தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி... பொங்கலுக்கு `மாஸ்டர்' ரிலீஸாகுமா?!
மத்திய அரசு, மருத்துவர்கள், நீதிமன்றம் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வர, இப்போது மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதனால், மீண்டும் 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் ரிலீஸாகுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
விஜய் நடிப்பில் தியேட்டர்களில் பொங்கலுக்கு ரிலீஸாகயிருக்கும் 'மாஸ்டர்' படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல். தீபாவளிக்கு 50 சதவிகித இருக்கைகளோடு தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது, 100 சதவிகித இருக்கைகள் அல்லது குறைந்தபட்சம் 75 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே 'மாஸ்டர்' படத்தை ரிலீஸ் செய்யமுடியும். அப்போதுதான் படத்துக்கு செய்த செலவுகளை சரிகட்ட முடியும் எனக் காத்திருந்தது 'மாஸ்டர்' டீம்.

டிசம்பர் இறுதியில் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகள் குறித்து விஜய்யும் பேசினார். இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 4-ம் தேதி தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், மத்திய அரசு, மருத்துவர்கள், நீதிமன்றம் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வர, இப்போது மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதனால், மீண்டும் 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் ரிலீஸாகுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக 'மாஸ்டர்' தயாரிப்பு டீமில் விசாரித்தோம். "50 சதவிகிதம் அல்லது 100 சதவிகிதம் என எதற்கு அனுமதி கிடைத்தாலும் 'மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என முன்னரே முடிவெடுத்துவிட்டோம். அதனால், `மாஸ்டர்' படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும். 45 நாட்களுக்குப்பிறகு அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸ் ஆகும்" என்றார்கள்.