Published:Updated:

``விஜய் நம்பர் 1 ஆக இருக்க அவர் கடைப்பிடிக்கும் அந்த மூன்று விஷயங்கள்?!'' - `மாஸ்டர்' பிரிட்டோ

விஜய்யின் கனவு, விஜய் கடைப்பிடிக்கும் மூன்று விஷயங்கள், ஜேசன் சஞ்சய் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ.

''மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆனந்த விகடனுக்கு ஸ்பெஷல் பேட்டியளித்திருந்தார்.15-07-2020 இதழில் வெளியாகியிருந்த பேட்டியின் தொடர்ச்சி இங்கே!

''லாஜிஸ்டிக்ஸ் தொடங்கி கல்வி நிலையங்கள் வரை அத்தனையையும் வெற்றிகரமாக நடத்திவருகிறீர்கள். உங்களுக்கான ரோல் மாடல் யார்?''

''என் அம்மாதான் எனக்கு ரோல் மாடல். அவங்க ஸ்கூல் டீச்சரா வேலைப் பார்த்தப்போ ரொம்ப சின்சியரா இருப்பாங்க. எக்ஸாம் பேப்பர் திருத்தும்போது, 'ரொம்ப கவனமா இருக்கணும்பா. என் கவனக்குறைவால எந்த ஒரு மாணவரும் ஃபெயில் ஆகிடக்கூடாது’னு சொல்லுவாங்க. எல்லா விஷயங்களிலும் ரொம்ப சரியா இருக்கணும்னு நினைப்பாங்க. என் அம்மாவோட இந்த குணங்களைப் பார்த்துத்தான் நானும் வளர்ந்தேன். ரிட்டயர்டு ஆனப்பிறகு குழந்தைகளுக்காக ஒரு கிண்டர் கார்டன் ஸ்கூல் நடத்தணும்னு நினைச்சாங்க. ஆனா, அது நடக்காமப் போயிடுச்சு. அதனால, என் அம்மா அவங்ககிட்ட படிச்ச மாணவர்களுக்கு எந்த மாதிரியான ஒரு குவாலிட்டியான படிப்பைக் கொடுத்தாங்களோ, அதையே நானும் கொடுக்கணும்னு ஆசைப்பட்டுதான் ஸ்கூல் ஆரம்பிச்சேன். 32 பேரோட ஆரம்பிச்ச இந்த ஸ்கூல்ல இப்ப 3000 பேர் படிக்கிறாங்க. லாஜிஸ்டிக்ஸ்ல எனக்கு இருந்த அனுபவங்களை வெச்சு, நானே சிலபஸ் ரெடி பண்ணி, லாஜிஸ்டிக்ஸ் காலேஜையும் ஆரம்பிச்சேன்.''

Xavier Britto
Xavier Britto

''உங்களைப்போல் முதல் தலைமுறை தொழில்முனைவோராக வருபவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?''

''இப்போ இருக்குற இளம் தொழில்முனைவோருக்கு முதலில் பொறுமை வேணும். பிசினஸ் ஆரம்பிச்சதும் லாபம் பார்க்கணும்னு நினைக்கக்கூடாது. பிசினஸ் அப்படிக் கிடையாது. அதுமட்டுமில்லாம பக்காவான திட்டமிடுதல் வேணும். பிசினஸில் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல திட்டமிடல் இருக்கணும். மிக முக்கியமா முதல்தலைமுறை தொழில் முனைவோருக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். ஈகோ இருக்கவேக்கூடாது. என்னோட பிசினஸின் தொடக்க காலத்தில் ஒரு சின்ன பார்சலுக்காக 80 கிலோமீட்டர் வர சொல்லுவாங்க, நான் பைக்கிலேயே போவேன். மீட்டிங்குக்கு வரச்சொல்லி, ரெண்டு மணி நேரம் காத்திருக்க வெச்சுட்டு, ’நாளைக்கு வா’னு திருப்பி அனுப்பிடுவாங்க. இதெல்லாம் சகிச்சுட்டுத்தான் பிசினிஸில் வளரணும்.

பிசினஸில் படிப்படியா மேல ஏறி திடீர்னு ஒரு சறுக்கல் வந்தால், தரையில் விழுந்திடக்கூடாது. நாம இருக்கிற படியில் இருந்து அடுத்தப்படியிலோ, அதுக்கடுத்தப் படியிலோ விழுற மாதிரிதான் நம்ம திட்டமிடுதல் இருக்கணும். அப்போதான், அடியும் குறைவா இருக்கும்; சீக்கிரம் எழுந்து நடந்து இலக்கை அடைய முடியும். இலக்கை அடையணும்கிறதுல உறுதியா இருக்கணும். இப்ப, அரசாங்கம் நிறைய ஹெல்ப் பண்றாங்க. குறிப்பா மைக்ரோ, ஸ்மால், மீடியம் இண்டஸ்ட்ரீஸ்க்கு நிறைய உதவிகள் பண்றாங்க. அதையெல்லாம் பயன்படுத்திக்கிட்டு சரியான தொழில்ல இறங்கினா நிச்சயம் ஜெயிக்கலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''நடிகர் விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்துக்கு அடுத்த அவரின் மூன்று படங்களை நீங்கதான் தயாரிச்சிருக்கீங்க. தொடர்ந்து அவர் படங்களைத் தயாரிப்பதற்கான நம்பிக்கை எப்படி வந்தது?''

''விஜய் சினிமால ஹீரோவாக அறிமுகமாகுறதுக்கு முன்னாடி, அதாவது 'நாளைய தீர்ப்பு'க்கு முன்னாடி சந்திரசேகர் அங்கிள், ஷோபா அக்கா, விஜய் அப்புறம் நான் என் மனைவின்னு 5 பேர் மட்டும் ஐரோப்பாவுக்கு ஒரு டூர் போயிருந்தோம். 21 நாள் ட்ரிப் அது. அந்த ட்ரிப்லதான் விஜய்யோட ரொம்ப க்ளோஸா பேச நிறைய டைம் கிடைச்சது. அடுத்து அவர் என்ன பண்ணணும்னு நினைக்கிறார், அவர் ஆசை என்னனுல்லாம் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டார். அங்கதான் விஜய்யோட உண்மையான குவாலிட்டியைப் புரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப அமைதியான கேரக்டர். அதேசமயம் அலட்டிக்காதவர். சந்திரசேகர் அங்கிள் ரொம்ப கடுமையான உழைப்பாளி. எப்பவும் சுறுசுறுப்பா ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டே இருப்பார். அதேப்போலத்தான் விஜய்யும். கடுமையான உழைப்பாளி. அப்போதில் இருந்து இப்பவரைக்கும் அவர் உழைப்பால மட்டுமே உயர்ந்து வந்துட்டு இருக்கார்.''

விஜய்
விஜய்

''நிகழ்ச்சிகள்ல பார்க்கும்போது விஜய் எப்பவும் அமைதியாவே இருக்காரே... வீட்ல எப்படி?''

''அவருக்குப் பிடிச்சவங்களோட பயங்கர ஜாலியா இருப்பார். என் பொண்ணு ஸ்னேகா, பையன் மிச்சேலோடவும் பேச உட்கார்ந்தார்னா அவ்ளோ ஜோக்ஸ் க்ராக் பண்ணுவார். என்னோட மகளை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, ஸ்னேகா பிறந்த உடனே சந்திரசேகர் வீட்டுக்குக் கூட்டிப்போயிட்டாங்க. ஒரு வருஷம் வரைக்கும் அவ அங்கதான் வளர்ந்தா. ஷோபா அக்கா அவ்ளோ கேர்ஃபுல்லா பார்த்துக்கிட்டாங்க. அப்போ, விஜய்தான் குழந்தையைக் கையில தூக்கிவெச்சிட்டே இருப்பார். அதனாலதான் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை எடுக்கும்போது ஸ்னேகாவை செட்டுக்கே வந்து வாழ்த்திட்டுப்போனார்.''

''விஜய்யின் ஆரம்ப காலங்களில் இருந்து கூட இருக்கீங்க... அவரோட வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?''

'' விஜய் எப்பவுமே மூணு விஷயங்களை சொல்லுவார், பர்சனலா அந்த விஷயங்களை அவர் ஃபாலோ பண்ணுவார். முதல் விஷயம், அப்பா, அம்மாவுக்கான முக்கியத்துவத்தை, மரியாதையை எப்பவும் கொடுத்துட்டே இருப்பார். இப்பவும் அடையார்ல இருக்குற சந்திரசேகர் வீட்டுக்கு அடிக்கடி போய் பார்த்துட்டுவருவார். அவர் இல்லாத நேரங்கள்ல சங்கீதாவை அனுப்பிவெச்சி அவங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பண்ணிட்டு வரச் சொல்வார். அடுத்தது எப்பவுமே பாசிட்டிவா, நம்பிக்கையா இருப்பார். நம்பிக்கையில்லாத விஜய்யை எப்பவுமே பார்க்க முடியாது. அதேமாதிரி சமூகத்துக்கு தன்னால முடிஞ்ச நல்ல விஷயங்களைப் பண்ணணும்னு தொடர்ந்து பண்ணிட்டே இருப்பார். இந்த மூன்று விஷயங்களைத்தான் எல்லோரும் ஃபாலோ பண்ணணும்னு எப்பவும் சொல்லிட்டே இருப்பார். இந்த மூணு விஷயங்களை அவர் ஃபாலோ பண்றதாலாதான் அவர் ஃபீல்டுல நம்பர் -1 இடத்துல இருக்கார்.''

Vijay
Vijay

''கனடாவில் இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு கொரோனா என்றெல்லாம் தகவல் பரவியதே?''

''இதில் எல்லாம் எந்த உண்மையும் இல்லை. ஜேசன் சஞ்சய் கனடாவில் படித்துக்கொண்டிருக்கிறார். இங்கே விஜய்யின் வீடும் சரி, கனடாவில் சஞ்சய் தங்கியிருக்கும் வீடும் சரி, சரியான பாதுகாப்புகளோடு இருக்கிறது. கடந்த வாரம்கூட சஞ்சய்யுடன் பேசினோம். வதந்திகளையெல்லாம் நம்பாதீங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு