Election bannerElection banner
Published:Updated:

ஒரே ஒரு ஜோக்காவது சொல்லுங்களேன் யோகி பாபு! `ட்ரிப்' - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

ட்ரிப் விமர்சனம்
ட்ரிப் விமர்சனம்

காட்டுக்கு 'ட்ரிப்' வந்த நண்பர்கள்; அந்தக் கூட்டத்தைக் கொன்று தின்னும் மனிதர்கள்(?), இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட அப்பாவிகள்... இதுதான் ட்ரிப்! அந்த அப்பாவிகள் யாரென்று இறுதியில் பார்ப்போம். இது ட்ரிப் - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

சுனைனா தன் நண்பா, நண்பிகள் கூட்டத்துடன் காட்டுக்கு ட்ரிப் செல்கிறார். வந்த இடத்தில் அவர்கள் பெயின்ட்டர் கருணாகரனையும் கார்பென்ட்டர் யோகி பாபுவையும் கொலைகாரர்கள் எனத் தவறுதலாக நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கேற்றவாறு நண்பர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்கின்றன. யார் கொலை செய்கிறார்கள், அந்த மோசமான மனிதர்கள் உருவானது எப்படி? 2 மணி நேரம் காமெடி, காதல், த்ரில் என்ற பெயரில் ஏதேதோ செய்து விடை சொல்கிறது இந்த ஆக்ஷன், அட்வென்சர், பயோலாஜிக்கல், சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர்... மிடில!

ட்ரிப் விமர்சனம்
ட்ரிப் விமர்சனம்

“I steal from every single movie ever made!” - இயக்குநர் குவின்டின் டாரன்டினோவின் பிரபலமான வாக்கியத்துடன் படம் தொடங்குகிறது. அதற்கு 'ட்ரிப்' இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், "I agree with this" சொல்லிப் படத்தை ஆரம்பிக்கிறார். நேர்மையாக இருக்கிறாராம்! ஹாலிவுட்டில் ஹிட்டடித்த டார்க் காமெடி படமான 'Tucker & Dale vs Evil' கொஞ்சம், 'Wrong Turn' பாணி கேனிபல் கதைகள் கொஞ்சம் எனக் கலந்துகட்டி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், படத்தை டார்க் காமெடியாக அணுகாமல் தவிர்க்கப்பட வேண்டிய உள்ளூர் உருவகேலி காமெடியையும், வாட்ஸ்அப் ஃபார்வேர்டு ஜோக்குகளையும் வைத்து ஒப்பேற்ற முயன்றிருக்கிறார். 'ண்ணா! சத்தியமா சிரிப்பு வரலைங்கணா!'

யோகி பாபு, கருணாகரன் காம்போ எதிர்பார்ப்பைக் கிளப்பினாலும் பெரும்பாலான இடங்களில் 'கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க பாஸ்' என்றே சொல்ல வைக்கிறார்கள். படம் முடிந்து நிறைய நேரம் சிந்தித்துப் பார்த்ததில், "டிவி பாக்கறியா... அதோ இருக்கு பாரு!" என ஓடாத டிவியை யோகி பாபு காட்டும் ஒரே ஒரு காமெடி மட்டும்தான் கிச்சு கிச்சு மூட்டியது. அதற்கே படம் ஆரம்பித்து அரை மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த நல்ல காமெடிக்கு வெயிட் செய்ததில் படமே முடிந்துவிட்டது. யோகி பாபு சார், இந்த உருவக்கேலி காமெடி, பெண்களை ஏளனம் செய்யும் ஆண் வர்க்கத்தின் பொது மனப்பான்மை... இவற்றிலிருந்து எல்லாம் எப்போதுதான் வெளியே வருவீர்கள்? அதுவும் ஆதிவாசி இனத்தை எல்லாம் வைத்து ஒன்லைனரில் கலாய்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 21-ம் நூற்றாண்டின் 21-ம் வருடத்தில் இருக்கிறோம். பார்த்துச் செய்யுங்கள்!

ட்ரிப் விமர்சனம்
ட்ரிப் விமர்சனம்

சுனைனா தவிர அந்த நண்பர்கள் கூட்டத்தில் யாருமே நடிப்பு என்பதை சீரியஸாகவே அணுகவில்லை. கதையின் நாயகன் (நாமாக நினைத்துக்கொண்டது) மட்டும் கொஞ்சம் தேறுகிறார். உதயஷங்கரின் ஒளிப்பதிவு, டிரோன்கள் மற்றும் டாப் ஆங்கிள் ஷாட்கள் மூலம் காட்டின் இயற்கையை அளந்திருக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் எல்லாம் 90-களின் சிறிய பட்ஜெட் படங்களை நினைவுபடுத்துகின்றன. மேக்கிங்கில் சில காட்சிகள் பாஸாவதற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது தீபக் துவாரக்நாத்தின் படத்தொகுப்பு.

சென்டினல் தீவு மனிதர்கள் பற்றிய தெளிவின்மை, நரமாமிசம் உண்ணும் கேனிபல் இனம் பற்றிய தெளிவின்மை போன்றவற்றைக்கூடக் கற்பனை என ஏற்றுக்கொண்டாலும் அறிவியலோடே வீம்பாக விளையாடும் செடிகள் மற்றும் டிஎன்ஏ குறித்த அந்த உயிரியல் ஆராய்ச்சி எல்லாம் வேற லெவல் சினிமா பாஸ்! அதுவும் கொடூர மரணங்கள் நிகழ்ந்த அடுத்த ஷாட்டே அதையே கன்டென்ட்டாக்கி காமெடி செய்வதெல்லாம் என்ன வகையான மனநிலை என்றே புரியவில்லை.

ட்ரிப் விமர்சனம்
ட்ரிப் விமர்சனம்
'Tucker & Dale vs Evil' படத்தின் மையக்கருவே உருவத்தையும் தோற்றத்தையும் வைத்து ஒருவரை எடைபோடக் கூடாது, முன்முடிவுகளுக்கு வரக்கூடாது என்பதுதான். அதை சொல்வதற்கு உருவக்கேலி காமெடியையே கையில் எடுப்பதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும்!
சிரிக்கவைக்கிறதா `களத்தில் சந்திப்போம்'?! ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

'ஸ்லேஷர்' (Slasher) வகை ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் எண்ணமுடியாத அளவில் இருக்கின்றன. அவற்றில் பல படங்கள் சொதப்பல் ரகமே என வைத்துக்கொண்டாலும் அரசியல் ரீதியாகத் தவறான கருத்துகளை முன்வைக்காத கதைகள் அங்கே ஏராளம் உண்டு. ஆனால், அப்படியான பாதையில் செல்லாமல், எங்கோ லாஜிக்கின்றி அலைந்து திரிந்து இலக்கற்ற பயணமாக முடிகிறது இந்த ட்ரிப்!

ட்ரிப் விமர்சனம்
ட்ரிப் விமர்சனம்
ஆரம்பத்தில், மாட்டிக்கொண்ட அப்பாவிகள் என்று சொன்னது வேறு யாரையும் இல்லை. படம் பார்க்க உட்கார்ந்த நம்மைத்தான்! 'ஆபத்தான பகுதி'னு போர்டாவது வெச்சிருக்கலாம் பாஸ்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு