Published:Updated:

சொந்த செலவுல ஏன் சூனியம் வைச்சுக்குறீங்க பிக்பாஸ்? (68-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சொந்த செலவுல ஏன் சூனியம் வைச்சுக்குறீங்க பிக்பாஸ்? (68-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
சொந்த செலவுல ஏன் சூனியம் வைச்சுக்குறீங்க பிக்பாஸ்? (68-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இருந்து ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ பாடல் ஒலிபரப்பானது. இப்போதெல்லாம் நடனமாடும் கூட்டம் அதிகமாகிறது. கணேஷ் கூட நடனமாடத் துவங்கி விட்டார். 

பரணி மற்றும் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு தானும் ஒரு வகையில் காரணமாக இருந்து விட்டோம். இல்லாவிடில் அவர்கள் போட்டியில் வென்றிருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஓவியா இனிமையானவள்’ என்றெல்லாம் ஹரிஷூடம் புலம்பிக் கொண்டிருநதார். ஜூலி. கட் செய்தால் அந்தப் பக்கம் ஆரத்தியின் புறம் பேசுதல் இவ்வாறு இருந்தது. ‘பாம்பு சட்டையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பாம்பு, பாம்புதானே?’ என்றார். ஜூலி குறித்தான கமெண்ட் என்பது எளிதில் புரிந்தாலும் இது ஆரத்திக்கேதான் பொருத்தமானது. 

ஏற்கெனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி ஒருவரை வெறுப்பேற்றுவதில், நோண்டிக் கொண்டேயிருப்பதில் ஆரத்தி திறமைசாலியாக இருக்கிறார். மற்றவர்களின் மனம் புண்படாதவாறு பேசும் இயல்புள்ளவர்கள், இது போன்றவர்களை எதிர்கொள்வது சிரமம். அவர்கள் சொல்வதை சகித்துக் கொள்ளவும் முடியாது, அதற்காக அவர்கள் அளவிற்கு இறங்கியும் சண்டை போட முடியாது. தரமசங்கடமான நிலைமை. மனஉளைச்சல் அதிகம் நேரும். சமூகவலைத்தளங்களில் கூட இம்மாதிரியான ஆசாமிகளை பலமுறை எதிர்கொண்டுள்ளேன். 

இதற்கிடையில் தொடர்பேயில்லாமல் பருத்திவீரன் டயலாக்கை ஜூலியுடன் ஆவேசமாக பேசிப் பழகிக் கொண்டிருந்தார் கணேஷ். முன்பு ஒரு சவாலிற்காக கற்றுக் கொண்டதை இப்போது மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. 

**

பிக்பாஸ் வீட்டில் இன்று இரண்டு சர்ச்சைகள் நிகழ்ந்தேறின. ஒன்று, பிந்து, ஹரீஷ் மீது காதல்வயப்பட்டது போல் நடித்த விவகாரம். இன்னொன்று ஆரத்தி, ஜூலி மீது பிறாண்டிக் கொண்டேயிருந்தது. முதல் சர்ச்சையில் உண்மையும் பொய்யும் கலந்திருந்தது. இரண்டாவதில் பொய்யும் உண்மையும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிந்து –ஹரீஷ் திருமணப் பேச்சுகள் ஓரளவிற்கு மேல் எல்லை தாண்டி சென்று கொண்டிருந்தன. அது task-ன் பகுதி இல்லையென்றாலும் நகைச்சுவைக்காக அப்படியே இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பிந்து இதைக் குறித்து ஏன் எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ஹரீஷ் மீது அவருக்கு உண்மையாகவே ஏதாவது சாஃப்ட் கார்னர் இருந்து அது சார்ந்த குஷியில் இந்த விளையாட்டுக்களை உள்ளுற ரசித்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. 

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே பிக்பாஸ் அவருக்கு ஒரு ரகசிய சவால் கொடுத்திருந்த விஷயம் இன்றுதான் (பார்வையாளர்களுக்கு மட்டும்) அறிவிக்கப்பட்டது. அதன்படி பிந்து ஹரீஷ் மீது காதல் வயப்பட்டிருப்பது போல நடிக்க வேண்டும். மற்றவர்கள் இவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் வேடிக்கையாக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று மற்றவர்கள் மீது கோபப்பட்டு எகிறி விழ வேண்டும். 

