Published:Updated:

``நான் நடிச்சிருக்கணும்'' என்ற அஜித்... விஜய் படத்தில் அஜித் ஏன்?! #22YearsOfPriyamudan

`Priyamudan' Vijay
`Priyamudan' Vijay

ஒருவேளை விஜய்யின் பெற்றோர் சொன்னது போல இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருந்தால் விஜய்யின் வளர்ச்சிக்கு அது தடையாக இருந்திருக்கக்கூட வாய்ப்புள்ளது.

2010-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும்கூட ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை நேரில் கண்டால், அவர்களிடம் ஆட்டோகிராப் பெறுவதுதான் வழக்கமாக இருந்தது. அதற்குப் பிறகான சோஷியல் மீடியா காலகட்டத்தில் ஆட்டோகிராப் வாங்குவது குறைந்து பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது அதிகமானது.

விஜய் செல்ஃபி
விஜய் செல்ஃபி
Twitter/ActorVijay

1990-களின் இரண்டாம் பாதியில் அதிக ஆட்டோகிராப்களை போட்ட தமிழ் சினிமா பிரபலங்களில், முக்கியமானவராக நடிகர் விஜய்யும் இருந்திருப்பார். 1995-க்குப் பின் பல ஹிட் படங்களைக் கொடுத்ததால், தமிழ் ரசிகர்கள் மனதில் நாயகனாகவும் அவர்களின் பெர்சனல் டைரிகளில் ஆட்டோகிராப்களாகவும் நிறைந்திருந்தார் விஜய்.

பிரியமுடன் விஜய்!
1998-லிருந்து நடிகர் விஜய் ஆங்கிலத்தில் `வித் லவ் விஜய்' என்றும் தமிழில் `பிரியமுடன் விஜய்' என்றும்தான் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவார்.
Priyamudan Vijay - Autograph
Priyamudan Vijay - Autograph
Twitter/Archana Kalpathi

தனக்கென நடிப்பில் பல ஸ்டைல்களை உருவாக்கிக்கொண்ட விஜய், ஆட்டோகிராப் போடுவதற்காக உருவாக்கிக்கொண்ட ஸ்டைல்தான் இந்த `பிரியமுடன் விஜய்' என்பது. விஜய் கதாநாயகனாக நடித்த 19-வது படம் `ப்ரியமுடன்'. இந்தப் படத்தின் பெயரைத்தான் தனது கையெழுத்துக்கு முன்பு இணைத்துக் கொண்டார் விஜய். விஜயின் கையெழுத்துக்கு மட்டுமல்ல அவரின் மனதிற்கு நெருக்கமான படமாகவும் `ப்ரியமுடன்' அமைந்தது.

`ப்ரியமுடன்' வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.

`பூவே உனக்காக' படத்தின் மூலம் தமிழகக் குடும்பங்களைக் கவர்ந்திருந்தார் விஜய். அதன்பின் வெளியான `காதலுக்கு மரியாதை' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, அவர்களின் குடும்பங்களில் ஒருவராகவும் பார்க்கப்பட்டார். இந்த இரண்டு படங்களும், விஜய்க்குப் பெண் ரசிகர்களையும் அதிகம் பெற்றுத் தந்தன. அப்படியிருந்த காலகட்டத்தில், `ப்ரியமுடன்' படத்தின் மூலம் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்.

Poove Unakaga
Poove Unakaga

இந்தக் கதையைக் கேட்டதும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் அம்மா ஷோபாவும் `நெகட்டிவ் கதாபாத்திரமும் நெகட்டிவ் க்ளைமாக்ஸும் உள்ள படத்தை இந்தச் சமயத்தில் ஏற்று நடிப்பது உன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அதனால் இந்தப் படத்தில் இப்போது நடிக்க வேண்டாம்' என்று விஜய்யிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். ஆனால், பிடிவாதமாக இருந்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்.

ப்ரியமுடன்
ப்ரியமுடன்
Twitter

இப்போதுள்ள தலைமுறையினர், ஹீரோ நெகட்டிவ் கதாபாத்திரம் கொண்டவனாக இருந்தாலும் அவனைக் கொண்டாட மறுப்பதில்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அப்படியிருந்தும் விஜய் இந்தப் படத்தை ஏற்று நடித்தார்.

̀ப்ரியமுடன்' படத்துக்கு முன்பாக 7 கம்பெனிகளுக்கு படம் செய்து தருவதாக விஜய்யும் எஸ்.ஏ.சியும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், விஜய்யோ அதற்கெல்லாம் முன்பாக இந்தப் படத்தில் நடித்துவிட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் கம்பெனிக்கு எஸ்.ஏ.சி பண்ண வேண்டியிருந்த படத்தைத் தள்ளி வைத்துவிட்டு இதைப் பண்ணலாம் என்று யோசனை சொன்னார் விஜய். விஜய்யின் பிடிவாதத்தால் இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டார் எஸ்.ஏ.சி. சில டெக்‌னீஷியன்களை தன் படத்திற்துக்காக புக் செய்திருந்தார் எஸ்.ஏ.சி. அதே டெக்னீஷியன்களோடு `ப்ரியமுடன்' படம் தொடங்கப்பட்டது.

ப்ரியமுடன்
ப்ரியமுடன்
Twitter/@M_gajan

விஜய், இந்தப் படத்தில் நடிக்க ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடித்தார் என்ற கேள்வி பலரிடமும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை சில நேர்காணல்களில் சொல்லியிருந்தார் இந்தப் படத்தின் இயக்குநர் வின்சென்ட் செல்வா.

1997-98 காலகட்டத்தில் புதுமுக இயக்குநர்களைத் தேடித் தேடிக் கதை கேட்டுக்கொண்டிருந்தார் விஜய். அப்படித்தான் விஜய்யின் கண்களில் சிக்கினார் வின்சென்ட் செல்வா. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான வின்சென்ட் செல்வா, அங்கு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தார். `காதல் கோட்டை' படம் வருவதற்கு முன்பாகவே பார்த்துக்கொள்ளாமலே காதல் என்கிற கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட அந்தக் குறும்படத்தின் பெயர் மண்ணில் இந்தக் காதல்'. 20 நிமிடங்கள் கொண்ட அந்தக் குறும்படத்துக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வின்சென்ட் செல்வாவின் அந்தக் குறும்படம் குறித்து ஜூனியர் விகடனில்கூட ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

"விஜய் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் எத்தனைபேர் தெரியுமா?!" - #HBDVijay
ப்ரியமுடன் விஜய்
ப்ரியமுடன் விஜய்
Twittet/M_Gajan

முதன்முதலாக விஜய்யைச் சந்தித்தபோது அந்தக் குறும்படத்தை விஜய்க்குப் போட்டுக்காட்டியிருக்கிறார் செல்வா. அந்தக் குறும்படத்தின் புதுமையான கான்செப்ட்டில் ஈர்க்கப்பட்ட விஜய், செல்வாவிடம் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.

`ப்ரியமுடன்' படம், இயக்குநர் வின்சென்ட் செல்வாவுக்கு மட்டும் முதல் படமல்ல... `கோலி சோடா' இயக்குநர் விஜய் மில்டனுக்கும் ஒளிப்பதிவாளராக இதுதான் முதல் படம்.

`எனக்கு அவ்வளவு நல்லா கதை சொல்லவராது' என்று சொல்லிவிட்டு `ப்ரியமுடன்' கதையை விஜய்யிடம் முழுவதுமாகச் சொல்லியிருக்கிறார் செல்வா. அவர் சொன்ன ஆன்ட்டி ஹீரோ கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனது. `இந்தப் படத்தை நிச்சயம் நான்தான் பண்ணுவேன்' என்று உறுதியளித்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் நிச்சயம் நான்தான் நடிப்பேன் என்று விஜய் சொன்னதற்கு கதையைத் தவிர மற்றொரு காரணம் இருப்பதாகப் பின்வருமாறு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் செல்வா.

விஜய் - ஷாருக்கான்
விஜய் - ஷாருக்கான்
Twitter/@sekartweets
விஜய்க்கு ஷாருக்கானை ரொம்ப பிடிக்கும். அவர் வெரைட்டியான கதாபாத்திரங்கள் பண்ற மாதிரி விஜய்க்கு பண்ணணும்னு ஆசை. அதனால்தான் இந்தக் கதையைப் பிடிவாதம் பிடித்துப் பண்ணினார்.
வின்சென்ட் செல்வா

`ப்ரியமுடன்' படத்தின் க்ளைமாக்ஸில் விஜய் நடித்த வசந்த் கதாபாத்திரம் இறந்துபோவதாக இருக்கும். முதலில் இந்த க்ளைமாக்ஸை, `மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை மாற்றியே ஆக வேண்டும்' என்று எஸ்.ஏ.சி சொல்லியிருக்கிறார். ஆனால், விஜய்யோ `நிச்சயமா இந்தக் க்ளைமாக்ஸ்தான் படத்துல இருக்கணும்' என்று சொல்லிவிட்டாராம்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் நெகட்டிவ் க்ளைமாக்ஸிலும் இமேஜ் பார்க்காமல் நடித்ததால் விஜய்க்கு இந்தப் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

விஜய்யின் காதலியாக நடிகை கெளசல்யா நடித்திருப்பார். முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மீனாவிடம்தான் பேசப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக கௌசல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கெனவே `நேருக்கு நேர்' படத்தின் மூலம் ஹிட் அடித்த ஜோடி என்பதால் ரசிகர்களிடம் ஈசியாக கனெக்ட் ஆகிவிட்டது விஜய் - கௌசல்யா இணை!

விஜய் - கெளசல்யா
விஜய் - கெளசல்யா
Twitter/YokeshBabu

இந்தப் படத்தில், தன் காதலைப் பற்றியோ தன் காதலியைப் பற்றியோ தவறாக யார் சொன்னாலும், கோபப்படும் பொசசிவ்னஸ் கொண்ட பணக்கார இளைஞராக நடித்திப்பார் விஜய். படம் வெளியானபோது, இந்தப் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி உட்பட 3 முக்கிய காட்சிகளும் அந்தக் காட்சிகளில் விஜய்யின் நடிப்பும் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுப் பெற்றன.

இன்றைக்கும் `ப்ரியமுடன்' படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால், அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுக் கொண்டாட, விஜய் ரசிகர்கள் தவறுவதேயில்லை.

அந்த மூன்று முக்கிய காட்சிகளைப் பார்ப்பதற்கு முன்பு `ப்ரியமுடன்' படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.

வசந்த், வசந்த குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வசந்த்தாக விஜய்யும், வசந்த குமாராக சுஜித் சாகர் என்பவரும் நடித்திருந்தனர். கதாநாயகி ப்ரியாவாக கௌசல்யா நடித்திருந்தார். கௌசல்யாவைப் பார்த்தவுடன் காதல் கொண்டுவிடுவார் விஜய். அதன்பின் கௌசல்யாவுக்கு விபத்து ஏற்பட அவருக்கு ரத்தம் கொடுத்துக் காப்பாற்றுவார் சுஜித் சாகர். கௌசல்யாவுக்குத் தனக்கு ரத்தம் கொடுத்தவரின் பெயர் வசந்த் என்பது மட்டுமே தெரிந்திருக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு விஜய், கௌசல்யாவிடம் `நான்தான் வசந்த்' என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். அதன்பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கௌசல்யாவுக்கு உண்மைகள் எல்லாம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சில கொலைகளையும் செய்வார் விஜய். செய்த குற்றங்களிலிருந்து தப்பித்து கௌசல்யாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

priyamudan
priyamudan

மேலே சொன்ன முக்கியமான மூன்று காட்சிகளில், முதல் காட்சி...

