Published:Updated:

``எனக்கு இப்போ கல்யாணமே வந்துடுச்சுண்ணே!" -  `கல்யாண மாலை' யோகி பாபு #HeIsTheBachelor

யோகி பாபு
யோகி பாபு

காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமணம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவிருக்கிறது.

சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் காமெடி ஏரியாவில் பிஸியான நடிகராக வலம் வரத் தொடங்கியிருப்பவர் யோகி பாபு. விறுவிறுவென வளர்ந்து விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டவருக்கு, `அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிஸி ஷெட்யூல்' என்கிறார்கள்.

`பிகில்' ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்கூட, "வீட்டு கிரஹப் பிரவேசத்துக்கே போக முடியாத அளவுக்கு நடிச்சிட்டிருக்கீங்களாமே... கல்யாணம்னா தாலி கட்டவாவது போவீங்களா?" எனக் கேட்டுக் கலாய்த்திருந்தார்.

யோகி பாபு
யோகி பாபு

யோகி பாவுவின் திருமணம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் சில தகவல்கள் வலம் வந்தது நினைவிருக்கலாம். சபீதா ராய் என்னும் நடிகையுடன் யோகி பாபு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, `அவரைத்தான் யோகி பாபு திருமணம் செய்துகொள்ளப் போகிறார்' எனப் பேசப்பட்டது. அடுத்த சில நாள்களில் யோகி பாபு, சபீதா என இருவருமே அந்தத் தகவலை மறுத்திருந்தனர். ஆனாலும் கல்யாணக் கேள்விகள் யோகி பாபுவைத் துரத்துவது என்னவோ நின்ற மாதிரி தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் ஒரு விருது விழா மேடையில்கூட, `எப்போ கல்யாணம்' என்ற கேள்விக்கு, `நான் நிறைய பொண்ணுகளைப் பார்த்துட்டு வந்துட்டேன். என்னைத்தான் ஒரு பொண்ணும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேங்குது' என ஃபன் மோடில் பதில் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில், உண்மையிலேயே யோகி பாபுவுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதுவும் எளிமையான முறையில் திருமணம் நடக்கவிருப்பது தெரிந்து யோகி பாபுவையே தொடர்புகொண்டு பேசினோம்.

யோகி பாபு
யோகி பாபு

"ஆமாண்ணே. இதுக்கு மேலயும் பேசாம இருந்தா சரிப்பட்டு வராது. இந்த சோஷியல் மீடியா இருக்கே... அதுல இப்பவே மூணு மாசத்துக்கு ஒரு தடவை, `இவங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்', `அவங்களோட கல்யாணமாம்'னு த்ரிஷாவுல ஆரம்பிச்சு நயன்தாரா வரைக்கும் ஒருத்தர் விடாம, நம்மகூட கல்யாணம் பண்ணி வெச்சிடுறாங்க! நம்மளால பாவம் அந்தப் புள்ளைங்களுக்குக் கஷ்டம். என்னத்துக்கு இந்தப் பிரச்னை, எங்க வீட்டுலேயும், `எங்க கால்கட்டு போடலைன்னா சாமியாராகிடுவானோ'ன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால கல்யாணம் பண்ணலாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.

உடனே, `லவ் மேரேஜா, அரேஞ்சுடு மேரேஜானுதானே கேட்கப் போறீங்க... வீட்டுல எல்லாரும் சேர்ந்து பார்த்த பொண்ணுண்ணே. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். எனக்கு மட்டுமில்ல, வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் பிடிச்சிடுச்சு. எனக்கு மனைவியா வரப்போறவங்க என்னை மட்டுமில்லாம, அம்மா, தங்கைனு என் குடும்பத்தினரையும் அக்கறையுடன் கவனிச்சிக்கிறவங்களா இருக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். அப்படியான குணத்துலேயே ஒரு பொண்ணு கிடைச்சிட்டாங்க. நானும் மாப்பிள்ளை ஆகிட்டேன்'' என உற்சாகமாகச் சிரிக்கிறார் யோகி பாபு.

``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

அவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் பெயர் பார்கவி. இருதரப்புக் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிற திருமணம், மிகவும் எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோயிலில் வைத்து நடைபெறலாம் எனத் தெரிகிறது. நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளும் வகையில் வரவேற்பு இருக்குமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.

தற்சமயம் திருநெல்வேலியில் ஷூட்டிங்கில் இருக்கிற யோகி பாபு, அடுத்த சில தினங்களில் சென்னை வந்ததும் முறைப்படி திருமணச் செய்தியை அறிவிப்பார் என்கிறார்கள்.

வாழ்த்துகள் யோகி பாபு!

பின் செல்ல