Election bannerElection banner
Published:Updated:

``தமிழ் சூப்பர் ஹீரோ படங்களில் இல்லாத அந்த விஷயம், `ஹீரோ'வில் இருக்குமா?!’ #Hero

Superhero films in Tamil cinema
Superhero films in Tamil cinema

`அவெஞ்சர்ஸ்' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியைக் காணத் தயாராக இருக்கும் ஊரில் `கந்தசாமி'யும், `முகமூடி'யும் எதிர்பார்த்த வசூலைக் குவிக்காதது என்ன மாதிரியான கட்டமைப்பு என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே.

``வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தபோது, அதன் சில காட்சி அமைப்புகளைத் தமிழர் வாழ்வியல், மற்றும் ஒழுக்க அறங்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினார், கம்பர்." என என் தமிழாசிரியர் கற்றுக்கொடுத்தது ஒவ்வொரு ரீமேக் படம் வெளியாகும்போதும் என் நினைவுக்கு வரும். ஒரு கதையையோ, கருத்தையோ அதன் ஆதிமூலத்திலிருந்து வேற்று மண், அந்த மண் சார்ந்த மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும், அதன் விழுமியங்களையும் சார்ந்து மாற்றவேண்டும் என்பது அடிப்படை கதை சொல்லல் விதி.

Velayudham
Velayudham

ராமாயணம், மகாபாரதம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புராணங்களைக் கேட்டுக் கேட்டுப் பழகிய மண்ணில், ஒரு நூறாண்டுகள் பழைமையான சூப்பர் ஹீரோ கதைகளைச் சொல்லி மக்களைக் கவர்வது அத்தனை எளிதல்ல. இதுவரை தமிழில் வெளியான அத்தனை சூப்பர் ஹீரோ படங்களும் திறனாய்வு வடிவிலும் சரி, வணிகத்திலும் சரி தோல்வியைத் தழுவியதன் மூலம், நமக்கு வெளிப்படையாகத் தெரியவரும் உண்மை இதுவே.

`அவெஞ்சர்ஸ்' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியைக் காணத் தயாராக இருக்கும் ஊரில் `கந்தசாமி'யும், `முகமூடி'யும் எதிர்பார்த்த வசூலைக் குவிக்காதது என்ன மாதிரியான கட்டமைப்பு என்ற ஐயப்பாடு எழுவது இயல்பே. இந்த இடத்தில்தான் வாழ்வியலும், விழுமியங்களும் கதை சொல்லலில் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது.

The Dark Knight Rises
The Dark Knight Rises

கிறிஸ்டோபர் நோலன் `பேட்மேன்' கதாபாத்திரத்தின் கதையை நிகழ்காலச் சமூகக் கட்டமைப்பிற்கும், அதன் சிக்கல்களுக்கும் ஏற்றவாறு வேறுபடுத்தி எடுத்த `டார்க் நைட் டிரைலாஜி'க்குப் பிறகுதான் ஹாலிவுட் அதன் சூப்பர் ஹீரோ படங்களின் வடிவத்தையே மாற்றியமைத்தது. நாயகன், பாதகன் என இருவருக்குமான கொள்கைகள், கருத்தியல்கள், அவற்றினிடையே இருக்கும் முரண்பாடுகள், அதன் மூலம் சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகள்... எனத் திரைக்கதை விதிகளையெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பரிசோதிக்கத் தொடங்கிவிட்டது, ஹாலிவுட்.

`டார்க் நைட்'டின் தாக்கம் தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. மிஷ்கின் இயக்கிய `முகமூடி' முருகதாஸ் இயக்கிய `ஸ்பைடர்' என இரண்டு படங்களும் நோலன் தொடங்கிய கதைசொல்லலின் நீட்சியாகத்தான் இருந்தன. இதில், `முகமூடி' நேரடி சூப்பர் ஹீரோ படமாகவும், `ஸ்பைடர்' கொஞ்சம் விஜிலாண்டே வகைப் படமாகவும் இருந்தது. இதில், `முகமூடி' படத்தின் சூப்பர் ஹீரோ கிட்டத்தட்ட `பேட்மேனை'ப் போன்றே காட்சியளிப்பான். மிஷ்கின் படம் என்பதால், சொல்லவே வேண்டாம். `டார்க் நைட்'டைப் போலவே இரவில் மட்டும் தலைகாட்டும் சூப்பர் ஹீரோவாகத்தான் இப்படத்தின் ஹீரோவும் சித்திரிக்கப்பட்டான்.

முகமூடி
முகமூடி

`முகமூடி' படத்தின் மிகப்பெரிய பலவீனம், வில்லன் கதாபாத்திரம்தான். ஒரு சூப்பர் ஹீரோவின் வில்லனும் சூப்பர் வில்லனாக இருக்கவேண்டும். வில்லன் எவ்வளவு பலமானவனாக இருக்கிறானோ, அப்போதுதான் ஹீரோவின் பலம் அதிகமாகத் தெரியும். அடுத்த காரணம், எப்போதும்போல மிஷ்கின் படத்தில் இருக்கும் வெளிநாட்டுத் தாக்கம். இந்தப் படத்தில் அந்த நெடி கொஞ்சம் அதிகமாகவே வீசியது. `பேட்மேனி'ன் ஆல்டர் ஈகோ புரூஸ் வேனையும், குங்ஃபூ மேதை புரூஸ் லீயையும் கலந்த ஒரு சூப்பர் ஹீரோவாக்கியது படத்தை அந்நியமாக்கிவிட்டது.

இந்தச் சிக்கல் `ஸ்பைடர்' படத்தில் இல்லையென்றாலும், அதன் சிக்கல் வேறுவகையாக இருந்தது. 'டார்க் நைட்'டின் ஜோக்கருக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்து, அதன் காட்சியமைப்புகளைப்போலவே படமாக்கியிருந்தும், இந்தப் படத்தில் பாதகமானது, நாயகன் பாத்திரம். இப்படிப்பட்ட கொடிய வில்லன் ஒருவனை எதிர்க்க, சூப்பர் மேனுக்குப் பதிலாக காமன் மேன் ஒருவனை ஹீரோவாக்கியதே படத்தின் சிக்கல். ஒருவேளை 'ஸ்பைடர்' முழுநீள சூப்பர் ஹீரோ படமாக வந்திருந்தால், வெற்றியடைந்திருக்கலாம்.

Spyder and TDK
Spyder and TDK

சரி, இவையெல்லாம் மேலைநாட்டுத் தாக்கம் கொண்டவை. ஆனால், ஏற்கெனவே தமிழ்ச் சமூகத்தின் அன்றாடப் பிரச்னைகளைத் தட்டிக்கேட்கும் சூப்பர் ஹீரோ படங்களும் வந்திருக்கின்றனவே... என்ற கேள்வி எழலாம். அந்த வகையில், `வேலாயுதம்', `கந்தசாமி' எனத் தமிழ்க் கடவுள் முருகன் பெயரிலேயே இரண்டு சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியிருக்கிறது, தமிழ் சினிமா. இந்தப் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கும் சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

முதலில், `கந்தசாமி' ஒரு சூப்பர் ஹீரோ படம்தானா என்ற கேள்வி இருக்கிறது. ஒரு சூப்பர் ஹீரோ மாறுவேடத்தில் சென்று ஏழைகளின் ஆசையை நிறைவேற்றும் 'ராபின்ஹுட்' வகைப் படம்தான், 'கந்தசாமி'. இதிலும் எக்கச்சக்க வில்லன்கள் இருந்தனர். ஆனாலும், அந்தப் படத்தில் சூப்பர் ஹீரோவின் சாகசத் தருணம் என்று எதையும் சுட்டிக்காட்ட முடியாது. காலம் காலமாக சூப்பர் ஹீரோ படங்களை ஒரு வடிவத்தில் கண்டு ரசித்து, அதை எதிர்பார்த்துச் சென்ற ரசிகர்களுக்கு, இயக்குநர் ஷங்கர் வகை விஜிலாண்டே படத்தின் ஒரு மறுபட்ட வடிவமாக இந்தப் படம் இருந்ததே, தோல்விக்கான காரணம். ஏற்கெனவே விக்ரம் `அந்நியன்' என்ற விஜிலாண்டே படம் நடித்திருந்தது கூடுதல் காரணமாகவும் மாறிவிட்டது.

Kanthasamy
Kanthasamy

இந்த வரிசையில், `வேலாயுதம்' மட்டும் விதிவிலக்கு. அதுவும் சுமாரான வெற்றி என்ற ஒரு சிறிய அளவில் மட்டுமே! இதுவரை தமிழில் சூப்பர் ஹீரோவாக நடித்த ஒரே மாஸ் ஹீரோ, விஜய் மட்டும்தான். என்றாலும் நம்ம ஊரைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் என எல்லா மாஸ் ஹீரோக்களுமே அவர்களுடைய சாதாரண படங்களிலேயே சூப்பர் ஹீரோக்கள் செய்யும் செயல்களைச் செய்துவிடுவார்கள். அதிலும், விஜய் படத்தின் ஹீரோயிஸக் காட்சிகள் அதற்குப் பெயர்போனவை. அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தாவி ரயிலைப் பிடிப்பது, ஆக்வாமேனுக்கு நிகராகக் கடலில் நீச்சலடிப்பது என விஜய் படங்கள் சாதாரணமாகவே சூப்பர் ஹீரோ படங்களைப் போலத்தான் இருக்கும். அதைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, 'வேலாயுதம்' மற்றுமொரு விஜய் படமாகத்தான் தெரிந்ததே தவிர, சூப்பர் ஹீரோ எனச் சொல்லிக்கொள்ளுமளவுக்கான உணர்வைக் கொடுக்கவில்லை.

தற்போது வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' பட முன்னோட்டம் ஒரு நம்பிக்கை அளிக்கிறது. இதிலும், 'பேட்மேனி'ன் தாக்கம் இல்லாமல் இல்லை. என்றாலும், இது எடுத்தாளவிருக்கும் சிக்கல் இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் மயமாக்கப்பட்டுவரும் கல்வி, புதிய கல்விக்கொள்கை மீது பல விமர்சனங்கள், நீட் எதிர்ப்பு போன்ற சூழலில், இப்படிக் கல்வி முறையைக் கேள்வி கேட்கும் சூப்பர் ஹீரோ என்பதே கொஞ்சம் புதிய சிந்தனைதான்.

Hero
Hero

காலம் காலமாக சமுத்திரக்கனி போன்ற ஹீரோக்கள் திரையிலும், சூர்யா போன்ற ஹீரோக்கள் நிஜத்திலும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சூப்பர் ஹீரோவும் கல்வி முறையை எதிர்ப்பது, மக்களால் எளிதில் தொடர்புபடுத்தக்கூடிய திரைக்கதையாகத்தான் இருக்கும். என்றாலும், இதுவரை சொன்ன படங்களிலிருந்த மேலைநாட்டுத் தாக்கம், அந்நியமான கதை சொல்லல் போன்ற காரணிகள் இருந்தால், 'ஹீரோ'வும் மற்றொரு முகமூடி அணிந்த கந்தசாமியாக வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் முதல் சூப்பர் ஹீரோ இந்த 'ஹீரோ' என்ற வரலாற்றை இந்தப் படம் உருவாக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு