Published:Updated:

மீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்! (59-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்! (59-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
மீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்! (59-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்! (59-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

பிக்பாஸ் தந்த கொலைவெறி task-ஐ விடியற்காலை வரையிலும் சுஜா செய்து கொண்டிருந்தார். சிநேகனுக்கு ஓய்வு தந்து விட்டு கணேஷ் வந்து உதவினார். சுஜாவைப் பார்க்க உண்மையிலேயே பாவமாக இருந்தது. கின்னஸ் சாதனையில்கூட பல மணி நேர முயற்சிகளின் போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையில் சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதியிருக்கிறது. பிக்பாஸ் அதைக் கூட அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. 

இத்தனை மனித உழைப்பை ஆக்கப்பூர்வமான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் மனித சக்தியைப் போன்ற ஆச்சர்யமான விஷயமே இல்லை. ‘இதைச் செய்யவே முடியாது. மிகக் கடினமான பணி’ என்று நாமே அவநம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நெருக்கடியான சூழலில் வேறு வழியில்லாமல் செய்து முடித்தே விடுவோம். ‘நாமா செய்தோம்’ என்று நமக்கே பிறகு ஆச்சர்யமாக இருக்கும். 

வேறு வழியில்லை. இப்படி நினைத்துக் கொண்டுதான் சுஜா தன்னைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. சுஜா தன்னுடைய மனஉறுதியை கைவிடாமல் இருந்தார். Sportsmanship…. மன்னிக்க.. sportswomanship. அவரிடம் நிறைய இருக்கிறது. ‘இது ஒரு கேம். எப்படியாவது முடித்து விட வேண்டும்’ என்கிற பிடிவாத உற்சாகத்துடன் இருக்கிறார். 

ஆனால் அப்போது எழுந்து வந்த காஜல் அந்த உற்சாகத்தைக் கலைத்துக் கொண்டிருந்தார். ‘கேமா இருந்தா கூட நான் இதைச் செய்ய மாட்டேன். என்னால இன்னொருத்தர் தூக்கம் கெடும்-னா நான் ஒத்துக்க மாட்டேன். இது எண்டர்டெயிண்ட்மெண்ட், இல்ல… பனிஷ்மெண்ட்’

‘இந்த விளையாட்டில் வெற்றியடைய வேண்டுமென்றே நோக்கோடு செயல்படுங்கள்’ என்று கமல் புதிய போட்டியாளர்களிடம் சொல்லி அனுப்பியதற்கு மாறாக ‘இதுல வின் பண்ணணும்னுலாம் எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார் காஜல்.

விடியற்காலையை கடந்த பின்னரும் போட்டியை நிறுத்துவதற்கான எவ்வித சமிக்ஞையும் வரவில்லை. ‘பிக்பாஸ்… நீங்க சொன்னது இந்திய நேரத்தோட காலையா.. இல்ல..  வேற நாட்டோட நேரமா?” என்று எரியும் நெருப்பில் காமெடி பெட்ரோல் ஊற்றினார் கணேஷ்.

சரியாக காலை 08.00 மணிக்கு பிக்பாஸ் திருப்பள்ளியெழுச்சிப் பாடலின் போது போட்டியை நிறுத்துவதான ஒலி எழுப்பப்பட்டது. விடியற்காலை பாடலாக ‘தூங்காதே… தம்பி .. தூங்காதே.. பாடல் ஒலித்தது. (என்னா வில்லத்தனம்). காலையில் ஒலிக்கும் பாடலாக பழைய திரையிசைப்பாடல் ஒலிப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்ற வரி ஒலிக்கும் போது ரைசாவிற்கு க்ளோசப் போட்ட அந்த கேமிரா மகராசன் பயங்கர குறும்புக்காரனா இருக்கணும். 

சுஜா ‘சிவராத்திரி’ போட்டியில் டரியலுடன் வெற்றி பெற்றதால் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார். பதிலாக அவர் வேறு மூன்று பலியாடுகளை தேர்ந்தெடுத்தார், பிந்து, காஜல், ஹரிஷ். ‘வெச்சு செஞ்சிட்டாளே’ என்று முணுமுணுத்தார் காஜல்.

“அது ஏன் task-ற்கு என்னையே செலக்ட் பண்றீங்க?’ என்று அலுத்துக் கொண்டார் காஜல்…  ‘ஆ….. ங்’ என்று அம்மணி இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். இட்லி கடை அக்காவிடம் பேசுவது மாதிரியே இருக்கிறது. 

ஆரவ் சொல்வது போல இந்த task-க்கிற்கு பழைய போட்டியாளர்களிடமிருந்து எவரையாது சுஜா தேர்ந்தெடுத்திருக்கலாம். எதற்கு வம்பு என்று விட்டு விட்டார் போல. ‘அவளுக்கு என்னைப் பிடிக்காதுன்னு தெரியும்’ என்றார் காஜல். இங்கு வந்ததில் இருந்து இதே முன்தீர்மானத்தில் இருக்கிறார். இங்கு வந்த பிறகு அதனால் உருவாகும் கசப்புகளின் மூலம் ஒருவரின் மீது அபிப்ராயம் ஏற்படுவது வேறு. வந்ததில் இருந்தே முத்திரை குத்தி விடுவது வேறு. 

காஜல் நெகட்டிவ் பப்ளிசிட்டி உத்தியை பயன்படுத்துகிறார் என்பது சிநேகனின் கணிப்பு. 

**

‘யாரை நம்பி நான் பொறந்தேன். போங்கடா. போங்க’ பாடலை தெலுங்கு ரீமிக்ஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார் வையாபுரி. இனி டப்பிங் படங்களுக்கான பாடலை இவரே எழுதலாம் போல. பிந்து பூண்டு சம்பந்தமான பொருள்களை வேண்டி பெற்றுக் கொண்டதால், பூண்டினால் ஏற்படக்கூடிய விபரீதங்களை வையாபுரி நகைச்சுவையாக சொல்லிக் கொண்டிருந்தார். 

பிக்பாஸ் அனுபவம் காசு தந்தால் கூட கிடைக்காது. வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடிய அனுபவமாக இருக்கும் என்கிற புல்லரிப்புடன் ஆரவ்வும் ரைசாவும் காஜலிடம் கூறிக் கொண்டிருந்தனர். 

ஒரு  நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. 

வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் ஜோசியக்காரனிடம் சென்றானாம் ‘உங்களுக்கு சனி திசை.. மொதல்ல ஒரு.. ஆறுமாசத்துக்கு கஷ்டமாத்தான் இருக்கும்’ என்று ஜோசியர் சொல்ல.. ‘அதற்குப் பிறகு..’ என்று வந்தவன் ஆவலுடன் கேட்க.. ஜோசியர் சாந்த பாவத்துடன் ‘அப்படியே பழகிடும்’ என்றாராம். ஆரவ் – ரைசா தத்துவமும் இந்த நோக்கில் இருப்பதாகப் படுகிறது. என்றாலும் இந்த அனுபவங்களை அவர்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்வது மகிழ்ச்சி. 
**
‘விடாதே இழு’ என்றொரு task. சிவராத்திரி போட்டியில் வெற்றி பெற்ற சுஜா தேர்ந்தெடுத்த மூவரும் சுஜாவை ஒரு டயரின் மீது அமர வைத்து இழுக்க வேண்டும். எவர் குறைந்த நேரத்தில் அதிக தூரம் இழுக்கிறாரோ.. அவரே வெற்றியாளர். தோற்றவர் இன்று இரவிற்கான task-ல் போய் சிக்கிக் கொள்வார். 

‘ஏதாவது அடிபட்டா என்ன பண்றது’ என்று அப்போதே கேட்டு விட்டார் காஜல். ஒருமுடிவோடுதான் கேட்டார் என்பது பிறகு தெரிந்தது. 

பூண்டு நிறைய சாப்பிட்டிருந்தும், ஃபார்பி டால் பிந்துவின் உடலில் சக்தியில்லை. இழுக்க முடியாமல் சிரமப்பட்டார். நேரம் முடிந்து போனது. அடுத்து இழுக்க வந்த காஜல் எளிதாகவே சுஜாவை நகர்த்திக் கொண்டு சென்றார். ஆனால் இடையில் வலியால் கத்திய சுஜாவை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இழுக்க முயல, டயரில் மாட்டிக் கொண்ட சுஜாவின் விரல்கள் வலியால் நடுங்கின. 

காஜல் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது. தாம் இரவு task-ல் சென்று சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் காஜலின் மனதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் சுஜாவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இழுத்திருக்க வேண்டும் என்றே நம்புவோம். மிகுந்த பதற்றத்துடன் பல முறை மன்னிப்பு கேட்டார் காஜல். ஒரு ஸ்போர்ட்ஸ் வுமனின் பெருந்தன்மையோடு ‘பரவாயில்லை காஜல். இது கேம்.. நீங்க என்ன செய்வீங்க?’ என்று பயங்கரமான வலியின் இடையிலும் அதை சர்ச்சையாக்காமல் சுஜா கடந்தது சிறப்பு. 

அடுத்த வந்த ஹரீஷ் மிக எளிதாகவே இழுத்துச் சென்று போட்டியில் வென்றார். மீண்டும் மீண்டும் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உடல்பலத்தின் மூலமான போட்டி என்றால் ஆண்கள் வெல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது. காஜல் இழுத்த போது விபத்தின் காரணமாக இடையில் தடைப்பட்டதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கலாம். 

பாவம், பிந்து. இந்தப் போட்டியில் தோற்றதின் மூலமாக அன்றைய சிவராத்திரி போட்டியின் பலியாடாக தேர்வானார். ‘மவனே.. இன்னிக்கு யாராவது தூங்கினீங்கன்னா அவ்வளவுதான். எல்லோரும் எனக்காக உதவணும்’ என்றார் பிந்து. 


**
ரைசா பகலில் தூங்கி விடக்கூடாதே என்கிற பதற்றத்தில் இதர அனைவரும் தூங்கவில்லை. ‘கிட்டப் போய் அட்வைஸ் செஞ்சா என்னைத் திட்டிடுவா’ என்றார் காஜல். 

‘எப்பதான் எனக்கு ஹேர்கட் பண்ணப்போறே?’ என்று காமிராவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஆரவ். ‘திரும்பிக்கோ.. இல்லைன்னா.. மூஞ்சில ஸ்பிரே அடிச்சுடுவேன்’ – ஓவியாவின் இந்த புகழ்பெற்ற டயலாக்கை ஆரவ்வை வைத்து சொல்லச் சொன்னார் காஜல். வெளியில் பார்த்து வந்ததால் அவருக்குத் தெரியும் விஷயம் ஆரவ்வுக்குத் தெரியாது போலிருக்கிறது. தெரிந்திருந்தால் சொல்லத் தயங்கியிருப்பாரோ என்னமோ. காஜலின் வற்புறுத்தல் காரணமாக சொன்னார். என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தானே?

ரைசா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஒரு திடகாத்திரன் மூன்று வரிசை முட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு சென்றார். வையாபுரியின் தொல்லை தாங்காமல் கணேஷ்தான் மாறுவேடத்தில் வந்து எடுத்துக் கொண்டு சென்றாரோ என்று முதலில் தோன்றியது. அப்படியில்லையாம். பகலில் தூங்கக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ரைசா தூங்கிக் கொண்டிருந்ததால் இது பிக்பாஸ் அனுப்பிய ஆள் செய்த திருவிளையாடலாம். 

‘வட போச்சே’ என்பது போல் ‘முட்டை போச்சே’ என்று பிந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, ‘போனாப் போகட்டும்.. என்ன இப்ப..’ என்று தத்துவம் பேசிய வையாபுரி ஊர் முழுக்க இந்தச் செய்தியை பிந்துவை விட அதிகக் கவலையுடன் பரப்பிக் கொண்டிருந்தார். ‘திருடனைப் பிடிக்க பிந்து போச்சு’ என்று வையாபுரி சொன்னதைக் கேட்டு திருவாளர். திருடனே பலமாக சிரித்திருப்பார். 

‘யார்ரா.. அவன்’ என்று கெத்தாக கிளம்பிய ஆரவ், அது பிக்பாஸ் ஆள் செய்தது என்றதும். ‘அப்ப.. செஞ்சது கரெக்ட்தான்’ என்று அப்படியே பம்மியது ரகளையான காமெடி. ‘அதெல்லாம் அழுகின முட்டை. மாத்தித் தர்றதுக்காக எடுத்திட்டு போயிருக்காங்க’ என்று ஜாலியாக சமாதானம் சொன்ன வையாபுரி ‘இருக்கிற முட்டையையாவது ஆம்லேட் போட்டுத் திங்கலாம். அதுவும் போயிடப் போகுது’ என்று கலாட்டா செய்து கொண்டிருந்தார். 

‘வொர்க்அவுட்’ செய்து கொண்டிருந்த ஆரவ்வைக் காட்டி ‘மிஸ்டர். திருடர்.. அவர் மஸில்ஸை பாருங்க. அடுத்த தடவ வந்தீங்கன்னா செத்தீங்க.. அதுக்குத்தான் இவர் உடற்பயிற்சி செஞ்சிட்டிருக்கார்’ என்று ஏதோ சாலையில் கம்பி மீது நடக்கும் வித்தைக்காரரைப் போல.. ‘பாருங்க.. சார்… வயித்துப்பொழப்புக்காக… வித்தைக் காட்டறோம்’ ரேஞ்சுக்கு காமெடி செய்து கொண்டிருந்தார் ரைசா. 

‘அய்யோ.. பிக்பாஸ். அதெல்லாம் இல்ல’ என்று கைப்புள்ள ரேஞ்சுக்கு விளையாட்டாக பம்மினார் ஆரவ். 
**
ரைசா தூங்கியதற்காக அதிகாரபூர்வமான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. முட்டை போனது ரைசா தூங்கியதால்தான். தவறு செய்தது மட்டுமல்லாமல் அதைப் பற்றி கவலைப்படாமல் எள்ளி நகையாடியது செக்ஷன் 320-ன் படி அதிபயங்கர குற்றம்’ என்று சரமாரியாக ரைசா மீது குற்றம் சாட்டப்பட்டது. “தூக்கம் வந்துச்சு தூங்கினேன்.. என்னங்கய்யா .. இப்ப” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு அலட்சியமாக இந்தக் குற்றச்சாட்டை கடந்து சென்றார் ரைசா. 

குற்றப்பத்திரிகையின் இரண்டாவது ஷரத்துதான் ரைசாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது போல. அதை நினைவுப்படுத்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளானார். ‘சிரிச்சாக் கூட தப்பா… அடப் போங்கய்யா.. வேணுமின்னா என்னை எலிமினேட் செஞ்சுக்கங்க’ என்று வெறுப்பாக கூறினார். 

‘இனிமே பிக்பாஸ் வீட்ல யாரும் ஜோக்கடிக்காதீங்க.. ஜோக்கடிச்சா தப்பாம்’ என்று மேலதிகமாக நொந்து போனார் ரைசா. ‘ஒரு ஸாரி சொல்றதுக்கு என்ன கேடு?’ என்று வேறுபக்கம் முணுமுணுத்துக் கொண்டிருந்தார் சிநேகன். 

பேய் task-ன் போது இரவில் தூக்கம் பாதிக்கப்பட்டதால் ரைசா பகலில் தூங்கியது அத்தனை பெரிய குற்றமில்லை என்று இந்தத் தொடரில் முன்னர் எழுதியிருந்தோம். ஆனால் இம்முறை அவ்வாறான பிரச்சினைகள் ஏதுமில்லை என்பதால் ரைசாவின் பிடிவாதம் இப்போது அபத்தமாகத் தெரிகிறது. 

தாம் செய்த தவறால் மற்றவர்களின் உணவுப்பொருள்கள் பறிபோனது குறித்த வருத்தமோ குற்றவுணர்ச்சியோ அல்லாமல் அதையும் விளையாட்டாக அணுகியது ரைசா செய்த கூடுதலான தவறு. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ‘இனிமே ஜோக் அடிக்காதீங்க’ என்று இதை திரிப்பது வேடிக்கை. முன்பு இதே மாதிரியான தவறைத்தான் வையாபுரியும் செய்தார். 

மனித மனங்களில் உறைந்துள்ள தற்காப்பு நடவடிக்கைகள் அவர்களை இம்மாதிரிதான் யோசிக்கத் தூண்டும். ஆனால் தாம் சொல்லுவது சரியான காரணமா என்பதை சற்று நிதானமாக உட்கார்ந்து யோசித்தால் கூட தம் தவறுகளை உணர முடியும். 

‘எனக்கு வீட்டுக்குப் போகணும்’ என்று சிணுங்கிய ரைசாவை, ‘அட்வைஸ் பண்ணா கோச்சிப்பியா?’ என்று முன்ஜாக்கிரைதையாக கேட்டுக் கொண்டார் காஜல். ‘எதுவாக இருந்தாலும் கோபத்துல முடிவு செய்யாதே. ரெண்டு மணி நேரம் கழிச்சு முடிவு பண்ணு’ என்று அவர் செய்த உபதேசம் சரியானது. 
**
வையாபுரிக்கு ‘buddy’ என்கிற சொல்லைக் கற்றுத்தரும் பிந்துவின் விளையாட்டு ட்யூஷன் இன்றும் தொடர்ந்தது. ‘ப்ளடி’ என்றலெ்லாம் அதை குதறிக் கொண்டிருந்தார் வையாபூரி. ஆனால் சந்தடி சாக்கில் ‘ஊர்ல என்னை யதார்த்தமான நடிகன்’னு சொல்லிக்கிட்டிருக்காங்க’ என்றொரு பிட்டைப் போட்டது ஓவர். ‘Whatsup man’ என்று பிந்து கேட்டதற்கு ‘fine di’ என்று catwalk-ல் வையாபுரி சொன்னது ஜாலியான கலாட்டா. பிந்துவும் வையாபுரியும் கவுண்டமணி – செந்தில் போல மாறிக் கொண்டிருப்பது நல்ல விஷயம்.
**

‘உறியடி’ taskல் ஆரவ் பிரமாதமாக அடித்து வெற்றி பெற்றார். கணேஷ் முதலில் தடுமாறினாலும் பின்னர் அடித்து விட்டார். ஆனால் கணேஷ் அணி வெற்றி பெற்றதாக சிநேகன் அறிவித்ததில் ஆரவ்விற்கு சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. இது குறித்து விசாரணை அறிக்கை கோரலாமா, வேண்டாமா என்று ஹரிஷீடம் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். 

பானையில் இருந்து விழுந்த சாக்லேட்டுக்களை கோயில் தேங்காய் போல உற்சாகமாக பொறுக்கிக் கொண்டிருந்தார்கள் போட்டியாளர்கள். பாவம். 

‘நாளைக்கு எந்த task-க்காவது என்னைக் கூப்பிட்டீங்கன்னா டென்ஷன் ஆயிடுவேன்’ என்று அதிரிபுதிரியாக பேசிக் கொண்டிருந்தார் காஜல். அவருடைய மாடுலேஷனை கிண்டல் செய்து கொண்டிருந்தார் ஆரவ். ‘நீங்க வெளிய இப்படிப் பேசும்போது டெரரா பார்ப்பாங்களா.. சிரிச்சுடுவாங்களா.. ஏன்னா எனக்கு சிரிப்பு வருது’ என்றது நகைச்சுவை. 

ஒரு வாக்கியத்தின் இறுதியில் ‘ஆ… ங்…’ என்று காஜல் இழுத்ததை ஆர்வ்வும் செய்து காட்டியது சிறப்பு. ‘அதென்ன பிரேக்கா.. கடைசில.. ஆ… ங்’   காஜலின் மாடுலேஷன் இப்படியென்றால் ரைசாவின் மாடுலேஷன்களை வைத்து பிஎச்டியே செய்யலாம் போல. 

‘சமயங்களில் தாம் விளையாட்டின் இடையில் இருக்கிறோம் என்பதே மறந்து போகிறது. இங்கு நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று தோன்றி விடுகிறது’ என்பது போல் ஆர்வ்வும் ரைசாவும் பேசிக் கொண்டிருந்தது மனப்பிராந்தியின் காட்சிப்பிழைகள். 

‘எவராவது துயரத்தில் இருந்தால் என்னால் அனுதாபம் காட்டாமல் இருக்க முடியாது. அது என் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் இனி அதைச் செய்ய வேண்டுமா என்று யோசனையாக இருக்கிறது’ என்றார் ஆரவ். இதே விஷயத்தை வீட்டின் இன்னொரு மூலையில் வேறு மாதிரியாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ‘ரைசாவின் அழுகையைப் பார்த்தால் அருகில் சென்று ஆறுதல் சொல்ல வேண்டுமென்றுதான் தோன்றுகிறது. ஆனால் எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன்’ என்கிறார் சிநேகன். (வட போச்சே). 

**
பிந்துவுக்கான இரவு task அறிவிக்கப்பட்டது. தையல்மிஷின் ஒன்றை அவர் தொடர்ந்து மிதித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நிறுத்தினால் வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்து சைரன் ஒலியெழும் என்கிற கொடூரமான ஐடியாவையெல்லாம் யார் தருகிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த மகராசனை பீஹார் சிறைச்சாலையின் சிறப்பு ஆலோசகராக அனுப்பி வைக்கலாம். இப்படி இரவு முழுவதும் தையல் மிஷினை மிதித்து வீணாகும் மனித ஆற்றலை உபயோகமான ஒன்றாக மாற்றலாம். மிஷினை தொடர்ந்து மிதிப்பதின் மூலம் மின்னாற்றல் சேமிப்பது போல.

இரவு நேரத்தில் ஆரவ் வந்து உதவினார். ‘கொஞ்ச நேரம் நிறுத்திப் பார்க்கலாமா. உள்ளே லைட் எரிஞ்சு.. சத்தம் வருதான்னு பார்க்கலாம்’ என்றார் ஆரவ். அவரின் உள்ளேயிருக்கும் உற்சாகமான சிறுவனொருவன் அவ்வப்போது எழுந்து கொள்வது ஜாலியானதாக இருக்கிறது. 

‘கண்டுகொண்டேன்’ போட்டியின் போது தன்னுடைய கண்கள் சரியாக கட்டப்படாமல் இருந்ததை உபயோகித்து ஏமாற்றியதை பிந்து நேர்மையாக ஒப்புக் கொண்டார். என்னவொரு உயர்ந்த உள்ளம்! பூண்டு செய்யும் மகிமை போலிருக்கிறது. 

ஓவியா-காதல் விசாரணைகளால் நொந்து போயிருந்த ஆரவ் இரண்டு நாட்களாக இயல்புக்குத் திரும்புவது போலத் தெரிகிறது. ஆனால், கமலின் 'தடவியல் நிபுணர்' சுட்டிக் காட்டலுக்குப் பின் தன் பாணி ஆறுதல் தேறுதல்களிலிருந்து  சினேகன் ஒதுங்கியிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது!

ஓவியாவின் நடவடிக்கைகளை சுஜா அப்படியே நகலெடுப்பதின் அபத்தத்தைப் பற்றி ஆரவ்வும் வையாபுரியும் புறம் பேசிக் கொண்டிருக்கும் உரையாடலோடு இந்த நாளின் நிகழ்ச்சி மங்கலகரமாக நிறைவுற்றது.
 

அடுத்த கட்டுரைக்கு