சினிமா
Published:Updated:

வில்ஸ்மித் விட்ட அறை! - ஆஸ்கர் அதிர்ச்சி

வில்ஸ்மித்
பிரீமியம் ஸ்டோரி
News
வில்ஸ்மித்

அமெரிக்காவில் தன் சினிமாக்கள் ஓடினால் மட்டும் உலகின் மிகப்பெரிய நடிகர் ஆக முடியாது என்பதை உணர்ந்துகொண்டார் வில்ஸ்மித்.

முதன்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங் ரிச்சர்டு படத்துக்காக வென்றிருக்கிறார் ஸ்மித். இதற்கு முன்பு அலி, பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ் போன்ற படங்களுக்காக ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் ஸ்மித்தின் பெயர் இருந்திருந்தாலும், இறுதியில் அவர் கைகளை எட்டவில்லை. ஆஸ்கர் வாங்கியதைவிட வில்ஸ்மித் அதிகம் பேசப்பட்டதற்குக் காரணம், அவர் விட்ட அறை.

வீனஸ் ~ செரினா டென்னிஸ் சகோதரிகளின் தந்தை ரிச்சர்டின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது கிங் ரிச்சர்டு. விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வரும் ஒரு தந்தை, தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், வசதி வாய்ப்புகளும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று, ஒவ்வொரு டென்னிஸ் பயிற்சியாளரிடமும் சலிக்காமல் படியேறி வாய்ப்பு கேட்கும் கதை அது. கிங் ரிச்சர்டு திரைப்படத்தில் வரும் பயிற்சியாளர்கள், மீடியாக்கள் எல்லோரும் ரிச்சர்டிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் “எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கிறீகள்? ஒருவேளை உங்கள் மகள்கள் சோபிக்கைவில்லை என்றால் என்ன செய்வது?” என்பது. ரிச்சர்டு சொல்வது ஒன்றே ஒன்றுதான். “இல்லை நான் எல்லாவற்றையும் திட்டமிட்டு விட்டேன்.”

வில்ஸ்மித் விட்ட அறை! - ஆஸ்கர் அதிர்ச்சி

ரிச்சர்டு தன் வாழ்க்கையில் இரு மகள்களைப் பெற்றெடுத்ததில் இருந்து, அவர்களை உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனைகள் ஆக்கியது வரை எல்லாமே அவரின் திட்டப்படிதான் நடந்தது. உண்மையில், வில் ஸ்மித் தன் வாழ்க்கையில் 27வது வயதில் ‘பேட் பாய்ஸ்’ நடித்ததிலிருந்து 50 வயதைக் கடந்து ‘கிங் ரிச்சர்டு’ நடித்தது வரை எல்லாமே அவரின் திட்டமிடல்தான்.

அமெரிக்காவில் தன் சினிமாக்கள் ஓடினால் மட்டும் உலகின் மிகப்பெரிய நடிகர் ஆக முடியாது என்பதை உணர்ந்துகொண்டார் வில்ஸ்மித். உலகத்தைச் சுற்றிவர வேண்டும்; நீட்டப்படும் எல்லாக் கைகளையும் குலுக்க வேண்டும்; முத்தமிட வேண்டும்; கையெழுத்திட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்.தன்னுடைய வருங்காலத்துக்கான முதலீடாக சினிமாக்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஸ்டாண்ட் அப் காமெடியன், பாடகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட வில் ஸ்மித், அனைத்து ரசிகர்களிடமும் தன்னைக் கொண்டு சேர்க்க இசை நிகழ்ச்சிகளையும் சேர்த்து நடத்தினார்.

வில்ஸ்மித் விட்ட அறை! - ஆஸ்கர் அதிர்ச்சி

இவை எல்லாவற்றையும்விட வில்ஸ்மித் பேசுபொருளாகியிருப்பது, ஆஸ்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளரை அறைந்த சம்பவத்தில்தான். சிறந்த டாக்குமென்டரிக்கான விருதை அறிவித்துக்கொண்டிருந்த தொகுப்பாளர், காமெடி நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து, “GI JANE 2” என நக்கலடித்தார். GI JANE படத்தில் டெமி மூர் தலையை மெஷின் வைத்து மழித்துக்கொள்ளும் காட்சியிருக்கும். ஜடா தன் தலைமுடியை மிகவும் சிறியதாக வைத்திருப்பதால், GI JANE இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என நக்கலடித்தார் ராக். அலோபீசியா என்னும் நோயினால் தன் தலைமுடியை இழந்துவரும் ஜடா சிலகாலமாக இப்படியான ஹேர்ஸ்டைலில்தான் வெளியே வருகிறார். கிறிஸ் ராக் நக்கலடித்ததும், கேமரா வில் ஸ்மித் பக்கம் திரும்பியது. ஆரம்பத்தில் வில் ஸ்மித்தும் அந்த நக்கலுக்குச் சிரித்தார். சிரிப்பலை அதிகமாக, அதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக, “That was a nice one!” என்றார் கிறிஸ் ராக்.

வில்ஸ்மித் விட்ட அறை! - ஆஸ்கர் அதிர்ச்சி

அதை ஜடாவால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சட்டென மேடை நோக்கி நடந்து சென்ற வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை அறைந்தார். மீண்டும் தன் இருக்கைக்கு வந்த வில் ஸ்மித், “என் மனைவி பற்றி எதுவும் பேசாதே’’ என்றார்.

கிறிஸ் ராக் சமாளித்தவாறு, “இதுவொரு GI JANE பட ஜோக்தானே’’ என்றார். உலகின் பல படைப்பாளிகள் வில் ஸ்மித் பக்கமும், ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் கிறிஸ் ராக் பக்கமும் பிரிந்து நின்று வாதிட்டு வருகிறார்கள்.

வில்ஸ்மித் விட்ட அறை! - ஆஸ்கர் அதிர்ச்சி

வில் ஸ்மித் தன் சுயசரிதையில், “நான் ஒரு பிளாக்பஸ்டர் நடிகனாக இருக்கலாம். ஆனால் நான் ஒரு கோழை. என் அப்பா என் அம்மாவை அடிக்கும்போது, அம்மா கீழே விழுந்து ரத்தம் சிந்தியிருக்கிறார். ஆனால், நான் ஒரு கையாளாகாதவனாக அங்கு நின்றிருக்கிறேன். என் அம்மாவுக்காக என் இளம் பிராயத்தில் ஒரு நாளும் நான் நின்றதில்லை” என்பார்.

ஆனால் இப்போது வில் ஸ்மித் இந்த ஆஸ்கர் மேடையில் தன் மனைவிக்காக நின்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, உடல் கேலிக்கு எதிராக உரத்த குரலையும் பதிவு செய்திருக்கிறார்.