Published:Updated:

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து! (64-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து! (64-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து! (64-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து! (64-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

நாம் யூகித்தபடியே ஆரத்தியும் ஜூலியும் வீட்டுக்குள் வந்தனர். அதுவரை மெத்தனமாக இருந்த வீடு சட்டென்று கலகலப்பாக மாறியது.  எதிர்பார்த்ததுதான். ஆனால் முன்பு இருந்த இணக்கமும் பாசமும் இல்லாமல் ஏதோ ஒன்று உடைந்து விட்டது போலிருக்கிறது. அது சார்ந்த விலகல் பூடகமாக தெரிகிறது. இது இயல்புதான். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’

பழைய தமிழ் திரைப்படங்களைக் கவனித்தால் ஆனந்தமாக இருக்கும் ஒரு குடும்பத்தில் அவர்களுக்குள் நிகழும் உறவுச்சிக்கல்களை கதற கதற விவரிப்பார்கள். கிளைமாக்ஸ் நெருங்கும் போது அனைத்துச் சிக்கல்களும் சரியாகி அந்தக் குடும்பம் பழையபடி ஒன்றுபட்டு நிற்பதுடன் ‘சுபம்’ போட்டு விடுவார்கள். ஆனால் இந்த செயற்கைத்தன்மையை உடைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் உருவானது. ‘சம்சாரம் அது மின்சாரம்’.

உறவுகளுக்குள் உருவான சிக்கல்களினால் ஏற்படும் பிரிவு கண்ணாடிப் பாத்திரம் உடைந்ததைப் போன்றது. மீண்டும் அதை ஒட்டினால் செயற்கையாகவே இருக்கும். எனவே அதற்கான விலகலுடன் அந்த உறவுகளைப் பேண முயன்றால் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும். மறுபடியும் நெருங்கி மறுபடியும் உடைந்தால் அது இன்னமும் ஆபாசமாக இருக்கும் என்கிற யதார்த்தத்தை அருமையாக விளக்கிய திரைப்படம். 

பிக் பாஸ் வீடும் அப்படித்தான் இருக்கிறது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வரும் போது முன்பிருந்த உண்மை இல்லை. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்று திரும்பிய தங்கையை ஒரு விலகலுடன் கவனிப்பது போன்ற ‘அண்ணன்தனமான’ சோகத்துடன் இருந்தார் சிநேகன். 

அதற்கு முன் - 

63-ம் நாளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் காட்டப்பட்டன. ரைசாவின் வெளியேற்றத்திற்கு, தானே காரணம் என்று கலங்குகிறார் காஜல். ரைசா இதை தெளிவுப்படுத்தியும் கூட அவர் ஏன் குற்றவுணர்வு அடைகிறார் என்று தெரியவில்லை. ரைசாவின் வெளியேற்றத்திற்கு ‘ஒத்துழையாமை இயக்கமே’ பிரதானமான காரணம். ‘என்னால்தான் அவ வெளியே போனா. இங்கு இருந்திருந்தா ஜெயிச்சிருப்பா’ என்றெல்லாம் காஜல் புலம்பியதின் காரணம் தெரியவில்லை. நாமறியாத காட்சிகளில் ஏதேனும் இருக்கிறதோ, என்னமோ.

ஆரவ் தன்னைப் பற்றி ஏகவசனத்தில் பேசியது பற்றி சிநேகன் வருத்தத்திலும் திகைப்பிலும் இருக்கிறார். ஆனால் சிநேகன் ஒன்றை யோசிக்கலாம். ஆரவ் பொதுவாக எவரையும் அப்படி மரியாதைக்குறைவாக பேசும் நபர் கிடையாது. ஏதோ ஒரு வருத்தத்தில் அல்லது கோபத்தில் பேசியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டு சிநேகன் எளிதாக கடக்கலாம். ஆனால் சிநேகனால் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவே பெண் போட்டியாளராக இருந்தால் அவர் மன்னித்திருப்பாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 

64-ம் நாள் காலை. ‘ரம்’ திரைப்படத்தில் இருந்து Hola amigo என்கிற எவருக்கும் புரியாத பாடல் ஒன்று ஒலிபரப்பானது. 

காலையில் எழுந்ததுமே சுஜா வையாபுரியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அவர் அப்படி கேட்பதற்கான அவசியமே இல்லை. மாறாக வையாபுரிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். விளையாட்டு என்றாலும் பெரிய மனிதராக நடந்து கொள்ளாமல் ‘ஆபாசமான பாடலை’ பாடியது அவர் செய்தது தவறு. இனி வரும் காலத்தை இணக்கமுடன் கழிக்கலாம் என்பது சுஜாவின் யோசனையாக இருக்க வேண்டும். ‘பெருந்தன்மையுடன்’ சுஜாவை மன்னித்தார் வையாபுரி. 

பிந்து வந்து ஒரு மாதமாகிறதாம். ‘எல்லோரும் என்னை வாழ்த்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அம்மணி இன்னமும் கூட ‘விருந்தினர்’ நிலையை விட்டுத் தாண்டி வந்தது போல் தெரியவில்லை. 

**

நாமினேஷன் படலம் துவங்கியது. முன்பாவது போட்டியாளர்களின் கட்அவுட்டிற்கு வண்ணம் அடிப்பதாக இருந்தது. இம்முறை போட்டியாளர்களின் முகத்திலேயே வண்ணப்பொடி பூச சொன்னது ஓவர். பிக்பாஸின் சேட்டை அதிகமாகிக் கொண்டே போகிறது. 

காஜலை அதிகம் பேர் நாமினேட் செய்தது ஆச்சரியம்தான். ‘அவர் இந்த விளையாட்டை சீரியஸாக எடுத்துக் கொள்வில்லை. taskகளை அரைமனதுடன் செய்கிறார். வெளித்தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார். விளையாட்டுத்தனமாகவே இருக்கிறார்’ என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. உண்மைதான். சிங்கம் மாதிரி கர்ஜிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது பூனை மாதிரி கூட காஜல் முனகவில்லை. பொசுக்கென்று அழுது விடுகிறார். 

சிநேகன் மன்னிப்பு விவகாரத்தில், குறும்படத்தின் மூலம் ஆரவ்வின் பொய் அம்பலமானதால் ஆரவ்வும் நிறைய நாமினேஷன் வாங்கினார். அது அத்தனை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. காயத்ரியின் சகவாசத்தால் ஆரவ் தவறிழைத்திருக்கலாம். மட்டுமல்லாமல், சிநேகன் புறம்பேசுவதை விட ஆரவ்வின் பங்கு குறைவுதான். என்றாலும் நாமினேஷன் முடிந்ததும் மனப்பூர்வமாக அனைவரிடமும் ஆரவ் மன்னிப்பு கேட்டது சிறப்பு. 

ஒரு task-ல் தோற்றதால் வெளியேற்றத்திற்கு சிநேகன் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அவரை எவரும் நாமினேஷன் செய்யவில்லை. இதைத் தவிர கணேஷையும் எவரும் நாமினேஷன் செய்யவில்லை என்பதைக் கவனிக்கலாம். Slow, steady and win the race பார்முலாவை மனிதர் சிறப்பாக கையாள்கிறார். 

ஆக.. இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் காஜல், ஆரவ் மற்றும் சிநேகன். 

மக்கள் எவரை வெளியேற்றுவார்கள், காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை. எனக்கென்னமோ ஆரவ்விற்கு ஒரு கண்டம் இருப்பது போல் தோன்றுகிறது. ‘எவரையாது காப்பாற்றலாம்’ என்கிற வாய்ப்பை அடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாக சொல்லி விட்டார் கணேஷ். 

**

வாக்குமூல அறையிலிருந்து அசரீக்குரலாக ஒவ்வொருவரையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் ஆரத்தி. இவரின் குரலை கணேஷ் உடனே கண்டுபிடித்து விட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரத்தியும் ஜூலியும் ஒரு வாரத்திற்கு தங்கப் போகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இன்று ஒரு நாளைக்கு மட்டும்தான் இருப்பேன் என்று ஜூலி சொன்னதின் காரணம் தெரியவில்லை. பிக்பாஸ் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தாரா? அல்லது ஜூலியின் குறும்பா?

ஆரத்தி உள்ளே வருவார் என்று எதிர்பார்ததற்கு மாறாக ஜூலி உள்ளே நுழைந்தார். பழைய, வெள்ளந்தியான ஜூலி இது இல்லை என்பதை மட்டும் உடனடியாக உணர முடிந்தது. அம்மணிக்கு பளபளப்பு கூடியிருக்கிறது. ஆனால் அதே பழைய ‘கலகல’. ஜூலியைப் பார்த்ததும் சுஜா திகைத்து நின்று விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு அரைமனதாக கைகொடுத்தார்.

பிக்பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, ஒரு பார்வையாளராக சுஜா தந்திருந்த வீடியோ நேர்காணல் ஒன்றுள்ளது. அதில் ஜூலியின் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை. அத்தனை அருவருப்பாக இருக்கிறது. அந்த கேரக்ட்டரை அத்தனை வெறுக்கிறேன்’ என்றெல்லாம் சுஜா சொல்லியிருந்தார். பிறகு தானும் பிக்பாஸில் கலந்து கொண்டு ஜூலியை நேருக்கு நேராக சந்திப்போம் என்றெல்லாம் சுஜா கற்பனை கூட செய்திருக்க மாட்டார். விதி வலியது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ‘நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்’ என்று ஜூலியும் சுஜாவிடம் நேரடியாக சொன்னதுதான். 

சிநேகன் பழைய சிரிப்புடன் ஜூலியை கட்டியணைத்து வரவேற்க முயன்றார். ஆனால் ஜூலி சம்பிரதாயத்திற்கு சிரித்து விட்டு சட்டென்று விலகிப் போனது போல் தெரிந்தது. அது சிநேகனை காயப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பின்னான தருணங்களில் அமைதியாக இருந்தார். ஆரத்தி பாடி கிண்டலடித்தபடி ‘பாலூட்டி வளர்த்த கிளி’ பறந்து போயிற்றே என்ற சோகத்துடன் சிநேகன் இருந்தது போல் பட்டது. 

‘இங்கு நூறு நாள் இருப்பது வாழ்க்கை அல்ல, வெளியே நீண்ட காலம் வாழப்போவதுதான் வாழ்க்கை’ என்று சிநேகன் சொன்ன வசனத்தை பசுமையாக நினைவில் வைத்திருப்பதாக நினைவுகூர்ந்தார் ஜூலி. 

ஒயில்டுகார்டு என்ட்ரி என்றாலே, மக்கள் ஓட்டுப்போட்டு மறுபடியும் உள்ளே செல்வது தான். இதில் ஒருவேளை வெளியே அனுப்பினதே மக்கள்!!! என்பதால், பிக்பாஸ் மீண்டும் அவர்களாகவே கூப்பிட்டுவிட்டார்கள் போல. வடிவேலு சொல்லும் , " நாங்க் எலுமிச்சம்பழத்த பிரிச்சு, அதுல எண்ணெய் ஊத்தி, திரிய வச்சு, தீ வச்சு வப்பமாம், நீங்க நோகாம போய் தண்ணில விடுவீங்களாம் " என்பது போல நாங்க அலாரம் எல்லாம் வச்சு பிளான் பண்ணி ரெண்டு பேர வெளிய அனுப்புவமாம். நீங்க எதிர்பாராத்தை எதிர்பாருங்கள்னு சொல்லி ரெண்டு பேரையும் உள்ள அனுப்புவீங்களா என்பது தான் மக்களின் கோபமாக இருக்கிறது. இதற்கும் கமல் ஒரு சல்ஜாப்பு சமாளிஃபிகேஷனை இந்த வாரம் தருவாரோ என்பது தான் இன்னும் பயமாக இருக்கிறது

**

வெளியில் நடந்த நிகழ்வுகளை ஜூலியின் வாயிலிருந்து போட்டியாளர்கள் பிடுங்க முயற்சித்தார்கள். ‘அடிச்சுக்கூட கேப்பாங்க. சொல்லிடாதீங்க’ என்று பிக்பாஸ் சொல்லியிருக்கிறார்’ என்று சமாளித்தார் ஜூலி. ‘ஒருநாள்தான் தங்கப் போகிறேன். Re-entry கேட்டேன். முடியாதுன்னுட்டாங்க’ என்று அவர் சொல்லியது எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை. 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day :63  |62  |61  |60  |59  |58  |57  |56  |55  |54  |53  |52  |51  |50  | 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 63)

கடைசியா கமலையும் ஜட்ஜ் ஆக்கிட்டீங்களேய்யா..!(Day 62)

ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’!(Day 61)

ஆரத்தியின் வருகை நிகழ்ந்தது. கலகலப்பின் எடை கூடியது. சளசளவென்று உற்சாகமான உரையாடல்கள். ‘எங்க அப்பா கிட்ட இருந்து சொத்தை பிரிச்சுட்டு போலாம்னு வந்தோம். அவரு புதுசா வந்திருக்கிற பொண்ணுங்களுக்கு குடுத்துடுவாரோன்னு பயமா இருந்தது’ என்று ஜாலியான உதாரணத்தைச் சொன்னார் ஆரத்தி. 

