Published:Updated:

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


சுற்றி வளைக்காமல் ‘வெளியேற்றப்படலம்’ தொடர்பான விஷயத்திற்கு நேரடியாக வந்தார் கமல். “காஜல், ஆரவ், சிநேகன் என மூவரில் யார் போனா மிஸ் பண்ண மாட்டீங்க?” என்றொரு வில்லங்கமான கேள்வியை இதர போட்டியாளர்களிடம் கேட்டார். ‘போன வாரமா இருந்தா ‘காஜல்’னு சொல்லியிருப்பேன். இப்ப நாங்க பழகிட்டோம்’ என்றார் சுஜா. 

“காலம் சற்று தள்ளிப் போனால் ஒருவரைப் பற்றிய கருத்து மாறுது, பார்த்தீங்களா! என்றார் கமல். மற்றவர்கள் நேரடியாக பதில் சொல்லாமல் ஒருமாதிரியாக மழுப்பினார்கள். “வீட்ல சண்டை நடக்கலைன்னா.. நமக்கு போரடிக்குது, இல்லையா?” என்றார் கமல், காமிராவைப் பார்த்து. ஆம், ஆண்டவரே. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சரி. கேள்வியை மாத்திக்கறேன். யாரை மிஸ் பண்ணுவீங்க? என்றார். “ஆரவ் மற்றும் சிநேகனை மிஸ் பண்ணுவேன். காஜல் கூட பழக்கமில்லாததால் அவங்களை அந்தளவிற்கு மிஸ் செய்ய மாட்டேன்’ என்றார் ஹரீஷ். “யார் போனாலும் மிஸ் பண்ணுவேன்’ என்று மையமாகச் சொன்னார் ஜூலி. 

‘சரி. நாரதர் வேலை போதும்’ என்று கமல் தற்செயலாகச் சொல்ல, அது ஜூலியைக் குறிப்பதாக நினைத்துக் கொண்டு சபையோர் உற்சாகமாக கூவ, பதறிப் போன கமல், ‘அய்யோ.. ஜூலி.. நான் என்னைத்தான் சொல்லிக்கிட்டேன். சிரிங்க” என்றவுடன் வரவழைத்துக் கொண்ட ஒரு சிரிப்பை வெளியே தள்ளினார் ஜூலி. 

“சிநேகனை ரொம்ப மிஸ் பண்ணுவேன். சகோதரன் மாதிரி பழகிட்டோம். நெறைய பேசியிருக்கோம்’ என்றார் வையாபுரி. “ஆரவ் வெளியேற்றப்படணும்னு விரும்புவேன். ஏன்னா அவருக்காக வெளியே ஒரு soul காத்திட்டிருக்கு” என்று தேவையில்லாத வேலையைப் பார்த்தார் ஆர்த்தி. (ஆரவ் உங்களுக்கு சரியான ஜோடியில்லை என்று ஓவியாவைப் பார்த்து முன்பு சொன்ன சபை, இப்போது ஏன் ஆர்த்தியின் அந்த உளறலுக்கு கைத்தட்டினார்கள் என்று தெரியவில்லை.)

‘எதையோ’ உளறியதற்காக ஜூலி மற்றும் ஆர்த்தியை மெலிதாக கண்டித்தார் கமல். பிறகு சஸ்பென்ஸை சற்று உடைக்க விரும்பிய அவர், சிநேகனைப் பார்த்து போலியான கவலையுடன் துவங்கி ‘நீங்க safe’ என்றார். சிநேகனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. 