பிந்துவிற்கு எந்த இடத்தில் தன்னுடைய ரகசிய சவாலைத் துவங்க வேண்டும் என்பதில் குழப்பமும் தயக்கமும் இருந்தது போல. எனவே தாமதமாக இன்று துவங்கினார். எல்கேஜி ரைம்ஸ் சொல்வது போல ஒவ்வொரு விஷயத்தையும் மழலைத் தமிழில் சொல்வதால் அவர் சொல்வது எதுவுமே சீரியஸாகத் தெரிவதில்லை. மட்டுமல்லாமல் அம்மணிக்கு கோபப்படுவது போல் நடிக்கவும் தெரியவில்லை என்பதால் அவர் செய்வதெல்லாம் காமெடியாகவே தெரிகிறது. பிக்பாஸ் இந்த சவாலிற்கு பிந்துவை தேர்ந்தெடுத்தது பெரிய தோல்வி. 

மற்றவர்கள் எவருமே பிந்துவின் இந்த ‘கோபத்தை’ சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆரத்தி முதலிலேயே கண்டுபிடித்து விட்டார். இது நிச்சயம் பிக்பாஸ் தந்த சவால்தான் என்று. வையாபுரிக்கும் பிந்து மீது அசாத்தியமான நம்பிக்கை. ‘அவ அப்படிலாம் செய்யமாட்டா. எனக்கு நல்லாத் தெரியும்’ என்று உறுதியாக கூறிக் கொண்டிருந்தார். 

எனவே மற்றவர்களை நம்ப வைக்க தன் நடிப்பில் கூடுதலாக மசாலா சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் பிந்துவிற்கு. எனவே தொடர்ந்து கோபமாக இருப்பது போலவும் மூட்அவுட் போனது போலவும் நடித்துக் கொண்டிருந்தார். எளிதில் சிரித்து விடும் இயல்புள்ள அவருக்கு இது உண்மையிலேயே சவாலாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவேதான் வாக்குமூல அறைக்குச் சென்ற பிந்து, ‘இந்த சவாலினால் வீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. தொடர்வதா, வேண்டாமா” என்று மனச்சாட்சி உறுத்தலுடன் கேட்டார். 

ஆரத்திக்கும் ஜூலிக்கும் மட்டும் இந்த ரகசிய சவாலைப் பற்றிக் கூறி அவர்களின் உதவியை நாடுமாறு பிக்பாஸ் பரிந்துரைத்தார். இரண்டு பேரும் தேர்ந்த கோள் மூட்டிகள். எனவே தங்கள் பணியைத் திறம்பட செய்ய முயன்றார்கள். 

பிந்துவின் தொடர்ந்த பிடிவாதத்தைக் கண்ட மற்ற போட்டியாளர்களுக்கு இப்போது மெல்ல சந்தேகம் உருவாகியது. ‘ஒருவேளை பிந்து உண்மையாகவே ஹரிஷ் மீது காதல் வயப்பட்டிருக்கிறாரோ. இன்னொரு ஓவியா விவகாரம் போல இதுவும் ஆகி விடக்கூடாதே’ என்று நினைத்தனர். இது சார்ந்து அதிகம் பதட்டப்பட்டவர் வையாபுரி. பிந்துவையும் ஹரீஷையும் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தார். “அதெல்லாம் வேண்டாம்மா. விட்டுடு’ என்று பொறுப்புள்ள தந்தையாகவே மாறி விட்டார். இந்த நோக்கில் அவரது அக்கறை சீரியஸ் காமெடியாக மாறி விட்டது. 

ஹரீஷின் நிலைமைதான் அதிக தர்மசங்கடம். என்னடா, விளையாட்டு வினையாகி விட்டதே’ என்று நெளிந்து கொண்டேயிருந்தார். ஆனால் உள்ளுக்குள் அவருக்கு மிதப்பாகவே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘அடடே! பம்பர் லாட்டரி அடிச்சதே என்று. அல்லது உண்மையாகவே அவருக்கு பிந்து மீது எவ்வித அபிப்ராயமும் ஏற்படாமலும் இருந்திருக்கலாம். ‘என்னங்க.. நம்ம சும்மாதான் விளையாடினோம்…’ என்பதை விதம் விதமாக சொல்லிக் கொண்டிருந்தார். 

‘இது taskதானே?’ என்று மற்றவர்கள் வற்புறுத்திக் கேட்கும் சமயங்களில் தன் கோபத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாத பிந்து ‘ஆமாம்… இது taskதான் போங்க..’ என்று சமாளித்தார். ‘மவளே.. இது மட்டும் task-ன்னு தெரிஞ்சது. கொண்டே புடுவேன்…’ என்று சிநேகன் கொந்தளித்தார். ‘அவ விளையாடுறான்னு நெனக்கறேன். உண்மையா இல்லையான்று டெஸ்ட் பண்ண ஒரு உம்மா கேளு” என்று ஹரிஷீற்கு டெடரான ஐடியா கொடுத்தார் சிநேகன். தமிழ் சினிமாவின் அபத்தமான காட்சிகளை கவிஞர்களே அதிகம் நம்புகிறார்கள் போலிருக்கிறது. ஹரிஷூம் அந்த யோசனையைப் பின்பற்ற. ‘கேமரால்லாம் இருக்கு’ என்று வெட்கப்பட்டது பிந்து மயில். ‘முத்தம் கொடுத்தாதான் காதலா’ என்றொரு உருப்படியான தர்க்கத்தையும் வைத்தார். 

**

ஓர் எழுத்தாளன் கதை எழுதிக் கொண்டிருக்கும் போது அவன் கற்பனையாக எழுதிக் கொண்டிருக்கும் புனைவில் உருவாகும் சம்பவங்கள் நிஜமாகவே அவனைச் சுற்றி நடப்பது போல் அமையும் சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம். (சமீபத்திய தமிழ் சினிமா உதாரணம்: ‘உரு’) இதைப் போலவே பிக்பாஸ் வீட்டில் தன்னிச்சையாக நிகழும் சம்பவங்களையே சவால்களாக பிக்பாஸ் தந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு ‘hi buddy’ என்று பிந்துவும் வையாபுரியும் விளையாடிக் கொண்டிருந்ததை ‘யார் கொலையாளி’ சவாலில் அப்படியே இணைத்து விட்டார் பிக்பாஸ்.  

இதைப் போலவே ஆரவ் –ஓவியாவிற்கு இடையில் நிகழ்ந்த காதல் விவகாரத்தை அப்படியே ஹரிஷ்-பிந்து சவாலில் இணைத்து விட்டார் என்பது என் யூகம். இந்த விளையாட்டு ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் வைக்கும் ஆபத்தைக் கொண்டது. 

ஏன் என்று சொல்கிறேன். 

பிக்பாஸ் என்பது முன்கூட்டியே செயற்கையாக உருவாக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு, அதாவது scripted என்பது பலரின் அனுமானம். எனவே இந்த நிகழ்ச்சியை சிலர் புறக்கணிக்கிறார்கள். சிலர் அதை அறிந்திருந்தாலும் கூட ஆர்வம் காரணமாக தொடர்ந்து பார்க்கிறார்கள். இன்னமும் சில சதவீத நபர்கள் இவற்றை உண்மை என்றே கருதிக் கொண்டு பார்க்கிறார்கள்.

ஆனால் என்னுடைய புரிதலில் பிக்பாஸில் என்ன நிகழ்கிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். சர்ச்சைகள் உருவாகும் சூழல்களின் உள்ளே போட்டியாளர்கள் உந்தித் தள்ளப்படுகிறார்கள். அதற்கான பின்னணிகள் மட்டும் பிக்பாஸ் டீமால் மிக கவனமாக திட்டமிடப்படுகிறது. அந்த சர்ச்சைகளின் படுகுழிகளில் விழுந்து விடாமல் ஜாக்கிரதையாகவும் சகிப்புத்தன்மையுடனும் விளையாடும் போட்டியாளர்கள் வெற்றியை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. கணேஷ் சிறந்த உதாரணம். ஆனால் சகிப்புத்தன்மை குறைவாக உள்ளவர்கள், எளிதில் உணர்வு வயப்பட்டு விடுபவர்கள் இந்த குழிகளில் எளிதில் விழுந்து விடுவார்கள். இது சார்ந்து நடக்கும் அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சி மோதல்கள், கோப தாபங்கள் ஏறத்தாழ உண்மையானது. அவர்களின் உடல்மொழியைக் கவனித்தாலே தெரியும். அது போல் நடிப்பது சிரமமானது. கமல் குறிப்பிட்டது போல தன்னிச்சையாக நிகழும் இது போன்ற சம்பவங்களை ‘திரைக்கதையாக’ எழுதுவது அதிசிரமமானது. பிக்பாஸ்ஸின் பிரம்மாண்டமான வெற்றி, இது போன்ற தருணங்களின் மீதான நம்பகத்தன்மையில்தான் அமைகிறது. 

இந்த நம்பகத்தன்மையை சிதைக்கும் வேலையை பிக்பாஸே செய்கிறாரோ என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். பிந்து –ஹரீஷ் விவகாரம் task என நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. பிந்து தாமதப்படுத்தியதால்தான் வேறு வழியின்றி அது பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டது என நினைக்கிறேன். ஆனால் பார்வையாளர்களின் மனதில் இனி என்னவெல்லாம் நிகழக்கூடும்? ஏற்கெனவே இது scripted programme என்கிற சந்தேகம் உள்ளவர்களுக்கு இனி எல்லாமே சந்தேகமாகத் தோன்றும். இந்த வகையில் ஜூலிக்கும் ஆரத்திக்கும் இடையிலான பிறாண்டல்கள் கூட ‘எழுதப்பட்ட திரைக்கதைதானோ’ என்று தோன்றி விடும் ஆபத்தும் உள்ளது. இனி வரும் சவால்களில் இது போன்ற taskகளை பிக்பாஸ் தவிர்க்கலாம் என்பது என் அபிப்ராயம்.  

**

இதையும் இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சி ‘மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம்’ என்று. ஓரெல்லை வரைக்கும்தான் இது சுவாரசியம். எல்லையைத் தாண்டினால் ஆபத்தாக போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை ஹரீஷிற்கு பிந்து மீது உண்மையாகவே ஏதாவது விருப்பம் இருந்து, பிந்துவும் இப்போது வற்புறுத்துவதால் அவர் குஷியாகி கற்பனையில் மிதக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது task என்பதை பின்னர் உணரும் போது உண்மையாகவே அவர் ரகசியமாக வருந்த வாய்ப்புள்ளது. மனம் உடைவதற்கான சந்தர்ப்பமுள்ளது. நல்லவேளையாக எல்லாமே task என்பதை ஹரீஷூம் ஏற்றுக் கொண்டதால் ஆபத்தில்லாமல் சுபமாக முடிந்தது. இல்லாவிட்டால்?

இந்தக் குறிப்பிட்ட task அந்தரங்கமான உணர்வுகளின் மீதான ஆபத்தான விளையாட்டு என்றாலும் இன்னொரு வகையில் சுவாரசியமாகத்தான் இருந்தது. இப்படிச் சொல்வது குரூரத்தனமானதுதான். குரூரத்தனங்களும் இணைந்துதானே நம் வாழ்க்கை!

பிந்துவால் தம் நடிப்பை திறம்பட கையாள முடியவில்லையென்றாலும் பிறரை குழப்புவதில் எப்படியோ வெற்றி பெற்று விட்டார். குறிப்பாக வையாபுரியின் மிகையான பதட்டம் நம்மை சிரிக்க வைத்தது. ஆனால் அவருடைய நோக்கில் பிந்துவின் மீது உண்மையாகவே கவலைப்படுகிறார் என்பது புரிகிறது. வையாபுரியிடம் இருந்த ‘தந்தை’ விழித்துக் கொண்டு விட்டார். 

ஒருநிலைக்குப் பிறகுதான் இதுவொரு task என்கிற விஷயம் ஹரீஷிற்கு அறிவிக்கப்பட்டது. (பாவம், மனிதர் மனதில் என்ன நினைத்தாரோ) இப்போது அந்த விஷயம் பிந்துவிற்குத் தெரியாது. எனவேதான் ஹரீஷ் குளத்தில் தள்ளிவிடும் போது உண்மையாகவே பயந்து போனார் பிந்து. ஹரிஷூம் உடனே மன்னிப்பு கேட்டார். இவர்கள் இணைந்து விளையாடியது இப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் பிந்துவின் குணாதிசயம் அறிந்த அனைவருக்குமே இதுவொரு task என்கிற சந்தேகம் இருந்ததால் பெரிதான ஆச்சரியம் ஒன்றும் ஏற்படவில்லை. 

