Published:Updated:

''உன் அப்பாலாம் ஒண்ணுமே இல்ல, ரஹ்மான்தான் எல்லாம்னு சொன்னதாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்'' - யுவன்

யுவன் ஷங்கர் ராஜா

கடந்த ஆண்டு விகடன் பிரஸ்மீட்டில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த சில சிறப்பான பதில்களும் இங்கே!

''உன் அப்பாலாம் ஒண்ணுமே இல்ல, ரஹ்மான்தான் எல்லாம்னு சொன்னதாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்'' - யுவன்

கடந்த ஆண்டு விகடன் பிரஸ்மீட்டில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த சில சிறப்பான பதில்களும் இங்கே!

Published:Updated:
யுவன் ஷங்கர் ராஜா

யுவனோட மியூசிக்கல் ப்ராசஸ் எப்படியிருக்கும்?

“என்னோட ப்ராசஸுக்கு ஒரு பார்மெட்டே கிடையாது. சமீப காலமா ஒருபக்கம் என் மகளைத் தூங்க வச்சுகிட்டு இன்னொரு பக்கம் லேப்டாப்ல இசையமைக்கிறதுதான் என்னோட ஸ்டைலா இருக்கு. க்ரியேட்டிவிட்டியைப் பொறுத்தவரை ஒருநாள் நிறைய ஐடியாக்கள் தோணும். சில நாள் தொடர்ச்சியா ஒண்ணுமே தோணாது. காடு, மலைன்னு இயற்கையோட நான் இருக்குறப்போ இன்னும் கொஞ்சம் நல்லா இசையமைக்கமுடியுதுன்னு நினைக்கிறேன்.”

 யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

‘அரவிந்தன்’ மூலமா 16 வயசில் இசையமைப்பாளரா தமிழ் சினிமாவுக்கு வந்துட்டீங்க. முதல் படமே சீனியர் நடிகரோடு கனமான கதை. எப்படி அந்த வயசில் கதையை உள்வாங்கி இசையமைக்க முடிஞ்சது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரொம்ப அழுத்தமான கதை அது. முதல்ல பாட்டு எங்கெல்லாம் வரணும்னு மட்டும் நானும் இயக்குநரும் முடிவு பண்ணினோம். அந்த வயசுல எனக்கு அனுபவம்னு பெருசா எதுவும் இல்ல. என்னோட பெரிய பலம்னு நான் நினைக்கிறது, அந்தந்த மூடுக்கேத்த மாதிரி என்னால மியூசிக் பண்ண முடியும். ஒவ்வொரு கேரக்டரும் அந்தந்தக் காட்சில எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கன்னு கண்ணை மூடி யோசிச்சு அதுக்கேத்தமாதிரி ஒர்க் பண்ணினேன். முதல் பாட்டு பவதாரிணிதான் பாடினாங்க. அம்மா சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வர்ற கீபோர்டு எல்லாம் அண்ணனுக்குத் தான் போகும். அவர்கிட்ட அடம்பிடிச்சு ஒரு ஓட்டை கீபோர்டு வாங்கி முதல்ல டிரெய்லருக்குத்தான் மியூசிக் பண்ணேன். அது பிடிச்சுப் போகவும் மொத்தப் படத்துக்கும் பண்ணச் சொல்லிட்டாங்க.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

இதுல இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. இதுவரைக்கும் இதை நான் எங்கேயுமே பகிர்ந்துகிட்டதில்ல. நான் இசையமைக்க வந்ததுக்கு முதல் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். எனக்கு பைலட் ஆகணும்ங்கிறதுதான் லட்சியம். சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சே பார்த்ததில்ல. அதுநாள் வரைக்கும் ஸ்கூல்ல ‘இளையராஜா பையன்’னு எனக்கு ஸ்பெஷல் மரியாதை இருக்கும். அந்த டைம்லதான் ரஹ்மான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சியடைஞ்சு வந்துகிட்டிருந்தார். அதனால கவனம் மெல்ல மெல்ல ரஹ்மான் பக்கம் திரும்ப ஆரம்பிச்சது. என் கஸின் ஒருத்தரே ஒருநாள் என்கிட்ட, ‘இனி உன் அப்பாவெல்லாம் ஒண்ணும் கிடையாது. ரஹ்மான்தான் எல்லாம்’னு சொன்னார். எனக்கு ரொம்பவே ஷாக். ஏன்னா, அப்பாவுக்கு அப்புறம் அண்ணன்தான் அந்த இடத்துக்கு வருவாருன்னு நாங்க எல்லாருமே நம்பிட்டு இருந்தோம். அண்ணனுக்கு எல்லாத் திறமையும் இருந்தும் ஏனோ அந்த டைம்ல க்ளிக் ஆகல. அன்னிக்கு நைட் முழுக்க மனசுல என் கஸின் சொன்னதுதான் ஓடிக்கிட்டே இருந்தது. ‘அப்பாவோட மரபு விட்டுப்போய்டக்கூடாது. அது தொடர்ந்துகிட்டே இருக்கணும்’னுதான் முதல் படத்துக்கு ஓகே சொன்னேன். ஸோ, இதுக்காக ரஹ்மானுக்கு நான் நன்றி சொல்லணும்!”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யுவனிசம் - ஒரு மாஸ் ஹீரோவுக்கான பாலோயிங் அளவுக்கு உங்களுக்கும் இருக்கு. எப்படி நடந்தது இது?

''வெங்கட் பிரபுவும் ‘எந்த ஒரு கம்போஸருக்கும் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் கிடையாது’ன்னு இதையேதான் சொல்லிட்டிருப்பார். இது எனக்குக் கிடைச்ச வரம். இசைதான் என்னையும் அவங்களையும் இணைக்குதுங்கிறபோது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்துக்கிட்டே இருப்பேன். என் பிறந்தநாள் அப்போ ரத்ததானம் பண்ணுறது, ஆதரவற்றோர் இல்லம் போறதுன்னு நிறைய விஷயங்கள் என் ரசிகர்கள் பண்ணுறாங்க. அவங்களோட இந்தச் செய்கைகளால ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு முடிவுக்கு இப்போ வந்துருக்கேன். ‘யுவன் கல்வி அறக்கட்டளை’ ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன். நிறைய பேரை இந்த அறக்கட்டளை வழியா படிக்க வைக்கப்போறேன். போக, ஆதரவற்றோர் இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்துல இணைக்கிற புள்ளியாவும் இந்த அறக்கட்டளை இருக்கும். இதனால அன்பு ரெண்டு தரப்புக்குமே கிடைக்கும்ங்கிறது என்னோட எண்ணம். இதுபத்தி வெளியே இதுவரைக்கும் சொல்லல. ஆனந்தவிகடன் வழியா இதை உலகத்துக்குச் சொல்றதுல ரொம்பவே மகிழ்ச்சி.”

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

24 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள். இந்தப் பயணத்துல உங்களால மறக்க முடியாத பாராட்டு எது?

“மறக்க முடியாத பாராட்டுன்னா அது என் ஆரம்பக்காலத்துல கிடைச்சதுதான். அப்போ அம்மாவோட அடிக்கடி ஹாலி டேவுக்கு சிங்கப்பூர் ட்ரிப் போவோம். ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்துக்கு அப்புறம் ஒரு தடவை அப்படி நாங்க சிங்கப்பூர் போய்ட்டு திரும்ப வந்தப்போ இங்கே ஏர்போர்ட்ல நான் முன்னாடி நடந்து வந்துகிட்டிருந்தேன். அம்மாவும் அக்காவும் பின்னாடி வந்துகிட்டிருந்தாங்க. அப்போ அங்க இருந்த ஆபீஸர்ஸ் அம்மாவை கை காட்டி, ‘அதுதான் யுவனோட அம்மா’ன்னு சொன்னாங்க. எனக்குக் கேட்டவுடனே ஒருமாதிரி ஷாக். ‘சரி நம்மளையும் மக்கள் ஏத்துக் கிட்டாங்க’ன்னு நான் புரிஞ்சுகிட்ட தருணம் அது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா உங்ககூட பகிர்ந்துகிட்ட அனுபவங்கள், பண்ணின அறிவுரைகளில் உங்களால மறக்கமுடியாதது எது?

“அப்பா இதுவரைக்கும் இப்படிப் பண்ணு அப்படிப் பண்ணுன்னெல்லாம் சொன்னதே இல்ல. நான் என்னெலாம் படம் பண்ணுறேன்னுகூட அவருக்குத் தெரியாது. ஒரே ஒரு தடவை ஒரு பாட்டு அம்மாவுக்குப் போட்டுக் காட்டுறப்போ அப்பாவும் கேட்டார். அந்தப் பாட்டுல ‘உனக்காக சாகிறேன்’ சாயல்ல சில வார்த்தைகள் வரும். ‘பாடல்களில் எதிர்மறை வார்த்தைகள் வேணாம். அந்த நெகட்டிவ் எனர்ஜி பாடுறவங்களையும் தொத்திக்கும். முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கலாம்’னு சொன்னார். அந்த ஒரு அறிவுரைதான் அவர் எனக்குக் கொடுத்தது. ஆனா, அடி வாங்கியிருக்கேன். சின்னப்பையனா இருந்தப்போ அப்பாவோட நேரம் செலவழிக்கிற வாய்ப்பு எப்பவாவதுதான் கிடைக்கும். அப்படி ஒருநாள் ‘பீச்சுக்குப் போலாம்’னு சொன்னார். கார்ல ஏறிக் கிளம்புறப்போ அவரைப் பார்க்க சில தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. அப்பா அவங்ககூட பேசுறதுக்கு உள்ள போயிட்டார். நான் வெளியே காருல உட்கார்ந்து, ‘பீச்சுக்குப் போலாம், பீச்சுக்குப் போலாம்’னு கத்திக்கிட்டு ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தேன். விறுவிறுன்னு வெளியே வந்து ‘பட்’னு ஒரு அடி. ‘கீப் கொயட்’னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டார். அந்த ஒரு தடவைதான் அவர் என்னை அடிச்சது.”

அப்பா- அண்ணன் - நீங்க, மூணு பேரும் பொருந்திப்போற விஷயம் எது, வேறுபடுற விஷயம் எது?

''மூணு பேரும் ஒத்துப்போற விஷயம்னா அது கண்டிப்பா இசை. அப்புறம் குடும்பம். வேறுபடுகிற விஷயம்னா அம்மாவோட நினைவு நாள் மாதிரியான நிகழ்வுகளுக்கு அவங்க போவாங்க. நான் போகமாட்டேன். ஏன் வரலைன்னு அவங்க கேட்கவும் மாட்டாங்க. நான் இஸ்லாமுக்கு மாறப்போறேன்னு சொன்னப்போ அப்பாவும் அண்ணனும் சப்போர்ட்தான் பண்ணினாங்க. எனக்கான வெளியை அவங்க மதிக்கிறாங்க. அந்தப் புரிதல் எங்களுக்குள்ள எப்பவுமே இருக்கும்.''

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

நா.முத்துகுமார் உங்கள் இசையில் எழுதுனதுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு எது?

“முத்துவோட எல்லாப் பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்தப் பாட்டு கேட்டாலும் அந்தப் பாட்டுக்கு நானும் அவரும் எப்படில்லாம் ஒர்க் பண்ணுனோம்ங்கிறதுதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். என் கண்ணைப் பார்த்தே எனக்கு அந்த வரிகள் ஓகேவா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவார். அப்படி ஒரு புரிதல் இருந்தது எங்களுக்குள்ள. ‘ஒருநாளில்’ பாட்டுக்கு நான் டியூன் கம்போஸ் பண்ணி முதல் நாள் கொடுத்துட்டேன். அன்னிக்கு நைட்டே செல்வாவோட உட்கார்ந்து முத்து அதுக்கு வரிகள் எழுதிட்டாரு. மறுநாள் செல்வா என்னைக் கூப்பிட்டு வரிகள் வாசிச்சுக் காமிச்சதும் அன்னிக்கே ரெக்கார்டிங் போய்ட்டேன். அந்த ஒரு இரவு முழுக்க நாங்க மூணு பேரும் அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்ப லூப்ல கேட்டுக்கிட்டே இருந்தோம். இப்படி நிறைய ஞாபகங்கள். லேட்டஸ்டா ராம் இயக்கிய படத்துக்கு ஒர்க் பண்ணுனப்போ கூட இப்போ இந்த இடத்துல முத்து இருந்திருந்தா நல்லா இருக்குமே’ன்னு தோணுச்சுதான். ஆனா என்ன பண்ணுறது?”

வாழ்க்கையில ஒரு மோசமான காலகட்டத்துல மது குடிக்க ஆரம்பிச்சதா நீங்களே ஒரு நேர்காணல்ல சொல்லியிருந்தீங்க... அதென்ன காலகட்டம், அந்த மதுப்பழக்கத்திலிருந்து எப்படி மீண்டிங்கன்னு பகிர்ந்துக்க முடியுமா?

“அம்மா இறந்த சமயம் அது. நம்மளை இத்தனைநாளா தாங்கின தூண் இனி இல்லங்கிறதை என்னால ஏத்துக்க முடியல. அதுவரைக்கும் எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவங்க இழப்பைத் தாங்கிக்க முடியாமதான் அந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சேன். ஆனா, அந்தச் சமயத்துலயும், ‘இது நாம இல்லையே... நாம இதெல்லாம் பண்ண மாட்டோமே’ன்னு உள்ள தோணிகிட்டேதான் இருந்தது. அந்தச் சமயத்துல சினிமாவை விட்டே விலகியிருந்தேன். அம்மாவோட கடைசி நாள்ல பெட்ல இருந்து அவங்க கை சட்டுனு கீழே விழுந்தது. டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு அவங்க இறந்துட்டதா சொன்னாங்க. ‘போன நிமிஷம் வரை அந்தக் கையில இருந்த ஆன்மா அதுக்குள்ள எங்கே போச்சு’ங்குற கேள்வி துரத்திக்கிட்டே இருந்தது. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாமுக்குள்ள கொண்டு போச்சு. இந்தமாதிரியான சமயங்களில் எல்லாருக்குமே ஒரு பிடிப்பு தேவைப்படும். அப்படி இஸ்லாம் எனக்கான ஒளியைக் கொடுத்துச்சு. மீண்டு வந்தேன்.”

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

அப்பா காப்பிரைட் பிரச்னைகளை பேசினப்போ அவருக்கு ஆதரவாவும் எதிராவும் நிறைய கருத்துகள் வந்தது. நீங்க ஒரு இசையமைப்பாளரா காப்பிரைட் பிரச்னையை எப்படி அணுகுறீங்க?

“காப்பிரைட் பிரச்னையை நாம இனியும் முறைப்படுத்தலன்னா இதுக்கு அப்புறம் வரப்போற இசையமைப்பாளர்கள் ரொம்பவே சிரமப்படுவாங்க. அதுக்காகவாவது இந்த காப்பிரைட் பிரச்னையை ஸ்ட்ரீம்லைன் பண்ணித்தான் ஆகணும்.”

“யுவன்னாலே எல்லாருக்கும் தீம் மியூசிக்தான் ஞாபகத்துக்கு வரும். நீங்க இசையமைச்சதிலேயே உங்க மனசுக்கு நெருக்கமான தீம் மியூசிக் எது?”

“மங்காத்தாதான். அளவா மூணே நோட்ஸ். அதை எப்போ கேட்டாலும் அந்த கேரக்டர் ஞாபகத்துக்கு வரணும்னு முடிவு பண்ணி வொர்க் பண்ண தீம் அது. ‘தென்பாண்டிச் சீமையிலே’ பி.ஜி.எம் கேட்டா வேலுநாயக்கர் ஞாபகத்துக்கு வருவார்ல... அதேமாதிரி! ஆனா, அந்த தீம் இவ்ளோ பெரிய ஹிட்டாகும்னு நானே எதிர்பாக்கல. அந்த ரீச், அந்தப் படத்துல வேலை பார்த்த காலகட்டம்னு எல்லா வகையிலயும் ரொம்ப நெருக்கமான தீம் அது.”

“ரஹ்மான் வீட்ல உங்களுக்கு ஒரு ரசிகர் இருக்கார்னு கேள்விப்பட்டோம். அமீனுக்கும் உங்களுக்குமான நட்பு எப்படிப்பட்டது?”

“ரஹ்மான் சாரும் நானுமே அப்பப்போ சாட் பண்ணிப்போம். அவர் பையன் அமீன் கூட பேட்மின்டன் ஆடுவேன். அமீனும் நானும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். அவங்கவங்க வொர்க் பத்திப் பேசிப்போம். அமீனை எனக்காக ஒரு பாட்டு பாடச்சொல்லிக் கேட்ருக்கேன். ஒரு தனியிசைப் பாடல் அது. அவருக்கு இனிதான் ட்ராக் அனுப்பணும்.”

“உங்க பொண்ணு ஜியா எவ்ளோ சுட்டி?”

“ரொம்ப ரொம்ப சுட்டி. இந்த லாக்டௌன் முழுக்க தாத்தாவோட ஃபேஸ்டைம்ல பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்பா இத்தனை வருஷமா இசை, பயணம்னு ஓடிக்கிட்டே இருந்தவர். லாக்டௌன்ல அவர் அதையெல்லாம் மிஸ் பண்ணி வருத்தப்படக்கூடாதேன்னு தினமும் ஜியாவை அவர்கூட பேச வெச்சேன். ரெண்டு வயசுல இருந்தே அப்பாவோட எந்தப் பாட்டு போட்டாலும் ‘இது தாத்தா பாட்டு’ன்னு சரியா சொல்லுவாங்க. ஒருநாள் டெஸ்ட் பண்ணுறதுக்காக எம்.எஸ்.வி அங்கிளோட பாட்டை ஓட விட்டேன். எதுவுமே சொல்லல. ஆனா அப்பா பாட்டை மட்டும் எப்படியோ கண்டுபிடிச்சடுறாங்க. எப்படின்னு எனக்கே புரியல.”

ஜியா
ஜியா

``உலகம் முழுக்க அரசியலும் இசையும் இணைந்த புள்ளிகள் நிறையவே இருக்கு. பாப் மார்லியை உதாரணமாச் சொல்லலாம். தமிழ்ச் சூழல்ல மட்டும் ஏன் இசை அரசியலில் இருந்து விலகியிருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

“தனித்தனியா இருக்கணும்னு நான் சொல்லல. ‘Black Lives matter’ பிரச்னையாகட்டும், என் டி-ஷர்ட் சர்ச்சையாகட்டும், ஏன் மக்கள்கிட்ட ரீச் ஆகுதுன்னா மக்களும் என்னோட உணர்வுகளைப் பிரதிபலிப்பதால்தான். நான் சொல்றதை அவங்களும் பொருத்திப் பாத்துக்குறாங்க. அது அப்படித்தான் நடக்கும். மத்தபடி நான் எந்தெந்தப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறேன், எதைத் தவிர்க்கிறேங்கிறது எல்லாம் என்னோட விருப்பம்தானே!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism