Published:Updated:

செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்கலாம்... ஆனால், விஜய்யின் `மாஸ்டர்' ரிலீஸாகுமா?!

விஜய்
விஜய்

மோடியின் அன்லாக் 3.0 அறிவிப்புக்காகக் காத்திருக்கிறது திரைத்துறை. ஆகஸ்ட் 1 முதலான அன்லாக் 3.0-வில் தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படும் எனத்தெரிகிறது.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தியேட்டர் திறப்பு என்பது செப்டம்பருக்கு மேல்தான் இருக்கும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

``செப்டம்பரில் தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்கள் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றவகையில் சினிமா தியேட்டர் அரங்குகளை மாற்றி அமைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. இந்த நியூ நார்மல் நடைமுறையின்படி இனி தியேட்டர்களில் பிரின்டட் டிக்கெட்டுகள் இருக்காது. எல்லாமே ஆன்லைன் டிக்கெட்டுகள்தான். அரங்குக்குள் நுழையும்போதும் தியேட்டர் ஊழியரிடம் போனில் இருந்து டிக்கெட்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே நுழையலாம்.

பார்வையாளர்கள் மாஸ்க் இல்லாமல் திரையரங்குக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாஸ்க் இல்லாதவர்களுக்கு திரையரங்க வாசலிலேயே மாஸ்குகள் விற்பனை செய்யப்படும். தியேட்டருக்கு உள்ளே நுழையும்போது டெம்ப்ரேச்சர் செக் செய்யப்படும். 99 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 37.3 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடலின் வெப்பநிலை இருந்தால் தியேட்டருக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படும். கூட்டத்தை தடுக்க அரை மணி நேரத்துக்கு முன்பாகவே பார்வையாளர்கள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் கூடுமானவரை பைகள் கொண்டுவருவதைத் தவிர்க்க வலியுறுத்தப்படுவர்.

உணவுகளும் ஆப்கள் மூலமே ஆர்டர் செய்யப்பட்டு, ஆன்லைன் பில்லிங் மூலமே வழங்கப்படும். இன்டர்வெல்லின்போது ஒரே நேரத்தில் எல்லோரும் வாஷ் ரூமுக்குள் நுழையாத வண்ணம் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிறுத்தப்பட்டு அனுமதிக்கப்படுவர். தியேட்டர் ஊழியர்கள் எந்நேரமும் மாஸ்க்குகளை அணிந்தே இருப்பார்கள். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் தியேட்டர் அரங்குகள் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்படும்.

கணவன்- மனைவி, ஒரே குடும்பத்தினர், நண்பர்கள் என குழுவாக வருவோர் அருகருகே உட்கார அனுமதிக்கப்படுவர். ஆனால், அவர்களின் இருபக்கத்திலும் உள்ள இருக்கைகள் காலியாக விடப்படும்'' என்றார் சென்னையின் மிக முக்கியமான மல்ட்டிபிளெக்ஸ் உரிமையாளர்.

Vijay, Surya, Dhanush
Vijay, Surya, Dhanush

ஆனால், பாதுகாப்பு விதிமுறைகள் எல்லாம் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஓரளவுக்கு கடைப்பிடிக்கப்படலாம். எல்லா தியேட்டர்களிலுமே, எல்லா நகரங்களிலுமே இந்த வசதிகள் செய்யப்படுமா என்பது சந்தேகம்தான். அதேபோல் தியேட்டர்கள் திறந்தால் இப்போது பெரிய படங்கள் ரிலீஸாகுமா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. `மாஸ்டர்', `சூரரைப் போற்று' என இரண்டு படங்களையுமே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என விஜய், சூர்யா ஆகிய இரண்டு நடிகர்களுமே சொல்லிவிட்டார்களாம். இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட அவர்களின் சொந்த தயாரிப்பு என்பதால் ரிலீஸுக்கு எந்த அவசரமும் காட்ட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், நாளை தியேட்டரில் இவர்களின் படங்கள் ரிலீஸாகி, படம் பார்க்கவந்தவர்களுக்கு கொரோனா அல்லது வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் தங்கள் பெயர்போட்டுதான் செய்திகள் மீடியாக்களில் அடிபடும் என்பதால் ரிஸ்க் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் `டாக்டர்' படத்தை கிருஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.

ஷூட்டிங்கைப் பொறுத்தவரை இந்த லாக்டெளனிலேயே சீரியல் ஷூட்டிங்கைப் போலவே 60 பேருடன் சினிமா படப்பிடிப்பை சில இயக்குநர்கள் நடத்திவருவதாக செய்திகள் கசிகின்றன. வீட்டுக்குள் படம்பிடிக்கப்படும் காட்சிகள், இண்டோரில் எடுக்கப்படும் பாடல் காட்சிகளின் ஷூட்டிங் நடந்துவருவதாகத் தெரிகிறது. ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முக்கிய நடிகர்கள் பலருமே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிறகுதான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால், பெரிய படங்களின் ஷூட்டிங்குகள் எதுவும் டிசம்பருக்கு முன்பாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள்.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

டிவி மீடியாவைப் பொறுத்தவரை ஷூட்டிங்குகள் தொடங்கி, இப்போது புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டன. ரியாலிட்டி ஷோக்களையும், விவாத நிகழ்ச்சிகளையும் குறைந்த பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைக்கொண்டு டிவி சேனல்கள் நடத்தத் தொடங்கிவிட்டன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் செப்டம்பரில் தொடங்க இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு