சினிமா
Published:Updated:

“சிவகார்த்திகேயன் எனக்கு சிபாரிசு செய்தார்!”

யோகிபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிபாபு

- கிருஷ்ணா

‘சுல்தான்’, ‘மண்டேலா’, ‘கர்ணன்’ என யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. காலை ஒரு படத்தின் ஷூட்டிங், இரவு ஒரு படத்தின் ஷூட்டிங் என அத்தனை பிஸியாக இருக்கும் யோகிபாபுவிடம் ஒரு மணி நேரம் கால்ஷீட் வாங்கி, பல விஷயங்களைப் பேசினேன்.

`` ‘மண்டேலா’ ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?’’

“ `மண்டேலா’வுக்குக் கிடைச்சிட்டு இருக்கிற வரவேற்பைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பாராட்டுக்கெல்லாம் அந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின்தான் காரணம். நான் ஒரு காமெடி நடிகர். நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கவுன்ட்டர்கள் போட்டு காமெடியா ட்ராவல் பண்றதுதான். ஆனா, என்னாலயும் இப்படியொரு படம் பண்ணமுடியும்னு சொல்லி, பண்ண வெச்சது அஷ்வின்தான். அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.”

`` ‘மண்டேலா’ கதையைக் கேட்டவுடன் என்ன தோணுச்சு?’’

“அஷ்வின் என்கிட்ட வரும்போது ‘லீடு ரோல்’னு சொன்னார். ‘என்னை லீடா வெச்சுப் பண்ணுனா வேலைக்கு ஆகாது. ஹீரோவா நான்லாம் பண்ணுனா பார்க்கமாட்டாங்க’ன்னு சொன்னேன். ஆனா, அவர்தான், ‘நீங்க கதையைக் கேளுங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க’ன்னு சொன்னார். அவர் சொன்ன முதல் சீனே எனக்கு ரொம்பப் பிடிச்சது. முழுமையா கதையைக் கேட்டவுடன், ‘நான் பண்றேன்’னு சொல்லிட்டேன். எல்லாப் படங்கள்லயும் காமெடிதான் பண்ணிட்டு இருந்திருக்கேன். ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ மாதிரியான படங்கள்ல பத்து நிமிஷம் எமோஷனல் சீன் பண்ணியிருப்பேன். ஆனா, படம் முழுக்க எமோஷனலா காட்டணும்னு நினைச்சது ரிஸ்க்தான். ஸ்பாட்ல ஏதாவது கவுன்ட்டர் போட்டுக்கிட்டே இருப்பேன். ‘அண்ணே! இந்த சீனுக்கு இந்த மூடு செட்டாகலை. இது எமோஷன் சீன்’னு சொல்லி என்னை மாத்திக்கிட்டே இருப்பாப்ல அஷ்வின். கதையில பயணிக்கப் பயணிக்க, அந்தக் கதையுடைய வலியைப் புரிஞ்சுக்கிட்டுப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.”

“சிவகார்த்திகேயன் எனக்கு சிபாரிசு செய்தார்!”

``பொதுவா நீங்க நடிக்கிற கேரக்டருக்கு ஏதாவது ஹோம் வொர்க் பண்ணுவீங்களா?’’

“அதெல்லாம் ஒரு வொர்க்கும் கிடையாது. இயக்குநர்கள் என்னை நம்பி வர்றாங்க. நான் அவங்களை நம்பி வர்றேன், அவ்ளோதான். நடிப்புங்கிறது எதார்த்தம்தான்.”

``நீங்க நடிச்ச ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மண்டேலா’ன்னு மூணு படங்கள் புளியங்குளத்திலேயே ஷூட்டிங் இருந்ததனால, அந்த ஊர் மக்கள் ரொம்ப நெருக்கமாகிட்டாங்களாமே?’’

“ஆமா. திருநெல்வேலி மக்கள் எல்லோரும் சூப்பர். நாம அந்த ஊருக்கு ரெகுலர் கஸ்டமராகிட்டோம். ஷூட்டிங்னாலே ‘நம்ம ஆளு வந்திருக்காப்லயா?’ன்னு வந்து பார்த்துப் பேசிட்டுப் போவாங்க. என் நம்பர் அந்த ஊர் மக்கள் நிறைய பேர்கிட்ட இருக்கு. அப்பப்போ போன்ல பேசுவாங்க.”

`` ‘கர்ணன்’ வாய்ப்பு எப்படி வந்தது?’’

“ ‘பரியேறும் பெருமாள்’ படத்துல அந்தக் கேரக்டர் நான் பண்ணுனா நல்லாருக்கும்னு இயக்குநர் ரஞ்சித்கிட்ட மாரி செல்வராஜ் சொன்னார். அதை ரஞ்சித் என்கிட்ட சொன்னார். கதை கேட்கலை. படத்துடைய லைனை மட்டும் கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டேன். படம் ரிலீஸாகி கொஞ்ச நாள் கழிச்சு மாரி எனக்கு போன் பண்ணி, ‘அண்ணே, அடுத்து ஒண்ணு பிளான் பண்றேன். நல்ல கேரக்டர் இருக்கு’ன்னு சொன்னார். அப்படித்தான் படத்துக்குள்ள வந்தேன். மாரி என்னை ஒரு சீனுக்கு நடிக்கக் கூப்பிட்டாலும், அது வொர்த்தாதான் இருக்கும்னு நம்பிக்கையா போகலாம். தனுஷ் சார்கூட முதல் படம். தங்கமான மனுஷன். எல்லோருடனும் ரொம்ப எதார்த்தமா பழகினார். அவருடைய நடிப்பு சூறாவளி மாதிரி இருக்கும். தனுஷ் சார் நடிக்கிறார்னா, நான் கேரவனில் இருந்தால்கூட வந்து மானிட்டர் பக்கத்துல உட்கார்ந்துக்குவேன். சின்னச்சின்ன ரியாக்‌ஷன்ல எல்லாம் கலக்கிடுவார். நிறைய பேசினோம்.”

``முதல் சம்பளம்?’’

“ஐம்பது ரூபாய். லொள்ளு சபாவுக்காக.”

``நல்லா நடிக்கிறீங்கன்னு சொன்ன முதல் நபர்?’’

“ ‘கலகலப்பு’ செட்ல சுந்தர்.சி சார்தான் சொன்னார்.”

``நீங்க முதன்முதல்ல செஞ்ச வேலை எது?’’

“நான் பத்தாவது ஃபெயிலாயிட்டேன். ஆறு முறை எழுதியும் பாஸ் ஆகலை. ‘உனக்குப் படிப்பு செட்டாகாது. நீ ஏதாவது வேலைக்குப் போ’ன்னு வீட்ல சொன்னவுடன் நிறைய இடங்கள்ல வேலை கேட்டேன். என் நண்பன் ஒருத்தன் ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல ஆக்ஸிஜன் சிலிண்டர் கம்பெனியில வேலை செஞ்சுட்டிருந்தான். அந்தக் கம்பெனியில மாச சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன்.”

“சிவகார்த்திகேயன் எனக்கு சிபாரிசு செய்தார்!”

``சினிமாவுக்கு வந்த பிறகு, உங்களுக்குக் கிடைச்ச முதல் கிஃப்ட் எது?’’

“ ‘காக்கா முட்டை’ சமயத்துல என் அம்மா எனக்கு ஒரு சவரன்ல செயின் போட்டாங்க, அதுதான்.”

``நீங்க கிரிக்கெட் விளையாடுற வீடியோ அடிக்கடி சோஷியல் மீடியாவுல வரும். கிரிக்கெட் அவ்ளோ பிடிக்குமா?’’

“ஆமா. எல்லோருக்கும் அப்படித்தானே! ‘மண்டேலா’ ஸ்பாட்ல எனக்கு ஷாட் இல்லைன்னா, அந்த ஊர் பசங்களோட கிரிக்கெட் விளையாடப் போயிடுவேன். நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இவங்ககூட எல்லாம் அடிக்கடி பேசுவேன். நான் கிரிக்கெட் விளையாடுற வீடியோவைப் பார்த்துட்டு நடராஜன் போன் பண்ணினார். ‘அண்ணே... இந்தியா டீமுக்கு பேட்டிங் பண்ண ஆள் வேணும். வந்திடுறீங்களா?’ன்னு கேட்டார். ‘நான் அங்க வந்துட்டா, இங்க யார் வேலை பார்க்குறது’ன்னு கேட்டேன். வாஷிங்டன் சுந்தர் பேசும்போது, ‘நாங்க சென்னை வந்ததும் ஒரு மேட்ச் விளையாடுவோம்’னு சொன்னாப்ல. ‘ஏப்பா... நீ முறுக்கிட்டுப் போடுவ. நடராஜன் லெஃப்ட்ல வேகமா போடுவாப்ல. என்னை ஆஸ்பத்திரில படுக்க வெச்சிட்டீங்கன்னா என்ன பண்றது?’ன்னு கேட்டேன். இந்த மாதிரி அப்பப்போ பேசிக்குவோம்.”

``நீங்க எந்த கிரிக்கெட் பிளேயருடைய ரசிகன்?’’

“வீரேந்திர சேவாக்குடைய பேட்டிங், க்ளென் மெக்ராத் பெளலிங் ரொம்பப் பிடிக்கும். இப்போ நம்ம ஆளு நட்டு கலக்குறாப்ல.”

`` ‘வலிமை’ படத்துல இருக்கீங்க. அஜித்கூட தொடர்ந்து பயணிக்கிறது எப்படியிருக்கு?’’

“எல்லோரும் நான் என்ன சொல்வேன்னு எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியுது. நிச்சயமா, தயாரிப்புத் தரப்புல இருந்து அப்டேட் வரும். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, இப்போ ‘வலிமை’ன்னு நாலு படத்துல அஜித் சார்கூட ட்ராவல் பண்ணியிருக்கேன். முதல் மூணு படங்களுடைய ஷூட்டிங்ல என்கிட்ட அவர் அடிக்கடி ‘யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை’ன்னு கேட்டுட்டே இருப்பார். ‘நான் பொண்ணைப் பார்க்குறேன். பொண்ணுதான் என்னைப் பார்க்கமாட்டிங்குது சார்’னு சொன்னேன். ‘கவலைப்படாதே, சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆகும் பாரு’ன்னு சொன்னார். ‘வலிமை’ ஷூட்டிங்ல பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு கட்டிப் பிடிச்சு, ‘குடும்பம்தான் முக்கியம்’னு நிறைய அட்வைஸ் பண்ணினார்.”

``டாக்டர்?’’

“ ‘கோலமாவு கோகிலா’வுக்குப் பிறகு, மறுபடியும் நெல்சன்கூட ‘டாக்டர்.’ எனக்கு போன் பண்ணி, ‘தல, அடுத்த கட்டம்’னார். நெல்சன்கிட்ட கதையெல்லாம் கேட்கலை. நிறைய இயக்குநர்கள்கிட்ட கதையே கேட்கமாட்டேன். காரணம், அவங்க மேல வெச்சிருக்க நம்பிக்கைதான். ‘டாக்டர்’ல அருமையான கேரக்டர் கொடுத்திருக்கார். நிச்சயமா எண்டர்டெயின் பண்ணும். அடுத்து, விஜய் சாரை வெச்சு நெல்சன் பண்ற படத்திலும் இருக்கேன்.”

``சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்குமான நட்பு பத்திச் சொல்லுங்க!’’

“ ‘மான் கராத்தே’ படத்துல இருந்து பழக்கம். அதுல எனக்கு ஒரே ஒரு சீன்தான். அதைப் பண்ணுனத பார்த்துட்டு, எனக்கு இன்னும் சில சீன் வெச்சாங்க. அதுக்குக் காரணம், சிவகார்த்திகேயன் சார்தான். ‘ரெமோ’, ‘காக்கி சட்டை’ ரெண்டு படத்துக்கும் என்னை சிவாதான் சொன்னார். ‘கோலமாவு கோகிலா’ எனக்கு ரொம்பப் பெரிய பெயர் வாங்கிக்கொடுத்தது. அதுக்கும் என்னைச் சொல்லி விட்டது சிவாதான். இவர் மூலமாதான் நெல்சன் எனக்கு அறிமுகம். ரெண்டு பேரும் ‘குரு’ன்னுதான் கூப்பிட்டுக்குவோம்.’’

``திருமண வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’’

“சூப்பரா போயிட்டிருக்கு. நம்மளை உரிமை கொண்டாட நபர் வந்துட்டாங்க. சில நேரங்கள்ல திட்டுகள் விழுது. நானும் புரிஞ்சு நடந்துக்கிறேன். இல்லைன்னா, கோவை சரளா மேடம் வடிவேலு சாரை இழுத்துப்போட்டு அடிக்கிற மாதிரி நாம வாங்க வேண்டியதாகிடும்.”