Published:Updated:

எண்ணித் துணிக - சினிமா விமர்சனம்

ஜெய், அதுல்யா
பிரீமியம் ஸ்டோரி
ஜெய், அதுல்யா

சாம் சி.எஸ்ஸின் இசையமைப்பு பெரும் ஏமாற்றம். த்ரில்லருக்கான பரபரப்பு எதையும் கடத்தாமல் தேமேவெனக் கடந்து போகிறது தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு.

எண்ணித் துணிக - சினிமா விமர்சனம்

சாம் சி.எஸ்ஸின் இசையமைப்பு பெரும் ஏமாற்றம். த்ரில்லருக்கான பரபரப்பு எதையும் கடத்தாமல் தேமேவெனக் கடந்து போகிறது தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு.

Published:Updated:
ஜெய், அதுல்யா
பிரீமியம் ஸ்டோரி
ஜெய், அதுல்யா

`வங்கிக் கொள்ளை' என்கிற எவர்கிரீன் ஆக்‌ஷன் ஒன்லைனே இந்த ‘எண்ணித் துணிக.'

அமெரிக்க மாபியா குறிவைக்கும் பல கோடி மதிப்பிலான வைரங்கள் தமிழகத்தில் ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டிலுள்ள நகைக்கடையில். அதைக் கச்சிதமாகக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது ஒரு கூலிப்படை. ஐ.டி-யில் வேலை பார்க்கும் ஜெய்யும் ஆக்டிவிஸ்ட்டான அவரின் காதலி அதுல்யாவும் தங்கள் திருமணத்திற்காக நகை எடுக்க அதே கடைக்குச் செல்கிறார்கள். கொள்ளையர்களுக்கும் கடையில் இருப்பவர்களுக்கும் மோதல் நிகழ, விளைவு சில அசம்பாவிதங்கள். இந்தக் களேபரத்தில் வைரங்கள் காணாமல்போக, அதை அமைச்சர் அண்ட் கோவும் கொள்ளையர்களும் தேடித் திரிகின்றனர். மறுபக்கம் இந்தக் கொள்ளைக்குக் காரணமானவர்களை ஜெய் தேடித் திரிகிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்தார்களா என்பதே மீதிக்கதை.

எண்ணித் துணிக - சினிமா விமர்சனம்

துறுதுறு இளைஞனாக வரும் ஜெய் இன்னமும் பழைய ஹேங் ஓவரிலேயே இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் லைட்டாய் அப்கிரேடு ஆகியிருப்பது தெரிகிறது. களப்போராளியாய் வரும் அதுல்யாவின் கதாபாத்திரத்தில் துளியும் யதார்த்தம் இல்லை. அதீத செயற்கைத்தனம் தென்படும் அவரின் நடிப்பு ஒருபுறம், அரதப்பழைய காதல் காட்சியமைப்புகள் மறுபுறம். ‘எண்ணித் துணிக' என்று இதற்குத்தான் டைட்டில் வைத்தார்களோ என்று பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.

காமெடிக் காட்சிகளில் பார்த்த சுனிலை வில்லனாய்ப் பார்ப்பதற்கு முதல் சில நிமிடங்கள் புதிதாய் இருந்தாலும், போகப் போக அவர் காமெடி வில்லனா, மிரட்டல் வில்லனா என்கிற குழப்பமே மிஞ்சுகிறது. அதிலும் அமைச்சர் என்ற பெயரில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எல்லாம் உ.பி-யில்கூட நடக்காத கேலிக்கூத்துகள். வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், அஞ்சலி நாயர் என இன்னபிற நடிகர்கள் திரையில் வந்து வந்து போவதோடு கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

சாம் சி.எஸ்ஸின் இசையமைப்பு பெரும் ஏமாற்றம். த்ரில்லருக்கான பரபரப்பு எதையும் கடத்தாமல் தேமேவெனக் கடந்து போகிறது தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு. முன்பின்னாய் நகரும் திரைக்கதையைக் கோத்த விதத்தில் மேற்கொண்டு சிக்கலாக்குகிறார் எடிட்டர் சாபு ஜோசப்.

அமைச்சரே நெருக்கடி கொடுத்தும் குற்றம் நடந்ததிலிருந்து எதையுமே காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஹீரோ ஜெய்யோ வரிசையாக அடுத்தடுத்து குற்றவாளிகளை நெருங்குகிறார் என்றபோதும், எந்தக் காட்சியிலும் புத்திசாலித்தனமில்லை. கூகுள் மேப் போல, எல்லாரும் வலிந்துவந்து ஹீரோவுக்கு ரூட் சொல்ல, அவரும் க்ளைமாக்ஸ் வரைக்கும் வந்துவிடுகிறார்.

எண்ணித் துணிக - சினிமா விமர்சனம்

படம் பார்ப்பவர்களை அலட்சியமாய்க் கருதாமல் கதைக்காகத் துணிந்து இயக்குநர் எஸ்.கே.வெற்றிசெல்வன் உழைத்திருந்தால் கவர்ந்திருக்கும் ‘எண்ணித் துணிக.’