Published:Updated:

``இந்த முறையாவது தப்பாமல் பாயுமா `எனை நோக்கி பாயும் தோட்டா'?!"

மூன்று வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ரிலீஸுக்கு ரெடி.

'எனை நோக்கி பாயும் தோட்டா'!
'எனை நோக்கி பாயும் தோட்டா'!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஒன்றாக என்டர்டெயின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த படம், `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். தர்புகா சிவா படத்துக்கு இசையமைக்கிறார். ஜோமோன் டீ ஜான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

enai nikki paayum thotta
enai nikki paayum thotta

அதேபோல, `மறுவார்த்தை பேசாதே', `விசிறி' உள்ளிட்ட படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன. 2016-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்படத்தின் ரீலிஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் ரசிகர்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மேல் இருந்த கடன்கள் குறித்து ஃபைனான்ஸியர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்துக் கடன்களையும் திரும்பப் பெறும் வழிமுறைகளைப் பேசி முடிவெடுத்ததால், `எனை நோக்கி பாயும் தோட்டா' வரும் 26-ம் தேதி படம் ரிலீஸாகும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த முறையாவது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என விசாரிக்கும்போது, கடன் பிரச்னைகள் தீர்ந்ததாகவும் ஆனால் கௌதம் மேனனின் முந்தைய படமான `அச்சம் என்பது மடமையடா' படத்தின் நஷ்டங்களுக்கான பேச்சுவார்த்தை முடிவடைந்தால்தான், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகும் எனச் சொல்லப்படுகிறது. அதனால்தான், இந்த முறை படக்குழு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒவ்வொரு முறையும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்போது புதுப் பிரச்னைகள் வருவதால், இம்முறை என்ன பிரச்னை வருகிறது என்று பார்க்கவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்காக தனுஷ் ரசிகர்கள் வெயிட்டிங்!