Published:Updated:

ரஜினி, கமல் தங்கள் கனவுப்படங்களில் படுதோல்வியைச் சந்தித்தது ஏன்… ரசிகர்களைப் புரிந்துகொள்ளவில்லையா?

ரஜினி - கமல்

நானும் நீயுமா - 16: ராகவேந்திரரைப் போலவே 2002-ல் இன்னொரு 'மகானை' திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்வம் ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த முறை அகப்பட்டவர் மகாஅவதார் பாபாஜி. எஸ்.பி.முத்துராமனைப் போல இந்த முறை சிக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

ரஜினி, கமல் தங்கள் கனவுப்படங்களில் படுதோல்வியைச் சந்தித்தது ஏன்… ரசிகர்களைப் புரிந்துகொள்ளவில்லையா?

நானும் நீயுமா - 16: ராகவேந்திரரைப் போலவே 2002-ல் இன்னொரு 'மகானை' திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்வம் ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த முறை அகப்பட்டவர் மகாஅவதார் பாபாஜி. எஸ்.பி.முத்துராமனைப் போல இந்த முறை சிக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

Published:Updated:
ரஜினி - கமல்
நடிகர்களுக்கு உருவாகும் பிம்பம் அல்லது அவர்களே உருவாக்கிக் கொள்ளும் பிம்பம் என்பது எவ்வாறு அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறதோ, அதைப் போலவே அவர்களின் கனவுகளுக்கும் சமயங்களில் முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. ரஜினி - கமல் காலகட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. சம்பந்தப்பட்டவர்களின் பிம்பங்கள் அவர்களின் கனவுத் திரைப்படங்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்திய துயர சம்பவங்களும் நடந்தன. இதையொட்டி சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ரஜினியின் நூறாவது திரைப்படம் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’. தன்னுடைய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராக ஸ்ரீ ராகவேந்திரரை தீவிரமாக ஏற்றுக் கொண்டவர் ரஜினி. தனக்கு ஏற்படும் மனநெருக்கடிகளின் போது அவரை மனதில் வணங்கி தெளிவு அடைவார். கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார், ராகவேந்திரராக நடித்த திரைப்படம் அப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருந்தது. ராஜ்குமாரை தனது ஆதர்ச நபர்களில் ஒருவராக கருதுபவர் ரஜினி.

ரஜினி நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை நூறை எட்டப் போகும் சமயம் அது. நூறாவது திரைப்படம் மிக முக்கியமானதாகவும் கவனிக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவொரு நடிகருக்கும் இயல்பான கனவுதான். அது ரஜினிக்கும் ஏற்பட்டது. ராகவேந்திரரின் மகிமையை திரைப்படத்தின் மூலம் தெரியப்படுத்தினால் தமிழ்நாட்டில் பலரும் அறிந்து கொள்ள முடியுமே என்கிற யோசனை ரஜினிக்கு ஏற்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ ராகவேந்திரர்

இதே சமயத்தில் ரஜினியை ஹீரோவாக வைத்து தனது 'கவிதாலயா' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்க கே.பாலசந்தர் திட்டமிட்டார். இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்ட ரஜினி, தான் யோசித்து வைத்திருந்த ஆன்மிக திரைப்படத்தைப் பற்றி அவரிடம் தெரிவிக்க பாலசந்தர் தயங்கியிருக்கிறார். ரஜினியின் பிம்பத்திற்கு அது பொருந்துமா என்கிற தயக்கம் அது. மேலும், புராணத் திரைப்படத்தை இயக்கிய அனுபவமும் பாலசந்தருக்கு இல்லை.

"எஸ்.பி.முத்துராமனை வைத்து டைரக்ட் பண்ணிடலாம் சார்" - ரஜினியின் கண்களில் இருந்த ஆர்வமும் பரவசமும் சற்றும் குறையவில்லை. தனது நூறாவது திரைப்படத்தை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டு பெருவாரியாக கொண்டாடுவார்கள் என்று ரஜினி உறுதியாக நம்பினார். எனவே பாலசந்தருக்கு வேறு வழி தோன்றவில்லை. ரஜினியின் ஆர்வத்திற்கு கை கொடுக்க முன்வந்தார்.

எஸ்.பி.முத்துராமனுக்கும் புராணத் திரைப்படத்தை இயக்கிய அனுபவமில்லை. ஆனால், ரஜினி சொல்லி மறுக்க முடியுமா? ஏராளமான தயக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும் இந்தச் சவாலையும் சந்தித்து விடுவது என்று அவர் களத்தில் இறங்கினார். தமிழ்த் திரையில் புராணத் திரைப்படம் என்றால் அதற்கான டிக்ஷனரி ஏ.பி.நாகராஜன்தான். அவர் இயக்கிய 'திருவிளையாடல்' முதற்கொண்டு பல புராணத் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் பட்டையைக் கிளப்பியிருந்தன. எனவே நாகராஜன் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தார் முத்துராமன்.

ஏ.எல்.நாராயணன் வசனம், இளையராஜா இசை என்கிற பலங்களோடு தனது ஆஸ்தான குழு அளித்த நம்பிக்கையுடன் படப்பிடிப்பைத் தொடங்கினார் முத்துராமன். ரஜினியின் உடல்மொழி மற்றும் வசனத்தில் இயல்பாக அமைந்திருந்த வேகத்தை துவக்க நாட்களில் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே ரஜினியை அமர வைத்து '’இது ஒரு மகானைப் பற்றிய படம். எனவே உங்களின் அசைவுகளில் அந்த நிதானம் அவசியம்’' என்று இயக்குநர் அறிவுறுத்த, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ரஜினி. படப்பிடிப்பு நடந்த நாள்களில் அசைவ உணவை ஒட்டுமொத்தமாக தவிர்த்து விட்டு பக்தியுணர்வுடன் இயங்கியிருக்கிறது படக்குழு.

எஸ்.பி.முத்துராமன், ரஜினி
எஸ்.பி.முத்துராமன், ரஜினி

படம் வெளிவந்த பிறகு, ரஜினியின் மாறுதலான நடிப்பு குறித்த பாராட்டு விமர்சனங்கள் வந்தன. தமிழ்நாடு அரசு வரிவிலக்கு வழங்கியது. என்றாலும் இந்தத் திரைப்படத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ரசிகர்களும் பொதுப் பார்வையாளர்களும் தவித்தனர். அதுவரை ஸ்டைலாக ஆடிப்பாடி, சண்டையிட்ட நடிகரை ஒரு சாமியாரின் பாத்திரத்தில் வைத்துப் பார்க்க முடியாமல் நெளிந்தார்கள். விளைவு இந்தத் திரைப்படம் வணிகரீதியான தோல்வியை அடைந்தது.

ஒரு நடிகரின் பிம்பம் அவருக்கு எதிராக நின்ற வேடிக்கையான யதார்த்தம் இது. பெரிய மாளிகையில் தங்கியிருக்கிறோம் என்கிற மனக்கோட்டையில் இருந்தவர்கள், பின்னர் தாங்கள் அப்படியொரு பெரிய சிறையில் அடைபட்டிருக்கிறோம் என்கிற நிதர்சனத்தை அறிந்து கொண்ட விநோதம்.

ராகவேந்திரரைப் போலவே 2002-ல் இன்னொரு 'மகானை' திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்வம் ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த முறை அகப்பட்டவர் மகாஅவதார் பாபாஜி. எஸ்.பி.முத்துராமனைப் போல இந்த முறை சிக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. 'பாட்ஷா' என்கிற மகத்தான வெற்றிப் படத்தை தந்து ரஜினியின் வணிக கிராஃப் அடுத்த கட்டத்திற்கு நகர காரணமாக இருந்தவர். இதுவே தன்னிடம் ஒரு மசாலா கதை தரப்பட்டிருந்தால் பட்டை, லவங்கம் எல்லாம் போட்டு பட்டையைக் கிளப்பியிருப்பார் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால், ரஜினியின் திரைப்படத்தை இயக்கும் அரிய வாய்ப்பை மறுக்க முடியுமா? எனவே ரஜினி சொன்ன 'ஆன்மிக' திரைக்கதையை வைத்துக் கொண்டு இயன்ற அளவிற்கு ஜனரஞ்சகமாக 'பாபா'வை உருவாக்க முயன்றார்.

கவுண்டமணியின் லொள்ளு, ரஹ்மானின் இசை, படையப்பா நீலாம்பரியின் Cameo, மண்ணடி காளிகாம்பாள் கோயில் செட் என்று பல சுவாரஸ்யங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் 'பாபா' திரைப்படத்தைப் பார்கக வந்தவர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள். அது பாபா திரைப்படமாகவும் இல்லாமல் ரஜினியின் திரைப்படமாகவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான் காரணம்.

இத்தனைக்கும் முத்துராமனும் சுரேஷ் கிருஷ்ணாவும் தங்களின் திறமைகளையெல்லாம் கொட்டி சம்பந்தப்பட்ட திரைப்படங்களை சுவாரஸ்யமாகத்தான் உருவாக்க முயன்றிருந்தார்கள். என்றாலும் ரஜினிக்கு இருந்த இமேஜ் காரணமாக இந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியான தோல்வியை சந்தித்தன.

