Published:Updated:

'போலீஸ் கெட்டப்ல இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன்!" - 'மாப்பிள்ளை' தேவி பிரியா

'போலீஸ் கெட்டப்ல இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன்!" - 'மாப்பிள்ளை' தேவி பிரியா
'போலீஸ் கெட்டப்ல இதெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன்!" - 'மாப்பிள்ளை' தேவி பிரியா

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'மாப்பிள்ளை' சீரியலில் காமெடி வில்லியாக நடித்து வருபவர் தேவி பிரியா. கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் தனக்கென  தனி முத்திரைப் பதித்து வருபவர். சீரியஸ், சீனியர், வில்லி, காமெடி, சென்டிமென்ட் என தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களை அசால்ட்டாக கையாளும் தேவி பிரியாவிற்கு ஆஸ்தான கேரக்டராக அடிக்கடி அமைவது போலீஸ் கதாபாத்திரம்தான். போலீஸ் கேரக்டரைப் பற்றி கேட்டால் அவ்வளவு விஷயங்களை எமோஷனலாகப் பகிர்கிறார்.

''நீங்கள் நடித்ததில் மிகவும் பிடித்த கதாபாத்திரம்?''

''2006 அல்லது 2007-ம் ஆண்டுனு நினைக்கிறேன். 'ஆசைகள்' என்கிற சீரியல்ல நடிச்சேன். அந்த சீரியலில் எனக்கு சப் - இன்ஸ்பெக்டர் ரோல் கொடுத்தாங்க. அன்னைக்கு நான் போட்ட காக்கிச் சட்டை மேல எனக்கு தனிப் பிரியம் வந்துடுச்சுனுதான் சொல்லணும். பொதுவாகவே, நான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டரையும் ரசிச்சுதான் செய்வேன். அந்தக் கேரக்டருக்காக என் ஒட்டு மொத்த உழைப்பையும் கொட்டுவேன். நடிப்புனு வந்துட்டா எந்தக் காரணத்துக்காகவும் என்னை நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதேயில்ல.

ஆசைகள் சீரியல்ல எனக்கு போலீஸ் காஸ்டியூம் கொடுத்தப்போ சிரிப்பு சிரிப்பா வந்தது. ஏன்னா, என்னோட உயரம், உடல்வாகு எல்லாம் அந்த டிரஸ்க்கு கொஞ்சம்கூட ஃபிட்டா இல்ல. சுந்தர்ங்கிறவர் என்னுடைய சித்தப்பாவா நடிச்சிருந்தார். அவரு நல்ல உயரமாக இருந்தார். அதனால என்னை மிரட்டறது, எதாவது சொல்றதுனு எதுவா இருந்தாலும் குனிஞ்சுதான் பேசுவார். ஷூட்டிங் நடக்கும்போதெல்லாம் சிரிப்பு சிரிப்பா வரும்''. 

''அதற்குப் பிறகான உங்களுடைய நடிப்பைப் பத்தி சொல்லணும்னா?''

''நிறைய அனுபவம் இருக்கு. அதற்குப் பிறகு ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'அச்சம் மடம் நாணம்' சீரியலில் அன் யூனிஃபார்மில் நடிச்சிருந்தேன். அதற்குப் பிறகு என்னுடைய கெரியரை மாற்றிப் போட்ட பெரிய ஆஃபர்னா அது 'சொர்க்கம்' சீரியல்தான். அந்த சீரியலில் அசிஸ்டென்ட் கமிஷனர் ரோல். மெளனிகாவை, மிரட்டுறது மாதிரியான நெகட்டிவ் ரோல். அந்த ரோலில் நடிக்கும் போது டைரக்டரிடம், 'போலீஸ்காரங்க பொண்ணுங்க மேல கை வைக்கக் கூடாது சார். அதுவுமில்லாம கர்ப்பமாக இருக்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க மேல கை வைக்கமாட்டேன்'னு சொல்லிட்டேன். போலீஸா நடிக்கிறப்ப இதெல்லாம் பண்ண மாட்டேனு நான் சொன்னதை டைரக்டர் புரிஞ்சுகிட்டார். அடுத்த சீன்லயே பாசிட்டிவ் ரோல் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். 'சொர்க்கம்' சீரியல்ல நடிச்ச எனக்கு 'சிறந்த கதாபாத்திரத்திற்கான ஸ்டேட் அவார்டு கிடைச்சது''. 

''நீங்கள் வாங்கிய மறக்க முடியாதப் பாராட்டு எது?''

''நிஜமா சொல்றேங்க. இப்ப இருக்கவங்ககூட எதாவது ஒரு விஷயத்துக்குப் பாராட்டிட்டு, அடுத்த நொடியே கலாய்ச்சிட்டுப் போயிடுவாங்க. அந்த காலத்து மனுஷங்க அப்படியில்ல.  சிவாஜி கணேசன் சாரோட 'கட்டபொம்மன்' படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் எனக்கு திடீர்னு போன் பண்ணி, 'உன்னை கம்பேர் பண்றேனேனு நினைக்காதம்மா... போலீஸ் போன்ற மிடுக்கான கேரக்டர்கள் இதுவரை சிவாஜி சாருக்குதான் அத்தனை அம்சமா பொருந்திப் போயிருக்கிறதைப் பார்த்திருக்கேன். அவருக்குப் பிறகு உனக்குதான் நல்லா பொருந்திப் போகுது'னு சொன்னார். எல்.ஆர்.ஈஸ்வரியம்மா போன் பண்ணி எனக்கு வாழ்த்து சொன்னாங்க. இவை எல்லாம் 'சொர்க்கம்' சீரியலுக்குக் கிடைச்சப் பாராட்டு. அதுக்கப்புறம் நான் வாங்கினப் பாராட்டு மோதிரக்கையால''. 

''மோதிரக்கையாலயா.. யார் அவர்?''

''பாரதிராஜா சார்தான். 'நாயுடம்மா'ங்கிற ('தெக்கத்திப் பொண்ணு' தெலுங்கு வெர்ஷன்) சீரியலில் நடிக்கிறதுக்காக பாராதிராஜா சார் என்னை கூப்பிட்டார். அவருக்கு நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிறது தெரிஞ்சிருக்காதுபோல. 'உனக்கு போலீஸ் கேரக்டர்மா.. இப்படித்தான் நடிக்கணும். சரியா?'னு நடிப்பு சொல்லிக் கொடுத்து அனுப்பிட்டு, நான் நடந்துப் போகும்போது பின்னால் அவர் என்னைப் போல நடந்து காண்பிச்சாராம். அந்த அளவுக்கு போலீஸ் கெட்டப்பில் ஊறிப்போயிருந்தேன். மிடுக்காக நடப்பது முதல் பேசுவது வரை அதே மாதிரி நடந்திருக்கேன். அந்த சீரியலுக்கான கலைமாமணி அவார்டு பெறும்போது, இந்த பொண்ணு எங்கயோ இருக்கவேண்டியப் பொண்ணு. என்னமாப் பண்ணுது'னு என்னை சுட்டிக் காட்டிப் பாராட்டினாராம். ஆனால், அந்த சீரியலில் கமிட் ஆனபோது 'இவ்வளவு குள்ளமா இருக்கு, இந்தப் பொண்ணு எப்படி போலீஸ் கேரக்டருக்கு சூட் ஆகும்? ஹீல்ஸ் எதுவும் போட்டு ஹயிட் ஏத்துங்கப்பா'னு சொன்னாராம். அப்படி எல்லாம் கமெண்ட் வாங்கினாலும் என் முயற்சியினாலும், டெடிகேஷனாலும் நல்லப் பேர் வாங்கியிருக்கேன் என்கிற சந்தோஷம் எனக்கு எப்போதும் உண்டு. 'அடுத்து அத்திப்பூக்கள்' சீரியலும் எனக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துச்சு. அத்திப்பூக்கள் சீரியல் பண்றப்ப ஃபிட்டா இருந்தேன். அதனால போலீஸ் கெட்டப் கொடுத்தாங்க''. 

''சினிமா படங்களுக்கான வாய்ப்புகளும் வந்ததா?''

''ஆமாம். ஜே.கே ரித்திஷ் நடிச்ச 'நாயகன்' படத்தில் எனக்கு ஒரு ரோல் கொடுத்தாங்க. அதிலேயும் போலீஸ் கெட்டப்தான். கன் ஷாட், உயரத்திலிருந்து குதிக்கிறதுனு நிறைய மெனக்கிட்டேன். எனக்கு சீரியல், சினிமானு எதுவாக இருந்தாலும் தானா தேடிவர்றது 'போலீஸ்' ரோல்தான். தமிழில் நடிச்சு முடிச்ச பல நடிகர்கள், மலையாளத்தில் போலீஸ் கெட்டப்ல நடிக்கிறப்ப என்னைக் கூப்பிட்டு டிப்ஸ் கேட்பாங்க. அதேமாதிரி எந்த கேரக்டராக இருந்தாலும் சரி, அதுக்கான லாஜிக் இருக்கணும்னு நினைப்பேன். 'சொர்க்கம்' சீரியல்ல நடிச்சப்பவும், சில கரெக்‌ஷனை ஸ்கிரிப்ட் ரைட்டர்கிட்ட சொன்னேன். 'கோர்ட்ல ஜட்ஜ்க்கு முன்னாடி போலீஸ் தொப்பிப் போட மாட்டாங்க'னு சொல்லி திருத்தியிருக்கேன். 'நாயகன்' படத்துக்குப்  பிறகு, 'விஞ்ஞானி'ங்கிற படத்தில் நடிச்சிருந்தேன். அந்தப் படம் மக்கள்கிட்ட சரியா ரீச் ஆகல. இப்போ, 'என் ஆளோட செருப்ப காணோம்'ங்கிற படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இதுல 'மப்டி போலீஸா' நடிச்சிருக்கேன்''. 

''நிஜப் போலீஸைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணும்?''

''நிஜமாகவே அவங்களுக்கு சல்யூட் பண்ணதான் தோணும். போலீஸ் கேரக்டரில் நடிக்கும்போதே சில விஷயங்களில் கஷ்டமா இருக்கும். உண்மையான போலீஸ் எல்லாம் பந்தோபஸ்து, பொது நிகழ்ச்சிகள் என பல இடங்களில் நிறைய நேரம் நிற்க வேண்டியிருக்கும். அப்பலாம் கால்வலி, முதுகுவலி, டாய்லெட் போகாம இருக்கிறதுனு ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கும். ஆண் போலீஸா இருந்தாகூட டாய்லெட் பத்தி கொஞ்சம் கவலைப்படத்தேவையில்ல. ஆனால், பெண் போலீஸூக்கு அப்படியில்ல. டாய்லெட், பீரியட்ஸ்னு நிறைய பிரச்னைகள் இருக்கும். அத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில அவங்க பொதுமக்களுக்காக கடும் வெயில்னும் பார்க்காம டியூட்டிப் பார்ப்பாங்க. அவங்கள எங்க பார்த்தாலும் சல்யூட் பண்ணத்தோணும். ஒரு வேளை நான் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தா, போலீஸ் வேலைக்குப் போயிருக்க முடியும்னு நினைக்கிறேன். சீரியலில் அதுவும் இந்த ரோலில் நடிக்கும்போது 'நாம ஏன் போலீஸ் ஆகியிருக்கக் கூடாது'னு யோசிப்பேன்''.