதை உணரும் நொடியில், ஆதியும் (துல்கர் சல்மான்), தாராவும் (நித்யா மேனன்) தங்கள் வாழ்வுக்கான முடிவை எடுப்பார்கள்.

இந்த இரண்டு படங்களுக்கும் இடையே மணிரத்னம் தன்னைக் காலத்துக்கு ஏற்றவாறு எப்படிப் புதுமைபடுத்திக்கொண்டார் என்பதை விளங்கிக்கொள்ளலாம். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அவர்கள் செய்யும் தொழில் (கார்த்திக் ஒரு மென்பொருள் நிறுவனம் தொடங்குவான், ஆதி ஒரு கேம் டெவலப்பராக இருப்பான்), பேச்சு, உடைகள், வாழ்க்கை முறை என எல்லாம் மாறியிருக்கும், மணிரத்னத்தின் கதை சொல்லும் முறையைத் தவிர!.

இதேபோல அவருடைய இரண்டு ஆக்‌ஷன் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார், மணிரத்னம். `நாயகன்', `செக்கச் சிவந்த வானம்' இரண்டுமே ஒரு பெரிய டான் கதைதான். ஆனால், களங்கள் மாறுகின்றன. ஊருக்காக தலைவன் ஆகும் டான் வேலு நாயக்கர் (நாயகன்). அதனால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் அவருடைய பொதுவாழ்க்கையைப் பற்றியே இருக்கும். அதே அளவுக்குப் பெரிய டானாக இருக்கும், சேனாபதி (செக்கச் சிவந்த வானம்). ஆனால், இந்தப் படத்தின் கதை குடும்பத்துக்குள் நடக்கும் வாரிசுப் பிரச்னை. அதனால், படத்தின் காட்சிகளெல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கெடுப்பதாக அமைந்திருக்கும்.

Nayagan
Nayagan

இன்னும் சொல்லப்போனால், சேனாபதி செய்யும் தொழில் என்ன, எப்படி டான் ஆனார் என்பதெல்லாம் படத்தில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்காது, அது தேவையும் இல்லை. ஆனால், இரண்டு படங்களிலுமே கதாபாத்திரங்களின் மன ஓட்டம்தான் கதை நகர்த்திகளாக இருக்கும். 'நாயக'னின் வேலு நாயக்கர் (கமல்ஹாசன்), 'செக்கச் சிவந்த வான'த்தின் ரசூல் இப்ராஹிம் (விஜய் சேதுபதி) இருவரின் எண்ணங்களின் வெளிப்பாடே, இந்த இரண்டு படங்களையும் நகர்த்தும்.

`நாயக'னில் வேலு நாயக்கரை ஒரு காவல் துறை அதிகாரியின் மகன் பழிவாங்கும் எண்ணத்தில் சுட்டுக் கொல்வார். அத்துடன் அந்த டானின் சாம்ராஜ்ஜியமே முடிவடையும். அதேபோல, `செக்கச் சிவந்த வான'த்தில் ஒரு காவல் துறை அதிகாரியே (ரசூல்) தன் தந்தையைப் போல யாரும் ஆகிவிடக் கூடாது என ஒரு டானின் சாம்ராஜ்ஜியத்தையே முடித்துவைப்பான். இரண்டு படங்களிலும் இப்படி முடிவு ஒன்றாக இருந்தாலும், நோக்கம் வெவ்வேறாக இருக்கும்.

Chekka Chivantha Vaanam
Chekka Chivantha Vaanam

தன்னுடைய மற்ற படங்களில் சில விசித்திரமான பாத்திரப் படைப்புகளையும் செய்திருக்கிறார், மணிரத்னம். 'ஆய்த எழுத்து' பாரதிராஜா கேரக்டர், 'குரு' மிதுன் சக்ரவர்த்தி கேரக்டர், 'ராவணன்' விக்ரம் கேரக்டர் உள்ளிட்ட பல கேரக்டர்களை வடிவமைத்த விதங்களே வித்தியாசம்தான். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்து கெட்டவரா, நல்லவரா என்பதை விளக்காமல், அதை வைத்தே கதை சொல்லியிருப்பார்.

அதைப்போல, 'கடல்' படத்தில் ஒரு கடவுளுக்கும், சாத்தானுக்குமான சண்டையை அரவிந்த்சாமி, அர்ஜுன் கேரக்டர்கள் வாயிலாகச் சித்திரித்திருப்பார்.

Aayitha Ezhuthu
Aayitha Ezhuthu

உண்மையில், மணிரத்னத்தின் படங்கள் எல்லாமே இயல்பு, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட ஃபேன்டஸிகளாகத்தான் இருக்கும். அதில் வரும் வசனங்கள், கதை மாந்தர்கள் எல்லாம் நமக்கு அந்நியமானவைதாம். ஏனென்றால், மணிரத்னத்தின் படங்கள் அவற்றுடன் நம்மைத் தொடர்புப்படுத்திக்கொள்ள படைக்கப்படுபவை அல்ல. அவற்றில் தன்மையும், முன்னிலையும் இருக்காது, வெறும் படர்க்கை மட்டும்தான்.

ஒரு மூன்றாவது மனிதனாக இருந்து ரசித்தால், நம்மை அது உருத்தும், நம் மனதை ஒரு பாடுபடுத்தும், சிரிக்க வைக்கும், அழ வைக்கும், மொத்தத்தில் ரசிக்கவைக்கும் அதுதான் மணிரத்னம் படம்.

அடுத்த கட்டுரைக்கு