Published:Updated:

ஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா? (67-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா? (67-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
ஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா? (67-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா? (67-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

மதுரை குடும்பத்திடம் அதிகாரம் கைமாறி விட்டதைக் குறிக்கும் வகையிலும் அதைக் கொண்டாடும் வகையிலும் ‘மதுர.. குலுங்க.. குலுங்க..’ என்ற பாடலை ஒலிக்க விட்டார் பிக்பாஸ். “கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி” என்ற பாடலை NRI குடும்பம் சோகத்துடன் பாட வேண்டிய வேளையிது. என்றாலும் பாடலுக்கு, மதுரை குடும்பத்தோடு NRI குடும்பமும் இணைந்து குத்தாட்டம் போட்டது சிறப்பு.  அதிகாரம் வந்த மகிழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக சிநேகன் வந்து நடனமாடியது ஆச்சரியம். ‘மறுபடியும் தங்களுக்கு அதிகாரம் திரும்பக்கிடைத்தால் மதுரை குடும்பத்தை வெச்சு செஞ்சிடலாம்’ என்கிற கற்பனையில் இருக்கிறார் காஜல். ‘ஒரு அரைமணி நேரம் கூட கிடைத்தால் போதும், அதற்குள் பழிவாங்கி விடலாம்’ என்கிற கொலைவெறியில் இருக்கிறார். குறிப்பாக சுஜா மற்றும் ஜூலியை பிரத்யேகமாக பழிவாங்கும் நோக்கில் இருக்கிறார். அவர்கள்தான் தங்களுக்கு கடுமையான taskகளை தந்தனர் என்கிற கடுப்பில் இருக்கிறார் காஜல்.

நாட்டாமை வையாபுரி தலைமையில் பிந்துவிற்கும் ஹரீஷிற்கும் உண்மையாகவே திருமணம் நடந்து விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. இரு வீட்டாரும் திருமணப் பேச்சில் மும்முரமாக இறங்கியிருக்கின்றனர். மணப்பெண்ணும் இதற்கு சம்மதித்து விட்டதால் வேறு வழியில்லாமல் NRI குடும்பம் இதற்கு ஒத்துழைக்க வேண்டிய நிலைமை. என்னவொன்று, பெண்ணுக்கு வெட்கம் என்பதே வரவில்லை. அதையும் சொல்லித் தர வேண்டிய நிலைமை. ஆனால் மணப்பெண் பிந்து பயங்கர உஷார். அதிகாரம் இப்போது மதுரை குடும்பத்திடம் இருப்பதால் அங்கு அணி மாறி ஷோபாவிலும் சென்று கெத்தாக உட்கார்ந்து கொண்டார். ஜெயிக்கும் அணியில் தாவி தாம் அரசியலில் இருக்க வேண்டிய ஆசாமி என்பதை நிரூபித்தார் பிந்து. 

இந்த திருமணத்தையொட்டி இரு குடும்பமும் ஜாலியான உரையாடல்களை மேற்கொண்டது. வையாபுரி உண்மையாகவே பழத்தட்டையெல்லாம் கொண்டு வர ஹரீஷூம்  பாவனையாக தாலி கட்ட தொன்னூறு சதவீத திருமணம் முடிந்து போனது. மீதம் என்னெ்னன எல்லாம் ஆகுமோ? தாமதமாக வந்த ஆரவ், ‘இந்தக் கல்யாணம் செல்லாது” என்று அலப்பறை செய்தார். Task தரப்படாமல் எப்படி சமையலறைக்குள் செல்லலாம் என்கிற நேற்றைய பஞ்சாயத்து மறுபடியும் வந்தது. நேற்றைய தினத்தைப் போலவே காஜல் இன்றும் கோபித்துக் கொண்டார். ‘உங்களுக்கு வடிச்சுக்கொட்டத்தானே வேலை செய்யறோம். அதுக்கும் task-ஆ..? முடியாது போய்யா..” என்றார் ஹரிஷிடம். “நீங்க கொடுத்த எல்லா task-ஐயும் நான் செஞ்சேன்” என்றார் ஹரீஷ் பரிதாபமாக. 

வேப்பங்குச்சியால் பல் விளக்குவது எப்படி என்று வெளிநாட்டு மாப்பிள்ளை கணேஷிற்கு ‘டெமோ’ காட்டினார் வையாபுரி. இதற்காக வையாபுரியின் பற்களை குளோசப்பில் காட்டி நம்மை மிரள வைத்தார்கள். “வெளியே போகணும். எனவே ஆரவ் குடை பிடிக்கணும்”: என்று பிடிவாதம் பிடித்தார் சுஜா. அதை தவிர்க்க விரும்பிய ஆரவ், பிறகு தனக்கு மட்டும் குடை பிடித்துக் கொண்டு சாமர்த்தியமாக சுற்றி வந்தார். ‘ஒரு பெண்ணிற்கு போய் குடை பிடிப்பதா?’ என்கிற அகங்காரம் உள்ளுற அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஹரீஷ் பரவாயில்லை. 

“கேள்வி – பதில் விளையாட்டின் மூலம் சிநேகனின் வாயில் இருந்து ஏதாவது பிடுங்க முடியுமா என்று பார்க்கிறார் சுஜா. ‘நமது நிருபர்’ வேலையை பிந்து கை விட்டு விட்ட பிறகு இவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘இந்த வீட்ல எல்லாம் சரியா இருக்கா?” என்கிற கேள்விக்கு ‘வீடுதான் சரியா இருக்கு. மனுசங்க..’ என்று தத்துவார்த்தமாக பதிலளித்தார் சிநேகன். இது நமக்கு உடனே புரியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் புரியும். ‘எம்.ஏ. பிலாஃசபி… எம்.ஏ. பிலாஃசபி…’

ஜூலி திரும்ப வந்திருக்காங்களே, அவங்களைப் பற்றி?” என்று தனது பிரியமான தோழியைப் பற்றி அடுத்த கேள்வியாக கேட்டு சிநேகனின் பதிலை எதிர்பார்த்தார் சுஜா. “போன ஜூலி திரும்பி வரவில்லை’ என்பது சிநேகனின் அடுத்த தத்துவ பெளன்சர். மறுபடியும் அதேதான். எம்.ஏ. பிலாஃசபி.

“காதல்-ன்றது ஒரு பூ மாதிரி. ஒரு முறைதான் மலரும்’ என்கிற விக்ரமன் படங்களின் ‘லாலாலா’ வசனங்கள் போல காதலின் மகத்துவத்தைப் பற்றி வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். டி.ஆர். மனநிலையிலிருந்து ஜெமினிகணேசன் மனநிலைக்கு எப்போது மாறினார் என தெரியவில்லை. 

‘காதலின் அருமை காமுகனுக்குப் புரியாது” என்றெல்லாம் அவர் இடித்துரைத்தது யாரை? (ஆரவ்வையா?) “தோற்ற காதல்தான் சொர்க்கத்தில் சென்று சேரும்’ என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்த சிநேகனின் தாடிக்குப் பின்னால் பெரும் சோகமும் நிறைய துர்தேவதைகளும் இருக்கும் போலிருக்கிறது. 

**லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் முதல் பகுதியாக ஓர் அபாயகரமான விளையாட்டு நிகழ்த்தப்பட்டது. மதுரை குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்ட பிந்து ‘வடை – பாயசம்’ சமைக்க வேண்டும். இதை தனியாகத்தான் அவர் செய்ய வேண்டும். வேறு எவரும் உதவக்கூடாது. சுஜாவும் ஜூலியும் இந்த அணுகுண்டு சோதனையை உஷாராக கண்காணிப்பார்கள். 

‘சமையல் தெரியுமா?’ என்று முன்னர் வையாபுரி ஒருமுறை விசாரித்த போது ‘First class-ஆ தெரியும்” என்றெல்லாம் கெத்து காட்டிய பிந்து, இப்போது எல்கேஜி குழந்தை மாதிரி மலங்க மலங்க விழித்தார். கூண்டில் மாட்டிக் கொண்ட சுண்டெலி மாதிரி என்னெ்னமோ செய்தார். ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டை பிரித்து ‘அது என்ன வஸ்து?’ என்று முகர்ந்து பார்த்து கண்டுபிடித்தார். சுவை (?!) சரியாக வந்திருக்கிறதா என்பதற்காக நாக்கால் நக்கி, முகர்ந்து என்று என்னென்னவோ செய்தார். உவ்வேக்…  நைசாக உதவ வந்த ஆரவ்வின் சதியை சுஜா வெற்றிகரமாக முறியடித்தார். 

பல்வேறு கிண்டல்களுக்குப் பின்னர், பிந்துவின் விடாமுயற்சிக்குப் பின்னர் சேமியா உப்புமா மாதிரியான ஒரு திடதிரவமும், வடை மாதிரியான ஒரு வஸ்துவும் தட்டில் வந்து அமர்ந்தன. புது மாப்பிள்ளை வடையை சுவைத்து விட்டு வழிந்து கொண்டே ‘நல்லாயிருக்கு’ என அங்கீகரித்தார். ‘ஆனா வடைல மஞ்சள்தூள் போட்டீங்களா?’ என கேட்க ‘மஞ்சள்’ னா என்னது என பிந்து கேட்டது ‘அதான் தெரியுமே’ முத்துலட்சுமி வகை காமெடி. 

வையாபுரியும் இந்த உணவை அங்கீகரித்தார். “வடை நல்லாயிருக்கு. சேமியா பாயசத்திற்குப் பதிலா சேமியா கிச்சடி’ வந்திருக்கிறது என்பது மாமனாரின் அபிப்ராயம். ‘அடுப்பைக் கூட பத்த வைக்கத் தெரியுமா என்று பார்த்தால் குடும்பத்தையே பத்த வெச்சிடுவா போலிருக்கிறது” என்று மருமகளின் புகழை பாடித் தீர்த்தார். 

“ரெண்டு நாளா ஓபி அடிச்சிட்டே இருக்கே. இன்னிக்காவது போய் பாத்திரம் கழுவு” என்று காஜல் ஆரவ்விடம் அலப்பறையை துவக்கினார். ‘அவர் பாத்திரம் வெளக்கினாரே:” என்று ஆரவ்விற்கு ஜூலி ஆதரவு தர முயல ‘மகராசி உன் திருவாயை கொஞ்சம் மூடு. இல்லைன்னா நீ போய் வேலை செய். என்னை வேலை செய்யலைன்னு சொல்லிட்டே இருந்தீங்க இல்லையா?’ என்றெல்லாம் காஜல் சிடுசிடுப்பைக் காட்ட ஜூலியின் முகம் பரிதாபகரமாகத் தொங்கியது. ‘இதென்னடா வம்பா போச்சு” என்று ஆரவ்வும் ஹரிஷூம் நைசாக நடையைக் கட்டினார்கள். ‘நான் அனத்தற வரைக்கும் இருங்கடா” என்ற காஜலின் வேண்டுகோளை அவர்கள் காதில் விழாதது போல நழுவி தப்பினார்கள். 