சிநேகன் அமைதியாக இருப்பது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம். ‘இல்லம்மா தங்கச்சி…. ‘ என்று மனதிற்குள் அழும் டி,ஆர் போன்று கலங்கலாக அமர்ந்திருந்தார் சிநேகன்.

“இந்த வீடு எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்திருக்கு. நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். நானும் தப்பு பண்ணியிருக்கேன். பாசம் காண்பிச்சு ஏமாத்திட்டாங்க’. இனிமே அண்ணனாக இருந்தாலும் சரின்னா சரி, தப்புன்னா தப்பு’-ன்னு சொல்லுவேன். என்றெல்லாம் காஜலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி. அவர் குறிப்பிட்டது எவரை, சிநேகனையா, காயத்ரியையா?
 
புது போட்டியாளர்களை வரவழைத்ததும் வெளியேறினவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததும் வையாபுரிக்குப் பிடிக்கவில்லை போல. தங்களின் இத்தனை நாட்களின் சிரமமும் வீணாகி விடுமோ என்று கத்திக் கொண்டிருந்தார். இதர பழைய போட்டியாளர்களின் மனநிலையும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். 

‘ஜூலியைப் பார்த்த போது மகிழ்ச்சியுடன் வரவேற்க நினைத்தாலும் அவர் செய்த பழைய சம்பவங்களின் வலி சார்ந்த தழும்பு இன்னமும் மறையவில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் சுஜா. பிக்பாஸ் பார்வையாளர்கள் பலருக்குமே ஜூலியின் மறுவருகை பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிநேகன் முன்பு சொன்னதுதான். ‘மன்னிக்க முடியாத குற்றம் என்பது இந்த உலகத்தில் கிடையாது’ 

**

‘Truth or dare’ என்றோரு task ஜாலியாக நடந்தேறியது. ‘மறுபடியும் ஏன் வந்தீங்க?’ என்ற கேள்விக்கு ‘பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது. அந்த வரலாற்று தருணத்தில் இணையவே வந்திருக்கிறேன்’ என்றெல்லாம் ஆரத்தி தந்த பில்டப்பைப் பார்த்து பிக்பாஸிற்கே ஆனந்த மயக்கம் வந்திருக்க வேண்டும். 

தன் லவ் ப்ரபோஸலை, விளையாட்டு போல சீரியஸாகவே பிந்துவிடம் ஹரீஷ் சொன்னது போல் இருந்தது. குரலில் அத்தனை ஏக்கம். தன்னை மிகவும் பாதித்த விஷயமாக ‘ஓவியா வெளியேற்றத்தைப்’ பற்றி ஆரவ் சொன்னது சிறப்பு. மனிதர் இதுவரை வெளிப்படையாக இந்த விஷயத்தைச் சொன்னதில்லை என்று நினைக்கிறேன். அல்லது ஓவியா சார்ந்த சர்ச்சைகளிலிருந்து வெளிவருவதற்காக இப்போது அப்படிச் சொல்கிறாரா என்பதும் தெரியவில்லை.

ஆரத்தியை தொடர்ந்து திட்ட வேண்டும் என்கிற சவாலை செய்யத் திணறினார் பிந்து. சுந்தரத் தெலுங்கு வாசனையுடன் மழலை மொழியில் அம்மணி எத்தனை திட்டினாலும் எவருக்குமே கோபம் வராது போலிருக்கிறது. ‘நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க பிந்து’.

வையாபுரியும் கணேஷூம் விரகதாபத்துடன் ஆடிய டூயட் ‘கட்டிப் பிடி, கட்டிப் பிடிடா’வை விட மோசமாக இருந்தது. 

**

ஏற்கெனவே நுழைந்த புதிய வரவுகளைத் தாண்டி, பழைய முகங்களும் மீண்டும் நுழைந்திருப்பதை ஆரம்ப நிலையில் இருந்து தாக்குப் பிடிக்கும் போட்டியாளர்கள் அத்தனை விரும்பவில்லை என்று தெரிகிறது. தங்களின் இத்தனை கால உழைப்பும் சிரமமும் வீணாகி விடும் என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் அது சரிதான். ஆனால் இந்தப் போட்டியின் அம்சங்களில் அதுவும் ஒன்று எனும் போது என்ன செய்ய முடியும். இதையும் தாண்டி வருவதுதான் அவர்களுக்குள்ள சவால். சமாளித்துதான் ஆக வேண்டும்.
 

அடுத்த கட்டுரைக்கு