கத்தி மீது நடப்பது போன்று ஜாக்கிரதையாக விளையாட வேண்டிய விளையாட்டு இது. நல்லவேளையாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது சவாலாக அவர்களுக்கு தரப்பட்டாலும் அதை எவ்வாறு, எப்போது நிகழ்த்துவது என்பது சார்ந்த மனத்தத்தளிப்புகள் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அது சார்ந்த கற்பனைகளை, ஒத்திகைகளை அவர்கள் மனதிற்குள் பலமுறை நிகழ்த்தி பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். அதே சமயத்தில் இது மற்றவர்களுக்கு தெரிந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லுளி மங்கன்கள் மட்டுமே இது போன்ற விளையாட்டுக்களை திறம்பட செய்ய முடியும். எளிதில் சிரித்து விடுபவர்கள், உணர்வுவயப்படுபவர்கள் கையாள்வது சிரமம். 

**

இன்னொரு விவகாரம் ஜூலி – ஆரத்தி தொடர்பானது. இது task ஆக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் முகபாவங்களில் இது சார்ந்த உண்மையான கோபங்கள் வெளிப்பட்டன. பெயிண்ட் செய்யும் சவாலின் முடிவை அறிவிப்பதில் துவங்கியது இந்த சர்ச்சை. ஏற்கெனவே ஆரத்திக்கும் ஜூலிக்கும் ஏழாம் பொருத்தம் வேறு. 

இறுதி வடிவம் நீல நிற அணியால் திறமையாக முடிக்கப்பட்டது. நேரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் நீல நிற அணி திறமையாக கையாண்டது, எனவே வெங்கலக் கிண்ணி அவர்களுக்குத்தான் என்பது ஜூலியின் வாதம். ஆனால் முதல் கட்டத்தில் சிவப்பு நிற அணிதானே தன் பணியை வேகமாக செய்து முடித்தது, அந்த உழைப்பை கணக்கில் கொள்ள வேண்டாமா என்பது ஆரத்தியின் அடம். எனவே ஒவ்வொருவரும் அவர்களின் முடிவில் பிடிவாதமாக இருந்தார்கள்.

முடிவை அறிவிக்கும் பணியை பிக்பாஸிடம் விட்டு விடலாம் என்று பார்த்தால் ‘இல்லை. நீங்களேதான் முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று அறிவித்து விட்டார். பின்னே.. அவருடைய நாரதர் பிழைப்பை அவர் பார்க்க வேண்டாமா?

ஒரு பாமரனாக, வீடியோவில் பார்த்தவரை நீல அணியின் பெயிண்ட்டிங் சிறப்பாக அமைந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். எனவே ஜூலியின் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் ஜூலியின் மீது நிரந்தர கடுப்பில் இருக்கும் ஆரத்தியால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே மறுத்தார். “வேணுமின்னா கேக்கை எடுத்துக்கோங்க’ என்றெல்லாம் சொல்லி எதிர் தரப்பினரை அவமானப்படுத்தினார். 

இது மட்டுமல்லாமல் ஜூலியை தொடர்ந்து அழைத்து நக்கலாக பேசி ஜூலியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார். ஜூலி எப்படியோ சமாளித்தாலும் ஆரத்தி விடுவதாக இல்லை. ஒருவகையில் ஆரத்தி வெளிப்படையாகத்தானே நடந்து கொள்கிறார்? என்று கூட பார்வையாளர்களின் சில சதவீதத்திற்கு தோன்றலாம். தவறில்லை. ஆனால் தான் வெளிப்படையாக இருப்பது இன்னொருவரின் மனதை ஆழமாக புண்படுத்துகிறது என்றால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் திருத்திக் கொள்வதும்தான் சரியானது. ஆரத்தியால் இன்னமும் இதை உணரவே முடியவில்லை. பார்வையாளகளின் வெறுப்பையும் எரிச்சலையும் அதிகம் சம்பாதிக்கும் ஆரத்தி, நாமினேஷனில் வந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார், வெளியேற்றப்பட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day :67  |66  |65  |64  |63  |62  |61  |60  |59  |58  |57  |56  |55  |54  |53  |52  |51  |50  | 49  | 47  | 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

ஜூலி மாறியிருக்கிறாரா.... காஜல் காயத்ரி ஆகிறாரா?(Day 67)

“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?!” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 66)

ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்!(Day 65)

இன்னொரு பக்கம் ஜூலியின் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது. முன்பாவது காயத்ரி போன்ற பலசாலிகளின் ஆதரவு இருந்தது. இப்போது நிலைமையை தனியாக சமாளிக்க வேண்டிய சூழல். ஏற்கெனவே பாழ்பட்டிருக்கும் தன்னுடைய பிம்பம், ஆரத்தியுடன் சண்டை போடுவதால் இன்னமும் பாழாகுமோ என்கிற கவலையில் இருக்கிறார். எனவேதான் ஆரத்தியைத் தவிர்த்து விட்டு, பின்பு ஆரவ்விடம் சொல்லி அழுகிறார். 

