Published:Updated:

ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடலாக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இருந்து ஓர் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலிபரப்பானது. ‘டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும்டும்..’ நேற்று task அதிகமாக இருந்ததால் வீட்டு உறுப்பினர்கள் சோர்வாக இருக்கிறார்களோ, என்னமோ எவரும் இன்று நடனமாடவில்லை. பாடலின் இறுதியில் ஆ…ங்.. என்கிறதொரு இழுவையொலி வடசென்னையின் பிரத்யேக வழக்குமொழியில் ஒலிக்கும். காஜல் அக்கா இந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்திருக்ககூடும், தான் சொல்லுவதைப் போலவே ஒரு குரல் வருகிறதே என. 

கொலையாளிகளான ஆரவ்வும், ஹரிஷ்ஷும் தாங்கள் செய்யவிருக்கும் சதியைப் பற்றிய ஆலோசனையை நடத்தினார்கள்.

பிக்பாஸ் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பார்வையாளர்களுக்காக விநாகயரின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடி விடுகிறார்கள் போலிருக்கிறது. 

கணேஷை முட்டை சாப்பிட வைப்பதைப் பற்றி கொலையாளிகள்  ஏதோ உலகசதியை செய்யப் போவது மாதிரி ஆலோசித்துக் கொண்டனர். ‘வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்கிற குரங்கு உலகத்தில் உண்டா?’ என்கிற பழமொழி போல, கணேஷ் என்ன முட்டை வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்? இந்த விஷயத்தில்,  தான்  பிரியாணி ஆவதற்காக ஆடே முன்வந்து சந்தோஷமாக மசாலா அரைத்து தரும். 

‘சம்பவம் நடக்கப் போவுது” என்று காமிரா முன் ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டு சென்றார் ஹரீஷ். நேர்மையான கொலையாளி போலிருக்கிறது. 

காலை உணவு சாப்பிடும்போது சமைக்கப்பட்ட முட்டையை இயல்பாக கணேஷிடம் பகிர்ந்து கொண்டார் ஆரவ். ‘ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று சந்தோஷமாக ரிப்போர்ட் செய்யச் சென்றிருந்த ஆரவ்வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘கணேஷிற்கு முட்டையை அன்புடன் ஊட்டி விட்டால்தான்  இந்த ஆப்பரேஷன் வெற்றி’ என்ற நிபந்தனையை கறாராக வைத்தார் பிக்பாஸ். பரிமாறப்படும் உணவில் உப்பு, காரம் இருக்கிறதோ, இல்லையோ.. அன்பு இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனை விதிப்பதில் தவறொன்றும் இல்லையே!

எப்படியோ கணேஷிற்கு கூடுதல் முட்டை கிடைக்கப் போகிறது. கணேஷ் அண்ணாச்சி.. ஹாப்பி..

‘சீஸ் பெப்பர்’ எல்லாம் போட்டு அவிக்க வைக்கப்பட்ட முட்டையை ஹரீஷ் கணேஷிற்கு திடீரென்று ஊட்ட ஆடு சந்தோஷமாக முன் வந்து பலியானது. ஆப்பரேஷன் சக்ஸஸ். ‘கொஞ்சம் உப்பு அதிகமாக இருந்தது’ என்று வெள்ளந்தியாக சொன்ன கணேஷைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. 

‘இது விளையாட்டு’ என்று முன்கூட்டியே அறிவதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உற்சாகமாகத்தான் இருக்கும். ஆனால் எதுவுமே தெரியாமல் விளையாட்டின்  உள்ளே அப்பாவிகளாக இருப்பவர்களின் பாடுதான் சிரமம். 

விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் அன்று முட்டை சாப்பிடக்கூடாதே என்று கணேஷ் சற்று யோசித்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம். முட்டை அசைவமல்ல என்று அவர் நினைத்திருக்கக்கூடும் அல்லது இது செயற்கையாக, முன்கூட்டி கொண்டாடப்படுகிற பண்டிகைதானே என்று ஒருவேளை நினைத்திருக்கலாம். 

**

‘இந்த வீட்டில் அசம்பாவிதம் நடந்து விட்டது. கணேஷ் கொலைசெய்யப்பட்டு விட்டார்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் கணேஷே ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி விட்டார். முதுகில் ஏதாவது இங்க் தெளித்து விட்டு சிறுபிள்ளைத்தனமாக அதைக் கொலை என்று நினைக்கிறார்களா என்று தன் சட்டையின் பின்னால் தேட ஆரம்பித்தார். 

“நீங்கள் இப்போது ஆவியாகி விட்டீர்கள். இனி வீட்டினுள் இருக்க முடியாது. வெளியே மரத்தடியில்தான் படுக்க வேண்டும்’ என்றது அசரிரீக்குரல். ஆவி என்ற வார்த்தையைக்  கேட்டவுடன் சுஜா குழந்தை மாதிரி பயந்து சிணுங்கியதைக் கண்டவுடன் முதலில் அவரைக் கொலை செய்திருக்கலாமே என்று கொலைவெறியாக வந்தது. 

‘வெளியே இருப்பது சரி. சாப்பாடுல்லாம் கொடுப்பீங்க இல்லையா?’ என்று மிகத் தெளிவாகக் கேட்டு வைத்துக் கொண்டார் கணேஷ். ‘மத்த விஷயங்கள்லாம் எப்படி, மரத்தடியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதுதானா?’ என்று எனக்குள் எழுந்த சந்தேகம் கணேஷிற்கும் வந்தது. ‘பாத்ரூம்லாம் யூஸ் பண்ணலாம் இல்லையா?’ என்ற சந்தேகத்தையும் தெளிவுப்படுத்திக் கொண்டார். 

என்னதான் இது விளையாட்டு என்றாலும், கணேஷ் இதை இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் சென்ட்டிமென்ட் காரணமாக அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இது நெருடலாக இருக்கக்கூடும்.. கணேஷ் நொந்து போய் மரத்தடிக்கு கிளம்பினார். பிற்பாடு விஷயம் தெரியும் போது ‘ஒரு முட்டை சாப்பிட்டது அத்தனை பெரிய குத்தமாய்யா?’ என்று நினைக்கப் போகிறார்.

என்னமோ மலைப்பிரசேதத்திற்கு கிளம்புவது போல தலையணை, போர்வை என்று என்னென்னமோ  செளகரிய சாதனங்களை எடுத்துக் கொண்டு கணேஷ் கிளம்ப, ‘கணேஷ். ஆவிகள் தலையணை உபயோகிப்பதில்லை’ என்று அசரிரிக்குரல் எச்சரித்தது. மரத்தடிக்கு போய் செட்டில் ஆன கணேஷ், மரத்தில் கட்டப்பட்டிருந்த பொம்மைகளிடம் ‘hi buddies, am your new neighbour’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நல்ல நகைச்சுவை. 

‘வசதி வாய்ப்பெல்லாம் எப்படி?” என்று அவரை வெறுப்பேற்றுவதற்காக வந்த ஆரவ் சாப்பிடுவதற்காக எதையோ கொடுத்தார். ‘கொழுக்கட்டை ஏதாவது வேண்டுமா?’ என்று ஆரவ் கேட்க, ‘அதைச் சாப்பிட்டுத்தான் செத்தேன்’ என்றார் கணேஷ். வையாபுரி சொல்வது போல,  கணேஷ் மீது ரோடுரோலரை ஏத்தினால் கூட ‘இந்தப்பக்கம் முதுகுல லெப்ட்ல சரியா ஏத்தலை பாருங்க’ என்கிற அளவிற்கு பொறுமைசாலியாக இருக்கிறார்.

‘ஆவி பேய் எல்லாம் பொய். நம்பாதீர்கள்’ என்று பேய் task மூலம் நீதியெல்லாம் சொன்ன பிக் –பாஸே, ஆவி உண்மை என்பது போல task வைப்பது நியாயமா? 

**

அடுத்து ரைசாவை கொலை செய்ய வேண்டும் என்கிற டார்க்கெட் ஆரவ்விற்கு தரப்பட்டது. என்ன செய்ய வேண்டுமாம்? 

ரைசாவை ‘மூன்று முறை ‘அடப்போங்கய்யா’ என்று சொல்ல வைக்க வேண்டுமாம். ‘அடப் போங்கய்யா’, கணேஷை முட்டை தின்ன வைப்பதை விடவும் இது எளிதானது. ‘ரைசா… பகலில் நீங்கள் கட்டிலில் அமரவே கூடாது என்கிறார் பிக்பாஸ்’ என்று சொன்னாலே போதும். ரைசா டென்ஷன் ஆகி வடஇந்தியர்கள் தமிழ் பேசும் பாணியில் ‘அரே பாபா.. என்னய்யா.. இது stupid ஆ இருக்கு.. அடப்போங்கய்யா’ என்று சொல்லி விடுவார்.

‘இதை ஒரு game மாதிரி விளையாடி சொல்ல வைத்து விடலாம்’ என்று ஆரவ்வும் கூட்டாளி ஹரிஷூம் பேசிக் கொண்டனர். 

சுஜாதான் கொலையாளிகளில் ஒருவர் என்று பல்வேறு விதமாக பேசி ரைசாவை நம்ப வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் ஆரவ். ‘வாலி’ சிம்ரன் போல ரைசாவும் ஆரவ் சொன்னதையெல்லாம் அப்படியே வெள்ளந்தியாக நம்பிக் கொண்டிருந்தார். ‘ஆமாம். அவங்கதான் அதிகம் பயப்படற மாதிரி நடிக்கறாங்க’

வையாபுரியும் காஜல்லும் காவல்துறை அதிகாரிகள் என்கிற விஷயம் பொதுவில் அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வெளிப்படையாகவே விசாரணை செய்யலாம். ‘hi buddy பரம்மானந்தம்தான்’ எங்க பேரு என்றார் வையாபுரி. கோட்வேர்டை பெயராக மாற்றி விட்டார். ‘அதுக்காகத்தான் நாங்க ரகசியமா விசாரணை செய்து கொண்டிருந்தோம்’ என்று காஜல் சொல்ல.. ‘கருமம்.. அதுதான் விசாரணையா, சாவடிச்சீங்களே’ என்று கிண்டலடித்தார் ஆரவ்.

சிநேகன்தான் கொலையாளிகளுள் ஒருவர் என்று சுஜாவும் பிந்துவும் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தனர். எனவே பிந்து போலீஸ் ஆபிசர் வையாபுரியின் உதவியுடன் சிநேகனை ஜாலியாக மிரட்டிக் கொண்டிருந்தார். கொம்பை வைத்துக் கொண்டு ‘ஒழுங்கா உண்மையை சொல்லணும்’ என்று அவர் செல்லமாக மிரட்டுகிற அழகிற்காகவே எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்ளலாம் போல.

**


வையாபுரியும் காஜல்லும்  போலீஸ் யூனிபார்மில் வந்தனர். 

‘எரிமலை எப்படிப் பொறுக்கும்?’ என்று டைமிங்காக பாடிய ஆரவ், ‘உங்க செக்யூரிட்டியை சும்மா இருக்கச் சொல்லுங்க’ என்று பிற்பாடு காஜலை கலாய்த்தார். 

வையாபுரி தன்னுடைய கறாரான விசாரணையைத் துவங்கினார். ஒவ்வொருவராக விசாரித்தார். ‘உங்க buddy எப்படி பாடியானாரு?” என்று சுஜாவை கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘நீ போய் தண்ணி எடுத்துட்டு வா” என்று காஜலிடம் அவர் ஜபர்தஸ்துடன் சொல்ல சிணுங்கிக் கொண்டே சென்றார் காஜல். வையாபுரியின் அலட்டலைப் பார்த்து பிந்துவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 

பிக்பாஸ் தந்த பாத்திரங்களின் படி காஜல்தான் உயர்அதிகாரி. வையாபுரி ஏட்டு. காஜல் அதை மறந்து விட்டாரோ, என்னமோ தேமே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒருவேளை, உயர்அதிகாரிகள் என்றாலே அப்படித்தான் இருப்பார்களோ. ‘தசாவதாரம்’ பல்ராம்நாயுடு மாதிரி வையாபுரியின் விசாரணை கறாராக இருந்தது. ஒருவரையொருவர் ஜாலியாக போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மரத்தடியில் உலாவிக் கொண்டிருந்த ‘ஆவி’யிடம் காஃபி சாப்பிடுகிறீர்களா?’ என்று அன்பாக விசாரித்தார் சுஜா. ஆனால் இதை ஜாக்கிரதையான தூரத்தில் நின்றுதான் கேட்டார். ‘பக்கத்தில் வா’ என்று கூப்பிட்டது ஆவி. 

வெவ்வேறு விதமான தொனிகளில் சில வார்த்தைகளை சொல்ல முடியுமா என்கிற விளையாட்டின் மூலம் தங்களின் டார்க்கெட்டடான ரைசாவை’ அடப் போங்கய்யா’ என்று சொல்ல வைக்க முயன்றார்கள் ஆரவ்வும் ஹரிஷூம். நினைத்த படி ஆப்பரேஷன் எளிதாகவே முடிந்தது. 

‘என் buddyஐ கொன்னவனை நான் சும்மா விடமாட்டேன்’ என்று சிநேகனிடம் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் சுஜா. கணேஷ் மேல் எம்பூட்டு பாசம்! சிநேகன்தான் கொலையாளி என்று அவர் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார். ‘நான் தொட்டாலே அது கொலைதான்’ என்று ‘செத்து செத்து விளையாடும் காமெடியாக சுஜாவை நம்ப வைத்து விட்டார் சிநேகன். 

‘நீங்க எப்படி செத்தீங்க buddy’ என்று ஆவியிடம் சென்று விசாரித்தார் சுஜா. ஆவியும் தீவிரமாக அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தது. ‘எனக்கு ஆரவ் மேலதான் சந்தேகம்’ என்று சுஜா சரியாகவே கணித்தார். அதற்குப் பிறகுதான் ஆவிக்குள்ளும் பல்பு எரிந்தது. ‘ஆமாம். நான் கேட்காமயே .. முட்டை எடுத்து வந்து ஊட்டினாங்க.. சாப்பிடற பொருள்னா நான்தான் ஈசியா மயங்கிடுவேன், இல்லையா?’ என்று சுயவாக்குமூலம் தந்தார். 

**

அடுத்த task மல்யுத்தம். ‘ஆவியும் கலந்துக்கலாமா?’ என்று அனுமதி வாங்கிக் கொண்டு போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானார் கணேஷ். உடல் பலம் சம்பந்தமான போட்டி என்பதால் வையாபுரிக்கு முதலிலேயே விதிவிலக்கு தந்து விட்டனர். இல்லையென்றால் காமிராவைப் பார்த்து ஆவேசமாக புலம்புவார். எதற்கு வம்பு!

ஒரு சதுரத்திற்குள் போட்டி நடக்கும். எவர் முதலில் இன்னொருவரை கட்டத்திற்கு வெளியே தள்ளுகிறாரோ அவரே வெற்றியாளர். முட்டை தின்ற உற்சாகத்தில் ஆரவ்வை எளிதாக வெளியே தள்ளினார் கணேஷ்.  காஜலை சுஜா ஆவேசமாக வெளியே தள்ள ‘நீயா பேய்க்குப் பயப்படற ஆளு?” என்று ஜாலியாக கிண்டலடித்தார் கணேஷ். 

இப்படியாக போட்டியாளர்கள் கடுமையான விளையாட்டிற்குப் பிறகு மூச்சு வாங்க  அமர்ந்திருக்கும் போது ஓர் அறிவிப்பின் மூலம் பிக்பாஸ் வைத்தார் ஒரு டிவிஸ்ட். ‘பயிற்சி நேரம் முடிந்தது’ போட்டியாளர்கள் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். ‘அப்ப.. இவ்ளோ நேரம் மல்லுக்கட்டியது போட்டி இல்லையா, பயிற்சியா?’

புரொஃபஷனலாக மல்யுத்தம் செய்பவர்கள் உள்ளே வந்தனர். மைக்கேல் மதன காமராஜனில் வரும் ‘பீம்பாய்.. பீம்பாய்’ போலவே ஆங்குதோங்காக நுழையும் ஒரு பிரம்மாண்ட உருவத்தை திகிலுடன் போட்டியாளர்கள் பார்த்தனர்.

தொழில்முறையாக விளையாடுபவர்களுடன் போட்டியிடுவது சிரமமானது என்றாலும் பிக்பாஸ் ஆள்கள் நன்றாகவே சமாளித்தனர். இதில் கணேஷ் கையாண்ட உத்தி உண்மையாகவே திறமையானது. நிற்கும் நிலையிலேயே தாக்குப்பிடித்தால் எதிராளி எளிதில்  தம்மை வெளியில் தள்ளி விடுவார் என்பதை சரியாக யூகித்த கணேஷ். ஏறத்தாழ எதிராளியின் மீது சாய்ந்தாற் போல தன் எடை முழுவதையும் அவர் மீது வைக்க அவரை வெளியில் தள்ளுவது சிரமமாகவே இருந்தது. எனவே களத்தில் அதிக நேரம் கணேஷால் தாக்குப் பிடிக்க முடிந்தது. 

வெங்கலக் கிண்ணியை கைப்பற்றுவதில் ஆவேசமாக இருந்தார் சுஜா. மற்றவர்கள் எச்சரித்தும் தன் முதுகு வலியை பொருட்படுத்தாமல் வெற்றி நிச்சயம் என்கிற குறிக்கோளுடன் ஆவேசமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். பிறகு பிக்பாஸே தலையிட்டு அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது. 

போட்டியில் வென்ற கணேஷிற்கும் சுஜாவிற்கும் ‘பரிசு’ ஒன்று அளிக்கப்பட்டது. மிக ஆவலாக அந்தப் பாக்கெட்டை பிரித்துப் பார்த்தார் கணேஷ். ‘முட்டை’. அடப்பாவிகளா! ஒரு மனுஷனை வெறுப்பேற்றுவதற்கும் அளவு இல்லையா?! என்றாலும் அந்தப் பரிசை ஆறுதலாக வைத்துக் கொண்டார் கணேஷ். ‘எங்க போனாலும் இந்த முட்டை கணேஷை துரத்திக் கொண்டே வருகிறதே!

மல்யுத்தம் முடிந்து கொலையாளி task மறுபடியும் துவங்கியதால் ஆவி சோகத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது. 

**

மல்யுத்த போட்டியின் போது ஆரவ்விற்கு உடல் வலி ஏற்பட்டது போல. ‘உங்களுக்காக மருத்துவர் வருவார்’ என்று பிக்பாஸ் அறிவிக்க, நேரம் காலம் தெரியாமல் ஆரவ்வுடன் விளையாடினார் காஜல். ‘நீதானே கொலைகாரன்’ என்று மறுபடி மறுபடி கூற ‘நான் செம காண்டுல இருக்கேன்’ என்று எரிச்சலானார் ஆரவ். முகம் சுருங்கிப் போனார் காஜல். நாம் நெனச்சபடி அவ்ள ஒண்ணும் இவர் டெடரரா இல்லையே.. இவர் இப்படி இருந்தா எப்படி நம்ம பொழப்பு போகும்!

பின்பு சாவகாசமான நிலையில் அமர்ந்திருந்த ஆரவ், காஜலை அழைத்து சமாதானம் பேசப் போக ‘நீங்களா நினைச்சா பேசுவீங்க.. அப்புறம் கோவிச்சுப்பீங்களா.. அடிபட்ட பிறகும் அவ்ள நேரம் ஜாலியா பேசிட்டு திடீர்னு கோவிச்சுக்கிட்டா எப்படி..! என்றெல்லாம் காஜல் பதிலுக்கு எகிற.. ‘கோவிச்சுக்காதீங்க.. டான்.. அப்ப வலி இருந்தது. ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்’ என்று சமாதானப்படுத்தினார் ஆரவ்.

ஒருவர் வலியைச் சமாளித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயலும் போது கிண்டலடிக்கக்கூடாது என்பதற்கான பாடம் நமக்கு கிடைக்கிறது. 

அடுத்த அசம்பாவிதம் நிகழ்ந்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டார். ஆம். ரைசா கொலை செய்யப்பட்டு விட்டார். ‘அடப் பாவிகளா. இது எப்ப’ என்பது போல் விழிகளை உயர்த்தினார் ரைசா. 

ஆவி வேடத்தில் ரைசா மரத்தடிக்கு செல்ல ‘இங்க crowd அதிகமாயிடும் போலயே.. ரெண்டு பேருக்குத்தான் இடம் இருக்கு’ என்றெல்லாம் புலம்பியது மூத்த ஆவி கணேஷ்.

‘அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. நாமதான் கொலையாளி-ன்ற விஷயத்தை அப்புறம் சொல்வாங்க..  அப்ப நாம் செத்தோம்’ என்று பேசிக் கொண்டனர் ஆரவ்வும் ஹரிஷூம். என்றாலும் தாம் விளையாடுவது விளையாட்டுதானே என்கிற ஆறுதலும் அவர்களுக்கு இருக்கிறது. முன்பு சக்தி வைரம் திருடும் விளையாட்டை சென்ட்டிமென்ட் ஆக அழுது சீன் போட்டு அபத்தமாக்கியது போல அல்லாமல்  இவர்கள் ஜாலியாக தொடர்வது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தோற்றவர்களை வெளியே மரத்தடியில் படுக்கச் சொல்வதெல்லாம் ஓவர்தான். 

தாங்கள் எப்படி கொலைசெய்யப்பட்டிருப்போம் என்று இரண்டு ஆவிகளும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ‘வீட்ல யாரும் கொலையாளிங்க இருப்பது போலவே தெரியவில்லையே’ இதற்காக விதம்விதமான காரணங்களை நினைத்து குழம்பினார்கள். 

பிக்பாஸ் ஆரவ்வை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் முதலில் மிஸ்டு கால் தருவாராம். அடக்கண்றாவியே! அத்தனை லோ –பட்ஜெட்டிலா இந்த விளையாட்டு நடக்கிறது? இந்த மிஸ்டு கால் கலாசாரத்தை கண்டுபிடித்ததே இந்தியர்கள்தானாம். இதனால் தொலைபேசி துறையில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பைப் பற்றி வாசித்த ஒரு தகவல் நினைவிருக்கிறது. ஆனால் நிலைமை இப்போது மிகவும் மாறி விட்டது. மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கும்படி நம்மை மாற்றி விட்டார்கள். 

இரண்டு கொலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அடுத்து எவர் கொலைசெய்யப்படுவார்? கொலையாளிகள் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செய்வார்களா? என்றெல்லாம் அசரிரீக்குரல் கவலைப்பட்டது. 

மரத்தடியில் கூட்டம் அதிகமானால் நான் வயலண்ட் ஆகி விடுவேன் என்று ரைசா ஆவி வேறு ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. என்னெ்னன ஆகுமோ? செத்து செத்து ஆடும் இந்த  விளையாட்டை சுருக்கமாக முடித்துக் ‘கொல்லலாம்’ பிக்பாஸ்.

Bigg Boss tamil, Aarav, Suja, பிக் பாஸ், ரைசா

அடுத்த கட்டுரைக்கு