Published:Updated:

விஜய் சேதுபதி படத்தில் சச்சின் கேமியோ? - முரளிதரன் பயோபிக் அப்டேட்ஸ்

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதுதான் இப்போதைய டிரெண்டு. அதுவும் விளையாட்டு வீரர்களின் பயோபிக்கிற்கு ஏகபோக வரவேற்பு இருக்கிறது. மேரி கோம், தோனி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களின் பயோபிக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அந்தப் படத்தை இயக்குநர் ஶ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து நடிகர் ராணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட முரளிதரன், 1992 முதல் 2011-ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியவர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். அதனைக் கொண்டாடும் விதமாக, படத்திற்கு '800' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு விஜய் சேதுபதிக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறார் முரளிதரன் என்ற செய்திகளும் வந்தன.

முத்தையா முரளிதரன் - சச்சின் டெண்டுல்கர்
முத்தையா முரளிதரன் - சச்சின் டெண்டுல்கர்

இந்தப் படத்தில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் 'சங்கத்தமிழன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'துக்ளக்' உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது.