Published:Updated:

"விஜயகாந்த் சொல்லித்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தார் பிரசாந்த்!" - 'வின்னர்' ராமச்சந்திரன்

தாட்சாயணி
வடிவேலு
வடிவேலு

தமிழ் சினிமா எனும் ஒரு அழகிய பெருநதியில் தான் சிக்கிய சுழல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தையும் பற்றி பகிர்ந்துகொள்கிறார் ‘வின்னர்’ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ராமச்சந்திரன்.

“ ‘வின்னர்’ படத்தில் வடிவேலுவின் காமெடி வசனங்கள் எல்லோமே கல்வெட்டுப் பதிவுகள் மாதிரி ஆகிடுச்சு. அந்தப் படத்தின் காமெடிகளை இப்போதும் எல்லோரும் டிவி-யிலேயும் யூடியூப்லேயும் பார்த்து ரசிக்கிறாங்க. ஆனா, நான் தயாரிச்ச அந்த ஒரே படம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு. என் வாழ்க்கையை ‘வின்னருக்கு முன், வின்னருக்குப் பின்’னு ரெண்டாப் பிரிக்கலாம். அந்தப் படத்துக்காக நான் இழந்தது அதிகம். அதேசமயம், அந்தப் படத்தை நான் தயாரிச்சேன்ங்கிறதுல என்னைக்கும் எனக்குப் பெருமை. அதனாலதான் என் பெயருக்கு முன்னாடி ‘வின்னர்’ சேர்த்துக்கிட்டேன்” -

வின்னர் ராமச்சந்திரன்
வின்னர் ராமச்சந்திரன்

"எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?"

என் சொந்த ஊர், நாகர்கோயில். ஊர்ல பிசினஸ் பண்ணிக்கிட்டுருந்தேன். நல்ல வருமானம், சொத்து இருந்துச்சு. அப்போதான் எனக்கு சினிமா தயாரிக்க ஆர்வம் வந்தது. நண்பர் ஒருவர் மூலமா சினிமா தொடர்புகளை வளர்த்துக்கிட்டேன். சென்னைக்கு வந்து முதல்ல மாதவன், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்க முயற்சி பண்ணேன், கிடைக்கல. அந்த நிலைமையில தேசிய விருது பெற்ற ஒரு இயக்குநரின் இயக்கத்துல பிரசாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் பண்ணேன். அட்வான்ஸ் வாங்கிப் படத்தை கமிட் பண்ண பிறகு, பிரசாந்த் அந்த டைரக்டரை மாற்றச் சொல்லிட்டார். எனக்கும் அப்போ வேற வழி தெரியல. அதுக்கப்புறம் வந்தவர்தான், சுந்தர்.சி. இப்படி ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம்.

வின்னர் வடிவேலு
வின்னர் வடிவேலு

‘வின்னர்’ படத்தின் காட்சிகள், வசனங்கள் எல்லாமே இன்னைக்கும் மைல்ஸ்டோனா இருக்கு. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு அப்போவே யூகிச்சிங்களா?

‘வின்னர்’ படத்தோட கதாசிரியர் பூபதி பாண்டியன். அவர்தான் பின்னாளில் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ போன்ற படங்களை இயக்கினார். அவர் அப்போ சுந்தர்.சி-யின் உதவியாளர். அவர்தான் எங்கிட்ட ‘வின்னர்’ கதையைச் சொன்னார். படத்துல பார்த்த ‘கைப்புள்ள’ கேரக்டரை நடிச்சே காட்டினார். விழுந்து விழுந்து சிரிச்சுதான் கதையைக் கேட்டு முடிச்சேன். அப்போவே தெரியும், இந்தப் படத்தின் காமெடி வேற லெவல்ல இருக்கும்னு!

"இந்தப் படம் வணிகரீதியான வெற்றிப்படம்தான்னு திரைத்துறையினர் சொல்றாங்களே, உங்களுக்கு நஷ்டம் வந்தது எப்படி?"

"மத்தவங்க என்ன சொல்றது... நானே சொல்றேன். அந்தப்படம் வணிகரீதியான வெற்றிப்படம்தான். படத்தை வாங்குன விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரங்க எல்லோருக்குமே நல்ல லாபம். எனக்கு மட்டும்தான் நஷ்டம். அதுக்குக் காரணம், பிரசாந்த். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தன் சம்பளத்துல முக்கால்வாசியை வாங்கிக்கிட்ட பிரசாந்த், அதுக்கப்புறம் அந்தப் படத்துல சரியா ஆர்வம் காட்டல. ஷூட்டிங்கிற்கு சரியா வரமாட்டார். வேற வேற படங்கள்ல நடிக்கப்போயிடுவார். அப்போ தெலுங்குல பிஸியா இருந்த ஆர்த்தி அகர்வாலைத்தான் ஹீரோயினா கமிட் பண்ணனும்னு ஒத்தக் கால்ல நின்னார். ஹீரோயினுக்கு நான் ஒதுக்கியிருந்த பட்ஜெட்டைவிடப் பல மடங்கு அதிகமா கொடுத்து அந்தப் பொண்ணை நடிக்க வெச்சென். ஆனா, அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல, பிரசாந்தே 'அந்தப் பொண்ணு வேணாம்; வேற ஹீரோயினைப்போடுங்க'னு அடம் பிடிச்சார். அதுக்கப்புறம் கமிட் பண்ணதுதான், கிரண். அந்தவகையில எனக்குப் பல லட்சங்கள் நஷ்டமாச்சு."

"பிரசாந்த் இப்படியெல்லாம் பண்ண என்ன காரணம்?"

"படத்துல அவரைவிட ‘கைப்புள்ள’ கேரக்டர்ல நடிக்கிற வடிவேலுக்குத்தான் அதிக ஸ்கோப் இருக்குனு அவர் நினைச்சுட்டார். அதனால, அந்தப் படத்தை அவரு திட்டமிட்ட காலத்துக்குள்ள எடுத்து ரிலீஸ் பண்ணவிடல. ஆரம்பத்துல படத்தோட மொத்த பட்ஜெட்ல 70% பணத்தை என் சொந்தக் காசைப் போட்டுதான் ஆரம்பிச்சேன். பிரசாந்த் பண்ண குளறுபடிகளால பட்ஜெட் எகிறிடுச்சு. வெளியே வட்டிக்கு வாங்குனேன். ஒருநாள் ஷூட்டிங்கை நடத்தி முடிக்கப் படாதபாடு பட்டேன். இடையில சிலர் இதுதான் சாக்குனு, படத்தோட வியாபார உரிமைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டாங்க. எனக்கும் அப்போ வேற வழி தெரியல. என்னை வழிநடத்தவும் ஆள் இல்லை."

"அப்போவே பிரசாந்த் மீது சங்கத்தில் புகார் பண்ணியிருக்கலாமே?"

"அப்போ நடிகர் சங்கத் தலைவரா இருந்த கேப்டன்கிட்ட இந்தப் பிரச்னையைக் கொண்டுபோனேன். ஊர்லயிருந்து படம் பண்ணனும்னு ஆர்வமா கிளம்பிவந்து பாவம் பிரச்னையில மாட்டிக்கிட்டானேன்னு என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு, ரொம்ப அக்கறையா உதவிகள் பண்ணார், விஜயகாந்த். சொல்லப்போனா, அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் கேப்டன் சொல்லி சொல்லித்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தார், பிரசாந்த். படம் ரிலீஸானப்போ தயாரிப்பாளர் சங்கம்தான் தலையிட்டு பிரச்னைகளைத் தீர்த்து வெச்சது."

"அந்த நஷ்டம் எந்தவகையில உங்க சொந்த வாழ்க்கையைப் பாதிச்சது?"

" ‘வின்னர்’ படத்தால நான் இழந்தது ஏராளம். எங்க அப்பா, அம்மா காலத்துல இருந்து சேர்த்துவெச்சிருந்த சொத்துக்களெல்லாம் போச்சு. கடன் அதிகமாகிடுச்சு. ஊருக்குப்போயும் ஒண்ணும் பண்ண முடியாத நிலை. அதனால, குடும்பத்தோடு சென்னைக்கு வந்து செட்டில் ஆகிட்டோம். என் பசங்க ஆசைப்பட்ட மாதிரி படிக்கவைக்க முடியல. சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சுக்கிட்டு சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். என் பசங்க படிப்பு செலவுக்காக அப்பப்போ தயாரிப்பாளர்கள் சங்கமும், இன்னும் சில தயாரிப்பாளர் நண்பர்களும்தான் உதவி பண்றாங்க. அந்த உதவிகளையெல்லாம் என்னைக்குமே என்னால மறக்க முடியாது. வீட்டுலேயும் என்னைப் புரிஞ்சு நடந்துக்குவாங்க."

"ஒரு தயாரிப்பாளரா இருந்து, நடிகரா மாறுன தருணம் எது, அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?"

"சினிமாதான் இனிமே பொழப்புன்னு ஆகிப்போச்சு. ஒரு டெக்னீசியனா இருந்திருந்தா, வேற வேற படங்கள்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம். அதுக்கும் வாய்ப்பு இல்லாம போச்சு. தொடர்ந்து சினிமாவுல இருக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, நடிப்புதான் ஒரே தீர்வா தெரிஞ்சுது. விதவிதமா போட்டோக்கள் எடுத்துக்கிட்டு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்குனேன். முதன்முதலா ‘அரும்புமீசை குறும்புபார்வை’ படத்துல ஒரு முக்கியமான ரோல் கிடைச்சது. அப்புறம் சின்னச் சின்ன கேரக்டர்ஸ் நிறைய பண்ணிட்டேன். இதுவரை எந்த யூனிட்லேயும் நான் ஒரு புரொடியூசர், அதுக்கேற்ற மரியாதையைக் கொடுங்கனு கேட்டதில்லை. என்னைப் பத்தி தெரிஞ்சவங்க என்னை மரியாதையா நடத்துவாங்க. தெரியாதவங்க, ஒரு மாதிரிதான் நடத்துவாங்க. எத்தனையோ புரொடக்ஷன் பாய்ஸ் நான் உட்கார்ந்திருக்கும்போது என்னை எழுப்பி, அந்தச் சேரை வேற ஆள்களுக்குப் போட்டிருக்காங்க. அதையெல்லாம் பார்த்தா சினிமாவுல இருக்க முடியாது. இதுவரை 140 படங்கள்ல நடிச்சுட்டேன். சமீபத்துல வந்த ‘தடம்’ ஒரு நல்ல அடையாளத்தைத் தந்திருக்கு. இந்த 140 படங்கள் மூலமாதான் நான் சினிமாவை முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ எனக்கு படத் தயாரிப்புல நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு. இதெல்லாம் நடிகர் ஆனதாலதான்னு நினைச்சுக்குவேன்."

" ‘வின்னர்’ படத்துக்குப் பிறகு வடிவேலு, சுந்தர்.சி ரெண்டுபேருமே வேற ஒரு உயரத்தைத் தொட்டுட்டாங்க. அவங்களை அதுக்கப்புறம் சந்திச்சீங்களா, என்ன பேசுனாங்க?"

"வடிவேலு சார், சுந்தர்.சி சார் ரெண்டுபேரையும் அடிக்கடி பார்ப்பேன், பேசுவேன். ஆனா, உதவின்னு போய் ஒருநாளும் நின்னதில்லை. சுந்தர்.சி சார் ரெண்டு, மூணு படத்துல வாய்ப்பு கொடுத்திருக்கார். வடிவேலு சார் ஒரு சூழ்நிலையில, ‘வின்னர் 2’ பண்ணலாம்னு சொன்னார். சுந்தர்.சி சார்கிட்டேயும் கேட்டிருக்கேன். இது நடந்தா சந்தோஷம், பார்க்கலாம்."

"ஒரு தயாரிப்பாளரா, புதுசா வர்ற தயாரிப்பாளர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?"

"சரியான திட்டமிடல் வேணும். இன்னைக்கு சின்னப் படங்களுக்கு பெருசா எந்த பிசினஸும் இல்லை. படம் ஓடி சம்பாதிச்சாதான் உண்டு. அப்படியிருக்கும்போது, ஒரு படத்தை எடுத்து புரமோஷன் பண்ணி, ரிலீஸ் பண்றவரைக்கும் உங்ககிட்ட போதுமான பணம் இருக்கணும். இருக்கிறதை வெச்சு பூஜை போட்டுட்டு, மீதியைக் கடன் வாங்கிக்கலாம்னு நினைச்சா, சிக்கலாகிடும். ஏன்னா, இப்போ அப்படியெல்லாம் ஈஸியா கடன் கிடைக்கிறதில்லை. பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி செலவு பண்ணுங்க. 2 கோடிதான் ஒரு படத்தோட மதிப்புன்னா, ஆபிஸ் நிர்வாகத்துக்கே 50 லட்சம் செலவு பண்ணாதீங்க. சரியான கதையைத் தேர்ந்தெடுத்து, கரெக்டா பிளான் பண்ணி, சீக்கிரமா ரிலீஸ் பண்ணா... அள்ளிக்கொடுக்குறதுக்கு சினிமா மாதிரி வேற ஒரு தொழில் இல்லை. கடந்தகால அனுபவங்களையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு, நானும் சீக்கிரமா தயாரிப்புல இறங்குவேன். கண்டிப்பா ஒரு வெற்றிப் படத்தைக் கொடுப்பேன். இந்த முறை மிஸ் ஆகாது."

அடுத்த கட்டுரைக்கு