கௌசல்யாவின் அப்பா கதாபாத்திரத்திடம் (ஜெய் கணேஷ்) `உண்மையைச் சொல்லி எங்கள் காதலைப் பிரித்துவிடாதீர்கள்' என்று கெஞ்சுவார் விஜய். அந்தக் காட்சியில் விஜய்யின் காதல் குறித்து தப்பாகப் பேசிவிடுவார் கௌசல்யாவின் அப்பா. இதனால் ஆத்திரம் கொண்ட விஜய் அவரிடம் கெஞ்சுவதை விடுத்து கோபமாகப் பேசும்படி காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். அதன்பின் மீண்டும் தன் காதலுக்காக அவரின் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவார் விஜய். `நான் உயிரோட இருக்குற வரைக்கும் உன் நிழலக்கூட என் பொண்ணு மேல பட விட மாட்டேன்' என்று கௌசல்யாவின் அப்பா கதாபாத்திரம் சொல்ல, உடனே அவரின் கால்களைப் பிடித்து மாடியிலிருந்து கவிழ்த்துவிடுவார் விஜய்.

Priyamudan
Priyamudan
Twitter

அடுத்த காட்சியில் கேஷுவலாக கௌசல்யாவைச் சந்தித்து `அங்கிள் எங்க?' என்று கேட்டுக்கொண்டே வீடு முழுக்க கௌசல்யாவின் அப்பாவைத் தேடுவார் விஜய். `அங்கிள்காக ஒரு சூட் வாங்கிட்டு வந்திருக்கேன், இது அவருக்கு செட் ஆகும்ல' என்று அப்படியே அப்பாவியாக மாறி அசத்தியிருப்பார் விஜய்.

இரண்டாவது காட்சி. உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட தன் நண்பன் சுஜித் சாகரிடம், தன் காதலைப் பிரித்துவிடாதே என்று மலை உச்சியில் நின்று கெஞ்சிக்கொண்டிருப்பார் விஜய். அப்போது தன் காதலியையும் காதலையும் அசிங்கப்படுத்தும்படி பேசிய நண்பனை ஆத்திரத்தில் அடித்துவிடுவார் விஜய். சுஜித் சாகர் அங்கிருந்த பள்ளத்தாக்கை நோக்கி கீழே விழுந்து தொங்கிக் கொண்டிருப்பார். விஜய், அடுத்த நிமிடமே சாந்தமாக மாறி நண்பனைக் காப்பாற்றச் சென்றுவிடுவார். விஜய் எவ்வளவோ முயற்சி செய்தும் நண்பனைக் காப்பாற்ற முடியாத வண்ணம் அந்தக் காட்சியை எடுத்திருந்தார் இயக்குநர். நண்பனைக் காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி அங்கேயே உட்கார்ந்து அழும் இடத்திலும் விஜய்யின் நடிப்பு நேர்த்தியாக இருக்கும்.

priyamudan
priyamudan
Twitter/@M_gajan

மேற்கண்ட இந்தக் காட்சியை முதலில் வேறு விதமாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.

அந்தக் காட்சியில், தன்னுடைய காதலை தப்பாகப் பேசிய நண்பனைக் கோபப்பட்டு அடித்துவிடுகிறார் விஜய். அடித்த வேகத்தில் நண்பர் பள்ளத்தாக்கில் விழுந்து தொங்கிக் கொண்டிருப்பார். உடனே அவரைக் காப்பாற்றுவதற்காக கை கொடுப்பார் விஜய். அப்போது அந்த இடத்துக்கு ஹீரோயின் கௌசல்யா வந்துவிடுவார். அவர் வருவது விஜய்க்கு தெரிந்ததும், தன் காதலை இழந்துவிடக் கூடாது என்பதற்காக நண்பனின் கையை விட்டுவிடுவார் விஜய். கௌசல்யா அருகே வந்ததும் அங்கு எதுவுமே நடக்காததைப் போல அவரிடம் கேஷூவலாக சிரித்துப் பேசுவார் விஜய். பின்னர் வீட்டுக்குச் சென்றதும் நண்பனை நினைத்து வேதனைப்பட்டு அழுவார்.

இப்படித்தான் முதலில் அந்தக் காட்சியை எழுதியிருக்கிறார் செல்வா. ஆனால், கதை விவாதத்தின்போது எல்லோரும் இந்தக் காட்சிக்கு எதிர்ப்புகள் தெரிவிக்க இந்தக் காட்சியை மாற்றியிருக்கிறார் செல்வா.

இப்போது மூன்றாவது காட்சியின் கதைக்கு வருவோம்...

படம் முழுக்க ஒரு பெண்ணுக்காகக் கொலை உட்படப் பல குற்றங்கள் செய்து வந்த வசந்த் கதாபாத்திரம், இறுதிக் காட்சியில் `ப்ரியா... உன்கூட வாழத்தான் முடியல உன் மடியிலாவது செத்துப் போறனே... ப்ளீஸ் ப்ரியா' என்று உருக்கமாகச் சொல்லிக்கொண்டே இறந்துவிடுவதாகக் காட்சிப் படுத்தியிருந்தனர். அந்தக் கதாபாத்திரம் செய்தது தவறு என்றாலும் அவன் வைத்திருந்த காதல் உண்மை என்பதை உணர்ந்து ப்ரியா கதாபாத்திரம் வசந்த் இறந்த பிறகு அவனை முத்தமிடுவதாகப் படத்தை முடித்திருந்தனர்.

priyamudan climax
priyamudan climax
Twitter/@M_gajan

வசந்த் கதாபாத்திரம் எக்கச்சக்க குற்றங்களைச் செய்திருந்தாலும், இறுதிக் காட்சியில் விஜயின் நடிப்பும் அவர் பேசும் வசனங்களும் மக்களிடையே அந்தக் கதாபாத்திரத்தின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அந்த அனுதாபம் காரணமாக விஜய்யின் ரசிகர்கள் எண்ணிக்கை கூடியதே தவிர விஜய்யின் வளர்ச்சிக்கு க்ளைமாக்ஸ் தடையாக இல்லை.

ஒருவேளை விஜய்யின் பெற்றோர் சொன்னதுபோல இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருந்தால் விஜய்யின் வளர்ச்சிக்கு அது தடையாக இருந்திருக்கக்கூட வாய்ப்புள்ளது.

மாறுபட்ட கதாபாத்திரத்திரங்களில்கூட விஜய்யால் நன்றாக நடிக்க முடியும் என்பதற்கு `ப்ரியமுடன்' படத்தில் இடம்பெற்ற இந்த மூன்று காட்சிகளும் சாட்சிகளாக அமைந்தன.

நெகட்டிவ் க்ளைமேக்ஸ்!
இதுவரை விஜய் சிங்கிள் ஆக்‌ஷனில் நடித்த படங்களில், க்ளைமாக்ஸில் விஜய்யின் கதாபாத்திரம் இறந்து போவதாக இரண்டு படங்களில் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. ஒன்று `சந்திரலேகா'. மற்றொன்று `ப்ரியமுடன்'.`புதிய கீதை' படத்தில், முதலில் விஜய்யின் சாரதி கதாபாத்திரம் இறந்து விடுவதாகத்தான் க்ளைமாக்ஸ் இருந்தது. பின்பு அந்த க்ளைமாக்ஸை பாசிட்டிவாக மாற்றியமைத்தது படக்குழு.

