Published:Updated:

ஜூலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜூலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
ஜூலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜூலி, ஆர்த்தி பேக் டூ ஃபார்ம்... பாவம் ஆரவ்! (66-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


‘ஐ’ திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலித்தது. ‘லேடியோ’. 

காலையில் எழுந்தவுடனேயே தன் அலப்பறையை ஆரம்பித்தார் ஆரத்தி. ‘வேலை செய்யப் போற மதுரை டீமிற்கு எதுக்கு இவ்ள மேக்கப். எனக்கு பசிக்குது. டிபன் செய்யுங்க’ என்று உத்தரவுகள் அதிகாரத்துடன் காற்றில் பறந்தன. ஏதோ பிறந்ததில் இருந்தே NRI என்பது போல ஆரத்தியின் அதிகார தர்பார் கொடி கட்டிப் பறக்கிறது.  

ஜூலி மதுரை பாணியில் ஒரு பாட்டு பாட, ஆரவ்வும் பிந்துவும் நடனமாடினர். ‘நாம் ஆட வைக்க வேண்டிய அணி. நாம் ஆடக்கூடாது’ என்று NRI ஜபர்தஸ்தை நிலைநிறுத்த முயன்றார் ஆரத்தி. என்றாலும் அவர்களின் நடனத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. 

ஆரத்தி, trigger ஆரத்தியாக மாறி ஓவியா விஷயம் தொடர்பாக ஆரவ்வை கேள்விக் கணைகளால் துளைத்தார். “நீங்க ஜெயிச்சு வரும் போது ஓவியா வெளில இருந்தா என்ன பண்ணுவீங்க? அவங்க ப்ரபோஸ் செஞ்சா உங்க ரியாக்ஷன் என்ன? அவங்களை மிஸ் பண்றீங்களா? ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்ககூடாது என்றெல்லாம் ஆரவ்வை சங்கடத்தில் ஆழ்த்தினார். விவஸ்தையற்ற கேள்விகள். இந்த நோக்கத்தில்தான் ஆரத்தியை பிக்பாஸ் உள்ளே விட்டிருக்கிறார் போலிருக்கிறது. 

ஆரத்தியின் அதிகப்பிரசங்கித்தனத்தை சாமர்த்தியமாக சமாளித்து வெளியேறினார் ஆரவ். ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசினால் மக்களின் அபிமானத்தைப் பெற முடியும் என்பதுதான் ஆரத்தியின் கணக்காக இருக்குமே தவிர, ஓவியாவின் மீதுள்ள உண்மையான அன்பாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆரத்தி வெளியேறாமல் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருந்திருந்தால் காயத்ரி குழுவுடன் இணைந்து ஓவியாவை நிச்சயம் நோகடித்திருப்பார் என்று உறுதியாக தோன்றுகிறது. 

ஆரவ்வை சங்கடப்படுத்தி முடிந்ததும் அடுத்து ஜூலிக்கு நகர்ந்தார் ஆரத்தி. “ஆரவ்வைப் பார்த்தா ஒரு மாதிரி இருக்கு” என்று ஜூலி காயத்ரியை தனிமையில் அழைத்து முன்பு சொல்லியிருந்தார். அதை விவஸ்தையே இல்லாமல் காயத்ரி பொதுவில் சொல்லி ஜூலியை கிண்டலடித்தார்.

இப்போது ஆரத்தியும் அதே விஷயத்தை செய்கிறார். முன்பு நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி “ஆரவ்வைப் பார்த்தா இப்பவும் ஒரு மாதிரி இருக்கா?” என்று ஆரத்தி கேட்டதற்கு ஜூலி மட்டுமல்லாமல் ஆரவ்வும் சங்கடமடைந்தார். “ஏன் இப்ப பழைய விஷயங்களை கிளர்றீங்க?” என்று கோபமடைந்தார். “ஆரவ்வை முதல்ல இருந்தே ‘அண்ணா’ ன்னுதான் கூப்பிடறேன். அவர் கண்களை பார்த்தா, சிகரெட் பிடிக்கற ஸ்டைலைப் பார்த்தா எங்க அப்பா ஞாபகம் வருது’ன்னு சொன்னேன்” என்று ஜூலி விளக்கமளித்தாலும் ஆரத்தி அந்த பஞ்சாயத்தை முடிப்பதாக தெரியவில்லை. ஒருவரை வெறுப்பேற்றுவதில் ஆரத்தி கில்லாடியாக இருக்கிறார்.

இதற்காக 12.07.2017 அன்று நடந்த நிகழ்வை தேடிப் பார்த்தேன். ‘படையப்பா’ ரஜினி மாதிரி உடையணிந்த தினம் அன்று. தனக்கான பாடல் வந்ததும் அதற்கு ஆடி முடித்து விட்டு காயத்ரியை தனிமையில் அழைத்த ஜூலி, ‘என்னமோ தெரியலைக்கா.. ஆரவ்வை பார்த்துக்கிட்டே இருக்கணும் மாதிரி இருக்கு. என்னன்னு சொல்லத் தெரியலை’ என்றுதான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறார். இதை நமீதாவிடம் சொல்லிச் சிரித்த காயத்ரி, வீடெங்கும் பரப்பி விட சக்தியும் ஆரவ்வை வைத்துக் கொண்டே கிண்டலடிக்கிறார். சுற்றி அமர்ந்திருந்த சிநேகன் உள்ளிட்டோர் சிரித்து மகிழ்கின்றனர். 

பொதுப்பார்வைக்கு ஜூலி ஆரவ்வின் மீது இனக்கவர்ச்சி கொண்டிருப்பது போலத்தான் ஜூலியின் அந்த உடல்மொழியை வைத்து இந்த நிகழ்வை புரிந்து கொள்ள முடியும். ஆனால் ‘அவர் எனது தந்தையை நினைவுப்படுத்தினார்’ என்று சம்பந்தப்பட்டவரே விளக்கம் அளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே முறை. ‘அப்பாவை போய் யாராவது குறுகுறுன்னு பார்ப்பாங்களா?’ என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது ஆபாசமானது. இதைத்தான் ஆரத்தி செய்து கொண்டிருக்கிறார். மேலும், ஒருவருக்கு சங்கடமளிக்கும் பழைய விஷயங்களை அவரிடமே கிளறிக் கொண்டிருப்பதும் நாகரிகம் ஆகாது. 

கோபத்துடன் தனிமையில் சென்று அமர்ந்து விட்ட ஜூலியிடம் விடாப்பிடியாக சென்று பேசிக் கொண்டிருந்தார் ஆரத்தி. “ஜூலி இப்படிக் கிடையாதே” என்று ஆரத்தி கேட்ட போது ‘இப்படி கேட்காம விட்டு விட்டுதான் நிறைய விஷயங்கள் தப்பாயிடுச்சு’ என்றார் ஜூலி. “லவ்வா இருந்ததுன்னா சொல்லப் போறேன். நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று அவர் கேட்பது ஒருவகையில் நியாயமானது. 

**

வீட்டை விட்டு வெளியே சென்ற பிந்துவிற்கு குடைபிடிக்கிறேன் பேர்வழி என்று ஹரீஷ் காமெடி செய்து கொண்டிருந்தார். 

‘இந்த வீட்டில் பிடிக்காத யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டிப்பிடித்து விட்டு பின்பு ‘ஏன் அவரை பிடிக்காது?’ என்று விளக்க வேண்டும்’ என்கிற task-ஐ சுஜாவிடம் தந்தார் ஆரத்தி. “ஜூலியை எனக்குப் பிடிக்காது” என்று சொன்ன சுஜா, ‘அதற்கான காரணங்கள் நிறைய இருக்கு. நான் வெளில இருந்து வீடியோல பார்த்த ஜூலியே காரணம். இப்ப நேரா அவங்களை புரிஞ்சுக்க இன்னமும் டைம் வேணும். அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட நெறய பேச வேண்டியிருக்கு” என்றார். ‘தாராளமா பேசலாம்’ என்று அதற்கு பதிலளித்தார் ஜூலி.

ஏதோ ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று விரும்பிய ஜூலிக்கு, டைனிங் டேபிள் பகுதியை நொண்டியடித்துக் கொண்டே சுற்றி வர வேண்டும் என்று task தந்தார் ஆரத்தி. மேட்டிமைத்தனமான தோரணையுடன் ஆரத்தி சொல்லும் task-கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. பிக்பாஸ் தந்த ‘முதலாளித்துவ’ வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்பவர் ஆரத்தி மட்டுமே. ‘நீ சொல்றது சரிம்மா. ஆனால் சொன்ன விதம்தான் தப்பு” என்கிற அவருடைய தந்தையின் அபிப்ராயத்தை ஆரத்தி நினைவில் வைத்துக் கொண்டிருப்பது போல தெரியவில்லை. 

**

NRI குடும்பம் செய்த அலப்பறைகளுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்ததின் மூலம் ஒரு மகத்தான டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். இனி மேல் வீட்டை ஆளும் அனைத்து உரிமைகளும் மதுரை குடும்பத்திற்கு மாற்றப்படுகின்றன.. முன்பு சொல்லப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் இனி NRI குடும்பத்தினர் செய்ய வேண்டும். 

நேற்றைய கட்டுரையிலேயே கூட இதைப் பற்றி சொல்லியிருந்தேன். கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கூடும் என்று. எனவேதான் NRI குடும்பம் தங்களின் அதிகாரங்களை மிதமிஞ்சி பயன்படுத்தாமல் சற்று கனிவாக பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஆரத்தி மட்டுமே விதிவிலக்கு. 

இந்த திடீர் மாற்றத்தைக் கண்ட NRI குடும்பம் உள்ளூற திகைப்படைந்தாலும் அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனை சீக்கிரம் நிலைமை தலைகீழாகும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இது போன்ற பூர்ஷூவாத்தனமான நடவடிக்கைகளை எவர் செய்தாலும் அது பிழையே. 

சோபாவில் அமரப் போன பிந்துவை தரையில் அமரச் செய்தனர். நேற்று தோற்ற அணியில் இருந்த போது ‘உடம்பு சரியில்லை’ என்று அமைதியாக படுத்துக் கொண்ட வையாபுரி, இன்று நிலைமை தலைகீழானவுடன் ‘நாட்டாமை’ கெத்துடன் வந்து அமர்ந்து கொண்டார். 


பிந்துவிடம் அவரது திருமண விவரங்களைப் பற்றி விசாரித்து ‘எங்க பையனைக் கட்டிக்கறியா?’ என்று ஹரீஷை அழைக்க அதற்காகவே காத்திருந்தது போல பின்னால் வந்து நின்றார் ஹரீஷ். ‘மதுரையைப் பற்றி ஏதாவது பாட்டு பாடு’ என்கிற நாட்டாமையின் கட்டளைக்கு ‘மதுரைக்குப் போகாதடி’ என்று முரணாக பாடி வைத்தார் பிந்து. எவரும் இதைக் கவனிக்கவில்லை.

இதற்கிடையில் பழிக்குப்பழியாக ஜூலி தந்த ஒரு task-க்கிற்காக, மற்றவர்கள் வேண்டாமென்று சொல்லியும் பிடிவாதமாக நீச்சல் குளத்தில் சென்று குதித்தார் ஆரத்தி. ‘என்ன task வேண்டுமானாலும் கொடுங்கள்’ என்பது ஆரத்தியின் பந்தா. பிந்துவிற்கு சாதாரண தமிழே தகராறு. அவரைப் போய் மதுரை வழக்கில் பேசச் சொன்னால் என்னவெல்லாம் விபத்து நிகழுமோ அதெல்லாம் நிகழ்ந்தது. 

‘கல்யாணத்தைப் பற்றி சிநேகன் ஒரு பாட்டு எழுதியிருக்காரு. அது என்னன்னு பாடு’ என்ற நாட்டாமையின் கட்டளைக்கு ‘கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ பாடலை எல்கேஜி மழலையில் பாடினார் பிந்து. சிநேகன் கமுக்கமாகச் சிரித்துக் கொண்டார். அந்தப் பாடலை எழுதி விட்டு பல்வேறு விதமான சர்ச்சைகளில், எதிர்ப்புகளில் மாட்டி விழித்ததின் பாடு அவருக்கு மட்டும்தானே தெரியும்!

**

மதுரை குடும்பம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அதன் உறுப்பினர்கள் ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தனர். முன்பிருந்த அதே மாதிரியான கொடூர விதிகள். நேற்று உடம்பு சரியில்லை என்று ஒதுங்கியிருந்த ‘நாட்டாமை’ வையாபுரி ‘நாட்டுக்கோழி குழம்பு’ , பீடாவெல்லாம் கேட்டு ஜாலியாக அலப்பறை செய்து கொண்டிருந்தார். சுஜாவிற்கு மசாஜ் செய்ய வேண்டிய ஜாலியான ‘task’ கணேஷிற்கு. மனிதர் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார். 

“நாங்க நேத்து உங்களுக்கு ஈசியா task கொடுத்திட்டிருந்தோம். நீங்க என்னடான்னா கிரவுண்டை சுத்தி வா –ன்னு உயிரை எடுக்கறீங்க. மூஞ்சிலேயே குத்துவோம்’னு சொல்லு’ என்றெல்லாம் ஜூலியிடம் ராவடி செய்து கொண்டிருந்தார் காஜல். அம்மணி இப்போதுதான் ‘காயத்ரி’ பாணிக்கு வந்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் மனதிற்குள் ‘அப்பாடா, மகராசி ஃபார்முக்கு வராப்பா’ என்று நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சியை அடைந்திருக்க வேண்டும். 

மதுரை கலாசாரப்படி சொம்பில்தான் தண்ணீர் வேண்டும் என்று சுஜா பிடிவாதம் பிடிக்க, கழுவப்படாத சொம்பில் நீர் எடுத்துக் கொண்டு வந்து குடித்தேயாக வேண்டும் என்று ஆரவ் துரத்த, சுஜா பயந்து ஓடியது ஜாலியான கலாட்டா. 

‘சுஜா, ஜூலியை பிடிக்கவில்லை என்று நேரடியாக சொன்னது தவறு. ஜூலியின் மனது என்ன பாடு பட்டிருக்கும்?’ என்பது ஆரத்தியின் ஆதங்கம். சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான். சற்று முன்னால்தான் ஜூலியின் மூக்கில் குத்தி ரத்தம் வரவழைத்து விட்டு, அதையே இன்னொருவர் செய்யும் போது தக்காளிசட்னி தத்துவத்தை ஆரத்தி பொழிவது கொடூர நகைச்சுவை. “நானும் ஆரம்பத்துல அவளை fake fake’ன்னு சொல்லியிருக்கேன். அது என் தப்புதான்.” என்று இதற்கிடையிலும் வாக்குமூலம் தந்ததற்கு ஆரத்தியை பாராட்ட நினைத்தாலும் இப்பவும் அதே போல் நடந்து கொண்டிருப்பதற்காக கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது. 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day :65  |64  |63  |62  |61  |60  |59  |58  |57  |56  |55  |54  |53  |52  |51  |50  | 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்!(Day 65)

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து!(Day 64)

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 63)

“துவக்கத்திலிருந்து இருப்பவர்களில் வையாபுரியும் கணேஷூம் மாறவில்லை. அப்படியே இருக்கிறார்கள். கலகலப்பாக இருந்த சிநேகன் முற்றிலும் மாறி அமைதியாகி விட்டார். ஆரவ் ஜாக்கிரதையாக மாறி விட்டார்’ என்றெல்லாம் தன் அவதானிப்புகளை பிந்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரத்தி.

ஆரத்தி கழிவறைக்குச் செல்லும் போது பாடுகிறாரா என்று கண்காணிக்க பின்னாலேயே சென்றார் சுஜா. ஆனால் முன்பு ஆரத்தி சென்றது போல ரகசியமாக செல்லாமல், ஆரத்தி அறிவது போல சுஜா சென்றது நல்ல வித்தியாசம். பிந்துவையும் பாட்டுப்பாடிக் கொண்டே வெளியே செல்ல சுஜா வற்புறுத்த, பாடுகிறேன் பேர்வழி என்று ஜாலியாக ஆலாபனை செய்து சமாளித்துக் கொண்டே வெளியேறினார் பிந்து. 

மதுரை குடும்பத்தை கலை நிகழ்ச்சியின் மூலம் குஷிப்படுத்த, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலை அற்புதமாகப் பாடினார் ஆரவ். ஹரிஷீற்கு நல்ல போட்டி. ‘Where is the party?’ பாடலுக்கு NRI குடும்பம் ஆட, மதுரை குடும்பமும் தன்னிச்சையாக இணைந்து கொண்டது நல்ல விஷயம். இசைக்கு உள்ள மகத்துவம்.

சமையல் அறைக்கு செல்வதற்கு முன் அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்ற ஜூலியின் ஆட்சேபத்திற்கு, ‘நீங்களும் கொட்டிக்கறதுக்காகத்தான் சமைக்கறோம். அதுக்கெல்லாம் அனுமதி கேட்க முடியாது.. பே…” என்று காட்டமாக பதிலளித்தார் காஜல். உடனே தேர்ந்த வழக்கறிஞர் போல் சட்டப்புத்தகத்தை எடுத்து வந்து விதிகளை கறாராக சுட்டிக் காட்டினார் ஜூலி. முன்பு இவர் வீட்டில் இருந்த போது, ‘மற்ற உறுப்பினர்கள் இணைந்து கோரிக்கை விடுத்தால் ஒரு உறுப்பினரை (ஓவியா) வெளியேற்ற முடியும் என்று விதி இருக்கிறது. நான் பார்த்தேன்’ என்று குருட்டாம் போக்கில் சொன்னதும் இதே சட்ட மேதைதான். 

இரவு 09.00 மணிக்கே உறங்கிய பிந்துவை நாய் குரைத்து எழுப்பியது. பகலில் தூங்கக்கூடாது என்பதுதானே பிக்பாஸ் வீட்டின் சட்டம்? Task தந்த வெறுப்பினால் நாயின் குரைப்பையும் பொருட்படுத்தாது காஜல் இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கினார். நாய் குரைத்ததைக் கேட்டு ‘குழந்தை’ சுஜா வழக்கம் போல் பயந்து நடுங்கிப் போனார். 

**

‘Seven Stones’ என்ற விளையாட்டு Task தரப்பட்டது. இந்த விளையாட்டைப் பற்றி முன்பே இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். பிக்பாஸ் காதிற்கு விழுந்து விட்டது போல. சுவாரசியமான விளையாட்டு இது. கணேஷ் திறமையாக விளையாடியதால் NRI அணி வெற்றி பெற்றது. ஆனால் அவரவர்களின் இஷ்டத்திற்கு இதன் விதிமுறைகளை போட்டுக் குழப்பினார்கள். 

பந்து எறியப்படும் போது ஒரு முறை பிட்ச் ஆகி எதிர் தரப்பு பிடித்து விட்டால் பந்து எறிபவருக்கு அடுத்த வாய்ப்பு கிடையாது. அவர் ‘அவுட்’ ஆகி விடுவார். எதிராளி பிடிக்காதவாறு பந்தை எறிய வேண்டும். பந்தை எறிவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. குளத்தின் நீர்ப்பரப்பின் மேலே கல்லை எறிந்து நீர் வட்டங்களை வரவழைப்போம் இல்லையா, அதைப் போல பந்தை குறுக்கு வாக்கில் வேகமாக எறிந்தால் கற்களும் கலையும், பந்தும் தொலை தூரத்திற்கு சென்று விடும். எதிர்தரப்பு பந்தை தேடி எடுத்து வருவதற்குள் கற்களை அடுக்கி விடலாம். 

இதைப் போலவே கற்களை அடுக்குவதை ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டில் சொல்லப்பட்டதும் தவறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து அடுக்கலாம். இதைப் போலவே பிக்பாஸ் வீட்டில் உபயோகித்த கற்கள் என்பது ஒழுங்கான வடிவமைப்பில் உள்ள மரத்துண்டுகள். அவற்றை அடுக்குவது எளிது. ஆனால் நாங்கள் விளையாடும் போது மைதானத்தில் கிடைக்கும் கரடுமுரடான, ஒழுங்கற்ற வடிவில் உள்ள கற்களை வைத்துதான் விளையாட முடியும். எதிரணயில் தாக்கப்பட்டு விடுவோமோ என்கிற பதட்டத்திற்கு இடையில் இவற்றை அடுக்குவது சிரமமானது. 

எனவே பிக்பாஸ் வீட்டில் விளையாடப்பட்டது ‘ஏழு கற்கள்’ அல்ல. மூன்றரை கற்கள் மட்டுமே. அழுகிணி ஆட்டம்.

**

‘உங்க கிட்ட நெறைய பேச வேண்டும்’ என்று ஜூலியிடம் சொல்லியிருந்த சுஜா, இரவு நேரத்தில் ஜூலியை அமர்த்திக் கொண்டு கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘ஓவியா விஷயத்தில் ஏன் பொய் சொல்லி துரோகம் செஞ்சீங்க?’ என்பது அவர் கேட்ட கேள்விகளின் சாரம். “நான் செஞ்சது தப்புதான். ஆனால் அந்தச் சமயத்தில் எனக்கு குழப்பமாக இருந்தது. வழக்கமாக நான் மசாலா போட்டு விஷயங்களை மிகையாக்குபவள்தான். ஆனால் இந்த விஷயத்தில் உண்மையாகவே எனக்கு குழப்பம்’ என்று ஜூலி விளக்கம் அளித்தாலும் சுஜா சமாதானம் அடைவது போல தெரியவில்லை. 

இந்தக் களங்கம் ஜூலியின் மீதிருந்து மறைய இன்னமும் நீண்ட காலம் ஆகும் போலிருக்கிறது. அத்தனை அழுத்தமான துரோகம் அது. ஆனால் ஜூலி மனதார மன்னிப்பு கேட்டு விட்ட பிறகு இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டேயிருப்பது முறையல்ல. ஜூலியை ‘அன்புத் தங்கையாக’ நினைத்து விட்டு விடலாம். பாவம், சின்ன பெண்தானே. முதிர்ச்சியில்லை என்று நினைத்துக் கொள்ளலாம். நம்முள்ளும் பல ஜூலிக்கள் தலைவிரித்து ஆடுவதையும் நினைவில் கொள்ளலாம். 

“இப்பவாவது மாறிட்டீங்களா, அதே மாதிரிதான் இருக்கீங்களா..’என்பது விடாக்கண்டர் சுஜாவின் கேள்வி. ‘அது என் கேரக்ட்டர். ஏன் மாத்திக்கணும். தவறுகள் செய்யும் விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பேன்’ என்பது ஜூலியின் சமாதானம். 

ஆரத்தியையும் ஜூலியையும் மறுபடியும் வீட்டுக்குள் அழைத்து வந்த பிக்பாஸின் நோக்கம் இப்போது கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அவர்களால் சில பரபரப்பான ஃபுட்டேஜ்கள் கிடைக்கின்றன. ‘இன்றைய நாளை எப்படியோ ஓட்டி விட்டோம். நாளை என்ன செய்வதோ?’ என்கிற கவலையில் மூழ்கியிருப்பார் பிக்பாஸ். கட்டுரையை எழுதும் நானும் அதே மனநிலையில்தான் இருக்கிறேன்.

அடுத்த கட்டுரைக்கு