Published:Updated:

`தெறி’ டு `வேதாளம்’... எட்டு எட்டா பிரிக்கச்சொன்ன `பாட்ஷா' ஃபார்முலா படங்கள்!

பாட்ஷா... மாணிக் பாட்ஷா!
பாட்ஷா... மாணிக் பாட்ஷா!

எனர்ஜி, ஸ்டைல், மாஸ், க்ளாஸ் எல்லாம் கலந்த காக்டெய்ல் ஹீரோ. அதே அம்சங்கள் அத்தனையும் பொருந்திய வில்லன். பிரமாதமான முன்கதை, பிரமாண்டமான மேக்கிங், பரபரக்கும் பன்ச் வசனங்கள் எல்லாம் தாண்டி,`பாட்ஷா'வின் வெற்றி அதன் திரைக்கதையில் அடங்கியிருக்கிறது.

`பாட்ஷா', மாஸ் படங்களின் பாட்ஷா! தமிழ் ரசிகர்களுக்கு என்றென்றைக்கும் பிடித்தமான படம். எனர்ஜி, ஸ்டைல், மாஸ், க்ளாஸ் எல்லாம் கலந்த காக்டெயில் ஹீரோ. அதே அம்சங்கள் அத்தனையும் பொருந்திய வில்லன். ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், ஆட்டையைப் போட்ட பின்னணி இசைத் துணுக்குகள். பிரமாதமான முன்கதை, பிரமாண்டமான மேக்கிங், பரபரக்கும் பன்ச் வசனங்கள் எல்லாம் தாண்டி, `பாட்ஷா'வின் வெற்றி அதன் திரைக்கதையில் அடங்கியிருக்கிறது. அதிலும் இன்டர்வெல் காட்சியில்.

பாட்ஷா
பாட்ஷா

அதுவரை சாதுவாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதருள் மாணிக்கமான மாணிக்கம், தன் தங்கையின் மீது லோக்கல் வில்லன் கைப்பட்டதும், பாட்ஷாவாக மாறி அடிகுழாயைப் பிடுங்கி அடியாட்களை அடித்துத் துவைக்கும் காட்சி, வேற வேற லெவல்! இதே ஃபார்முலாவைப் பின்பற்றி நிறைய படங்கள் அதே மேஜிக்கை நிகழ்த்த முயற்சி செய்திருக்கின்றன. அதைச் சரியாகச் செய்த சில படங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்...

தெறி (2016) :

விஜய் குமார்
விஜய் குமார்

கேரளாவில் குடுமி வைத்த குருவில்லாவாக பேக்கரி நடத்திக்கொண்டிருப்பார் விஜய். வண்டியைக் கூட வேகமாக ஓட்ட பயப்படும் அப்பாவாக, அப்பாவி முகம் காட்டிக்கொண்டிருப்பார். திடீரென, அங்குள்ள ஒரு சேட்டா கூட்டத்துடன் பிரச்னையாக, அந்தச் சேட்டா கூட்டமோ விஜய்யின் மகளைப் போட்டுத்தள்ள ஒரு மழை இரவில் கிளம்பிவர, பேக்கரிக்காரர் ஜோசப் குருவில்லா, பேய் அடி அடிக்கும் விஜய் குமாராக மாறி நிற்பார். மாணிக்கத்துக்கு நடந்ததுபோல் அதே இரவு, அதே உள்ளூர் வில்லன்கள், அதே டிரான்ஸ்ஃபர்மேஷன். ``சொல்லுங்க... தமிழ்நாட்ல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என விஜய்யிடம் கேட்காமல், நேரடியாக கூகுளில் தேடி பதில் தெரிந்துகொள்வார் ஏமி. டெக்னாலஜி!

வேதாளம் (2015) :

வேதாளம் கணேஷ்
வேதாளம் கணேஷ்

விஜய் கேரளா போனதுபோல், அஜித் கொல்கத்தா சென்றிருப்பார். ரஜினி ஆட்டோ ஓட்டியதுபோல், அஜித் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருப்பார். திடீரென, ஒரு நாள்... இல்லை இல்லை அதேபோல் ஓர் இரவு, அதேபோல் உப வில்லன் கேங்கினர் அஜித்தைக் கப்பலுக்குத் தூக்கிவந்து கட்டிப்போட்டு அடிப்பார்கள். அதுவரை டாக்ஸி ஓட்டுநர் கணேஷாக அழுதுகொண்டிருப்பவர், `டக்' என டான் வேதாளமாக மாறி அடியாட்களின் முதுகெலும்பை ஒடித்துத் தெறிக்க விடுவார்.

ஏய் (2004) :

சக்திவேல்
சக்திவேல்

`வேதாளம்' படத்துக்கும் `ஏய்' படத்துக்கும் இடையே பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கும். `தமிழ் என் தங்கச்சி இல்லைடா' என அஜித் சொன்னால் `வேதாளம்'. `வேலு என் அண்ணன் இல்லடா' எனத் தங்கச்சி சொன்னால் `ஏய்'. பெட்டிப்படுக்கையோடு நாயகன் சென்னையிலிருந்து கொல்கத்தா சென்றால் `வேதாளம்'. சென்னையிலிருந்து பழனிக்குச் சென்றால் `ஏய்'. அவ்வளவுதான்! இந்தப் படத்திலும் அதேபோல் ஒரு லோக்கல் வில்லன் கேங், அவர்கள் தங்கச்சியிடம் பிரச்னை செய்ய, அதுவரை அப்பாவியாக இருக்கும் வேலு, மிலிட்டரி சக்திவேலாக மாறி அடியாட்களை அடித்து நொறுக்குவார். நொறுக்கிவிட்டு, " வெடிக்காத வரைக்கும் எரிமலை அமைதியாகத்தான் இருக்கும்" என வசனம் பேசுமிடம், சாரே கொல மாஸு!

பிஸ்தா (1997) :

மணிகண்டன்
மணிகண்டன்

படத்தின் முதற்பாதி முழுக்க, மாலை அணிந்த ஐயப்ப பக்தனாக அப்பாவி முகம் காட்டியிருப்பார் கார்த்திக். திமிரு பிடித்தவர் மட்டுமல்ல, அந்தத் திமிருக்கே பிடித்தவரான நக்மா, அப்பாவின் சொத்து முழுவதையும் தனதாக்க, அப்பாவி கார்த்திக்கை ஏமாற்றி கல்யாணம் செய்துகொள்வார். இன்டர்வெல் காட்சியில், கல்யாண மண்டபத்துக்கு வரும் மணிவண்ணன்,`மாப்ளே... ஏய் மாப்ளே...' என சவுண்டு கொடுக்கும்போதுதான் தெரியும், ஏமாந்தது கார்த்திக் அல்ல, நக்மா என! முதற்பாதியில், `நீ பெரிய பிஸ்தாவாமே' என அடியாட்கள் கேட்கும்போது, `ஏது பாதாம், பிஸ்தாவா' என வெகுளியாய்ச் சொல்லி வெளு வாங்கும் கார்த்திக், உண்மையில் ஒரு பேட்டை பிஸ்தா என்பதே அப்போதுதான் தெரியவரும்! அந்த நொடி, மௌலியோடு சேர்ந்து படம் பார்ப்பவர்களும் கைதட்ட தொடங்கிவிடுவார்கள். பிஸ்ஸ்த்தாஆ...

கிரி (2004) :

கிரி
கிரி

`தெறி'யின் விஜய் பேக்கரி ஓனராக இருப்பார். `கிரி'யில் அர்ஜுன் பேக்கரியில் தொழிலாளியாக இருப்பார். அதுவரை, வீண் சண்டைக்குப் போகாமல் வடிவேலுவுக்குக் காதல் ஐடியாக்கள் கொடுப்பதும், பாக்ஸிங் கற்றுத்தருவதும், காந்தத்தை வைத்து மேஜிக் காட்டுவதுமாக வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருப்பவர், வழக்கம்போல் இன்டர்வெல் காட்சியில்தான் தலையில் உருமா கட்டிக்கொண்டு உருமாறி நிற்பார். கிரி ஏதோவோர் ஏமாந்த சோனகிரி அல்ல, ரெண்டு கால் சிங்கம்டா கிரி என்பதே அப்போதுதான் தெரியவரும். அதன்பிறகு, படமும் ஃப்ளாஷ்பேக் மோடுக்குச் சென்றுவிடும். 

திமிரு (2006) :

கணேஷ்
கணேஷ்

`வேதாளம்' கணேஷுக்கு முன்னால், `திமிரு' கணேஷ்தான். மருத்துவப் படிப்பை வெற்றிகரமாய் முடித்து மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து படித்துக்கொண்டிருப்பார் விஷால். அவரிடம் ஒரண்டை இழுக்கும் உப வில்லன் கேங், சோற்றில் ஊறுகாயையும் உப்பையும் அள்ளிப்போட்டு, அதை உண்ணச் சொல்லி டார்ச்சர் கொடுக்கும். அப்போதும், பொறுமை எருமையிலும் பெரிது என மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஊறுகாயோடு பிசைந்து அடிப்பார் விஷால். அப்போதும் அந்த பக்கிகள் அடங்காது, விஷாலின் நெற்றியைப் பிளந்துவிட, மதுரைக்காரர்களை மைதானத்தில் இறக்கி தன் மாஸைக் காட்டுவார். ஆனால், அப்போதும் சண்டை எல்லாம் போடமாட்டார். இன்டர்வெல் காட்சியில்தான் பஸ்ஸின் பம்பரைப் பிடுங்கி, அடியாட்களை அடித்து விரட்டிவிட்டு, "டேய் நானும் மதுரைக்காரன்தான்டா" என ஹைபிட்சில் அலறுவார். தரமான சம்பவம்ப்பு...

விஸ்வரூபம் (2013) :

விஸாம் அகமது காஷ்மிரீ
விஸாம் அகமது காஷ்மிரீ

இது உலக நாயகனின் முறை. ஆரம்பத்தில், அவ்வளவு அப்பாவியாய் `கதக்' சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார். அதேபோல், உப வில்லன் கேங்கிடம் சிக்கிக்கொண்டு, `கடைசியா ஒரு முறை கடவுள் கிட்டே ப்ரே பண்ணிக்கிறேனே' என அழுது அனுமதி வாங்கி, அடியாட்களை கடவுளிடம் அனுப்பிக்கொண்டிருப்பார். ஒரு `கதக்' டான்ஸர் இப்படி பறந்து பறந்து அடிப்பதைப் பார்த்து `கெதக்' என அமர்ந்திருப்பார் பூஜா குமார். நாமும்தான்! பிறகுதான், தெரியும் அவர் அப்பாவி டான்ஸர் விஸ்வநாத் அல்ல, ரா ஏஜென்ட் மேஜர் விஸாம் அகமது காஷ்மிரி என்று! இவன் யாரென்று தெரிகிறதா... இவன் தீயென்று புரிகிறதா!

இதே ஃபார்முலாவில் வந்த வேறெந்த படங்கள் எல்லாம் மிஸ் ஆகியிருக்கிறதென... கமென்ட்டில் விஸ்வரூபம் எடுங்கள் மக்களே..!

``ஓடாதுன்னு சொன்ன சிலபேர்; எக்ஸ்ட்ரா 50 நாள் ஓடும்னு சொன்ன அவர்..!" - மோகன் ராஜா #15YearsOfMKumaran
அடுத்த கட்டுரைக்கு