Published:Updated:

விஜய், சூர்யா, தனுஷ், சூரி... யார் படத்தை முதலில் இயக்குகிறார் வெற்றிமாறன்? #VikatanExclusive

Director Vetrimaaran, Dhanush
Director Vetrimaaran, Dhanush

சூரியைவைத்து வெற்றிமாறன் இயக்க இருந்த படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே கொரோனா வந்து மொத்த பிளானையும் மாற்றியமைக்க, இப்போது எந்தப் படம் முதலில் என்கிற குழப்பங்கள் எழுந்திருக்கின்றன.

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'வாடிவாசல்' படத்தின் போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். போஸ்டர் வெளியானதில் இருந்தே வெற்றிமாறன் எந்தப் படத்தை முதலில் இயக்கப்போகிறார் என்கிற கேள்வியுடன், தனுஷுடன் இணைய இருக்கிறார் வெற்றிமாறன் என்கிற செய்தியும் பரப்பப்பட்டு, தனுஷ் படத்துக்கு அடுத்துதான் 'வாடிவாசல்' படம் என்று சிலர் சொல்ல... உண்மை என்ன என விசாரித்தோம்!

கடந்த ஆண்டு இறுதியில் கலைப்புலி தாணு தயாரிப்பில், சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் உறுதிசெய்யப்பட்டது. இந்தப் படத்தின் டைட்டிலை 2020, ஜனவரி 11-ம் தேதி நடைபெற்ற ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில் 'வாடிவாசல்' என அறிவித்தார் இயக்குநர் வெற்றிமாறன். சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தை இயக்குகிறேன் என விழா மேடையில் சொன்னார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'வாடிவாசல்' 70 பக்கங்கள் கொண்ட குறுநாவல். இரு இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வது, அவர்கள் கலந்துகொள்வதற்கான பின்னணி என்ன என்பது பற்றிய நாவல்தான் இது. 1959-ல் வெளியான இந்நாவலை வெற்றிமாறனின் ஆசான் பாலுமகேந்திராவும் இயக்க விருப்பம் கொண்டிருந்தார். 2010-ல் ஆனந்த விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் இதுபற்றி பேசியிருந்தார் இயக்குநர் பாலு மகேந்திரா.

இந்நிலையில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்கு முன்பாக மார்ச்சில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்க இருந்த படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே கொரோனா வந்து மொத்த பிளானையும் மாற்றியமைக்க, இப்போது எந்தப் படம் முதலில் என்கிற குழப்பங்கள் எழுந்திருக்கின்றன.

வாடிவாசல்
வாடிவாசல்

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் இயக்கித் தருவதாக கடந்த ஆண்டே ஒப்புக்கொண்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதில் ஒரு படம்தான் சூரி நடிப்பில் ஆரம்பிக்கப்படுவதாக இருந்த படம். இதற்கிடையே நடிகர் தனுஷுக்கும் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு படம் செய்துத்தருவதாக கமிட்மென்ட் இருக்கிறது. இதைத்தான் எல்லோரும் கலந்துகட்டி அடுத்து தனுஷ் படம், அதற்கடுத்துதான் 'வாடிவாசல்' எனக் குழப்புகிறார்கள் என்கிறார்கள்.

லாக்டெளன் முடிந்து சினிமா ஷூட்டிங்குக்கான அனுமதி கிடைத்ததும் சூரி நடிக்கும் படத்தைத்தான் தொடங்கயிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தை முடித்த பிறகுதான் 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங் தொடங்கும். 'வாடிவாசல்' முடிந்ததும் நடிகர் விஜய் எப்போது அழைத்தாலும் அந்தப் புராஜெக்ட்டுக்குப் போய்விடுவேன் என்று சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். ஆனால், ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட்டுக்காக வெற்றிமாறன் இயக்க இருக்கும் இரண்டாவது படம் தனுஷுக்காக இல்லை. வேறு நடிகர்கள்தான் இதில் நடிப்பார்கள் என்கிறார்கள். இந்த புராஜெக்ட் 2021-க்கு மேல்தான் தொடங்கும் என்கிறார்கள்.

Vetrimaaran
Vetrimaaran
``சூர்யாவோடு `கமல் - காதம்பரி' செம காதல் படமா இருக்கும்... ஆனா?!'' - கெளதம் மேனன்

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் கையில் நான்கு படங்கள் இருக்கின்றன. முதலில் சூரி படம், அடுத்து சூர்யாவின் 'வாடிவாசல்', மூன்றாவது படமாக விஜய் படம் இருக்கும் என்கிறார்கள். நான்காவது படத்துக்கான நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், தனுஷ்- வெற்றிமாறன் மீண்டும் இணையும் படம் இப்போதைக்கு இல்லை. தனுஷ் 'கர்ணன்' படத்தின் பேலன்ஸை முடித்திவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கும்படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்து 'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமார் படத்தில் நடித்துவிட்டு பாலிவுட் படத்துக்குப் போகிறார். அது முடிந்ததும் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படம். இந்தப் படங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிப்பார் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு