Published:Updated:

``அந்த 3 படங்களுக்கும் தனுஷுக்குச் சொன்ன சம்பளம் கொடுக்கல..!'' - வெடிக்கும் `வொண்டர்பார்' வினோத்

எம்.குணா

"நடிகர்கள் சொகுசு கார்ல போறாங்கன்னு வயித்தெரிச்சல் பேட்டிலாம் சிலர் கொடுக்குறாங்க. ஒரு உண்மையைச் சொல்லவா? 38 படத்துல நடிச்சிருக்க தனுஷ் சார் லோன்லதான் கார் வாங்கியிருக்கார். காருக்கான இ.எம்.ஐ இன்னும் ஓடிட்டு இருக்கு."

Dhanush
Dhanush

"சில தயாரிப்பாளர்கள் பேசியபடி சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்'' என தனுஷ் சமீபத்தில் பேசியதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிருந்து பயங்கர எதிர்ப்பு. சில தயாரிப்பாளர்கள் தனுஷுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுத்துவரும் நிலையில் தனுஷ் தரப்பிலிருந்து அமைதியே பதிலாக இருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத்திடம் பேசினேன்.

மீண்டும் மீண்டும் சிக்கல் - என்னதான் ஆச்சு `எனை நோக்கி பாயும் தோட்டா'வுக்கு?!

"முதலில் 'அசுரன்' ஆடியோ விழாவில் தனுஷ் சார் `எல்லா தயாரிப்பாளர்களும் என்னை ஏமாத்துறாங்க'னு சொல்லவே இல்லை. `தயாரிப்பாளர்கிட்ட இருந்து சம்பளம் வாங்குறது பெரிய கஷ்டமாக இருக்கு'ன்னுதான் சொன்னார். இதைச் சரியா புரிஞ்சிக்காம சிலபேர் தனுஷ் சார் பத்தி தப்புத் தப்பா பேசிட்டு வர்றாங்க.

தமிழ் சினிமால `தனுஷை வெச்சு படம் எடுத்தா நஷ்டம் ஏற்படும்'னு சில தயாரிப்பாளர்கள் சொன்னதா படிச்சேன். தனுஷ் ஒரு நடிகர் மட்டுமல்ல. 12 படங்கள் சொந்தமா தயாரிச்சவர். இதுவரை எடுத்த படங்கள்ல ஒரு லைட்பாய்க்குகூட பத்து ரூபாய் சம்பள பாக்கி வெச்சது இல்லை. நாங்க தயாரிச்ச படங்கள்ல நடிச்சவங்களுக்குப் பேசினபடி கரெக்ட்டா சம்பளம் கொடுத்தோம். நாங்க நேர்மையா இருக்கும்போது எங்களிடம் அக்ரிமென்ட் போடும் தயாரிப்பாளர்களும் நேர்மையா இருக்கணும்னு எதிர்பார்க்குறோம். பேசினபடி சம்பளத்தைச் சரியா கொடுக்கலைன்னா கேட்குறதுல என்ன தப்பு. நாங்க தயாரிப்பாளர்களை மதிக்கிறோம். சிலபேர்கிட்ட இரக்கப்பட்டிருக்கோம். அதனால ஒரு சில படங்கள்ல சம்பளத்தை விட்டுக்கொடுத்து ஏமாந்து போய் இருக்கோம். ஆனா, அதையே சாக்கா வெச்சிக்கிட்டு தொடர்ந்து சம்பளத்தை தராம இழுத்தடிக்கிறது என்ன வகையில் நியாயம்? அந்த வேதனையைத்தான் `அசுரன்' விழாவில் தனுஷ் சார் பேசினார்.

'Wunderbar' vinoth
'Wunderbar' vinoth

'ஏற்கெனவே `கொடி' படத்துல தனுஷுக்கு சம்பள பாக்கி இருக்கு. அதை `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல கொடுத்து செட்டில் செய்றோம்னு சொல்லி இருந்தேன். இப்போ என்னால செய்ய முடியலை'னு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சொல்லி இருக்கார். சில தயாரிப்பாளர்கள் தனுஷ் சாரை வெச்சு படம் எடுத்தா நஷ்டம்னு பேட்டி கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க சொல்றது உண்மைன்னா `தொடரி' தயாரிச்ச சத்யஜோதி சார் ஏன் திரும்பவும் தனுஷ்கூட `பட்டாஸ்' படம் பண்றார்?, `வேலையில்லா பட்டதாரி-2' தயாரிச்ச தாணு சார் ஏன் அடுத்து 2 படங்கள் தனுஷோடப் பண்றார்?

சினிமால இருந்து ரிட்டயர் ஆனவங்க வீட்ல சும்மா உட்கார முடியாம எதாவது பேசிட்டு இருக்காங்க... இந்தப் பொய்யையெல்லாம் கேட்டுட்டே இருக்க முடியுமா?

நாங்க தயாரிச்ச மாரி-2 படம் தோல்விப் படம் மாதிரி ஒரு இமேஜை கிரியேட் பண்ணாங்க. உண்மையில் மாரி-2 எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்த படம்.

நடிகர்கள் சொகுசு கார்ல போறாங்கன்னு வயித்தெரிச்சல் பேட்டிலாம் கொடுக்குறாங்க. ஒரு உண்மையைச் சொல்லவா? 38 படத்துல நடிச்சிருக்க தனுஷ் சார் லோன்லதான் கார் வாங்கியிருக்கார். காருக்கான இ.எம்.ஐ இன்னும் ஓடிட்டு இருக்கு.

Dhanush
Dhanush

தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் சார் எந்த உதவியும் பண்ணாத மாதிரி பேசிட்டு இருக்காங்க... `மரியான்' படத்தோட சம்பள பாக்கியை தனுஷ் சார் இன்னும் கேட்கவே இல்ல. `மாரி' படத்தோட சம்பளம் இன்னும் முழுசா வரல. `கொடி' படத்துக்கான சம்பளம் இன்னும் 10 கோடி பாக்கி இருக்கு. `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல இன்னமும் மூணேமுக்கால் கோடி சம்பளம் பாக்கி இருக்கு. ஆனா, அதையெல்லாம் பார்க்காம தனுஷ் சார் டப்பிங் பேசிக்கொடுத்துட்டார். ஆனா, இதுவரைக்கும் பேசின சம்பளம் வரல. இதுதான் உண்மை'' என தனுஷ் தரப்பு விளக்கத்தைச் சொல்லி அதிரவைத்தார் வினோத்!