ஒரு திரைப்படத்திற்கு மிகையான பில்டப் தருவது அதற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்பதற்கு கச்சிதமான உதாரணம் 'பாபா'. ஆம்... இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது ஏறத்தாழ அனைத்து தமிழ் பத்திரிகைகளும் இந்தப் படத்தைப் பற்றிய விதம் விதமான யூகங்களை, தகவல்களை, படப்பிடிப்புச் செய்திகளை ஏராளமாக எழுதித் தள்ளின. பாபா மோதிரம், பாபா தொப்பி என்று இன்னொருபுறம் அந்த மகான் வணிக பிராண்டாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.

பாபா
பாபா
இதன் விளைவாக படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பார்வையாளர்களின் ஏமாற்றத்தைச் சந்தித்தது. தனது படத்தின் தோல்வி காரணமாக நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார் ரஜினி. அதுவரை தமிழ் சினிமாவில் நடந்திராத அதிசயம் இது. இப்படியொரு சிறந்த முன்னுதாரணத்திற்கு ரஜினி காரணமாக இருந்தார்.

‘ஸ்ரீ ராகவேந்திரா’, ‘பாபா’ போன்ற ஆன்மிக அடையாளங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ரஜினியின் நோக்கம் உன்னதமானது என்பதில் சந்தேகமில்லை. அதில் தானே நடித்தால் ஏராளமான ரசிகர்களும், பார்வையாளர்களும் வந்து பார்ப்பார்கள் என்கிற அவர் எதிர்பார்ப்பிலும் தவறில்லை. ஆனால், ரஜினிக்கு என்று பிரத்யேகமாக அமைந்திருந்த இமேஜ்தான் இதில் மாபெரும் தடைக்கல்லாக நின்றது.

இதற்குப் பார்வையாளர்களை குறை சொல்வதா அல்லது இந்தp பிம்பம் உருவானதற்கு உறுதுணையாக இருந்த நடிகர்களை குறைசொல்வதா என்பது மிகப் பெரிய கேள்வி. ஒருவேளை இந்தத் திரைப்படங்களை ரஜினி தயாரிப்பதோடு நின்றிருந்து, ஒரு சிறந்த குழுவை வைத்து பிரத்யேக ஆன்மிக வடிவில் உருவாக்கியிருந்தால் சம்பந்தப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்குமோ என்னமோ!

தனது பிரத்யேக பிம்பத்திலிருந்து விலகுவதால் மட்டும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இப்படி தோல்வியடைவதில்லை. சுவாரஸ்யமில்லாத கதை, திரைக்கதையினாலும் கூட இந்த விபத்துகள் நிகழும். ரஜினிக்கும் இது சமயங்களில் நிகழ்ந்திருக்கிறது. 1991-ல் வெளியான 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' முதற்கொண்டு 'லிங்கா', 'கோச்சடையான்' என்று ஒரு பட்டியல் உண்டு.

கமல் - கே.பாலசந்தர்
கமல் - கே.பாலசந்தர்

இந்த நோக்கில் ரஜினியின் பட்டியலாவது மிகச்சிறியது. ஆனால், கமலின் பட்டியல் மிகப் பெரியது. அவர் அடைந்த காயங்களும் விழுப்புண்களும் ஏராளம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அதிர்ஷ்டம் அடித்தாலும் விடலை வயதில் தன்னுடைய வருங்கால வாழ்க்கை எப்படி அமையும் என்கிற அல்லாட்டம் கமலுக்கு நிறைய இருந்தது. ’உருப்படாம போயிடுவானோ' என்று கமலின் குடும்பமும் பரிதவித்தது. நடன இயக்குநர் ஆவதா, சினிமாவிற்கு கதை எழுதலாமா, 'டைரக்ஷன்தான் பெரிய விஷயம் போலிருக்கே. அதைச் செய்யலாமா?’ என்று கமல் பல்வேறு விதங்களில் தத்தளித்துக் கொண்டிருந்தார். கமலின் இந்த தவிப்புகளுக்கு ஆதரவாக உடன் நின்ற தோழர் ஆர்.சி. சக்தி. வயதில் சற்று மூத்தவர் என்றாலும் இருவரும் சகவயது நண்பர்களைப் போலவே திரிந்தார்கள்.

'’டைரக்ஷன் செய்கிறேன்’' என்று சொல்லிக் கொண்டிருந்த கமலைத் தடுத்து நிறுத்தி சரியான பாதைக்கு திருப்பியவர் குருநாதர் கே. பாலசந்தர்தான். '’டைரக்ஷன் எப்போ வேணா பண்ணிக்கலாம். ஆனா இப்பத்தான் இளமை இருக்கு. பார்க்க அழகா இருக்கே. நடிப்பு பாதையை பிடிச்சுக்கோ... இயக்கம் அப்புறம் பார்க்கலாம்'’ என்று குரு சொன்ன வார்த்தையை தேவ சகுனமாக ஏற்றுக் கொண்ட கமல் 'கமர்ஷியல் ஹீரோ' என்கிற வட்டத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு விதம் விதமாக ஆட ஆரம்பித்தார். ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே உலகத்தின் மிகச் சிறந்த சினிமாக்கள் பற்றியும் இயக்குநர்கள் பற்றியும் அவருக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. அவ்வாறான அறிவுஜீவி நண்பர் வட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். வாயைத் திறந்தாலே 'ஃபெலினி கோதார்த்' என்று மிகச் சிறந்த ஐரோப்பிய திரைமேதைகளின் பெயர்கள்தான் கமலிடமிருந்து உதிரும்.

உலகத்தின் உன்னதமான சினிமாக்களையெல்லாம் விடாமல் தேடி தேடிப் பார்த்த கமலுக்கு தமிழ் சினிமாவிலும் அப்படியொரு முயற்சியை நிகழ்த்தி விட முடியாத என்கிற தணியாத தாகமும் ஏக்கமும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்தது. இப்படியாரு ஆர்வத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு 'மரத்தைச் சுற்றி டூயட் பாடும் அபத்தம்' உள்ளிட்டு பல விஷயங்களை செய்து கொண்டிருந்தார். ஆனால் தனக்குப் பிடிக்காத விஷயம் என்றாலும் அதில் ஒருவகையான அர்ப்பணிப்பை தந்து விடுவது கமலின் வழக்கம். இது தொழில் தர்மமும் கூட.

தனது கனவுப் பாதையின் முதல் படிக்கட்டில் கால் வைப்பதற்கு கமல் 99 திரைப்படங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. ஆம்... கமலின் நூறாவது திரைப்படமான 'ராஜபார்வை'யில்தான் தன்னுடைய பிரத்யேக விருப்பத்தின் முதல் வாசலை கமலால் திறக்க முடிந்தது. 'ஹாசன் பிரதர்ஸ்' என்கிற சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் கனவுப்படம் உருவாக ஆரம்பித்தது.

ராஜபார்வை
ராஜபார்வை

ஒளிப்பதிவிற்காக இந்தியிலிருந்து பரூன் முகர்ஜியை அழைத்து வந்தார் கமல். இயக்கத்திற்கு சிங்கீதம் சீனிவாச ராவ். எழுத்திலும் கமலின் பங்களிப்பு இருக்க அனந்து, பாலகுமாரன், சந்தானபாரதி போன்ற உற்ற நண்பர்கள் திரைக்கதையில் துணை நின்றார்கள். போதாதாதிற்கு நூறு வயலின்களை வைத்துக் கொண்டு ஆறாக இசையை அளிப்பதற்கு இளையராஜாவும் தயாராக இருந்தார். எவருடைய படத்திலும் நடிப்பதற்கு அத்தனை எளிதில் சம்மதிக்காத எல்.வி.பிரசாத், கமலின் அன்பான வற்புறுத்தல் காரணமாக காதலுக்கு தூது போகும் குறும்பான 'தாத்தா' வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். கவிதை போன்ற கண்களைக் கொண்ட மாதவியும் நாயகியாகத் தயாராக நின்றார்.

கண் பார்வையற்ற ஓர் இளைஞனின் காதல் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் கொண்ட கதை தயாராகி விட்டாலும் அதற்குப் பொருத்தமான தலைப்பை விதம் விதமாக யோசித்தார் கமல். 'ராஜபார்வை' என்கிற கவித்துவமான தலைப்பை இதற்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன்.

ராஜபார்வை
ராஜபார்வை

அதுவரை தமிழ் சினிமாவில் கண் பார்வையற்ற பாத்திரம் என்றால் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி பார்ப்பார்கள். அல்லது கண்களை மேலே செருகிக் கொள்வார்கள். ஆனால் முதன்முறையாக இதற்கான பிரத்யேக லென்ஸ் அணிந்து சிரமப்பட்டு பழகி ஓர் இயல்பான உடல்மொழியை கமல் கொண்டு வந்திருந்தார்.

இத்தனை உழைப்பையும் சிரமத்தையும் கொட்டி படத்தை உருவாக்கியிருந்தாலும் 'ராஜபார்வை'யை தமிழ் பார்வையாளர்கள் ஓரக்கண்ணால் கூட கவனிக்கவில்லை. அவர்கள் தேடியது 'காதல் இளவரசன்' கமல்ஹாசனை.

ஆக... இமேஜ் என்கிற விஷயம் கமல்ஹாசனுக்கும் தடையாக வந்து நின்றது. என்னவொன்று கமலின் திரைப்படங்கள், காலம் கடந்த பிறகு கொண்டாடப்படும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

இன்னமும் அலசுவோம்.