சினிமா
Published:Updated:

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

விஜய் சேதுபதி - மேகா ஆகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் சேதுபதி - மேகா ஆகாஷ்

நமக்கு என்ன முடிவு எடுக்கலாம்னு தெரியாது. எதைப் புரிஞ்சிக்கிறது, எப்படிப் புரிஞ்சுக்கிறதுன்னு தெரியாது.

“ஜனநாதன் சார் விஜய் சேதுபதியிடம், ‘இவன்கிட்ட ஒரு நல்ல கதையிருக்கு... கேட்டுப் பாரேன்’னு சொல்லி ஒரு கதவைத் திறந்து விட்டார். அன்னைக்கு ஆரம்பிச்சது இந்தப் படம். எட்டு வயசுல வெளியே கிளம்பிப் பயணமாகத் தொடங்கி ஒரு இசைக் கலைஞராகவும் அகதியாகவும் புறப்பட்டுவந்த வாழ்க்கை, இப்போ எந்த இடத்தில் என்ன வண்ணமாய் அமைஞ்சதுன்னு போகும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம். அனேகமா ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் முக்கிய நிகழ்வுகள் எல்லாமே முப்பது வயசுக்குள்ளதான் நடக்கும். வாழ்க்கையைப் புரட்டிப் போடுற விஷயங்கள் அப்போதான் நிகழும். ஏதோ ஒரு ஆசை இருக்கும். ஏதோ ஒரு தப்பைப் பண்ணச் சொல்லும். வினோதமான நிகழ்வுகள் நிகழும். விதவிதமான மனிதர்கள் குறுக்கிடுவாங்க. மனம் கிடந்து அல்லாடும். பெண்கள், வாழ்க்கை, பணம்னு நிறைய மாற்றங்கள் நடக்கிற காலம்.

வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
வெங்கட கிருஷ்ண ரோகாந்த்

நமக்கு என்ன முடிவு எடுக்கலாம்னு தெரியாது. எதைப் புரிஞ்சிக்கிறது, எப்படிப் புரிஞ்சுக்கிறதுன்னு தெரியாது. அப்படிப்பட்ட ஒருத்தனை வாழ்க்கை எங்கே கொண்டுபோய் நிறுத்துதுன்னு எடுத்து வைக்கிற படம்தான் இது...” தீர்க்கமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். படம் ரிலீஸுக்கு ரெடியான சூழலில் நடந்தது இந்த உரையாடல்.

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!
தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

``விஜய் சேதுபதி படத்திற்குள் வந்த பின்னாடி என்ன நிகழ்ந்தது?’’

“ஒரு கேரக்டரில் வந்து உட்காரும்போது அவருக்குன்னு ஒரு பாணி இருக்கு. அதற்கு முன்னே பின்னே நகரக்கூடிய இடங்களையும் தரவுகளையும் நமக்கே தெரியாமல் வச்சிருப்பார். நான் சேதுபதியை அப்படியே திறமையின் வடிவமாய்ப் பார்த்தது எடிட்டிங் டேபிளில். ‘என்னடா இந்த மனுஷன்’னு வாய்விட்டே வார்த்தை வந்திருக்கு. ஆச்சரியம் தாங்க முடியாமல் இருந்திருக்கேன். எங்கேயோ கேட்ட, பார்த்த அனுபவங்களை எடுத்துக்கிறார். நடிப்பு, நமக்கு வேண்டியதற்கு மேலே... சமயங்களில் தாண்டியும் போகும். நாம மனசில் ஒண்ணு வச்சிருப்போம். பல அம்சங்களைச் சுருக்கித் தேர்ந்தெடுத்து நாலு வரி டயலாக் போட்டிருப்போம். அந்த டயலாக்கே சுண்டக் காய்ச்சின மாதிரிதான் இருக்கும். ஆனா, அதையும் தாண்டி அவரது எக்ஸ்பிரஷனே நிக்கும். டயலாக்கே தேவையில்லைன்னு ஆயிடும். ஸ்கிரிப்டில் இல்லாத முத்துக்கள் கிடைக்கும். ஸ்கிரிப்ட்டுக்குள்ளே நடிப்புன்னு வந்திட்டால் அவரது தன்மை சார்ந்து ஒரு ஆக்டிங் இருக்கு. அவர் நடிப்பில் அவ்வளவு தனித்தன்மை இருக்கு. பல ஹீரோக்கள்கிட்ட நாம் எதிர்பார்ப்போம். அது இரு மடங்காகும். சில சமயம் பல மடங்காகும். ஆனால் இவர்கிட்ட எதிர்பார்க்காத ஒண்ணு வருது. தனக்குள் இருக்கும் திறமையைக் கொண்டாடாமல் இருக்கிற மனுஷனை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. சேதுபதி, மகிழ் திருமேனி, கனிகா சந்திக்கிற ஒரு காட்சி. ஒவ்வொருத்தரைப் பற்றி தனித்தனிக் கருத்துருவாக்கம் மூணு பேருக்குள்ளே இருக்கும். அந்த இடத்தில் சேதுபதி கொடி பறந்தது பாருங்க... வேற அது.”

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!
தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

``மேகா ஆகாஷ் முதல் தடவையாக விஜய்சேதுபதிக்கு இணையா நடிக்கிறாங்க...’’

“எது வேணுமோ அதை அளவாக நடிப்பில் தருவதில் மேகாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்னும் உயரங்களுக்கான வாய்ப்பிருக்கு. மகிழ்திருமேனி அவருடைய குரலுக்காகவும் அறியப்பட்டவர். இப்ப பாருங்க, முதல்தரமான வில்லனாகவும் மாறியிருக்கிறார். சேதுபதியும் மகிழும் வகையான இடங்களை ஆளாளுக்குப் பிடிச்சுக்கிட்டாங்க. மகிழ்திருமேனி இந்தப் படத்திற்குப் பின்னாடி தேடப்படுகிற ஆளாக மாறுவார். மகிழும், ரகு ஆதித்யாவும் வருகிற இடங்களில் எல்லாம் அதிரடியாக இருக்கும். இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு இதில் முக்கியமான கேரக்டர் இருக்கு. முதன்முதலில் இந்தக் கதை மனதில் வந்தபோது கரு.பழனியப்பன்தான் இதில் ஹீரோவாக வந்தார். ‘புறம்போக்கு’ படப்பிடிப்பில் செட்டுக்கு வந்திருந்த கரு.பழனியப்பன் ‘இந்தப் படத்திற்கு சேதுபதிதான் மிகப் பொருத்தமானவர்’ என்று உறுதியாகச் சொன்னார். இயக்குநர் மோகன் ராஜாவும் நட்புக்காக ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.”

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

``இசைக் கலைஞனாகவும் சேதுபதி நடிச்சிருக்காரே?’’

“அதற்கான இடங்களும் இருக்கு. அகதியோட பிரதிநிதியாக மாறக்கூடிய இடங்களும் வருது. ஒரு படம் பண்றோம். அதுல சாதாரண மனிதனோட பாடு, கஷ்டம், இன்ப துன்பம் வருதான்னு பார்க்கிறோம். அதற்குத் தீனி போட்டு அதை வரலாறு மாதிரி மாற்றப் போராடணும்னு சேதுபதிக்குத் தெரிஞ்சிருக்கு. எல்லா கேரக்டரையும் பயப்படாமல் தேர்ந்தெடுத்து நடிச்சிட அவரால முடியுது. அதனால்தான் அவர் நடிக்கிற படங்களும் நிறைய வருது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வார்த்தைகள் எத்தனை வருஷம், யுகம் தாண்டி நிற்குது. அந்த வார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்கும் இந்தப் படம்.”

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

``பாடல்கள் பற்றி...’’

“நிவாஸ் பிரசன்னாதான் மியூசிக். வளர்ந்து வருவதில் அவருக்கான இடம் பளிச்சென்று தெரிய ஆரம்பிக்குது. அதிரடி, மெலடின்னு அத்தனை திசைகளிலும் அவர் திறமை தெரியுது. படத்தோட ட்யூன் தனக்கு மட்டும் பிடிச்சாப் போதும்னு நினைக்காமல், நம்மளையும் சந்தோஷப்படுத்த நினைப்பார். ஆறு பாடல்கள்... தனிக் கொண்டாட்டமாக நடந்து முடிஞ்சிருக்கு. ‘எங்கோ இது மாதிரி கேட்டிருக்கோம்’னு ஒரு பாடலும் நினைக்க வைக்காது. ரொம்ப நம்பகமான மியூசிக் டைரக்டராக இருப்பது அதனால்தான். வெற்றிவேல் மகேந்திரன்தான் கேமராமேன். ‘கனிகளின் மீது விழுந்தோரே உண்ணுங்கள்... கடலின் மீது விழுந் தோரே நீந்துங்கள்’னு சொல்வாங்க. அந்த மாதிரி எந்த இடம், எந்த சமயம், எந்தக் கஷ்டமாக இருந்தாலும் எந்தக் குறையும் தெரியாமல் இந்தப் படத்தை இட்டு நிரப்பினார் வெற்றிவேல். இந்தப் படத்தின் தயாரிப் பாளர் இசக்கி துரை அவர்களுக்கு என் நன்றிகள் சேரணும்.”

தேசங்களைத் தாண்டிய அகதி... விஜய்சேதுபதியின் புது பரிமாணம்!

``சென்சார் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை ரத்து செய்து விட்டார்களே?’’

“நல்ல பாய்ச்சலில் கதையைக் கொண்டு செல்கிற இயக்குநர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். சினிமா மாறிவிட்டது. ஹீரோக்கள் இமேஜ் தாண்டிச் செல்லப் பிரியப்பட்டுவிட்டார்கள். அப்படி இருக்க, ஏதாவது புதுக் கருத்து சொல்லப்படும்போது கருத்து வேற்றுமை தோன்றினால் படத்தை மேல்முறையீட்டுக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. எல்லோரும் உட்கார்ந்து பேசித் தீர்க்கிற பக்குவம் இருந்தது. இப்படி எல்லாமே சுமுகமா நடந்துகொண்டிருக்க, திடீரென தீர்ப்பாயத்தை ரத்து செய்துவிட்டு, பிரச்னை என்றால் கோர்ட்டை அணுகலாம் எனச் சொல்லிவிட்டார்கள். தயவுசெய்து இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக்கொள்ளவேண்டும். கோர்ட்டுக்குப் போன செல்வமணியின் ‘குற்றப் பத்திரிகை’ என்ன ஆனது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், குவிந்து தேங்கியிருக்கும் வழக்குகளை நீதியரசர்கள் ஆராய்வார்களா, சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கித் தர முனைவார்களா? மறுபடியும் தீர்ப்பாயத்தைக் கொண்டுவர ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் திரளவேண்டும்.”