இந்தப் படம் காதலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டதாக இருந்தாலும், இது ரொமான்ஸ் என்ற ஜானரைத் தாண்டி ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராகவும் இருந்தது. ஹீரோ கதாபாத்திரத்தைக் கிட்டத்தட்ட ஒரு Phsycopath ஆகவே உருவாக்கியிருந்தார் இயக்குநர். ஒருபக்கம் வசந்த் கதாபாத்திரம், தான் செய்திருந்த தவறுகளையெல்லாம் எப்படி மறைக்கிறார் என்ற காட்சிகளிலும் மறுபக்கம் வசந்த்தான் கொலைகளைச் செய்துள்ளார் என்று விசாரணை நடத்திக் கண்டுபிடிக்கும் அதிகாரி கதாபாத்திரத்தில் நாசர் வரும் காட்சிகளிலும் விறுவிறுப்பைக கூட்டி ஒரு த்ரில்லர் படமாக மாற்றியிருப்பார் இயக்குநர் செல்வா.

`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 2
ப்ரியமுடன்
ப்ரியமுடன்
twitter
விஜய்யும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து நடித்த 3 படங்களுள் ஒன்று `ப்ரியமுடன்'. மற்ற இரண்டு படங்கள் `தேவா', `சுக்ரன்'. `ப்ரியமுடன்' படத்தில் நாசருடன் வரும் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்.ஏ.சி.

`ப்ரியமுடன்', அந்தக் காலகட்டத்தில் வெளியான படங்களிலிருந்து சற்றே மாறுபட்டிருந்தாலும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த காரணத்தால் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் அஜித் தன்னைப் பாராட்டியதாகக் கூறியிருந்தார் வின்சென்ட் செல்வா.

`ப்ரியமுடன்' ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு ஒருநாள் அஜித் சாரை மீட் பண்ணேன். அப்போ அவர், என்னைப் பாராட்டினார். `நான் இந்தப் படம் பண்ணியிருக்கணும்' அப்படினு என்கிட்ட அஜித் சார் சொன்னார். அந்த டைம்லதான் நெகட்டிவ் ரோல் உள்ள `வாலி' படத்தில் அவர் கமிட் ஆகியிருந்தார்.
வின்சென்ட் செல்வா

படத்தைப் போலவே `தேனிசைத் தென்றல்' தேவாவின் இசையில் பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. தேவாவுக்குக் கைதேர்ந்த கானா இசையில் அமைந்த `வொயிட்டு லகான் கோழி' பாடலும் காதல் மெட்டுகளான `பாரதிக்கு கண்ணம்மா', `பூஜா வா', `மெளரியா மெளரியா' பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் `பாரதிக்கு கண்ணம்மா' பாடலும் `பூஜா வா' பாடலும் இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டை ஆக்கிரமித்துள்ளன.

`மெளரியா மெளரியா' பாடலை விஜய் பாடினார் என்பதால் அந்தப் பாடலுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

`ப்ரியமுடன்' 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகண்ட படமாக இருந்தாலும் இன்றும் இந்தப் படத்தின் கதைக்கான மவுசு குறையவேயில்லை. ஆம்! கடந்த ஆண்டுகூட இந்தப் படத்தின் சிங்கள மொழி ரீமேக் வெளியானது. `ப்ரியமுடன்' இதுவரை தெலுங்கு, கன்னடா, இந்தி, சிங்களம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Priyamudan Vijay
Priyamudan Vijay
Vikatan Infographics
``சீக்கிரமே விஜய் சாரை இயக்குவேன். அந்தப் படம்..?'' - இயக்குநர் சுசீந்திரன்

விஜய்க்கு மட்டுமல்ல விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கும் `ப்ரியமுடன்' ஒரு மறக்க முடியாத படம்தான்! அதனால்தான் 22 ஆண்டுகளுக்குப் பின்னும் ட்விட்டரில் `ப்ரியமுடன்' படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய்யின் `ப்ரியமுடன்' படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சியை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு