Published:Updated:

`மக்களின் மனதுடன் விளையாட வேண்டாம்!’ - திரையரங்கில் இயக்குநருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்

ஷிகாரா
ஷிகாரா

ஷிகாரா படம் மக்களின் உண்மையான கதையைப் பேசவில்லை என்று திரையரங்கிலேயே இயக்குநரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஒரு இளம் பெண்.

பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விது வினோத் சோப்ரா. இவரது இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்த படம் `ஷிகாரா: காஷ்மீர் பண்டிட்களின் சொல்லப்படாத கதை.’ ராகுல் பண்டிடா என்பவர் எழுதிய Our Moon Has Blood Clots என்ற புத்தகத்தின் தழுவலாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்களின் காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் இந்தப் படம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண் - இயக்குநர்
பெண் - இயக்குநர்

ஷிகாரா படம் வெளியானதையொட்டி, இயக்குநர் விது வினோத் சார்பாக டெல்லியில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம் முழுவதும் முடிந்த பிறகு, அங்கு இருந்த மக்கள் முன் இயக்குநர் பேசினார். அப்போது குறுக்கிட்ட ஒரு இளம் பெண், இயக்குநரையும் அந்தப் படத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் பேசும் வீடியோ நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர்தான் இவ்வாறு பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னையின்போது தன் தந்தையையும் குடும்பத்தையும் இழந்து தான் அனுபவித்த வலி இயக்குநருக்குப் புரியாது என்றும் அங்கு நடந்த விஷயங்களைத் தவறாகச் சித்திரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தாங்கள் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார். இதைப் பேசும்போது அந்தப் பெண் அதே இடத்திலேயே உடைந்து அழுதார். வணிக ரீதியில் மட்டுமே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதைத் தீய படம் என்றும் விமர்சித்துள்ளார். காஷ்மீரில் நடந்த உண்மையான கதையைக் கூற இயக்குநர் தவறிவிட்டதாகவும் மக்களின் மனதுடன் விளையாட வேண்டாம் என்றும் சாடினார்.

இந்தப் படத்தைப் பார்த்த பலரும் இயக்குநரையும் படத்தையும் விமர்சித்து கடுமையான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளதாக அந்தப் பெண்ணுக்குப் பதில் அளித்துள்ளார் இயக்குநர் விது. விது வினோத் சோப்ராவும் காஷ்மீர் பண்டிட் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல