Published:Updated:

⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது! (60-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்..


பிக்பாஸ் வீட்டில் இன்று 60-ம்நாள். ஹீரோயின் ஓவியா, காமெடியன் ஜூலி, டெரரான வில்லத்தனத்திற்கு காயத்ரி என்று முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை என்பதால் சுவாரஸ்யம் பெருமளவு போய் விட்டது. காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்த காஜல், பில்டிங் ஸ்ட்ராங், ஃபேஸ்மெண்ட் வீக் என்கிற காமெடியாக பார்ப்பதற்கும் பேசுவதற்கும்தான் அதிரடியாக இருக்கிறாரே, ஒழிய உள்ளுக்குள் பயங்கரமான ‘கைப்புள்ள’யாக இருக்கிறார். 

எனவே வேடிக்கை, விளையாட்டுமாகவே நேரத்தைக் கழிக்க வேண்டிய நெருக்கடி பிக் –பாஸிற்கு. எனவே விதம்விதமான விளையாட்டுக்கள் இன்று நடத்தப்பட்டன. அதில் போதுமான அளவிற்கு மோதல் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் சுவாரசியமாகவே நேரம் கழிந்தது.. குறிப்பாக ‘யார் கொலையாளி’ taskதான் அதிக சுவாரசியம். 


அதற்கு முன்னால் –

பிந்து தனது சிவராத்திரி போட்டி சவாலை மற்றவர்கள் உதவியுடன் செய்து முடித்து விட்டார். சுஜாவிற்கு குறைந்த நபர்களே உதவிக்கு வந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டின் பியூட்டியான பிந்துவிற்கு நிறைய பேர் உதவ முன் வந்தனர். எனவே அம்மணிக்கு இரட்டை மகிழ்ச்சி. ‘பாசக்காரப் பய புள்ளைங்களா இருக்காங்க’ என்று பிற்பாடு பிக் –பாஸிடம் நெகிழ்ந்து பேசினார். ‘தாம்தக்க தீம்தக்க . தையத்தக்க கூத்து’ என்கிற காலைப் பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடினார். 

“ஆச்சுவலி.. சுஜா செஞ்ச task கஷ்டம். கைக்கும் மூளைக்கும் தொடர்ந்து வேலை தந்துகிட்டே இருக்கணும். பிந்து செஞ்சது ஈஸி. நாம பாட்டுக்கு தையல் மெஷினை மிதிச்சிக்கிட்டே பாடவும் செய்யலாம், பேசலாம்’ என்பது ஆர்வ்வின் கண்டுபிடிப்பு. ரைசாவிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். ரைசா பதிலுக்கு வேறென்னதான் சொல்லியிருப்பார்? அதேதான். ‘ட்ரூ.’‘இன்னிக்கு task-க்கிற்கு பிந்து என்னை நிச்சயம் செலக்ட் பண்ணுவாங்க. நான் தோத்துடுவேன். Night task-க்கிற்கு செலக்ட் ஆவேன். பேசாம என்னை எலிமினேட் பண்ணிடுங்களேன்’ என்பது ரைசாவின் புலம்பல். தன்னை பிக்பாஸ் கேள்வி கேட்டது குறித்து அம்மணி இன்னமும் கோபத்துடன் இருக்கிறார் போல.

**

நேற்றைய இரவு நடந்த task-ல் பிந்து வெற்றி பெற்றதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ், அடுத்த சவாலிற்கு மூன்று நபர்களை தேர்வு செய்யச் சொன்னார். பிந்து தேர்வு செய்த மூன்று பலியாடுகள் – ஆரவ், கணேஷ், சிநேகன். ரைசா பயந்தது போல அவர் தேர்ந்தெடுக்கப்படாதது அவருடைய அதிர்ஷ்டம். 


போட்டியாளர்கள் மூன்று பேருமே ஆண்கள் என்பதால் அதற்கேற்ப, உடல்பலம் சார்ந்து கடினமான போட்டியை பிக்பாஸ் வைப்பார் என்று மூவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘கண்டிப்பா சிநெகன் தோத்துடுவார்’ என்பது காஜலின் ஆருடம். ‘உடல் பலம் தொடர்பாக இல்லாமல் வேறு வகையாக இருக்கலாம்’ என்பது சுஜாவின் கணிப்பு.

‘ஓவியாவை அப்பட்டமாக அப்படியே நகலெடுக்கிறார்’ என்பது சுஜாவைப் பற்றிய வையாபுரி, ஆரவ், ரைசாவின் புகார். ‘எரிச்சலா வருது’ என்று பேசிக் கொண்டிருந்தார். ஆம். குழந்தை போலவே சுஜா சிணுங்குவதும் பாவனை செய்வதும் நெருடலாகத்தான் இருக்கிறது. அவர் இயல்புத்தன்மையுடன் நடந்து கொள்ளலாம். 

அடுத்து வரும் task-க்கிற்கு எவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தாம் தந்த ஆலோசனைகளையும் மீறி பிந்து குழம்பி விட்டார் என்பது வையாபுரியின் வருத்தம். சோம்பேறியாக உலவிக் கொண்டிருக்கும் ரைசாவை task-னுள் கொண்டு வந்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம்.

**

‘முடிந்தால் கட்டி முடி’ என்றொரு task. இரண்டு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும். காகிதக் கோப்பைகளால் ஒருவர் கோபுரம் கட்ட வேண்டும். எவரும் அதைக் கலைக்காதவாறு மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எதிர் அணியினர் பந்துகளை எறிந்து அந்தக் கோபுரத்தை கலைக்க வேண்டும். 

முன்னொரு காலத்தில் ‘Seven Stones’ என்றொரு விளையாட்டை சிறுவர்களாகிய நாங்கள் விளையாடியிருக்கிறோம். இப்போதைய தலைமுறை அதை அறியுமா என தெரியவில்லை. இந்த task-ம் அதைப் போன்றே அமைந்திருந்தது. 


சுஜா காகிதக் கோப்பைகளை அடுக்க, சிநேகன், பிந்து, வையாபுரி போன்றோர் எதிரணி கலைக்காதவாறு பார்த்துக் கொண்டனர். என்றாலும் இந்தப் போராட்டத்தை அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. 

அடுத்த முறை கோப்பைகளை அடுக்கும் பணி ரைசாவிற்கு தரப்பட்டது. முதலில் தடுமாறிய ரைசா, கணிசமான அளவில் அடுக்கிய பிறகு ஓர் உபாயம் செய்தார். கோப்பைகளை காக்கும் பணியில் தானும் ஈடுபட்டார். அது நல்ல விளைவைத் தந்தது. எனவே ஆரவ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இரண்டாவதாக விளையாடுவதில் இப்படியொரு செளகரியம் இருக்கிறது. முன்னோர்கள் செய்கிற தவறுகளை தாம் எளிதில் கண்டுகொள்ளலாம். 

**

அடுத்த task ‘அடித்துப் பிடித்து எடுத்து முடி’ 

ஆரவ், கணேஷ், சிநேகன் கலந்து கொண்டார்கள். ஆண்கள் தொடர்பான போட்டி என்பதால் உடல் பலத்தைக் கொண்டு போட்டி அமைக்கப்பட்டது சிறப்பு. தமிழ் நண்டுகள் மாதிரி மூன்று நபர்களும் கயிற்றால் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சகதியில் இறங்கி அங்கு இருக்கும் பந்துகளை தனித்தனியாக சேகரிக்க வேண்டும். கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பதால் ஒருவரையொருவர் இழுத்து மீறி, எவர் அதிக பந்துகளை சேகரிக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

‘முட்டை’நாயகர் கணேஷ் தன் உடல்பலத்தின் மூலம் இதில் வென்றிருப்பார் என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. மற்றவர்களை விட உயரமாகவும் பலமாகவும் இருந்ததால் அவருக்கு இது சாத்தியமாகியிருந்திருக்கும். 

இந்த task-ல் தாம் ஏமாற்றப்பட்டோமோ என்று ஆரவ்விற்கு ஆதங்கம். கணேஷ் ஆவேசமாக செயல்பட்டது குறித்து வருத்தமும். ஆனால் ‘task-ன்னா அப்படித்தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உத்தி வெச்சிருப்பாங்க. நீங்கதான் பார்த்து விளையாடணும்’ என்பது ரைசாவின் பதில். ‘பன்னிக்குட்டிங்கள்லாம் பஞ்ச் டயலாக் பேசுதே’ என்று எரிச்சலானார் ஆரவ்.

**

அடுத்து அறிவிக்கப்பட்ட task – எவர் கொலையாளி என்பது. 

இதுவும் முன்னர் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த சிறுவர்களின் விளையாட்டே. ‘திருடன்  -போலீஸ்’. பெருநகரத்துச் சிறுவர்கள் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிகளிலும் மூழ்கி விட்டதால் இந்த விளையாட்டு சமகால இளம் தலைமுறை அறியுமா எனத் தெரியவில்லை. சிறுநகரங்களில், கிராமங்களில் இந்த விளையாட்டு உயிர்ப்புடன் இருக்கும் என நம்புகிறேன். 

பிக் பாஸ் வீட்டில் இரண்டு கொலையாளிகள் இருப்பார்கள். மற்றவர்கள் ‘அந்தக் கொலையாளிகள்’ எவரென்று கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்து அவரவர்களின் கதாபாத்திரங்களை விளக்கிச் சொன்னார் பிக் –பாஸ். 

காஜல் உயர் காவல் அதிகாரியாம் (வெளங்கிடும்). வையாபுரி ஏட்டு (பரவாயில்லை) இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்வதற்கான code word ‘hi buddy பரம்மானந்தம்’. வையாபுரியின் டியூஷன் வார்த்தையையே எடுத்து விளையாட்டில் சேர்த்தது சுவாரசியம். 

காவல் அதிகாரிகள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உரையாடலின் இடையில் கசிய விட்டு பிறகு கண்டுகொண்டது நகைச்சுவை. 

அடுத்து ஆரவ்வை அழைத்தார் பிக்பாஸ். கொலையாளிகளில் ஆரவ்வும் ஒருவராம். இதற்காக அவருக்கு சீக்ரெட் வாக்கி –டாக்கியெல்லாம் கொடுக்கப்பட்டது. எப்படி கொலை செய்வது என்பதையெல்லாம் பிக்-பாஸ் பிறகு சொல்வாராம். மட்டுமல்லாமல் ஒரு டம்மி நோட்டின் பாதியை சங்கேத அடையாளமாக வைத்திருக்க வேண்டும். (பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு முந்தைய நோட்டு போல)

ஏதோ ஆஸ்கர் விருது வாங்கிய பெருமையுடன் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார் ஆரவ். இவர் மட்டுமல்ல மற்ற அனைவருமே தங்களின் பாத்திரங்கள் வெளியே அறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகையாக சிரித்துக் கொண்டே வந்தது காமெடியாக இருந்தது. **

அடுத்ததாக சுஜாவை அழைத்தார் பிக்-பாஸ். அவரிடம் ஏதாவது ஒரு பணியைத்தர உத்தேசித்திருந்தாரோ என்னமோ! அதற்கு முன்னால் சம்பிரதாயத்திற்காக ‘எப்படியிருக்கீங்க சுஜா?” என்று பிக் பாஸ் விசாரிக்க,  இந்திய விருது திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் இயங்குவது போல பல நிமிடங்களுக்கு மெளனமாக எங்கெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜா. 


‘இங்க யாரும் என்னிடம் சரியா பேசமாட்டேறங்காங்க..அவாய்ட் பண்றாங்க. நானாத்தான் போய் பேச வேண்டியிருக்கு’ என்றவர்..’கணேஷ் buddy நல்லாப் பேசறார்.. பிந்துவும் பேசறாங்க.. சிநேகனும் பரவாயில்லை’ என்று அடுக்கிக் கொண்டே போனார். ‘பின்னே என்னதாம்மா உன் பிரச்சினை’ என்று கேட்கத் தோன்றியது. 

**

ஆஃபிசர் காஜலும் ஏட்டு வையாபுரியும் வீட்டுக்குள் எல்லோரையும் சந்தேகித்துக் கொண்டிருந்தனர். பிந்துவையும் விட்டு வைக்கவில்லை. ‘எங்கே வெச்சிருக்க கத்தியை’ என்று வையாபுரி விளையாட்டாக மிரட்டும் போது, பிந்து, தெய்வ மகள் ‘விக்ரம்’ மாதிரியே அப்பாவியாக  விழித்துக் கொண்டிருந்தார். ‘நிலா… நிலா..”அடுத்த கொலையாளி –ஹரீஷ்ஷாம். தன்னிடம் மிகப் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதான தீவிரமான பாவனையுடன் வெளியே வந்தார் ஹரீஷ். உண்மையாகவே எவரையாவது போட்டுத் தள்ளி விடுவாரோ, என்னவோ. ஆனால் மிளகாய் பொடிக்கு அப்படி பயப்படுகிறார். 

கயிறுகள் இழுத்து பந்து சேகரிக்கும் போட்டியில் தன் உடல்வலிமையைப் பயன்படுத்தி கணேஷ் வென்று விட்டார் என்பது சிநேகனின் ஆதங்கம். 

வாக்கி டாக்கி மூலம் பிக்பாஸ் ஆரவ்விற்கு உத்தரவு தந்தார். கணேஷைக் கொல்வதற்கு ஒரு முழு முட்டையை கணேஷிற்கு ஊட்டி விட வேண்டுமாம்… என்னய்யா இது…‘சின்னப்புள்ளத்தனமா இருக்கு’ பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து கணேஷ் அதைத்தானே செஞ்சிட்டிருக்கார். இதெல்லாம் கொலை –ன்னா கொலைக்கே அவமானம். ‘ஆரவ்.. இன்னும் நெறைய கொலை பண்ணுங்க ஆரவ்’ என்று கணேஷே இதற்குப் பிறகு ஆர்வ்வை துரத்த ஆரம்பித்து விடலாம். 

ரூபாய் நோட்டு வைத்துள்ள ஆசாமியை கண்டுபிடிக்க ஆரவ்வும் ஹரிஷூம் பரஸ்பரம் சிரமப்பட்டது நகைச்சுவை கலாட்டா.

இந்தக் கொலையாளி task-க்கிற்காக ஓவர் ஆக்ட் செய்வது சுஜாதான். அதிகம் பயப்படுவது போல நடிக்கிறார். எதையோ மறைத்துக் கொண்டு தன்னைத் துரத்தியவர்களை போக்கு காட்டிய வையாபுரி வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு விளையாடியது சுவாரஸ்யம். 

ஆனால் கொலையாளிகளில் ஒருவர் ஆரவ் என்பதை சுஜாவும், காஜலும் சரியாகவே கணித்து விட்டனர். இன்னமும் அதிக பயிற்சி வேண்டுமோ, ஆரவ்.**

ஆரவ் விளையாட்டாக காஜலைப் பிடித்து கொலை செய்வது போல நடிக்க, சிநேகனும் அதில் இணைந்து கொள்ள காஜல் சற்று பயந்தே போனார். ஆனால் கூடவே கொலையாளிகளை தாம் கண்டுபிடித்து விட்டோம் என்கிற பெருமையும் கூட.

ஆனால் விளையாட்டிற்குள் செய்யப்பட்ட இன்னொரு விளையாட்டு இது என்று அவரை நம்ப வைக்க ஆரவ்வும் சிநேகனும் சிரமப்பட வேண்டியிருந்தது. இருவரும் அவரை அழுத்திப்பிடித்த போது உண்மையாகவே வலி ஏற்பட்டது என்பதற்காக ஸ்மோக்கிங் ரூமில் சென்று கலங்கிய காஜலை. வழக்கம் போல் சிநேகன் சென்று ஆறுதல் கூறினார். காஜல் கலங்குவார் என்பதெல்லாம் எதிர்பாராத ஆச்சரியம். 

கொலையாளிகள் எவர் என்பது தெரிந்து விட்டது. முதல் டார்கெட்டாக கணேஷை எப்படி கொலை (?!) செய்ய வேண்டும் என்பதும் தெரிந்து விட்டது. மற்றவர்கள் எல்லோரும் எப்படியெல்லாம் கொலை செய்யப்படப் போகிறார்கள் என்பதும் அதற்குள் அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவார்களா என்பதும் இன்றைக்கு தெரிந்து விடும். 

ஆனால் இதில் ஒரு முக்கியமான பிரச்சினையிருக்கிறது. இதை அறிந்து கொள்வது வரை இன்று நாம் கொல்லப்படாமல் உயிரோடு இருந்தாக வேண்டும்.

முடியலை. பிக்பாஸ்.

அடுத்த கட்டுரைக்கு