Published:Updated:

"அவர் சினிமாட்டோகிராபர்'' - காதல் டு நிச்சயதார்த்தம் பற்றிப் பகிரும் `ஐரா' கேப்ரில்லா செலஸ்

கேப்ரில்லா
கேப்ரில்லா

மாடலிங், நடிப்புன்னு பயணிச்சிட்டு இருக்கேன். ஆனா, அதையும் தாண்டி மக்களுக்கு பிடிச்ச வீடியோக்களை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை

சமீபத்தில் வெளியான `ஐரா' திரைப்படத்தில் நடித்திருந்தவர் கேப்ரில்லா செலஸ். கறுப்பழகி என்கிற செல்லப் பெயருக்குச் சொந்தக்காரி. தற்போது அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது என்கிற செய்தி அறிந்து அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அம்மாதான் பெஸ்ட். எனக்கும் அப்படிதான். அம்மாவும், நானும் பயங்கர குளோஸ். நான் என்ன பண்ணாலும் என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. நான் சோர்ந்து போகிற நேரம் எல்லாம் தேடுறது என் அம்மாவை மட்டும்தான். அவங்க இல்லைன்னா இந்த இடத்தில் நான் இல்லைங்க. என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே தலைமை ஆசிரியர்களா இருக்காங்க. எங்க தலைமுறையே வாத்தியார் தலைமுறை. எங்க வீட்டுல நிறைய டீச்சர்ஸ் இருக்காங்க. `வாத்தியார் புள்ளை மக்கு'ன்னு சொல்லுவாங்களே... அது எனக்காகவே சொல்ற பழமொழி. படிக்கவே மாட்டிகிறேனு டீச்சர்ஸ்கிட்ட நிறையவே திட்டு வாங்கியிருக்கேன். ஆனா, என் பெற்றோர்கள் என்னைத் திட்டினதே இல்லை. உன்கிட்ட உள்ள திறமையைக் கண்டுபிடிச்சு அதை நோக்கிப் பயணினு மட்டும் சொல்லிக் கொடுத்தாங்க. அதை நான் செஞ்சதாலதான் இப்போ இந்த இடத்தில் இருக்கேன்'' என்றவரிடம் நிச்சயதார்த்தம் குறித்து கேட்டால் குரலில் உற்சாகம் பற்றிக்கொள்கிறது.

``என்னுடைய துறையில் இருக்கிறவர்னா என்னைப் புரிஞ்சுக்க முடியும்னு நினைச்சேன். அவர் பெயர் ஆகாஷ். சினிமாட்டோகிராபரா இருக்கார். எங்க ரெண்டு பேருடைய எண்ணமும், சிந்திக்கிறதும் ஒரே மாதிரி இருக்க. நான் நடிக்கிறப்ப அதைப் பார்த்துட்டு, `கேப்ரி நீ இப்படி நடிச்சிருந்துருக்கலாம்'னு கரெக்‌ஷன்ஸ் சொல்லுவார். என் கரியரை என்னைவிட அதிகமா நேசிக்கிறவர். நம்மளுடைய கனவையும் சேர்த்து காணுகிற காதலன் கிடைக்கிறது மிகப்பெரிய பாக்கியம். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி.

கேப்ரில்லா
கேப்ரில்லா

அவருடைய அப்பா நக்கீரன் பத்திரிகையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அம்மா குடும்பத்தலைவி. அவங்க ரெண்டு பேருமே ரொம்பவே ஃப்ரெண்ட்லி. ஆகாஷ் அப்பாகிட்ட நான்தான் போன் பண்ணி `நாங்க காதலிக்கிறோம்'னு சொன்னேன். உடனே, `வேற ஏதாவது புதுசா இருந்தா சொல்லுமா'ன்னு அப்பா சொன்னாங்க. அவங்க மலையாளி, இந்து... நாங்க கிறிஸ்டியன்! ஆனாலும், அவங்க எதையுமே யோசிக்கலை. ரெண்டு பேர் வீட்டிலும் பேசி திருமணம் குறித்து முடிவெடுத்தாங்க. ஜனவரி மாதம் திருமணம் வைச்சிக்கலாம்னு வீட்ல முடிவு பண்ணியிருக்காங்க'' என்றவர் தன்னுடைய டிக்டாக் வீடியோ பற்றிப் பேசினார்.

``பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து விழிப்புணர்வுக்காகத்தான் நான் வீடியோ பண்ணினேன். ஆனா, எல்லோரும் அதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க. அந்த வீடியோவை வைச்சு பலரும் என்னை விமர்சனம் பண்ணாங்க. விவசாயம் குறித்து, பீரியட்ஸ் குறித்துன்னு நிறைய வீடியோஸ் பண்ணியிருக்கேன். அதையெல்லாம் புரிஞ்சுகிட்டவங்க இந்த வீடியோவைப் புரிஞ்சுக்கலை. அந்தச் சமயத்தில் என் அம்மா, ஆகாஷ், என்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபேமிலி மட்டும்தான் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்களால் மட்டும்தான் அந்த விமர்சனங்களால் துவண்டு போகாமல் ஓடிட்டே இருந்தேன்.

நான் சும்மா இருக்கும்போது வீடியோ பண்ண மாட்டேன். கோபம், சோகம், மகிழ்ச்சின்னு ஏதாவது ஒரு உணர்வுல இருக்கும்போதுதான் கான்செப்ட் வீடியோ பண்ணுவேன். பெரும்பாலும் கோபத்தில் இருக்கும் போது அதிகமா கான்செப்ட் வீடியோ எடுப்பேன். நம்மளுடைய இயலாமையினால்தானே நமக்குக் கோபம் வருது. அந்தக் கோபத்தைப் பதிவு செய்யணும்னு நினைப்பேன். பீரியட்ஸ் குறித்து வீடியோ பண்ணின சமயம் நானும் பீரியட்ஸ் ஆகியிருந்தேன். என் கோபத்தை கலை வடிவில் வெளிக்காட்டுறேன் அவ்வளவுதான்'' என்றவரிடம் அடுத்தகட்ட பிளான் குறித்துக் கேட்டோம்.

``மாடலிங், நடிப்புன்னு பயணிச்சிட்டு இருக்கேன். ஆனா, அதையும் தாண்டி மக்களுக்கு பிடிச்ச வீடியோக்களை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு