Published:Updated:

யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

மண்டேலா

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான 'மண்டேலா', ஞாயிறன்று நேரடியாக விஜய் டிவியில் வெளியானது. அதைத் தொடர்ந்து படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. தேர்தல் அரசியலை மையப்படுத்திய காமெடி படமான 'மண்டேலா' எப்படி?

யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான 'மண்டேலா', ஞாயிறன்று நேரடியாக விஜய் டிவியில் வெளியானது. அதைத் தொடர்ந்து படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. தேர்தல் அரசியலை மையப்படுத்திய காமெடி படமான 'மண்டேலா' எப்படி?

Published:Updated:
மண்டேலா
சூரங்குடி ஊராட்சியில் சாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறது வடக்கூர், தெக்கூர். அங்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் யார் உசத்தி என்பதைக் காட்ட இரண்டு தரப்பினரும் போராடுகின்றனர். அவர்களுக்கு இடையில் பொதுவான ஆளாக வந்து சிக்குகிறார் இரண்டு ஊருக்கும் சேர்த்து சலூன் கடை நடத்தும் ஸ்மைல் என்கிற இளிச்சவாயன் என்கிற நெல்சன் மண்டேலா. இரண்டு ஊரின் வேட்பாளர்களில் அவர் யாரைத் தேர்வு செய்தார், அந்தத் தேர்தலால் அந்த ஊரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் 'மண்டேலா' சொல்லும் கதை.
மண்டேலா
மண்டேலா

'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக் கணக்கு, இந்திய ஜனநாயகத்தில் ஒரு வாக்கின் அருமை பெருமையை உணர்த்துவது என எதையும் போரடிக்கும் மெசேஜாகப் பதிவு செய்யாமல் கதையின் போக்கிலேயே புரியவைக்கும் பாத்திரம். படம் நெடுக யோகிபாபுவுடன் உலாவரும் அந்த கிர்தா 'கான்' சிறுவன், ஊர் பெரியவராகப் பெரியாரின் சீடனாகச் சங்கிலி முருகன், வேட்பாளர்களாக ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி என எல்லோரும் தங்களின் பாத்திரங்களுக்குச் சரியாகப் பொருந்திப் போயிருக்கின்றனர். எந்தச் சண்டையென்றாலும் செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு கோதாவுக்குள் குதிப்பவர், யார் என்ன செய்தாலும் வேண்டுமென்றே குறை சொல்லும் பக்கத்து ஊர்க்காரர், காசைக் கொடுக்காமல் ஓசியிலேயே எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ளும் திருடன் இசக்கி, தேர்தல் அதிகாரி ஜார்ஜ் மரியன், சாதியை விடாமல் தூக்கிப்பிடிக்கும் மனிதர்கள் என அச்சு அசலாக யதார்த்தமான மனிதர்களைப் படம் நெடுக வெவ்வேறு தன்மையுடன் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர். இது படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது.

மண்டேலா
மண்டேலா

இந்தியாவில் ஓர் ஓட்டுக்கு இருக்கும் பலம், ஒரு வாக்காளர் அடையாள அட்டை நினைத்தால் என்னவெல்லாம் செய்யும், அதன் பவர் என்ன என்பதை உணர்த்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சாதி பாகுபாட்டைக் களைந்து அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தும் ஒருவரின் தேர்தல் வாக்கின் சக்தி, அதுவரை கீழாக நடத்தப்பட்ட 'மண்டேலா'வைக் கொண்டாட வைக்கிறது. வாக்கரசியலுக்காக எதையும் செய்வார்கள் அரசியல்வாதிகள் என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறது. அதேபோல், ஒரு பேருந்தில் அருகருகே உட்கார்ந்துகூடப் பயணிக்காதவர்கள், மது அருந்தும்போது மட்டும் காசில்லாததால் வேறு வழியின்றி ஒன்றுகூடி கொண்டாடும் காட்சி சமகால சமூகத்தின் நுண் பகடி!

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு பொட்டல் கிராமத்தின் மண்ணை அள்ளி வந்திருக்கிறது. ஊறுகா பேண்டு பரத் ஷங்கரின் இசையில், யுகபாரதியின் வரிகளில் ஒலிக்கும் 'ஒரு நீதி ஒன்பது சாதி' பாடல் படத்தின் மையக்கருத்தை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறது. இப்படியொரு படத்தைத் துணிந்து தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சசிகாந்த், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனுக்குப் பாராட்டுகள்.

மண்டேலா
மண்டேலா

அதே சமயம், சாதிய அரசியல், வாக்கரசியல், தேர்தல் கலாட்டா என எல்லாவற்றையும் கச்சிதமாக ஒரு தெளிவுடன் அணுகிய இயக்குநர் ஒரு சில இடங்களில் சறுக்கவும் செய்திருக்கிறார். யோகி பாபு தன் வாக்குக்கு லஞ்சமாகப் பெறும் பொருள்கள், தேர்தலுக்கு முன் ஊர் மக்களுக்குத் தரப்படும் பணம், அன்பளிப்பு போன்றவற்றைச் சட்டத்துக்குப் புறம்பான ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கவேண்டும். ஆனால், அதை அரசின் சார்பாக மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் மற்றும் திட்டங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது சற்றே நெருடல். விலையில்லா பொருள்களும் அத்தகைய திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருவிகள். அவர்களின் வரிப்பணத்திலிருந்தே அரசின் சார்பாக மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் என்ற புரிதல் இங்கே அனைத்து கலைஞர்களுக்கும் இருப்பது அவசியம். அதை வாக்குக்குக் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடுவது ஆபத்தான அரசியல்.

மண்டேலா
மண்டேலா

ஊர் பெரியவர் பாத்திரம் அந்த ஊரிலிருக்கும் சாதியப் பிரச்னைகளை முடிக்காமல் இருதரப்புக்கும் மையமாக நின்று சமரசம் பேசுவதாய் காட்டப்படுவது உறுத்தல். இரண்டு சாதிகளும் ஆபத்துதான், இங்கே இரண்டுமே தேவையில்லை என்ற தெளிவே அவசியமானது. ஆனால், அவர் இரண்டு சாதிகளுக்கும் பொதுவான ஆள் என்று சொல்வதற்காக இரண்டு சாதியிலும் ஒவ்வொரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதாய் காட்டுவது பெண்களை வெறும் பொருளாக மட்டுமே பார்க்கும் அபத்தத்தின் உச்சம்!

இருந்தும் தேர்தல் சமயத்தில் எவ்வித சமரசமுமின்றி சாதியத்தின் கோர முகத்தையும், தேர்தல் அரசியலின் இருண்ட பக்கங்களையும் தெளிவாகப் பதிவு செய்த விஷயத்தில் 'மண்டேலா' ஈர்க்கிறது. அதையும் காமெடி கலந்து ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக்கி முதல் படத்திலேயே தன் சமூக அக்கறையைப் பிரதிபலித்த இயக்குநருக்குப் பாராட்டுகள்!