இந்த விஷயத்தை தனியாக அழைத்து பேசியாவது தீர்வு காணலாம் என்று வந்த ஜூலியை தன்னுடைய திமிர்தனத்தினால் அலட்சியப்படுத்தி விட்டு சென்றார் ஆரத்தி. திருந்தாத உள்ளங்கள். 

**

வேறென்ன நடந்தது?

‘காஜல் உண்மையாகவே கோபக்காரி. அவளால நிறைய சண்டை வரும்னு நெனச்சேன். ஆனால் வில்லன் காமெடியன் ஆனது மாதிரி ஆயிடுச்சு. இப்ப பாருங்க.. வீட்டை ஆளலாம் –னு வந்துட்டு காய்கறி வெட்டிக்கிட்டிருக்கா’ என்றெல்லாம் காஜலை தங்களின் அறையில் அமர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தார் சிநேகன். ‘இந்த ஆரவ் பய வேற அவளை நோண்டி காமெடி பீஸாவே மாத்திட்டான்’ என்று ஒத்து ஊதினார் வையாபுரி. உண்மைதான். காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்த காஜல் பெரும்பாலான சமயங்களில் காமெடியாக மாறி விடுகிறார். என்றாவது ஒரு நாள் இவரின் அதிதீவிர சாகசக்காட்சி வெளிவரும் என்று நினைக்கிறேன். 

பெயிண்ட்டிங் சவாலிற்கான பெல் அடித்ததும், திருப்பதி கோயில் வரிசையில் கேட்டை திறந்தது போல அடித்துப் பிடித்து ஓடினார்கள் போட்டியாளர்கள். ‘ஏ பார்த்துப்பா.. கீழ விழுந்துடாம..’ என்று பெரியவருக்கான பொறுப்புடன் எச்சரித்துக் கொண்டிருந்தார் வையாபுரி. இந்த task-க்காக இத்தனை பதட்டப்படணுமா’ என்கிற உணர்வை அவர் பெரும்பாலான சமயங்களில் வெளிப்படுத்துகிறார். 

தங்கள் அணிக்கு வெண்கலக்கிண்ணியும் சாக்லேட்டும் கிடைக்காதது குறித்து சிநேகனுக்கு கோபம். கேக்கை சாப்பிட மாட்டேன் என்று வீம்பாக மறுத்து விட்டார். வையாபுரியும். எத்தனை வயதானாலும் மனிதர்களுக்குள் இருக்கும் சிறுபிள்ளைத்தனங்கள் வெளியே எட்டிப் பார்த்து விடுகின்றன. 

இன்றைய நாளில்,பிந்து –ஹரீஷ் பகுதி ஒரு மாதிரி குழப்பமாகவும், எரிச்சலூட்டும் வகையில் நீளமாகவும் இன்னொரு புறம் சுவாரசியமாகவும் சென்றது. ஜூலி –ஆரத்தி பகுதி, ஆரத்தியின் மீது எரிச்சல் உருவாகும் வகையில் சென்றது. 

எப்படியோ, இன்றைய கல்லாவை வெற்றிகரமாக கட்டிவிட்டார் பிக்பாஸ். போகப் போக என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? 

‘ஆண்டவர்’ வரும் நாள் இன்று. வழக்கமான அரசியல் கோபங்களோடு புதுப்புது விளையாட்டுக்களை விளையாடி எப்படியோ ஒப்பேற்றி விடுவார். குறும்படமோ பஞ்சாயத்தோ இந்த வாரம் அதிகம் இருக்காது. ஆரத்திக்கு உபதேசம் செய்யக்கூடும். ஜூலியின் அழுகையை எதிர்பார்க்கலாம். 

நாமினேஷன் பட்டியலில் காஜல், ஆரவ், சிநேகன் ஆகியோர் இருக்கிறார்கள். காஜல், சிநேகன் மீது பார்வையாளர்களின் அதிருப்தி அத்தனை இல்லையென்று கணிக்கிறேன். எனவே ஆரவ் மீது கத்தி பாயலாம். ஆனால் அவர் முக்கியமான போட்டியாளர் என்பதால் வெளியேற்றம் இல்லாமலும் போகக்கூடும். 

தீர்ப்பு எப்படி என்று வரும் சனி –ஞாயிறில் பார்ப்போம்.