Published:Updated:

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்


நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டில் இன்று அனல் பறந்தது. சில பரபரப்பான நிகழ்வுகள். சில நேரடி மோதல்கள், அழுகாச்சி, சிரிப்பாச்சி நாடகங்கள் நிறைந்திருந்தன. சண்டைச் சேவல்களை இறக்கி நேருக்கு நேராக சண்டையிட வைப்பதைப் போன்ற உத்தியை பிக்பாஸ் திறமையாக வடிவமைத்திருந்தார். பார்வையாளர்கள் பழைய உற்சாகத்தைப் பெற்றிருப்பார்கள் என யூகிக்கிறேன்.

சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாலோ என்னமோ, ‘சிவனும் ‘சக்தி’யும் சேர்ந்தா மாஸூடா’ பாடலை பிக்பாஸ் காலையில் ஒலிக்க விட்டார். சக்தியுடன் காயத்ரியும் இணைந்து வந்திருந்தால் இந்தப் பாடல் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பொதுவாக காலை எழுந்தவுடன் கேமிராவைப் பார்த்து சோம்பல்தனத்துடன் முகத்தை மூடிக் கொள்ளும் சக்தி, இன்று வெளியே வந்து மற்றவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஜூலி என்ன சொல்றாங்க?” என்று சிநேகனிடம் விசாரித்தார் சக்தி. “ஜூலி கிட்ட நிறைய மாற்றம் இருக்கு. ஆரவ் போன போது ஒரே அழுகை. கலாட்டா. அதற்கப்புறம் சைலண்ட். சத்தமே காணோம். ஆனா ஆரவ் திரும்பி வந்த பிறகு ஷாக் ஆயிட்டா… ஆனால் ஆரத்தி மாறவேயில்லை’ என்றார் சிநேகன். 

**

பிக்பாஸ் ஸ்பான்சர்களின் பிராண்டுகளை நிகழ்ச்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சாமர்த்தியமாக நுழைக்கிறார்கள். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தின் பிராண்டு உள்ளே வந்தது. ஆயுர்வேதத்தின் மகிமையைப் பற்றி சிறிது நேரம் உபன்யாசம் செய்தார் சிநேகன். 

என்னவென்று பார்த்தால், இந்த வாரம் வீட்டின் தலைவரை ‘ஞானத்தைப்’ பயன்படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டுமாம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். ஞானம்.. ஞானம்.. யானை.. யானை…

ஆனால் இதில் ஆறுதலான விஷயம் எதுவேன்று பார்த்தால், கடந்த வாரங்களில் உடல்பலத்தைக் கொண்டே தலைவர் போட்டி நடத்தப்பட்டது. இதனால் ஆண்கள் அதிகம் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. இதைப் பற்றி மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தேன். இம்முறை ஜனநாயக முறைப்படி தேர்தல் வழியாக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பு. என்றாலும் அதிலும் சில குளறுபடிகள் இருந்தன. அரசியல்ல.. இதெல்லாம் சாதாரணமப்பா..

வீட்டிலுள்ள அனைத்துப் போட்டியாளர்களும் இணைந்து மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மூன்று நபர்களும் தலைவர் நிலைக்கு போட்டியிடுவார்கள். அவர்கள் வீட்டின் உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து ‘நான் எப்படி சிறந்த தலைவன் ஆக இருப்பேன்?’ என்று விவரித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வீட்டில் உள்ளோர் கூடி சிநேகன் மற்றும் கணேஷை தேர்ந்தெடுத்தனர். வையாபுரி, ஆர்த்தியை பரிந்துரைத்தார். ஆனால் வையாபுரி இதுவரை தலைவராக இருந்ததில்லை என்பதால் அவரை நிற்குமாறு மற்றவர்கள் வலியுறுத்தினர். அப்போதே தேர்தலின் முடிவை ஒருவாறு யூகிக்க முடிந்தது. 

“என்னதிது.. அவங்களே பேசி… முடிவு எடுத்திட்டாங்க. இதுவரை தலைவராக இல்லாத புது போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்” என்று ஆரத்தி பிற்பாடு ஆதங்கப்பட்டார். இந்த ஆட்சேபத்தை அவர் சபையிலேயே தெரிவித்திருக்கலாம். இந்த விஷயத்தை அவர் மறுபடி மறுபடி சொல்வதின் மூலம், தான் தலைவராக விரும்பி பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டாரா? அல்லது சுஜாவை தலைவராக்கி அதன் மூலம் பிந்துவிற்கு செக் மேட் வைக்க நினைத்தாரா என்பது தெரியவில்லை. அல்லது உண்மையிலேயே கூட புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்தாரோ, என்னமோ. 

எனவே சிநேகன், கணேஷ், வையாபுரி ஆகியோர் தலைவர் தேர்தலில் நின்றனர். கணேஷ் என்ன சொல்லி வாக்கு கேட்பார் என்று நினைத்துப் பார்க்கவே சிப்பு சிப்பாக வந்தது. 

**

ஆரத்தியிடம் முதல் வாக்கை கேட்கத் துவங்கினார் சிநேகன். ‘இனி மேல் போலியா இருக்கத் தேவையிருக்காது. பிரச்னை பண்றவங்ககிட்ட. ஒதுங்கியிருக்க மாட்டேன்”. வையாபுரி செய்ததுதான் காமெடி. சுயேச்சை வேட்பாளர் போல ஒவ்வொருவரையும் இழுத்து ‘உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே போட வேண்டும். இனிமே அழ மாட்டேன். taskகளை ஒழுங்கா செய்வேன்’ என்று விளையாட்டும் சீரியஸூம் கலந்து வாக்கு கேட்டார். வயதில் மூத்தவர் என்பதால் மற்றவர்கள் அவரிடம் இணக்கமாகவே பேசினர். குறிப்பாக ஆரவ் “உங்களுக்குத்தாண்ணே.. என் வாக்கு” என்று வெளிப்படையாக சொல்லி விட்டார். 

“நீங்க என்ன செய்வீங்க. புது மாற்றம் இருக்குமா? என்று தீவிரமான முகபாவத்துடன் சிநேகனிடம் கேட்டார் சுஜா. “எல்லோரையும் வேலை செய்ய வைப்பேன்’ என்று நம்பிக்கையளித்தார் சிநேகன். “நீங்க வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு” என்று சுஜாவிற்கு ஐஸ் வைக்கவும் தயங்கவில்லை. 

பிந்து புத்திசாலி. மூன்று வேட்பாளர்களையும் ஒன்றாக அழைத்து ‘நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கணும்னு சொல்லுங்க” என்று கேட்டார். ‘நிற்க வைத்து கேள்வி கேட்பது’ என்பது இதுதான் போலிருக்கிறது. “அவங்களுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது’ –ன்னு சொல்லுங்க” என்று தோசையை திருப்பி போட்டது போல கேள்வியை மாற்றிக் கேட்டார் பிந்து. “எனக்கு வாக்களியுங்கள்னுதான் நான் கேட்பேன். மற்றவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது’ன்னு நான் சொல்ல மாட்டேன்’ என்ற வையாபுரியின் விளக்கம் நியாயமானது. 

கணேஷின் வாக்கு சேகரிப்பு காமெடியாக அமைந்தது. பலமான ஆளுங்கட்சி இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் நடந்து அதன் வெற்றி உறுதியாக முன்பே தெரிந்துவிட்ட நிலையில் பலியாடாக சம்பிரதாயத்திற்கு நிற்க வைக்கப்படும் எதிர்க்கட்சி வேட்பாளர் போல பரிதாபமாக இருந்தார். ‘ப்ரோ.. பெரிசா சொல்றதுக்கு எதுவுமில்ல. I believe in actions. இனிமே போட்டிகள் கடுமையா இருக்கும். இதுவரைக்கும் அமைதியா ஒரு மாதிரி ஒதுங்கியிருந்தேன். இனிமே என்னோட ஆக்ஷன் பக்கத்தைப் பார்க்கலாம்:” என்று நீட்டி முழக்கிக் கொண்டே போக, பருத்திவீரன் சிறுவன் மாதிரி “யே.. சூப்பர்பா.. இதுவரைக்கும் நீ இப்படி பேசி நான் பார்த்ததேயில்லை’ என்று சக்தி மனதில் நினைத்துக் கொண்டாரோ, என்னவோ, இரண்டே சொற்களில் கணேஷின் ஆர்வத்தின் நெருப்பில் நீரை ஊற்றினார். ‘சுருக்கமா சொல்லுங்க கணேஷ்”.

சிநேகன் ஜூலியிடம் வாக்கு கேட்க சென்ற நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். தொண்டைத் தண்ணீர் அனைத்தையும் இழக்க வேண்டியிருந்தது. ‘மாட்னார்ரா.. அண்ணன்’ என்று நினைத்துக் கொண்ட ஜூலி ‘வாடி மாப்ளே’’ என்கிற தோரணையில் பழைய கணக்குகளுக்கான பதில்களையெல்லாம் கதறக் கதற கேள்விகளாக கேட்டுப் பெற்றுக் கொண்டார். 

“ஓவியாவை விட உன் மேல பாசம் குறைவா வெச்சேன்-னு புகார் சொன்னேன். அவளை மிரட்ட முடியாது. ஆனா உன்னை உரிமையா மிரட்ட முடியும். உன்னை நாமினேஷன் செஞ்சது கூட சில விஷயங்களை நீ மாத்திக்கணும்தான். உன்னைப் பத்தி எங்கேயும் நான் புறம் பேசினதில்ல” என்று சமாளித்தார் சிநேகன்.

“இல்லைண்ணே.. கமல் சார் குறும்படம் போட்டுக் காண்பிச்சப்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இந்த வீட்ல முதன் முதலா என்னை ‘போலி’-ன்னு சொன்னது நீங்கதான். எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்ன உண்மையை ‘பொய் சொல்றா’ –ன்னு அந்தப் பக்கம் போய் சொல்றீங்க. எனக்கு உண்மையிலேயே சமைக்கத் தெரியாது.’ என்றெல்லாம் ஜூலி அடுக்க “நம்ம ஊரு பொண்ணுக்கு எப்படி சமைக்கத் தெரியாம இருக்கும்னு முதல்ல நெனச்சேன். அப்புறம் நீ பூண்டு உரிச்ச லட்சணத்தைப் பார்த்தப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன். உன் மேல எனக்கு கோபம்தான் இருந்தது. எந்தநாளும் வெறுப்பு வரலை” என்று பல்வேறு விதமாக விளக்கமளித்த சிநேகன் ‘எப்பா.. போதும் முடியல.. ரீல் அந்து போச்சு” என்று மனதிற்குள் நினைத்திருப்பார். 

இதர போட்டியாளர்கள் தங்களின் பழைய கோப தாபங்களைக் கொட்டும் ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டனர். தலைவராக நிற்கிறவர்கள் வேட்பாளர்களுக்கே உரித்தான குழைவுடன் அவர்களின் கோபங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இயல்புதான். ஆனால் இது ஒரு விளையாட்டு என்கிற அடிப்படையில்,  புறம்பேசுதலும் புகார் சொல்லுதலும் இந்த விளையாட்டின் மனஅழுத்தத்தில் உருவாகும் ஒருபகுதி என்கிற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டால் பழைய குப்பைகளை கிளற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

**

தேர்தல் நடந்தது. பச்சை மற்றும் சிவப்பு நிற பேட்ஜ்கள் இருந்தன. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தகுந்த காரணங்களைச் சொல்லி அதைக் குத்த வேண்டும். நேர்மறையான காரணத்திற்கு பச்சை நிறமும் எதிர்மறையான காரணத்திற்கு சிவப்பு நிறமும். பச்சை நிறத்தை அதிகம் பெறுகிறவர்கள் தலைவர் ஆவார்கள். 

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான காரணங்களைச் சொல்லி பேட்ஜ்களை குத்தினார்கள். ஆரத்தி பேட்ஜை குத்தும் போது ‘பார்த்து.. கோபத்துல ஊசி உடம்புக்குள்ள போயிடப் போவுது’ என்று கிண்டலடித்தார் சிநேகன். சக்தி சிநேகனுக்கு வாக்களிக்கும் போது ‘ஷத்திரியன் சாணக்கியன்’ டயலாக்கை நூறாவது முறையாக சொல்லி உயிரை வாங்கினார். ‘அண்ணனுக்கு இருக்கிற ஒரே தங்கச்சி நான்’ என்று மிகையான பாசத்துடன் சிநேகனுக்கு ஜூலி பேட்ஜ் குத்தும் போது ‘யப்பா ஒலக நடிப்புடா சாமி’ என்கிற தோரணையில் முடியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டார் சுஜா. 

இறுதியில் அதிக பச்சையைப் பெற்ற வையாபுரி தலைவராக ஆனார். போட்டியாளர்களின் மனதில் இருந்த கோப தாபங்கள், சிவப்பு நிறத்தில் வெளியானது. “இனிமே யாரைப் பத்தியும் புறம் பேச மாட்டேன். சுணங்காமல் சவால் விளையாட்டுக்களை செய்வேன்’ என்பது புது தலைவரின் உறுதிமொழி. 

**

ஆரத்தி, ஜூலி, சக்தி ஆகியோர் தற்காலிகமாக வந்திருப்பதால் பிக்பாஸ் போட்டியின் இறுதி நிலையில் பங்கு பெற மாட்டார்கள்’ என்று வந்த அசரிரீக்குரல் சென்னை மழை போல அதிகம் மகிழ வைத்தது. 

நாமினேஷன் படலத்தின் மூலம் அடுத்த ஏழரையைக் கூட்ட முடிவு செய்தார் பிக்பாஸ். “அழற ஆம்பளையை நம்பக்கூடாது. அவர் கிட்ட இப்ப நிறைய வித்தியாசம் இருக்கு” என்று விநோதமான காரணத்தைச் சொல்லி சிநேகனை நாமினேட் செய்தார் ஆரத்தி. கூடவே சுஜாவையும். “குழந்தை மாதிரி நடிக்கறாங்க”.

‘சுயநலத்துடன் ஒதுங்கியிருக்கிறார், சவால் விளையாட்டுக்களில் ஆவேசமாக ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றலெ்லாம் கணேஷ் ப்ரோவின் மீது புகார்கள் விழுந்தன. “கணேஷ் மற்றும் ஆரவ் எனக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று கருதுவதால் அவர்களை நாமினேட் செய்கிறேன்” என்கிற சிநேகனின் நேர்மை பாராட்டத்தக்கது. ஜூலி, ஆரவ்வை நாமினேட் செய்ததுதான் ஆச்சரியம். ஆரவ் கைது செய்யப்பட்ட போது ‘கொல்றாங்க.. கொல்றாங்க.. என்று பதறிய ஜூலியா இது? கூடவே பாசமிகு அண்ணன் சிநேகனுக்கும் ஜூலி வைத்த ஆப்பு சிறப்பு. 

இறுதியாக, சிநேகன், சுஜா, ஹரீஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் நாமினேஷனிற்குள் வந்தனர். ‘ஒருவரை காப்பாற்றும் வாய்ப்பு கணேஷிற்கு இருந்தது. இரண்டு வாரங்களாக அவர் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தார். இந்த வாரம் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்பதால்  நாமினேஷன் ஆபத்திலிருந்து சிநேகனைக் காப்பாற்றினார். சிறப்பான முடிவு. புறம் பேசுதல் உள்ளிட்ட சில எதிர்மறை காரணங்கள் சிநேகனிடம் இருந்தாலும் ஒரு மூத்த அண்ணனாக வீட்டின் அனைத்துக் காரியங்களையும் ஒருங்கிணைக்கும் சிநேகனின் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டியது. 

இப்போது சிநேகன் தனக்கு நீங்கிய ஆபத்தை வேறொருவரின் தலையில் வைக்க வேண்டும். சிநேகன் பிந்துவை தேர்ந்தெடுத்தார். ஆக.. இறுதி  நாமினேஷனில் சிநேகன் காப்பாற்றப்பட்டு ‘ரொட்டியின்’ வாரிசான பிந்து வந்து இணைந்தார். 

**

விருது வழங்கும் விழாவின் மூலம் அடுத்த ஏழரைக்குத் தயாரானார் பிக்பாஸ். சக்தி, ஜூலி, ஆரத்தி ஆகியோர்தான் இந்த விருதிற்கான நடுவர்களாம். ஆஸ்கர் விருதிற்கு செல்வது போல மிகையான ஒப்பனையுடன் வந்திருந்தார் ஜூலி. 

‘மந்தம்’ என்கிற விருதை பிந்துவிற்கு தருவதன் மூலம் விருதுவிழா மங்கலகரமாகத் துவங்கியது. ‘மந்த பிந்து’ என்கிற ரைமிங்தான் காரணம் போல. ‘நாடகக்காரி’ என்கிற விருதை சுஜாவிற்கு ஜூலியை வழங்க வைத்ததின் மூலம் தானொரு சிறந்த நாரதர் என்பதை பிக்பாஸ் நிரூபித்து விட்டார். ‘என்னை விடவும் பெரிய நாடகக்காரியிடம் இதை வாங்குவதில் எனக்குப் பெருமைதான்’ என்று ஒரு வெட்டு வெட்டி விட்டுச் சென்றார் சுஜா. ‘ஓகே.. நன்றி’ என்று விருதுவிழாவின் சம்பிரதாய புன்னகையை பதிலாக தந்தார் ஜூலி. 

ஹரீஷிற்கு ‘ஒப்புக்கு சப்பாணி’ விருது வழங்கப்பட்டது. ‘போலி’ என்கிற விருதிற்குப் பதிலாக நாடகக்காரி என்கிற வார்த்தையை தேர்ந்தெடுத்தோம்” என்று வழவழவென்று விளக்கமளித்தார் சக்தி. ‘ஒண்ணு தல..ன்னு சொல்லு.. இல்ல. தளபதி சொல்லுன்னு.. அது என்ன தல தளபதி.. கமல் மாதிரியே.. புரியாம பேசக்கூடாது” என்கிற ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ டயலாக்கை சக்தியை நோக்கி சொல்லத் தோன்றியது. 

வையாபுரிக்கு ‘அழுமூஞ்சி’ என்கிற விருது கிடைத்தது. ‘இனிமே அழமாட்டேன்’ என்று சிரித்துக் கொண்டே விருதைப் பெற்றார் வையாபுரி. சிநேகனுக்கு ‘தந்திரக்காரன்’ விருது. ‘நான் வாழ்க்கையில் எத்தனையோ அவமானங்களைப் பார்த்திருக்கேன். விமர்சனங்களால்தான் வளர்ந்தேன். ‘எத்தனை பேரு செத்தாலும் பரவாயில்ல. நான் முன்னேறணும்னு கல்மனசா நெனச்சதாலதான் 3500 பாட்டுக்கு மேல எழுத முடிஞ்சது. அப்புறம் யோசிச்சப்புறம்தான் அது முறையல்ல என்று தோன்றியது. இந்த விருதை அவமானமாகக் கருதவில்லை. விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன்’ என்றெல்லாம் தந்திரமாக விளக்கமளித்தார் சிநேகன். 

‘இந்த மாதிரி தலைப்புகளுடன் விருது வழங்குவதற்காக நான் எவரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை’ என்கிற தலைக்கன உரையுடன் விருது வழங்க வந்தார் ‘Horrorத்தி’ 

கணேஷிற்கு ‘சுயநலவாதி’ விருது கிடைத்தது. ஏதோ உலக சாதனை படைத்தது போன்ற சிரிப்புடன் அதை வாங்கிச் சென்றார் கணேஷ். ஒரு மனுஷனுக்கு பொறுமை இருக்கலாம், பொறுமையே ஒரு மனுஷனா மாறினா, அது கணேஷ்தான். ‘ஆரவ்’விற்கு ‘முட்டாள்’ பட்டம் கிடைத்தது. சரிதான். யாரோ வந்து கைது செஞ்சிக்கிட்டு போனா.. ‘யார்ப்பா நீங்க.. வாரண்ட் இருக்கா?’ என்றலெ்லாம் கேட்காமல் ஏதோ சாக்லெட்டுக்கு ஆசைப்பட்டு பூச்சாண்டியின் பின்னால் சென்ற குழந்தை மாதிரி முகமூடிகளுடன் சென்ற ‘முட்டாள்தனத்திற்கு’ இந்த விருது பொருத்தம்தான். 

இந்த விருதுகளின் அடையாங்களைக் கவனித்தால் போட்டியாளர்களின் அகங்காரங்களைத் தூண்டுவதாகவும் அவர்களை அவமதிக்கும் வகையிலும் அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். இது பிக்பாஸின் திருவிளையாடல். இப்படி விருதுகளின் பெயர்களை அமைப்பதின் மூலம் நிச்சயம் மோதல் உருவாகும் என்பது அவரின் கணக்கு. 

**

‘நாடகக்காரி’ என்கிற விருது கிடைத்திருப்பதால் சுஜா அப்செட். ‘அப்படின்னா actress –ன்னுதானே அர்த்தம். அப்புறம் என்ன அதில் பெருமைதானே?” என்று அந்த விஷயத்தை பாசிட்டிவ்வாக மாற்ற முயன்ற ஆரத்தியின் சாமர்த்தியம் பாராட்டத்தக்கது. “நீங்க ஓவியா மாதிரி இருந்தீங்களா இல்லையா, உங்க இண்டர்வியூ வீடியோல்லாம் பார்த்தேன். நல்லா தைரியமாத்தான் பேசினீங்க.. அப்புறம் இங்க வந்தப்புறம் ஏன் குழந்தை மாதிரி நடிச்சீங்க?’ என்றெல்லாம் ஆரத்தி கேள்வி கேட்க.. “ஏங்க.. இண்டர்வியூல கெத்தாதான் இருக்க முடியும். ஆனா நான் வீட்ல எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாதுல்ல… டைனிங் டேபிள்ல இதைப் பத்தி எல்லோர்கிட்டயும் பேசறேன்’ என்றார் சுஜா.

சொல்லியபடியே உணவருந்தும் போது அனைவரிடமும் உருக்கமாக பேசினார். ‘ஓவியா மாதிரில்லாம் நான் நடிக்கலை. ஒரேயொரு சூரியன் மாதிரி ஒரேயொரு ஓவியாதான் இருக்க முடியும். நான் நானாத்தான் இருக்கேன். வீட்ல இருக்கற மாதிரிதான் இங்க இருக்கேன். கடுமையா வேலை செய்யறேன். ஏன்னா இதையும் என் வீடாத்தான் நெனக்கறேன். நான் நடிக்கிறேன்னு நெனக்கறவங்க என் கிட்ட வராதீங்க. விலகி நில்லுங்க. பொதுமக்களுக்கு இதைப் பத்தி பேச உரிமை இருக்கு. (பொண்ணு பொழச்சுக்கும்) ஆனா பக்கத்துல இருக்கறவங்க.. இப்படிப் பேசறதுதான் அதிகமாக வலிக்குது” என்றெல்லாம் பொங்கினார். 

அவர் குறிப்பாக சொன்னது ஜூலிக்கு என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ‘சரிம்மா.. இனிமே உன்னை அப்படி நினைக்க மாட்டோம். பேச மாட்டோம்’ என்று புதிய தலைவர் வையாபுரி வாக்களிக்களித்தார். “ஓவியா தன்னைப் பத்தி எப்பவுமே justify செய்ய மாட்டாங்க. நீங்க செய்யறீங்க.. ஓகே… நீங்க போலி இல்லை’ என்ற ஆரத்தியின் உரையின் மூலம் நிலைமை கட்டுக்குள் வந்தது. ‘என்னை ஏன் ‘ஒப்புக்கு சப்பாணின்னு’ சொன்னீங்க.. டீடெயில்ஸ் ப்ளீஸ்’ என்று அடுத்த ஏழரையைக் கூட்டினார் ஹரீஷ். 

இன்னொரு பக்கம் ‘தன்னை அரசியலுக்கு கமல் வரச் சொன்ன விவகாரத்தை’ மாற்றி கிண்டலடித்தது தொடர்பாக சிநேகனிடம் பஞ்சாயத்து வைத்தார் சக்தி. “நான் தந்திரம்லாம் பண்ணலை. அப்படில்லாம் செஞ்சிருந்தா மக்கள் எப்பவோ என்னைத் தூக்கிப் போட்டிருப்பாங்க.. நான் ஏதாவது பிழை செஞ்சிருப்பேன். ஆனா திட்டம் போட்டு எதையும் பண்ணலை. உங்களைப் பத்தியும் நல்லவிதமா சொல்லியிருக்கேன்’ என்று விளக்கம் அளித்தார் சிநேகன்.

“சரி மனசுல எதையும் வெச்சுக்காதீங்க” என்ற சக்தி, பிறகு அதை ஏதோ சீக்ரெட் டாஸ்க் போல ‘அவரை கொஞ்ச கொஞ்சமாத்தான் டிரிக்கர் பண்ணப் போறேன். மொத்தமா செய்ய எனக்கே சங்கட்டடமாக இருக்கு” என்று கேமிராவை நோக்கி சொன்னார். 

“ஏண்ணே.. லேட்டா சாப்பிட வந்திருக்கீங்க?” என்று பாசமிகு அண்ணனை விசாரித்தார் ஜூலி. ஒருபக்கம் சிநேகனை நாமினேட் செய்து வந்து விட்டு இப்படி அன்பாக விசாரிக்கவும் ஒரு திறமை வேண்டும். ‘நான் தந்திரக்காரன் இல்லையா, அப்படித்தான்’ என்றார் சிநேகன் விரக்தியாக. 

தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஆழமான வலியை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. அதுதானே பிக்பாஸின் திட்டமும். 

“உன்னை ஒரு வார்த்தைல திட்டலாமா?” என்று சுஜாவிடம் பீடிகை போட்ட சிநேகன், ‘நீ பைத்தியக்காரி மாதிரி விமர்சனங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா அதற்கு முடிவே கிடையாது. உன்னைப் பத்தி உனக்குத்தான் அதிகம் தெரியும். விமர்சனங்களுக்கு பயந்தா உலகம் உன்னைத் துரத்திட்டே இருக்கும். அதையெல்லாம் கண்டுக்காம நம்ம வழியிலே போயிட்டே இருக்கணும்’ என்றெல்லாம் உபதேசம் செய்தார். சரியான உபதேசம்தான். 

‘சில போட்டியாளர்களின் மறுவருகை வீட்டிற்குள் கலகலப்பை ஏற்படுத்துமா, கலகத்தையா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. விடை என்னவென்று தெரிந்து கொண்டே பாவனையாக கேள்வி கேட்பது நியாயமா பாஸூ?