**

ஜூலி மற்றும் ஆர்த்தி வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார்கள். “வெளியே இருந்து உள்ளே போன அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டார் கமல். “நான் முன்பு பார்த்த முகங்கள் இப்போது இல்லை. வீடு அமைதியாக இருக்கிறது” என்றார் ஆர்த்தி. “சிலரிடம் எனக்கு கேள்விகள் இருந்தன. அவற்றைக் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டேன்” என்றார் ஜூலி. “யாரிடம் வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு “சிநேகன் பயங்கர அமைதியாகி விட்டார். ஆரவ், ரொம்பவும் ஜாக்கிரதையாகி விட்டார். யோசித்து யோசித்தான் பேசுகிறார். புது வரவுகளுக்கு இங்குள்ள நடப்பு ஏற்கெனவே தெரியும் என்பதால் அதற்கேற்ப விளையாடுகின்றனர்” என்றார் ஆர்த்தி. ஆர்த்தி அப்படிச் சொன்ன பிறகு அதற்கு முரணாகத்தானே ஜூலியால் சொல்ல முடியும்? எனவே ‘எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை” என்று ஆர்த்தியை ஜூலி வெறுப்பேற்ற முயன்றார் என்பது என் யூகம். 

இருவரும் தற்காலிமாகத்தான் தங்க வந்திருக்கின்றனர் என்று சொன்னாலும் அவர்களை அத்தனை சீக்கிரம் பிக் பாஸ், விட்டு விடமாட்டார் என நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் அவர்களின் வருகைக்குப் பிறகுதான் அமைதியாக இருந்த வீட்டின் கதையில் நிறைய ‘கசமுசாக்கள்’ உருவாகின. நான் யூகித்த படியே, ‘நீங்கள் மறுபடியும் உள்ளே செல்லுங்கள். ஆனால் நீங்களும் வெளியேறுவது போல நடித்து இதர போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தாருங்கள்’ என்றார் கமல்.  ஆரத்தியின் தலைக்கனம் குறித்து மெல்லிய கண்டனத்தைக் கூட கமல் தரவில்லை என்பதில் எனக்கு சற்று ஏமாற்றம். 

**

அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் யார் வெளியேற்றப்பட போகிறார்கள் என்பதை அறிவித்தார் கமல். ‘காஜல்’ 

என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் காஜல் இப்போதுதான் வீட்டுக்குள் வந்தார். அவர் மீது பெரிதாக எந்தவொரு சர்ச்சையும் இல்லை. அவருக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பார்களா என ஆச்சர்யமாக இருக்கிறது. துவக்க நிலையில் இருந்தே ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்த சுஜாவும் காஜலும் நண்பர்களாகி விட்டிருந்த சூழலில் காஜலின் வெளியேற்றம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டம். 

காஜலின் ரிப்போர்ட் கார்டை சுருக்கமாகப் பார்ப்போம். காயத்ரியின் வெளியேற்றம் நிகழும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளே வந்தார் காஜல். காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று நினைத்திருந்தபோது எவ்விதமான சர்ச்சையையும் உருவாக்காமல் அமைதியாகவே இருந்தார். ‘இனம் இனத்தோடு சேரும்’ என்கி தர்க்கப்படி காயத்ரியிடம் சகஜமாக இருந்தார். சுஜாவிடம் மட்டுமே முரண் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. முன்தீர்மான வெறுப்புடன் சுஜாவை வெறுத்தது மட்டுமே நெருடல். ரைசாவுடன் அதிகம் பழகினார். ரைசாவின் வெளியேற்றம் நிகழ்ந்த போது தன்னிச்சையாக அழுதார். 

காஜல் உள்ளே நுழைந்ததில் இருந்தே வெற்றியடைவது குறித்து எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை. தன்னால் வெற்றியடைய முடியாது என்கிற அவநம்பிக்கையை தொடர்ந்து சொன்னார். taskகளில் பங்கு பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சலிப்பாகவே பங்கு பெற்றார். பிக் பாஸ் விதிகளை மீறி வெளியில் நடந்த விஷயங்களை இதர போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

வடசென்னை வழக்கு மொழியில் அவர் பேசியது துவக்கத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும் போகப் போக அதுவே அவரது தனித்த அடையாளமாக மாறியது. முகத்திற்கு எதிரே எதையும் சொல்லி விடுவதில் துணிச்சல் கொண்டவராக இருந்தார். ஆரவ்வும் சிநேகனும் விளையாட்டாக பிடித்த போது ஏற்பட்ட வலியின் சோகத்தை தனிமையில் சென்று தீர்த்துக் கொண்டார். அவர் யூகித்தது போலவே ‘டான்’ போல தோற்றம் கொண்ட அவரை ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்து காமெடி பீஸாகவே மாற்றி விட்டனர். பழைய உதாரணமாக இருந்தாலும் இதைத்தான் சொல்ல வேண்டும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பாக இருக்கும் பலாப்பழம் போன்றவராக இருந்தார் காஜல். 

**
காஜல் அனைவரிடமும் கட்டிப்பிடித்து விடைபெற்றார். பிரியாவிடை செய்தியில் ‘DON’ என்று எழுதுமாறு ஆரவ்வும பிந்துவும் வற்புறுத்தியதை, தனக்கு விருப்பமில்லா விட்டாலும் அவர்களின் கோரிக்கைக்காக நிறைவேற்றினார். “நான் உங்க கிட்ட ஏதாவது ஓவராக பேசியிருந்தா மன்னிச்சுக்கங்க” என்றார் ஆரவ். வெளியேறுவதற்கான கதவு ‘சட்டென்று’ திறந்ததும் உண்மையிலேயே பயந்து விட்டார் காமெடி டான். 

கூடவே வெளியேறுவது போல் நடித்த ஆர்த்தியும் ஜூலியும் சட்டென்று நின்று விட்டனர். ரொம்பவும் மொக்கையான விளையாட்டு. ஜூலியை விடவும் ஆர்த்தி போகக்கூடாது என்று பலர் விரும்பியதாகத் தெரிகிறது. “ஆர்த்தி போகாதீங்க” என்று கதறிக் கொண்டிருந்தார் சுஜா. அந்த வாயாடியை அரவணைத்துச் சென்றால் தனக்கு பாதுகாப்பு என்று முதலில் இருந்தே சுஜா நினைத்து விட்டார் போல. 

‘சில காரணங்களுக்காக காஜலுடன் தான் அதிகம் பேசவில்லை’ என்பதற்காக சிநேகன் காமிராவின் முன் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். காஜலிடம் வாயைக் கொடுத்து எதற்கு வம்பு என அவர் அமைதியாக இருந்திருக்கலாம். 

**

வெளியே வந்த காஜலுடன் கமல் உரையாடல் நிகழ்ந்தது. “முதல் நாள்ல இருந்தே ஜெயிக்கமாட்டேன்’ன்ற மாதிரியே நடந்துக்கிட்டீங்களே” ஏன்? என்று கேட்டார் கமல். ‘இல்ல சார் ஒரு வாய்ப்பிற்காகத்தான் வந்தேன். ஆனால் ஜெயிக்கமாட்டேன்னு தெரியும்’ என்பதையே இங்கும் சொன்னார் காஜல். “உள்ள யாரும் உண்மையா இல்ல. எல்லோரும் நடிக்கறாங்க. நாமினேஷன் பயத்துலயே எல்லோரும் இருக்கறாங்க. எனக்கு உண்மையாவே கோவம் வரலை’

“சிநேகன் நாமினேட் பண்ணதைப் பத்தி ஜூலி எதுவுமே கேட்கலை. நானா இருந்தா மூஞ்சுக்கு நேரா கேட்டுடுவேன். ஆர்த்தி கூட ஆரவ் வெளியேற்றப்பட்டால் அவருக்காக வெளியே ஒரு ஜீவன் காத்திருக்குன்னு ஓவியா பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிட்டாங்க. என்னாலும் அப்படிச் செய்ய முடியும். ஆனா நான் அப்படிச் செய்ய மாட்டேன்.” என்றெல்லாம் அவருடைய பதில் நீண்டது. 

சபையோரைக் காட்டி ‘இவங்களும் எடுப்பார் கைபிள்ளைதான். ஒருத்தரை பிடிச்சுப் போச்சுன்னா அவங்க செய்யற எல்லாப்பிழைகளையும் மறந்துடுவாங்க. மன்னிச்சுடுவாங்களான்னு தெரியாது. ஆனா மறந்துடுவாங்க. என் பிழைகளையும் அப்படி மறந்துட்டாங்க”. என்று  தன்னைப் பற்றிக் கூறுவது போல அரசியல் நையாண்டியையும் இணைத்து ரைட் இண்டிகேட்டர் போட்டு லெப்ட்ல கைகாட்டி வண்டியை நேராக எடுத்துச் சென்றார் கமல். 

‘என் கிட்ட குறை இருந்தாலும் சொல்லுங்க. அதை அப்படியே திருத்தி மாத்திப்பேன்’ என்று கமல் ஜாலியாக சொன்னதற்கு ‘உங்களை எனக்கு பிடிக்கும் சார்’ என்று ஜகா வாங்கி விட்டார் காஜல். 

“வெளியே இருந்து பார்த்துட்டு பிறகு உள்ளே போன பிறகு வேற மாதிரி தெரிஞ்சது யார்?” என்ற கேள்விக்கு ‘சுஜாதான். ஓவியா மாதிரி நடிக்கறாங்களோன்னு முதல்ல நெனச்சேன். வீடு சுத்தம் செய்யற விஷயத்துல அவங்க உண்மையாகவே கடுமையாக உழைக்கறாங்க. அவங்க கிட்ட winning spirt இருக்கு. எனக்கு உடம்பு சரியல்லாத போது எனக்கு உதவி செஞ்சாங்க” என்றார் காஜல். 

“ஒரு மனிதன் வாய்ப்பு கிடைத்தால் நல்லவனாகத்தான் இருப்பான். எந்தக் கொடூரமான மனிதனாக இருந்தாலும் அவனுக்குள்ள வேற மாதிரியான கனிவான இடம் இருக்கு. சரியான உதாரணம் ஹிட்லர். அவரோட காதல் எபிஸோடை படிச்சா கண்ணீர் வந்துடும். நம்முடைய கோபம் அழிக்கும் கோபமாக இருக்கக்கூடாது” என்ற கமல் “போட்டோல முதல்ல உங்களைப் பார்க்கும் போது சண்டைக்கோழியா இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனா இல்லையா?” என்றார்.

“வெளிய இருந்து பார்க்கும்போது உள்ள நெறய சண்டை இருக்கற மாதிரி இருந்துச்சு. ஆனா உள்ளே போனா யாரும் சண்டையே போட மாட்றாங்க சார். எல்லோரும் நாமினேஷன் பயத்துல இருக்காங்க. அதுக்காக நடிக்கறாங்க” என்றார் காஜல்.

குட்மார்னிங் சொல்லும் சம்பிரதாயத்தை கிண்டலடிக்கும் அனுபவங்களைப் பகிர்ந்தார் கமல் (சமூக வலைத்தளங்களில் ‘குட்மார்னிங்’ ஸ்டேட்டஸ் மட்டுமே போடுபவர்கள் கவனிக்க வேண்டியது). என்னோட வாத்தியார் ஒருத்தர் இருந்தார். ‘குட்மார்னிங்’ சொன்னா ‘அதை நீ யாரு முடிவு பண்ண’ன்னு கோச்சுக்குவாரு. நான் முடிவு பண்ணியே நடக்கலை’ன்னுவாரு.’ என்ற கமல் “குட்மார்னிங் தினமும் சொல்ற விஷயம்னாலும் யாரும் அதற்கு எரிஞ்சு விழறதில்ல.”

மருமகள் –மாமியார், ‘அப்பா –மகன்’ ஆகிய உறவுகளுக்கிடையில் உள்ள போலித்தனங்களையும் சுட்டிக் காட்டினார் கமல். ‘நடிப்பு –ன்றது நடைமுறையில் எல்லா விஷயங்களிலும் இருக்கிறது”.

சுஜா – காஜல் உறவைப் பற்றி விசாரித்தார் கமல். ‘ஆமாம் சார். முதல்ல அவங்க கூட செட் ஆகவே ஆகாதுன்னு நெனச்சேன். ஆனா எல்லா வேலையும் அவங்கதான் செய்யறாங்க. ஹரிஷூம் பிந்துவும்தான் வேலை செய்யறதேயில்லை. சுஜா எனக்கு உடம்பு சரியில்லாத நைட்ல சுடுதண்ணி கொடுத்தாங்க. அதனாலதான் அவங்களை மறுநாள் நாமினேஷன் பண்ணலை.”

‘ஒரு இடத்துல நீங்க நடிக்காத மாதிரி தோணுச்சு. ரைசா எவிக்ஷன் போது” என்றார் கமல். “ஆமாம் சார். என் கிட்ட பேசியதால்தான் அவங்க வெளியேறினாங்கன்னு தோணுது. ஆடியன்ஸ்ஸூக்கு பிடிக்காது” என்ற காஜலை இடைமறித்து ‘ஓ.. ஆடியன்ஸ் நெனக்கற விஷயம் கூட உங்களுக்குத் தெரியுமா? அப்ப நான் உங்க கிட்ட டியூஷன் எடுத்துக்கணும்” என்று கிண்டலடித்தார் கமல். 

“சிநேகனை உங்களுக்கு முன்னாடியே தெரியும் போலிருக்கு. ஆனா அது குறித்தான அறிகுறி எதுவுமே இல்லையே’ என்று அடுத்த தூண்டிலைப் போட்டார் கமல். ‘ஆரவ் விஷயத்துல சிநேகன், வையாபுரி இரண்டு பேரும் மாத்தி சொன்னாங்க. நுழையும் போதே அதைக் கேட்டுட்டேன். அதனால அவங்களுக்கு என் மேல கோபம்’

‘இந்த நாமினேஷன் விஷயத்தை உள்ள இருக்கறவங்க அவ்ள சீரியஸாவா எடுத்துக்கறாங்க? நான் போகணும்’னு அடம்பிடிக்கறாங்களோ” என்று பார்வையாளர்களின் மனதில் பெரும்பாலும் இருக்கக்கூடிய கேள்வியை கேட்டார் கமல். 

“அதெல்லாம் நடிப்பு சார். நான் கூட சொன்னேன். ஓவியா பத்தி ஏதாவது தப்பா சொல்லுங்க. அவங்க ரசிகர்கள் வாக்கின் மூலம் உங்களை வெளியேத்திடுவாங்கன்னு சொல்லியிருக்கேன். யாரும் பண்ணலை’ என்றார் காஜல். காஜலின் இந்தக் கணிப்பு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. 

**

நீட் தேர்வு போல ஒற்றை வார்த்தைகளில் பதிலளிக்கும் நிகழ்வு நடந்தது. 

‘இந்த விளையாட்டை உண்மையாகவே விளையாடினேன்” ‘நரித்தந்திரம் மிகுந்தவர் சிநேகன்’ “கணேஷ் நடுநிலைமையாக ஜாக்கிரதையாக விளையாடுகிறார்”, “எனக்குப் பிடித்த போட்டியாளர் சுஜா” :”வையாபுரி task செய்யாமலிருப்பது தப்பு”, “நான் task செய்யமாட்டேன்னு சீன்தான் போட்டேன். ஆனா செஞ்சேன்”, “உண்மையான நட்பு ரைசா மற்றும் காயத்ரி கிட்ட இருந்தது”, “ஆர்த்தி ஜுலி இடையே சண்டை ‘லைட்டா’ இருக்கு” (என்னாது.. லைட்டாவா? – கமல்) 

காஜல் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது. ஓரிடத்தில் ரைசாவும் ஆரவ்வும் ‘அவங்க தன்னை டெரர்னு நெனச்சுப்பாங்க.. ஆனா காமெடி பீஸூ’ என்று பேசிக் கொண்டதைப் பார்த்து ஜெர்க் ஆன காஜல்.. ‘அடியே ரைசா…”என்று ஜாலியாக கோபித்துக் கொண்டார். 

போய்ட்டு வாங்க காஜல் அக்கா. 

**
அடுத்து ஒரு புதிய விருந்தாளி. ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக சக்தி வந்தார். “என் குடும்பத்தை நிறைய மிஸ் பண்றேன். திரும்ப வரமாட்டேன்’ என்றெல்லாம் முன்பு சொன்னவர், கடந்த சந்திப்பின் போது ‘சிலரை டிரிக்கர் பண்ண வேண்டியிருக்கு. அதனால போவேன்’ என்று அப்போது சொன்னபடியே வந்து விட்டார். 

“நான் மறுபடியும் உள்ளே போவேன்னு நெனக்கல. இங்க இருந்த போது home sickness இருந்தது. சரி, அடுத்த வேலைகளைப் பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனால் வெளியே போய் விட்ட பிறகு இங்கு என்ன நடக்கிறதோ என்கிற பதற்றத்துடன் தினசரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குடும்பத்தை பிரியற உணர்வு வந்துடுச்சு. அது மட்டுமில்லாமல் சிலரை டிரிக்கர் பண்ணணும். இதுவரைக்கும் ஷத்திரியனா இருந்துட்டேன். ஆனால் உள்ள சாணக்கியனா இருந்தாத்தான் பிழைக்க முடியும்னு தோணுது. அப்படி சிலர் இருக்காங்க” என்றெல்லாம் நீட்டி முழக்கினார். 

‘என்னை ஹீரோவா மக்கள் ஏத்துக்கிட்டாங்க. (இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?) ஆனா உள்ளே போய் வில்லனாகிட்டேன்” என்ற சக்தி, “ஒரு வாரம் இருக்கப் போறேன்’ என்று சொன்னதுதான் ஆறுதலான ஒன்றாக இருந்தது. பழைய முகங்களை திரும்ப அழைத்து வருவதை விட புதிய முகங்களை அறிமுகப்படுத்தினால் அது சுவாரசியமானதாக இருக்கும். 

முகமூடி அணிந்த ஆசாமிகள் சூழ சக்தி உள்ளே செல்லவிருப்பதை கமல் சூசகமாக குறிப்பிட விரும்பினாரோ என்னமோ, “சில முகமூடிகளைக் கழற்றி அசல் முகங்களை பார்க்கணுமா?’ என்று சம்பந்தமில்லாமல் கூறினார். 

“வெளியே போனப்புறம் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது என்ன தோணுச்சு” என்ற கேள்விக்கு ‘சுயநலம் அதிகமா இருக்கற மாதிரி தெரியுது. வையாபுரி புலம்பிட்டே இருக்காரு. சிநேகன் புறம்பேசிட்டே இருக்காரு. இரண்டு பேரையும் சந்திக்கணும்” என்றார் சக்தி.

சிநேகன் விஷயத்தில் சக்தியின் கோபம் அபத்தமானது. கமல் தன்னை அரசியலுக்கு வரச் சொன்னது சீரியஸா, கிண்டலா என்ற சந்தேகம் வந்த போது சிநேகனிடம் அது பற்றி கேட்டதாகவும் ‘அவர் காமெடியா சொல்லியிருப்பாரு” என்ற சிநேகன் மற்றவர்களிடம் ‘அவர் நக்கல் செஞ்சிருக்காரு. அது புரியாம இவர் இருக்காரு’ என்று புறம் பேசியதால் சிநேகன் மீது சக்தி கோபமாக இருக்கிறாராம். 

கடவுளே! சிநேகன் புரிந்து கொண்டதுதான் சரி. வைரம் திருடும் போட்டியின் போது “நான் தலைவனாவும் இருந்துக்கிட்டு திருடனாவும் இருக்க முடியல” என்ற சக்தியிடம் ‘அப்ப உங்களைப் போல ஆட்கள்தான் அரசியலுக்கு வரணும்’ என்று கமல் சொன்னது அரசியல் நையாண்டி. இது பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சக்திக்கு புரிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் வெளியில் வந்தபிறகு வீடியோக்களை நிதானமாகப் பார்த்தால் புரிந்திருக்குமே. அல்லது மற்றவர்கள் எவராவது அவருக்கு இதை உணர்த்தியிருக்கலாமே. இந்த எளிய கிண்டல் கூட புரியாமல் ‘ஷத்திரியன், சாணக்கியன்னு’ பஞ்ச் டயலாக்லாம் வேற. 

“சரி உள்ள போங்க’ enjoy the game’ என்று அனுப்பி வைத்தார் கமல். 

முகமூடி அணிந்த சில திடகாத்திரன்கள் உள்ளே நுழைந்து எதைஎதையோ தேடினார்கள். போட்டியாளர்களுக்கு சற்று திகைப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆரவ்வை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். ‘எனக்கெதுக்கு இத்தனை ஆளுங்க.. ஒருத்தர் போதுமே” என்று ‘கைப்புள்ள’ வடிவேலுவாக கதறினார் ஆரவ்.

பிறகு, பைக்கில் உள்ளே வந்தார் சக்தி. அவரைப் பார்த்ததும் ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் ரித்திகா சிங் மாதிரி தாவிப் பாய்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டார் சிநேகன். பிறகு ஓவென்று ஒரே அழுகை. (அடப்பாவி.. சிநேகன்.. சக்தி உங்களுக்கு ஆப்பு வெக்கத்தாம்யா வந்திருக்காரு). சிநேகனுக்கே யாராவது கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும் போல ஒரே அழுகை. 

இதற்கிடையில் இன்னொரு புறம் வேறு காமெடியும் நடந்தது. ஆரவ்வை கைது செய்து அழைத்துச் சென்றது குறித்து ஜூலி மிகையாக பதறினார். பழைய திரைப்படங்களில் கண்ணாம்பா புலம்பித் தீர்ப்பது போல கணீர் குரலில் ‘செல்வமே .. என்னை விட்டு எங்கேயடா போனாய். கண்ணே.. எப்படியெல்லாம் தவிக்கிறாயோ’ என்ற ரேஞ்சுக்கு ஓவராக சீன் போட்ட ஜூலியை எரிச்சலுடன் சுஜா அடக்கியது சரி. பொதுவாகவே ஜூலியின் உரையாடல் சத்தமாக இருக்கிறது. Task வந்து விட்டால் சாமி வந்தது போல கத்தித் தீர்க்கிறார். 

அது பொய்யாகவோ அல்லது உண்மையாகவோ, ஆரவ் குறித்து மற்றவர்கள் பதறும் போது எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தவர் வையாபுரி. இது பிக்பாஸின் விளையாட்டு என்று நம்மால் எளிதாக யூகிக்கும் போது வீட்டில் இருந்தவர்களின் பதற்றம் போலித்தனமாகத் தெரிந்தது. 

ஜூலி excite ஆனதிற்கு சுஜா கோபித்துக் கொண்டார். எனவே இது குறித்தான பஞ்சாயத்து இருவருக்குள்ளும் நடந்தது. உப்பு பெறாத விஷயம். ‘என்னால் என் உணர்ச்சிகளை அப்படித்தான் வெளிப்படுத்த முடியும்’ என்று ஜூலி நியாயப்படுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை. காஜல் வெளியேற்றத்தின் போது ஜூலி எதையோ சொல்ல முயல, ‘Shut up ஜூலி’ என்று அதட்டிய ஆர்த்தியிடம் இது போல எந்தப் பஞ்சாயத்தையும் ஜூலியால் நிகழத்த முடியாது. சுஜா சுட்டிக்காட்டும் பிழையை எவ்வித நிபந்தனையும் இன்றி ஜூலி ஏற்றுக் கொள்வதே முறை. வழக்கத்திற்கு மாறான வேறு சுஜாவை இப்போது பார்க்க முடிந்தது. 

