Published:Updated:

'கே.ஜி.எஃபை'த் தொடர்ந்து யஷ் கைகோக்க இருக்கும் தெலுங்கு இயக்குநர்?

தார்மிக் லீ

'கே.ஜி.எஃப்' என்ற ஒரே படத்தின் மூலம் தேசிய நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார் யஷ். கன்னடத்தில் உருவான இப்படம், பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. அது மக்கள் மத்தியில் அதீத வரவேற்பையும் பெற்றது.

கே.ஜி.எஃப்
கே.ஜி.எஃப் ( யஷ் )

'கே.ஜி.எஃப் 2' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் யஷ், தெலுங்கு இயக்குநரான பூரி ஜகன்நாத்திடம் கதை கேட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பூரி ஜகன்நாத் - இயக்குநர்
பூரி ஜகன்நாத் - இயக்குநர்

யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் 'கே.ஜி.எஃப்'. கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ் ஹிட்டடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் முகம் காட்டப்படாத கருடனின் தம்பியான ஆதிரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான சஞ்சய் தத் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமாகப் படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். தெலுங்கு இயக்குநர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் வெளியான 'இஸ்மார்ட் ஷங்கர்' டோலிவுட் பக்கம் மாஸ் ஹிட்டடித்தது. அதுமட்டுமன்றி அதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

யஷ்
யஷ்

இந்நிலையில், பூரி ஜகன்நாத் சமீபத்தில் யஷ்ஷை சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து படத்தில் பணியாற்றுவார்கள் என்றும் செய்திகள் வெளியானது. தெலுங்கு - கன்னம் ஆகிய மொழிகளில் பைலிங்குவலாக இப்படம் எடுக்கப்படும். 'கே.ஜி.எஃப்' படத்தின் 2-ம் பாகம் முடிந்தபின் யஷ் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.