**
சிதைந்து போன தன்னுடைய பிம்பம் குறித்து ஜூலி புலம்பியதைப் பார்க்க பரிதாபகரமாக இருந்தது. ‘வெளியே போன பிறகு எப்படி இருந்தது” என்று ‘முன்னாள் நிருபர்’ பிந்து கேட்க, ‘சமூக வலைத்தளங்கள்ல உள்ள கருத்துக்களை படிக்க முடியலை. அத்தனை மோசமா இருந்துச்சு. மக்கள் என்னை ஏத்துக்கற மூடில் இல்லை. என்னை தீவிரவாதி மாதிரி பார்க்கறாங்க. ‘நீ செத்துப் போயிருப்பன்னு நெனச்சோம்’ என்றலெ்லாம் கமென்ட் வருது. ‘நீ ஒரு பொய்க்காரி-ன்னு திரும்பத் திரும்ப சொல்றாங்க’“ஓவியா விஷயத்துல நான் செஞ்சது தப்புதான். ஆனா நான் மாறவே மாட்டேன்னு எப்படி நெனக்கலாம். என் அடிப்படையான காரெக்ட்டரை மாத்த முடியாது. ஆனால அதில் இருக்கிற தவறான பழக்கங்களை நிச்சயம் மாத்திப்பேன். சரி.. எவ்ள நாள்தான் அடிப்பீங்க.. திட்டுவீங்க.. என் பலவீனத்தை பலமா மாத்திப்பேன்”

என்றெல்லாம் ஜூலியின் புலம்பல் நீண்ட நேரத்திற்கு சென்றது. கமல் சொன்னது போல கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் பிசகி விட்டு, முதிர்ச்சியின்மை காரணமாக சறுக்கிய ஓர் இளம் பெண்ணை, அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் மக்கள் இத்தனை வசை பாடுவது முறையாகத் தெரியவில்லை. தமிழக மக்கள் ஒருத்தர் மீது அன்பு வெச்சிட்டாங்கன்னா அத்தனை சீக்கிரம் விட்டுத் தர மாட்டாங்க’ன்றது நல்ல விஷயம்தான். ஆனால் வெறுப்பையும் அதே பிடிவாதத்துடன் பின்பற்றத் தேவையில்லை. 

“காஜலை சும்மா trigger பண்ணி விட்டா போதும். ஒருமணி நேரத்திற்கு புலம்பிட்டு இருப்பாங்க.. எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கும். ஜாலியா பொழுது போகும்’ என்றொரு டெரரான ஐடியாவை தந்தார் ஆரவ். அதன் படியே காஜலை அழைத்து ‘இந்த ரூமையெல்லாம் பெருக்கிட்டியாமா” என்று திரியைக் கிள்ள சரவெடியாக வெடித்தார் காஜல். ‘இப்பத்தான் சமையல் வேலையெல்லாம் செஞ்சுட்டு வந்து படுத்தேன். பெருக்க வேற செய்யணுமா? பிச்சிப்புடுவேன். நான்சென்ஸ்’ என்றெல்லாம் காஜல் பொங்க, ஆரவ் கூட்டணி சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தது. 

**

ரைசா என்னை நாமினேட் செஞ்ச போதெல்லாம் நான் எலிமினேட் ஆகலை. ரெண்டு பேரும் நல்லா பழகி, அவ என்னை நாமினேஷன் செய்யாத வாரத்துலதான் நான் எலிமினேட் ஆனேன்’ என்றொரு புதிய கண்டுபிடிப்பை காஜலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி.

“இப்ப வந்திருக்கிறது வேற ஜூலி-ன்னு சிநேகன் ஆதங்கப்படறாரே?” என்று கேட்டு ஜூலியின் வாயைப் பிடுங்க முயன்றார் காஜல். “அவரு மேல எப்பவும் பாசம் மரியாதைல்லாம் இருக்கு. ஆனா பழைய ஜூலி எப்படி திரும்ப வர முடியும். அவ வர மாட்டா. எல்லோரையும் முழுசா நம்பிட்டேன். எந்த இடத்துல எது பேசணும், எது பேசக் கூடாதுன்னு இப்ப தெரிஞ்சிட்டு. ஆயிரம் நல்லது செஞ்சாலும் ஒரு கெட்டதுனால எல்லாமே மாறிடுது. இனிமே யாரைப் பத்தியும் புறம் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்’ என்றலெ்லாம் ஜூலியின் சுயபரிசீலனை தீர்மானங்கள் வெளிவந்தன, ஏதோவொரு மாற்றம் அவரிடம் தெரியத்தான் செய்கிறது. 

தனது தோழியான காயத்ரியின் சார்பில் பேசினார் ‘ஜூனியர் காயத்ரி’ காஜல். ‘அவங்க ஒரு முறை கெட்ட வார்த்தை பேசினாலும்.. இந்த சிநேகன் என்ன பண்றாரு. திரும்பத் திரும்ப அதை சொல்லி என்னமோ அவங்க நெறய முறை பேசின மாதிரி மக்கள் கிட்ட establish செஞ்சிடறாரு” என்று காயத்ரி பக்கம் நியாயம் பேசினார் காஜல்.  கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது இதுதான் போலிருக்கிறது. 

**
‘தட்டறோம் தூக்கறோம்’ என்கிற task-ல் கிரிக்கெட் மாதிரியான ஒரு போட்டி நிகழ்த்தப்பட்டது. மஞ்சள் மற்றும் பச்சை அணியாக பிரிக்கப்பட்டது. போட்டி நடைபெறுமிடத்தில் உணவுப்பொருட்களின் பெயர் தாங்கிய அட்டைகள் இருக்கும். அடிக்கும் பந்து அந்த அட்டையில் பட்டால் அதிலுள்ள பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும். (விளம்பரங்களை எப்படியெல்லாம் நாசூக்கா சோக்கறாங்க).ஆரவ்வும் ஹரிஷூம் சிறப்பாக விளையாடி பொருட்களை தேர்ந்தெடுத்து சேர்த்தனர். ஒரு கிலோ மட்டன் உள்ளிட்ட நிறைய பொருட்கள் வரும் வாய்ப்பு கிடைத்தது. ‘நாட்டுக்கோழி’யையும் சேர்த்து வையாபுரியின் நீண்ட நாள் ஏக்கத்தையும் போக்கியிருக்கலாம். பெளலிங் மாதிரியான ஒரு விஷயத்தை சிநேகன் செய்தார். அது என்னவென்று கிரிக்கெட் கமிட்டியிடம்தான் விசாரிக்க வேண்டும். 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day :66  |65  |64  |63  |62  |61  |60  |59  |58  |57  |56  |55  |54  |53  |52  |51  |50  | 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 66)

ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்!(Day 65)

ஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து!(Day 64)


ஹரீஷ் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கூட ஒருமாதிரியாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் சிறந்த பெளலராக வையாபுரியை கணேஷ் எப்படி முன்மொழிந்தார் என்பது புரியவேயில்லை. கணேஷிற்கு கிரிக்கெட்டின் மீது அப்படியென்ன கோபம்? விளையாட்டு என்றாலே அதில் ஃபிக்ஸிங் போன்ற முறைகேடுகள் வந்துவிடும் போலிருக்கிறது. 

‘அய்யா.. பிக்பாஸ்.. பரிசா வந்திருக்கிற பொருட்களையெல்லாம் நாங்க சேர்ந்து சாப்பிடறோம். ஜெயிச்சவங்கதான் சாப்பிடணும்னு சொல்லி குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க. உங்க ஃபுட்டேஜ் போதைக்காக நாங்க ஊறுகாயா ஆக முடியாது’ என்றெல்லாம் கோரிக்கை வைத்து முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக முன்ஜாமீன் மனுவை போட்டு வைத்தார் வையாபுரி. நாட்டாமை, நாட்டாமைதான். 

‘நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வீடு குதூகலமாக இருக்கிறது. இந்தக் குதூகலம் நீடிக்குமா?’ என்ற அசரிரீயின் குரலில் ‘நீடித்து விடுமோ’ என்கிற பதட்டம் தெரிந்தது. குதூகலம் நீடித்தால் நம்முடைய குதூகலம் போய் விடுமே. பார்த்து ஏதாவது செய்யுங்க முதலாளி..

அடுத்த கட்டுரைக்கு