**
‘நெஜம்மாவே நம்மை வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோ’ என்று மிரண்டு போயிருந்த ஆரவ்வை கமல் சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினார். உண்மையில் இது மொக்கையான விளையாட்டு. இது prank என்று பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியும் என்று நினைக்கிறேன். என்னால் எளிதில் யூகிக்க முடிந்தது. 

ஆரவ் உள்ளே நுழைந்த போது மறுபடியும் பரவசமடைந்தார் ஜூலி. என்றாலும் சுஜாவிற்காக பயந்தோ என்னமோ, தனியாகச் சென்று ஆரவ்வை அனுப்பியதற்காக கண்ணீர்மல்க நன்றி சொன்னார். (“நீ சீக்கிரம் வெளியே போய் சீரியல்ல நடி தாயி. நல்ல எதிர்காலம் இருக்கு”)

**

‘சக்தி உள்ளே புரட்சி செய்து கொண்டிருக்கிறார்’ என்று சம்பந்தமேயில்லாமல் தன் நிறைவு உரையைத் துவங்கிய கமல், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காட்டமாக பேசினார். ‘இது குறித்தான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். இதற்கான தீர்வு என்ன என்று என்னிடம் கேட்காதீர்கள். அறிவாளிகள், கல்வியாளர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது. 

பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இளம்தலைமுறை வேடிக்கை பார்க்காதீர்கள். பொறுப்பை இப்போதே கையில் எடுத்துக் கொண்டு பெரியவர்கள் ஆகுங்கள். அடுத்த வருடத்திற்குள் இதற்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டேயாக வேண்டும். இதுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. செய்யறேன். இதுவொரு சுதந்திரப் போராட்டமா? ஆம். போராட்டம்தான். நம் இனத்திற்கு துரோகம் செய்கிறவர்களை இனியும் சகிக்க முடியாது. நம் கனவுகளை கலைக்கும் சுயநலவாதிகளுக்கு புத்தி சொல்வோம், கேட்க வில்லையெனில் நகர்த்தி வைப்போம்’ என்ற ஆவேசத்துடன் தன் உரையை நிறைவு செய்தார் கமல். 

சில மரணங்கள், தற்கொலைகள் தனிப்பட்ட நபர்களின் பிரச்னைகள் மட்டும் அல்ல. அரசுகளின், அதிகார வர்க்கத்தின் கள்ள மெளனங்களை, மெத்தனங்களை, மனச்சாட்சியை நோக்கி பலமாக அடிக்கப்படும் சுத்தியல் ஒலிகள் அவை. ஓர் அரசியல் அறைகூவல். 

பொதுநலப் பிரச்சினைகளுக்காக போராடும் பல தனிநபர்கள், தங்களின் குரல் அதிகாரத்தின் காதுகளில் விழாமலே போன உளைச்சல்களுக்காக, தன் மரணத்தின் மீதாவது அந்த உறக்கமும் மெளனமும் கலையுமா என்கிற நோக்கில் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனிதாவின் மரணமும் அத்தகையதே. 

நீண்ட கால மருத்துவக் கனவுடன் நன்றாகப் படிப்பதை தவிர வேறு எந்த தவறையும் செய்யாத அந்த அப்பாவிப் பெண்ணின் மரணம், அதிகாரத்தின் கள்ள மெளனத்தையும் அரசியல் ஆதாய பேரங்களையும் கலைத்து புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தட்டும். அந்த தியாக விடியலின் வெளிச்சத்தில் எளிய சமூகம் நடைபோடுவதற்கான பாதை அமையட்டும்.